Showing posts with label Shahid (2012) -சினிமா விமர்சனம் (தினமலர் விமர்சனம்). Show all posts
Showing posts with label Shahid (2012) -சினிமா விமர்சனம் (தினமலர் விமர்சனம்). Show all posts

Thursday, October 24, 2013

Shahid (2012) -சினிமா விமர்சனம் (ஹிந்திப்படம் -தினமலர் விமர்சனம்)

தினமலர் விமர்சனம்

‘கேங்ஸ் ஆஃப் வஸீபூர்’, ‘கை போ சே’ போன்ற திரைப்படங்களில் தனது நடிப்பால் முத்திரை பதித்த ராஜ்குமாரின் கிரீடத்திற்கு மற்றொரு மாணிக்கம் பதித்துள்ள திரைப்படம் தான் இந்த ‘‘ஷாஹித்’’.

தன்னைச் சுற்றி நடக்கும் அவலங்களைக் காணப் பொறுக்காத ஒரு ஏழை இஸ்லாமிய இளைஞன் தான் இந்த ஷாஹித். ஒரு நாள் தன் வீட்டருகில் நடக்கும் கலவரத்தைக் கண்டு அலரும் ஷாஹித் வீட்டைவிட்டு ஓடி ஒரு தீவிரவாத இயக்கத்தில் சேர்கிறான். அங்கு நடக்கும் கோர நிகழ்வுகளைக் கண்டு திரும்பத் தன் வீட்டிற்கு வர அவனை ஒரு தீவிரவாதியென முத்திரை குத்துகிறது இந்த சமுதாயம். அதனால் ஏழு வருட கடுங்காவல் திகார் ஜெயிலில்.


ஜெயிலில் கிடைத்த நல்ல நண்பரின் (கே.கே.மேனன்) உதவியுடன் சட்டத்துறையில் பட்டம் பெற்று சட்ட வல்லுனராகிறான்.  சிறை வாசம் அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்கிறது. வசதியில்லாதவர்களின் சட்டத் தேவைகளை ஆதாயமின்றி எடுத்து நடத்துகிறார். 


நாட்டில் ஏற்படும் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தன்னைப் போன்ற அப்பாவிகள் தீவிரவாதிகள் என சித்தரிக்கப்படுவதை எதிர்த்து அவர்களுக்காக போராடும் நாயகன். இதனால் எதிர்ப்புகள், கொலை மிரட்டல்கள் என பல்வேறு ஆபத்துகளை எதிர் கொள்கிறார்.  தான் விரும்பி மணந்த மனைவியுடனும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த நேரமில்லாது சட்டத்தை சவாலாக எடுத்து வாழ முயற்சித்து தன் வாழ்க்கையை தொலைக்கிறார் இந்த ஷாஹித்.

இப்படத்தின் ரசிக்கத்தக்க அம்சம் யாதெனில் கதாபாத்திரங்களுக்கு அமைக்கப் பெற்ற வடிவங்கள்.  கே.கே.மேனன் போன்ற டீஸன்டு ஆக்டர் நடிக்கும் போது அவருக்கென திரைக்கதையை வளைக்கவில்லை. எங்கே ஒரு மகனைக் காப்பாற்ற மற்ற மூன்று மகன்களை இழந்து விடுவோமோ என்று அஞ்சும் தாய், எவ்வளவு காலம் தான் குடும்ப சுமையை நான் சுமப்பது என்னால் முடியலை என ஆதங்கப்படும் அண்ணன், கொலை மிரட்டல்கள் கண்டு எங்கே தன் மகனை இழந்துவிடுவோமோ என்று பிரியும் மனைவி. இப்படி படத்தில் வரும் எந்த கதாபாத்திரமும் வானத்தைப் போல குடும்பம் போல் தியாகத்தின் சின்னமாய் விளங்கவில்லை. மாறாக மனிதர்களாக தோன்றுகின்றனர்.

சரி பாஸ் என்ன எல்லாமே நிறைவுகளாகச் சொல்றீங்க குறைகள் ஏதும் இல்லையா என்றால் ஏன் இல்லை.. நிறைய இருக்கு. ஒன்றுக்கு இரண்டு பொருள் தரும் அபத்த வசனங்கள் இல்லை.  கதாநாயகனின் முன்னேற்றம் வெறும் ஒரு பாட்டில் ஓஹோஹோ என்ற பின்னணி இசையால் நடைபெறவில்லை. மெல்ல மெல்ல தான் நிகழ்கிறது. தான் வழக்காடும் திறமையால் பல அப்பாவிகளை காக்கும் நாயகன் இதனால் ஊர் ஒன்றும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடவில்லை. நாயகன் சாதனை செய்துவிட்டான் என அறிவித்து அரசாங்கம் ஒன்றும் போஸ்ட் ஸ்டாம்ப் வெளியிடவில்லை.


கணவனின் சாதனையைப் பார்த்து மனைவி ஒன்றும் புன்னகை பூக்கவில்லை, மாறாக பின் விளைவுகளின் தாண்டவத்தை எண்ணி அவனைத் தடுக்க முயற்சிக்கிறாள்.  முக்கியமாக கதாநாயகனோ கதைமாந்தர்களோ நம்பள்கி நிம்பள்கி வசனம் பேசுவதில்லை. இங்கே அப்பாவிகளும் நீதியின் நேசிகளின் கூட்டம் மட்டுமே.

இங்கே கூறப்பட்ட யாவையும் உங்களுக்கு பிழையாகத் தோன்றினால், இது தான் படத்தின் பிழையும். போலித்தனமாக ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டுமென்று இயக்குனர் துளியும் எண்ணவில்லை.


எழுத்தாளர் சமீர் கௌதம் சிங் தனது பேனா மையால் மதத்தோடு தொடர்பு செய்து மனிதர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை மனிதத்தால் எதிர்கொண்டுள்ளார். தீவிரவாதிகளை மதத்தோடு இணைத்து அதனால் அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் நிந்தனைகளை ஷாஹித் அற்புதமாக பதிய வைத்துள்ளது.

மொத்தத்தில், ‘‘ஷாகித்’’ திரைப்படம் முதல் ரகம்!
thanx - dinamalr 




  • நடிகர் : ராஜ் குமார், கே.கே.மேனன்
  • நடிகை : ..Mariam
  • இயக்குனர் :ஹன்சால் மேதா