நவராத்திரி திரைப்படம் சிவாஜி ஒன்பது வேறுபட்ட வேஷங்களில் நடித்துள்ளதற் காக இன்றும் பேசப் படுகிறது, அந்த ஒன்பது வேஷங்களுக்கும் இணையாக நடித்த சாவித்திரி, தன்னை உருமாற்றிக் கொள்ளாமல் ஒரே படத்தில் ஒன்பது விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை சினிமாவுலகம் கொண்டாடவேயில்லை, குறிப்பாக அந்தப் படத்தில் ஒரு தெருக்கூத்து நிகழ்வு இருக்கிறது, அதில் ராணி வேஷம்கட்டி வந்து கேலியும் கிண்டலும் துள்ளலுமாக ஆடிப்பாடும் சாவித்திரியின் நடிப்பு அபாரமானது, இது சாவித்திரியின் ஒரு தனித்துவம் என்றால், ‘எனையாளும் மேரி மாதா’ எனப்பாடும் மிஸ்ஸியம்மா பட சாவித்திரி முகத்தில் கசியும் கருணையும் அன்பும் இன்னொரு பரிமாணம்.
தேவதாஸ் படத்தில் துடுக்குதனமாக பேசும் சாவித்திரி இறுதிக்காட்சியில் நம்மை கலங்கடித்துவிடுகிறார். இப்படி மிகையற்ற, இயல்பான நடிப்பின் அடையாளமாகவே சாவித்திரி என் நினைவில் பதிந்துபோயிருக்கிறார்.
சமீபத்தில் சாவித்திரிக்கு ஆந்திராவிலுள்ள விஜயவாடாவில் சிலை அமைத்திருக்கிறார்கள், தமிழ்நாட்டில் என்.எஸ். கிருஷ்ணன் எம்ஜிஆர், சிவாஜி என புகழ்பெற்ற நடிகர்களுக்கு சிலைகள் இருக் கின்றன. நான் அறிந்தவரை நடிகை கள் எவருக்கும் சிலையில்லை. கவர்ச்சி நடிகைகளுக்கு கோவில்கட்டுவது, சிலை வைப்பது உலகெங்கும் இருக்கிறது. ஆனால் உடற்கவர்ச்சியைப் புறந்தள்ளி தனது நடிப்பால் மட்டுமே புகழ்பெற்ற சாவித்திரிக்கு சிலை வைக்கப்பட்டிருப்பது மகத்தானது. அப்படிக் கொண்டாடப்பட வேண்டிய சகல தகுதிகளும் அவருக்கிருக்கிறது.
நடிகை என்றாலே ஆடிப்பாடுவது, விதவிதமான உடையணிந்து கொண்டு நாயகனைக் கொஞ்சிப் பேசிக் காதலிப்பது என்ற பிம்பத்தைச் சிதறடித்தவர் சாவித்திரி. தமிழ் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் மொத்தம் 318 படங¢களில் நடித்துள்ள சாவித்திரி, தயாரிப்பு இயக்கம் பாடல் என்று சினிமாவின் பன்முகக் கலைஞராக விளங்கினார்.
சாவித்திரியின் நடிப்பை நான்கு விதமாக அடையாளப்படுத்தலாம், ஒன்று தேவதாஸில் வரும் பாரூ போன்ற துடுக்கத்தனமும் வம்பும் கேலியுமான பெண்; மற்றது பாசமலரில் வருவது போன்ற பாசமும் அன்பும் திருமணத்தால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனைகளுக் காக வருந்தும் பெண் பாத்திரம், மூன்றாவது தன் விருப்பம்போல சுற்றித்திரிந்து தெரிந்தவர் தெரியாதவர் எவரோடும் இயல்பாக கலந்து பேசி உலக அனுபவத்தை அறிந்துகொள்ளும் நவராத்திரியில் வரும் கதாநாயகி போன்ற பிம்பம், அடுத்தது தாயன்பின் அடையாளம் போன்ற புனித பிம்பம், அது பிராப்தம் படத்தில் வரும் சின்னம்மா அல்லது புராணப்படங்களில் வரும் கடவுளான சக்தியாக இருக்கலாம். இந்த நான்கு வகைப்பாட்டிற்குள் சாவித்திரியின் அத்தனை படங்களும் அடங்கி விடுகின்றன. இந்த ஒவ்வொரு வகை யிலும் அவர் மாறுபட்ட பல்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கி சாதனைகள் செய்திருக்கிறார்.
பாசமலர் திரைப்படம் இன்றைக்கும் அண்ணன் தங்கை உறவிற்கான ஓர் அடையாளச் சின்னம் போலிருக்கிறது. தேவ தாஸை தலைமுறைகள் கடந்தும் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். ஒரு நடிகையாக இவ்வளவு வித்தியாச மான கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் சாவித்திரி ஒருவரே. நிமிர்ந்த நடையும், ஆண்களை நேர்நின்று பார்க்கும் பார்வையும், கண்களாலே பேசும் அழகும், தெளிவான உச்சரிப்பும், உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் அவரைத் தனித்துவமிக்க நடிகையாக்கியது.
நாடக நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கி தமிழ், தெலுங்கு இரண்டு திரைப்படத் துறைகளிலும் உன்னத நிலை பெற்று தன்னோடு நடித்த ஜெமினிகணேசனை பலரது எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு திரைப்படத்தை இயக்கி தயாரித்து, அதன் தோல்வியாலும் குடும்ப வாழ்வின் கசப்பாலும் குடியில் வீழ்ந்து தன்னை அழித்துக் கொண்டவர் சாவித்திரி. அவரது வாழ்க்கை காவியத்துயரம் கொண்டதாகவே இருக்கிறது.
நடிப்பிற்கு வெளியே சாவித்திரி காட்டிய ஈடுபாடுகள் முன்னு தாரணமாகப் பேசப்பட வேண்டியவை. சாவித்திரியின் நூறாவது படமான ‘கொஞ்சும் சலங்கை’யில் நாதஸ்வரம் வாசித்த காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் இசைக்கு ரசிகையாகி, அவரைப் பாராட்டியதோடு காருகுறிச்சி கோவில்பட்டியில் புதிய வீடுகட்டி குடிபோனபோது அந்த விழாவில் கலந்து கொண்டு விருந்தினர்களுக்கு தன் கையால் உணவு பரிமாறியவர் சாவித்திரி.
காருகுறிச்சியார் இறந்துபோனதும் அவருக்காக கோவில்பட்டியில் சாவித்திரியும் ஜெமினியும் ஒரு நினைவுச்சிலை அமைத்தி ருக்கிறார்கள். கவனிப்பாரற்று போய் இன்று தூசியடைந்து நிற்கிறது அச்சிலை. அதில் நாதசுர கலாநிதி காருகுறிச்சி அருணாசலம் அவர் களின் ஞாபகார்த்த திருவுருவச் சிலை அன்பளிப்பு ஜெமினி கணேஷ் -& சாவித்திரி (9.7.67) என்ற கல்வெட்டு காணப்படுகிறது. மகாகவி பாரதி பிறந்த எட்டய புரத்தில் பெண்கள் குடிதண்ணீருக் காக கஷ்டப்படுகிறார்கள் என்று அறிந்து, தனது சொந்தச் செலவில் சாவித்திரி ஒரு குடிநீர் கிணறு அமைத்து தந்திருக்கிறார். ஆந்திரா வில் தனது சொந்த ஊர் மாணவர் களின் கல்விக்காக பெரிய பள்ளிக் கூடம் ஒன்றினையும் கட்டித் தந்திருக்கிறார், அதைவிடவும் தனது நகைகள் யாவையும் இந்தியா பாகிஸ் தான் யுத்த நிதிக்காக பிரதமரிடம் கொடையாகத் தந்தவர் சாவித்திரி.
சாவித்திரிக்குப் பிடித்த விளை யாட்டு சதுரங்கமும் கிரிக்கெட்டும், நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டில் அவரும் சிவாஜியும் ஆளுக்கொரு கிரிக்கெட் மட்டையுடன் நிற்கும் புகைப்படத்தைக் கண்டு பெண்கள் கிரிக்கெட் விளையாடுவார்களா என்று ஊரே ஆச்சரியத்துடன் பேசியது நினைவில் இருக்கிறது தனது பிள்ளைகள் ஆங்கிலப் படங்களைக் காணவேண்டும் என்பதற்காக வீட்டிலேயே பதினாறு எம்எம் திரைப்பட அரங்கு ஒன்றை அமைத்தவர் சாவித்திரி. அவருக்குப் பிடித்தமான நடிகை ஷெர்லி மெக்லைன், இவரது பாதிப்பை சாவித்திரியின் நடிப்பில் நன்றாகவே உணரமுடிகிறது.
சாவித்திரியின் அகத்துயரை புரிந்து கொண்ட ஒரே நடிகர் என்று சந்திரபாபுவை குறிப்பிடுவார்கள், காரணம் அவரும் அது போன்ற மனநெருக்கடியில் இருந்தவர். இருவருமே சொந்தப் படம் எடுத்து தோல்வியை அடைந்தவர்கள், கூடுதலாக திருமணவாழ்க்கையில் வீழ்ச்சியைச் சந்தித்தவர்கள். ஆகவே அவர்களுக்குள் நல்ல புரிதலும் நட்பும் உருவானது. சந்திரபாபு இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் படத்தில் சாவித்திரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு நகைச்சுவை நடிகரின் சோகப்பாடல்கள் தமிழ் மக்களால் இன்றும் கொண்டாடப்படுகின்றது என்றால் அதற்கான காரணம் சந்திரபாபுவின் தீராத மனத்துயரமும் அதை மெய்யுருக அவர் பாடும்விதமுமே.
சினிமாவில் ஒளிரும் உன்னத நட்சத்திரமாக இருந்த சாவித்திரி தன்னைக் கொண்டாடிய கலை உலகம் திடீரென தன்னைப் புறக்கணிப்பதையும். வஞ்சகமாக தனது வீடு கார் உள்ளிட்ட சகலவசதிகளையும் பறித்துக் கொண்டதையும் எண்ணி உள்ளுக்குள் கண்ணீர்வடித்தபடியே இருந்திருக்கிறார். ஒருகாலத்தில் அவரைச் சந்திக்க பார்வையாளர் களே வருவது கிடையாது என்ற நிலை உருவானது, கையில் காசில்லை, கடன்சுமை கழுத்தைப் பிடிக்கிறது, குடிப்பழக்கம் உடலை சிதைத்து விட்டிருக்கிறது. அது போன்ற சூழலில் ஆறுதலாகப் பேச யாருமில்லாமல் வீட்டின் அருகில் உள்ள ரிக்ஷா ஒட்டுபவர்களை அவராகத் தேடிப்போய் புழுதியில் உட்கார்ந்துகொண்டு பேசிக் கொண்டிருந்தார் என்ற தகவல்களை கேள்விப்படும் போது மனதில் சொல்லமுடியாத பாரம் உருவாகிறது.
தமிழ் சினிமாவில் எம்ஆர் ராதாவிற்கு இணையாக உடல்மொழியைப் பயன்படுத்தியவர் சாவித்திரி ஒருவரே. குறிப்பாக பகடியான குரலில் அவர் பேசும் முறை அற்புதமான ஒன்று. ஈவா பெரூன் என்ற நடிகையைப் பற்றிய Evita என்ற ஆலன் பார்கர் படத்தில் ஈவா இறந்துபோனதற்கான அற்புத மான துயரப்பாடல் ஒன்றிருக்கிறது. அதில் She didn’t say much, but she said it loud என்ற வரி உள்ளது, அந்த வரி சாவித்திரிக்கும் பொருத்த மானதே.
நன்றி - த சண்டே இந்தியன்