தி லன்ச் பாக்ஸ் (இந்தி)
- நடிகர் : இர்ஃபான் கான்
- நடிகை : நிம்ரத் கவுர்
- இயக்குனர் :ரித்தேஷ் பத்ரா
தினமலர் விமர்சனம் » தி லன்ச் பாக்ஸ் (இந்தி)
தினமலர் விமர்சனம்
சினிமா பசி எடுத்தவர்களுக்கு நிறைவான உணவு சாப்பிட்ட திருப்தியை இந்த லன்ச் பாக்ஸ் அளித்துள்ளது.
கரன் ஜோஹர், யூ.டி.வி, அனுராக் கஷ்யப் இப்படி பலரும் கூடி ஒரு படத்தை தயாரிக்கும் போது கண்டிப்பாக இது ஒரு நல்ல படமாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் மனதில் எழுகிறது. நவாஸிடின் சித்திக், இர்ஃபான் கான் இரண்டு நல்ல நடிகர்கள் அமர்க்களம் ஏதுமின்றி படகுப் பயணம் போல் பிரயாணிக்கும் அழகிய கதைக்களம். கலையம்சத்தில் ரசிகர்களை மூழ்கடிக்கும் ஒரு படைப்பு.
மும்பையில் மிகப் பிரபலமான டப்பாவாலா (உணவை வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு கொண்டு சேர்க்கும் தொழில்) கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் அமைக்கப்பட்டுள்ளது. கணவனுக்காக தினமும் விதவிதமாக உணவுகளை செய்து மதியம் டப்பாவாலா மூலம் கொடுத்து விடும் ஹவுஸ் வைஃப்.
எப்போதும் மிச்ச உணவுடன் வீட்டிற்குத் திரும்பும் டிபன் காரியர் ஒரு நாள் காலியாக வருகிறது. இன்று சமையலில் தேர்ச்சி பெற்றுவிட்டோம் என்று அவளுக்கு ஒரே சந்தோஷம். வீட்டிற்கு வந்த கணவனிடம் தன் கைப்பக்குவத்தைப் பற்றி கேட்கிறாள். அப்போது அவன் இவள் சமைக்காத ஆலு கோபி நன்றாக இருக்கிறது எனக் கூற அப்போதுதான் டப்பா மாறிவிட்டதை உணர்கிறாள்.
உணவை உண்ட அந்த முகம் தெரியாத நபருக்கு நான் சமைத்ததை முழுமையாக உண்டதற்கு நன்றி, காலி டப்பா அனுப்பியதற்கு நன்றி என்ற மடலை டப்பாவுடன் இணைத்து அனுப்புகிறாள். மாலை வந்து சேரும் அந்த டப்பாவில் இன்றைய உணவில் உப்பு அதிகம் என்ற குறுஞ்செய்தி வருகிறது. இதிலிருந்து இவ்விரு கதைமாந்தர்களுக்கு நட்பு, காதல் இவ்விரண்டையும் கடந்த ஒரு நேசம் அரும்புகிறது. இதன் பின் இவ்விருவருக்கிடையே நடக்கின்ற அழகிய உரையாடல்களும், இருவரின் வாழ்க்கை, அதில் நடக்கும் நிகழ்வுகளின் பதிவு தான் இப்படம்.
இந்தியாவிலிருந்து ஆஸ்காருக்கு ஒரு படம் அனுப்பப்படும். அதற்காக போட்டியிட்ட படங்களுள் முக்கிய இடம்பெற்ற படம் லன்ச் பாக்ஸ். இப்படம் கண்டிப்பாக இந்தியாவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் என்று பல பாலிவுட் திரையுலக ஜாம்பவான்கள் எதிர்பார்த்த ஒன்று. ஸன்டேஸ் பிலிம் பெஸ்டிவல் மேலும் பல சர்வதேச பிலிம் பெஸ்டிவல்களில் இப்படம் சக்கைப் போடு போட்டது தான் அதற்குக் காரணம்.
ரிடையர் ஆகப் போகும் அரசாங்க ஊழியராக இர்ஃபான் கான். கண்டிப்பாக இப்படத்தில் இவர் நடிக்கவில்லை - அக்கதாபாத்திரமாகவே பிஹேவ் செய்கிறார். நடை பாவனையாகட்டும், வாய்ஸ் மாடுலேஷன், முக பாவங்கள் இப்படி பல பிரிவுகளில் முழு தேர்ச்சி பெறுகிறார் இர்ஃபான். கண்டிப்பாக ஆக்டிங் கல்விக் கூடங்களில் லன்ச் பாக்ஸ் முக்கிய அங்கம் வகிக்கும்.
நவாஸிடின் சித்திக் கதாபாத்திரம் ஆர்ட் பிலிமிற்கும், கமர்ஷியல் பிலிமிற்கும் இடையே பாலம் வகுக்கச் செய்துள்ளது. பாராட்டு மரியாதைக்காக ஏங்கும் சராசரி மிடில் ஏஜ் மனைவியாக நிம்ரத் கவுர் அசத்தியுள்ளார். மூவரின் நடிப்பும் படத்திற்கு ஓர் மாணிக்கக் கல்லாக அமைந்துள்ளது.
இம் மூன்று கதாபாத்திரங்களையும் தாண்டி நம்மை ரசிக்க வைப்பது நிம்ரத் கவுர் மாடி வீட்டில் வாழும் முகம் தெரியாத ஆன்ட்டி. படம் முழுக்க இவர் யார், என்ன தோற்றம் உடையவர் எதுவும் நமக்கு தெரியாது. ஆனால் இவரின் மன ஓட்டத்தை , கோபம், நையாண்டி இவை யாவற்றையும் வெறும் குரலின் துணையால் வெளிப்படுத்தியிருப்பது இயக்குனர் ரிதேஷ் பத்ராவின் இணையில்லா சாதனை .
மாடியிலிருந்து அந்த பெண்மணி கூடையை ஆட்டும் போது அந்த கூடை படும் பாட்டை இயக்குனர் காட்டும் போதே அவள் கோபத்தில் இருப்பதை பார்வையாளனால் உணர முடிகிறது. இல்லத்தரசி என்றால் அறியாமை கொண்டவராக காட்டிய இயக்குனரிடையே வாஷிங் மிஷினுக்கும் கையால் துவைப்பதற்கும் துணியை வகைப்படுத்தும் மனைவி, கணவன் சட்டையிலிருந்து வரும் சென்ட் வாடையை வைத்து அவன் கள்ள உறவு வைத்திருப்பதை உணரும் போது ரிதேஷ் பத்ரா சிலிர்க்க வைக்கிறார்.
எப்படி தான் முடியுமோ என எதிர்பார்க்க வைக்கும் கதை அப்பட்டமாக முடிவது லேசான எரிச்சலை தருகின்றது. இன்டர்நேஷனல் படங்கள் பலவற்றை பார்த்த தாக்கம் கிளைமாக்ஸில் மட்டும் ஜொலித்தது. ஆனால் அரங்கை விட்டு வெளியேறுகையில் கிளைமாக்ஸ் சரியான ஒன்று தான் என்றும் தோன்றியது.
சபலம் கொண்ட மனிதர்களால் அவர்கள் நினைத்த வாழ்க்கையை அமைக்க முடியாத ஒரு சூழலையும்?? அமைந்த வாழ்வில் அடையாத ஒரு ஏக்கத்தையும் லன்ச் பாக்ஸ் அழகாக வெளிப்படுத்துகிறது.
மொத்தத்தில், ரிதேஷ் பத்ராவின் இயக்கத்தில் லன்ச் பாக்ஸ் சினிமா பித்தர்களின் பசியைத் தீர்க்கலாம்; இல்லை மேலும் கூட்டலாம். சர்வதேச அளவில் ஆதரவு பெற்ற ஒரு படத்திற்கு தோள்கள் தரவேண்டியது நம் கடமை..
thanx - dinamalar