Showing posts with label S.RAMAKRISHNAN. Show all posts
Showing posts with label S.RAMAKRISHNAN. Show all posts

Sunday, June 24, 2012

எஸ்.ராமகிருஷ்ணன் பார்வையில் சாவித்திரி

http://www.cinesouth.com/diwali/images/ramakrishnadeepa01.jpg


நவராத்திரி திரைப்படம் சிவாஜி ஒன்பது வேறுபட்ட வேஷங்களில் நடித்துள்ளதற் காக இன்றும் பேசப் படுகிறது, அந்த ஒன்பது வேஷங்களுக்கும் இணையாக நடித்த சாவித்திரி, தன்னை உருமாற்றிக் கொள்ளாமல் ஒரே படத்தில் ஒன்பது விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை சினிமாவுலகம் கொண்டாடவேயில்லை, குறிப்பாக அந்தப் படத்தில் ஒரு தெருக்கூத்து நிகழ்வு இருக்கிறது, அதில் ராணி வேஷம்கட்டி வந்து கேலியும் கிண்டலும் துள்ளலுமாக ஆடிப்பாடும் சாவித்திரியின் நடிப்பு அபாரமானது, இது சாவித்திரியின் ஒரு தனித்துவம் என்றால், ‘எனையாளும் மேரி மாதா’ எனப்பாடும் மிஸ்ஸியம்மா பட சாவித்திரி முகத்தில் கசியும் கருணையும் அன்பும் இன்னொரு பரிமாணம்.



 தேவதாஸ் படத்தில் துடுக்குதனமாக பேசும் சாவித்திரி இறுதிக்காட்சியில் நம்மை கலங்கடித்துவிடுகிறார். இப்படி மிகையற்ற, இயல்பான நடிப்பின் அடையாளமாகவே சாவித்திரி என் நினைவில் பதிந்துபோயிருக்கிறார்.

சமீபத்தில் சாவித்திரிக்கு ஆந்திராவிலுள்ள விஜயவாடாவில் சிலை அமைத்திருக்கிறார்கள், தமிழ்நாட்டில் என்.எஸ். கிருஷ்ணன் எம்ஜிஆர், சிவாஜி என புகழ்பெற்ற நடிகர்களுக்கு சிலைகள் இருக் கின்றன. நான் அறிந்தவரை நடிகை கள் எவருக்கும் சிலையில்லை. கவர்ச்சி நடிகைகளுக்கு கோவில்கட்டுவது, சிலை வைப்பது உலகெங்கும் இருக்கிறது. ஆனால் உடற்கவர்ச்சியைப் புறந்தள்ளி தனது நடிப்பால் மட்டுமே புகழ்பெற்ற சாவித்திரிக்கு சிலை வைக்கப்பட்டிருப்பது மகத்தானது. அப்படிக் கொண்டாடப்பட வேண்டிய சகல தகுதிகளும் அவருக்கிருக்கிறது.

நடிகை என்றாலே ஆடிப்பாடுவது, விதவிதமான உடையணிந்து கொண்டு நாயகனைக் கொஞ்சிப் பேசிக் காதலிப்பது என்ற பிம்பத்தைச் சிதறடித்தவர் சாவித்திரி. தமிழ் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் மொத்தம் 318 படங¢களில் நடித்துள்ள சாவித்திரி, தயாரிப்பு இயக்கம் பாடல் என்று சினிமாவின் பன்முகக் கலைஞராக விளங்கினார்.

சாவித்திரியின் நடிப்பை நான்கு விதமாக அடையாளப்படுத்தலாம், ஒன்று தேவதாஸில் வரும் பாரூ போன்ற துடுக்கத்தனமும் வம்பும் கேலியுமான பெண்; மற்றது பாசமலரில் வருவது போன்ற பாசமும் அன்பும் திருமணத்தால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனைகளுக் காக வருந்தும் பெண் பாத்திரம், மூன்றாவது தன் விருப்பம்போல சுற்றித்திரிந்து தெரிந்தவர்  தெரியாதவர் எவரோடும் இயல்பாக கலந்து பேசி உலக அனுபவத்தை அறிந்துகொள்ளும் நவராத்திரியில் வரும் கதாநாயகி போன்ற பிம்பம், அடுத்தது தாயன்பின் அடையாளம் போன்ற புனித பிம்பம், அது பிராப்தம் படத்தில் வரும் சின்னம்மா அல்லது புராணப்படங்களில் வரும் கடவுளான சக்தியாக இருக்கலாம். இந்த நான்கு வகைப்பாட்டிற்குள் சாவித்திரியின் அத்தனை படங்களும் அடங்கி விடுகின்றன. இந்த ஒவ்வொரு வகை யிலும்  அவர் மாறுபட்ட பல்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கி சாதனைகள் செய்திருக்கிறார்.


http://www.secretgallery.info/albums/userpics/10001/normal_Mahanati_Savithri__-001.jpg

பாசமலர் திரைப்படம் இன்றைக்கும் அண்ணன் தங்கை உறவிற்கான ஓர் அடையாளச் சின்னம் போலிருக்கிறது. தேவ தாஸை தலைமுறைகள் கடந்தும் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். ஒரு நடிகையாக இவ்வளவு வித்தியாச மான கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் சாவித்திரி ஒருவரே. நிமிர்ந்த நடையும், ஆண்களை நேர்நின்று பார்க்கும் பார்வையும், கண்களாலே பேசும் அழகும், தெளிவான உச்சரிப்பும், உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் அவரைத் தனித்துவமிக்க நடிகையாக்கியது.

நாடக நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கி தமிழ், தெலுங்கு இரண்டு திரைப்படத் துறைகளிலும் உன்னத நிலை பெற்று தன்னோடு நடித்த ஜெமினிகணேசனை பலரது எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு திரைப்படத்தை இயக்கி தயாரித்து, அதன் தோல்வியாலும் குடும்ப வாழ்வின் கசப்பாலும் குடியில் வீழ்ந்து தன்னை அழித்துக் கொண்டவர் சாவித்திரி. அவரது வாழ்க்கை  காவியத்துயரம் கொண்டதாகவே இருக்கிறது.

நடிப்பிற்கு வெளியே  சாவித்திரி காட்டிய ஈடுபாடுகள் முன்னு தாரணமாகப் பேசப்பட வேண்டியவை. சாவித்திரியின் நூறாவது படமான ‘கொஞ்சும் சலங்கை’யில் நாதஸ்வரம் வாசித்த காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் இசைக்கு ரசிகையாகி, அவரைப் பாராட்டியதோடு காருகுறிச்சி கோவில்பட்டியில் புதிய வீடுகட்டி குடிபோனபோது அந்த விழாவில் கலந்து கொண்டு விருந்தினர்களுக்கு தன் கையால் உணவு பரிமாறியவர் சாவித்திரி.

காருகுறிச்சியார் இறந்துபோனதும் அவருக்காக கோவில்பட்டியில் சாவித்திரியும் ஜெமினியும் ஒரு நினைவுச்சிலை அமைத்தி ருக்கிறார்கள். கவனிப்பாரற்று போய் இன்று தூசியடைந்து நிற்கிறது அச்சிலை. அதில் நாதசுர கலாநிதி காருகுறிச்சி அருணாசலம் அவர் களின் ஞாபகார்த்த திருவுருவச் சிலை அன்பளிப்பு ஜெமினி கணேஷ் -&  சாவித்திரி (9.7.67) என்ற கல்வெட்டு காணப்படுகிறது. மகாகவி பாரதி பிறந்த எட்டய புரத்தில் பெண்கள் குடிதண்ணீருக் காக கஷ்டப்படுகிறார்கள் என்று அறிந்து, தனது சொந்தச் செலவில் சாவித்திரி ஒரு குடிநீர் கிணறு அமைத்து தந்திருக்கிறார். ஆந்திரா வில் தனது சொந்த ஊர் மாணவர் களின் கல்விக்காக பெரிய பள்ளிக் கூடம் ஒன்றினையும் கட்டித் தந்திருக்கிறார், அதைவிடவும் தனது நகைகள் யாவையும் இந்தியா பாகிஸ் தான் யுத்த நிதிக்காக பிரதமரிடம் கொடையாகத் தந்தவர் சாவித்திரி.

சாவித்திரிக்குப் பிடித்த விளை யாட்டு சதுரங்கமும் கிரிக்கெட்டும், நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டில் அவரும் சிவாஜியும் ஆளுக்கொரு கிரிக்கெட் மட்டையுடன் நிற்கும் புகைப்படத்தைக் கண்டு பெண்கள் கிரிக்கெட் விளையாடுவார்களா என்று ஊரே ஆச்சரியத்துடன் பேசியது நினைவில் இருக்கிறது தனது பிள்ளைகள் ஆங்கிலப் படங்களைக் காணவேண்டும் என்பதற்காக வீட்டிலேயே பதினாறு எம்எம் திரைப்பட அரங்கு ஒன்றை அமைத்தவர் சாவித்திரி. அவருக்குப் பிடித்தமான நடிகை ஷெர்லி மெக்லைன், இவரது பாதிப்பை சாவித்திரியின் நடிப்பில் நன்றாகவே உணரமுடிகிறது.

சாவித்திரியின் அகத்துயரை புரிந்து கொண்ட ஒரே நடிகர் என்று சந்திரபாபுவை குறிப்பிடுவார்கள், காரணம் அவரும் அது போன்ற மனநெருக்கடியில் இருந்தவர். இருவருமே சொந்தப் படம் எடுத்து தோல்வியை அடைந்தவர்கள், கூடுதலாக திருமணவாழ்க்கையில் வீழ்ச்சியைச் சந்தித்தவர்கள். ஆகவே அவர்களுக்குள் நல்ல புரிதலும் நட்பும் உருவானது. சந்திரபாபு இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் படத்தில் சாவித்திரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு நகைச்சுவை நடிகரின் சோகப்பாடல்கள் தமிழ் மக்களால் இன்றும் கொண்டாடப்படுகின்றது என்றால் அதற்கான காரணம் சந்திரபாபுவின் தீராத மனத்துயரமும் அதை மெய்யுருக அவர் பாடும்விதமுமே.

சினிமாவில் ஒளிரும் உன்னத நட்சத்திரமாக இருந்த சாவித்திரி தன்னைக் கொண்டாடிய கலை உலகம் திடீரென தன்னைப் புறக்கணிப்பதையும். வஞ்சகமாக தனது வீடு கார் உள்ளிட்ட சகலவசதிகளையும் பறித்துக் கொண்டதையும் எண்ணி உள்ளுக்குள் கண்ணீர்வடித்தபடியே இருந்திருக்கிறார். ஒருகாலத்தில் அவரைச் சந்திக்க பார்வையாளர் களே வருவது கிடையாது என்ற நிலை உருவானது, கையில் காசில்லை, கடன்சுமை கழுத்தைப் பிடிக்கிறது, குடிப்பழக்கம் உடலை சிதைத்து விட்டிருக்கிறது. அது போன்ற சூழலில் ஆறுதலாகப் பேச யாருமில்லாமல் வீட்டின் அருகில் உள்ள ரிக்ஷா ஒட்டுபவர்களை அவராகத் தேடிப்போய் புழுதியில் உட்கார்ந்துகொண்டு பேசிக் கொண்டிருந்தார் என்ற தகவல்களை கேள்விப்படும் போது மனதில் சொல்லமுடியாத பாரம் உருவாகிறது.

தமிழ் சினிமாவில் எம்ஆர் ராதாவிற்கு இணையாக உடல்மொழியைப் பயன்படுத்தியவர் சாவித்திரி ஒருவரே.  குறிப்பாக பகடியான குரலில் அவர் பேசும் முறை அற்புதமான ஒன்று. ஈவா பெரூன் என்ற நடிகையைப் பற்றிய Evita என்ற ஆலன் பார்கர் படத்தில் ஈவா இறந்துபோனதற்கான அற்புத மான துயரப்பாடல் ஒன்றிருக்கிறது. அதில் She didn’t say much, but she said it loud என்ற வரி உள்ளது, அந்த வரி சாவித்திரிக்கும் பொருத்த மானதே.

 நன்றி - த சண்டே இந்தியன்

Thursday, June 23, 2011

கதாவிலாசம் எஸ்.ராமகிருஷ்ணன் பேட்டி

http://lh4.ggpht.com/-oXTk_1S2qSU/TR9wwsV6VfI/AAAAAAAAE4k/iKbvi5-EOfk/DSC06684.JPG 
 
விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்


1. ''ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' 

''அதை வீழ்ச்சி என்று நான் ஒப்புக்கொள்கின்றவன் இல்லை. வாழ்வுரிமை பறிபோய், இன்றும் அகதிகளாக முகாமிலும் பல்வேறு தேசங்களிலும் நிர்க்கதியாக நிற்கும் மக்களின் கண்களில், பேச்சில், சிந்தனையில் ஈழப் போராட்டம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இவ்வளவு பெரிய மனிதத் துயரத்தை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த தமிழகச் சூழலைத்தான் மனிதாபிமானமற்றுப்போன வீழ்ச்சி என்று சொல்வேன்!''



2. ''தமிழில் நோபல் பரிசுக்குத் தகுதியான எழுத்தாளர் என்று யாரைச் சொல்வீர்கள்?''   

''கி.ராஜநாராயணன். அவர் ஓர் உன்னதமான கதை சொல்லி. மிகப் பெரிய இலக்கிய ஆளுமை. எளிய விவசாயியாக இடைசெவல் என்ற கிராமத்தில் வாழ்ந்து எழுதியவர். கிராம மக்களின் பேச்சுத் தமிழை இலக்கிய மொழியாக்கியவர். கரிசல் இலக்கியம் என்ற தனி வகையை உருவாக்கிய முன்னோடி. கிராமியக் கதைகள், பாடல்கள், சொலவடைகள், நாட்டுப்புற நம்பிக்கைகள் என்று தேடித் தேடிச் சேகரித்து, நமது வாழ்மொழி மரபைக் காப்பாற்றியவர்.  
கரிசல் அகராதி என்று வட்டார வழக்கு அகராதியை உருவாக்கியவர். இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து போராடிய விவசாயி. சங்கீத ஞானத்தில் விற்பன்னர். சங்கீத மேதை விளாத்திகுளம் சாமிகளின் சீடர். 50-க்கும் மேற்பட்ட கரிசல் வட்டார எழுத்தாளர்களை உருவாக்கியவர். இவரது 'கோபல்லபுர கிராமம்’ மிக முக்கியமான தமிழ் நாவல். எகிப்தின் நகுப் மக்பூஸ் (Naguib Mahfouz) நோபல் பரிசு பெற்றபோது, தமிழ் மொழியில் அவருக்கு நிகராக கி.ரா. இருக்கிறாரே என்று தோன்றியது. அந்த ஆதங்கம் எப்போதும் இருக்கிறது!''


3. ''எத்தனையோ இசங்கள் இருக்கின்றன... அவற்றில் உங்களைக் கவர்ந்த இசம்?'' 


''கம்யூனிசம். எல்லா இசங்களும் அறிவாளி களுக்கானவை. கம்யூனிசம் ஒன்று மட்டுமே சாமான்ய மக்களின் நலனுக்கானது. இசங்கள்பற்றி சுந்தர ராமசாமி நீண்ட கவிதை எழுதிஇருக்கிறார். அதில் எனக்குப் பிடித்தமான வரிகள்...

'மேற்கே ரொமான்டிஸிஸம்
நேச்சரலிசம்
ரியலிசம்
அப்பால்
இம்ப்ரஷனிசம்
என் மனைவிக்குத்
தக்காளி ரசம்!’ ''


\
 4.''இயக்குநர் பாலாவுடன் வேலை பார்த்த அனுபவம்?'' 

''ஒரு புத்தகம் எழுதும் அளவு நிறைய அனுபவம் பெற்றிருக்கிறேன். 'இவன்தான் பாலா’ என்று புத்தகம் வழியாகப் படித்து அறிந்த பாலாவுக்கும் பழகிப் பார்த்த பாலாவுக்கும் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.

திறந்த புத்தகம்போலத் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசக் கூடியவர். நட்பை மதிக்கத் தெரிந்தவர். திறமையை அடையாளம் கண்டு கொண்டாடவும் மேம்படுத்தவும் கூடியவர். தான் நினைத்ததை சினிமாவில் காட்சிப்படுத்த 100 சதவிகிதம் முயற்சி செய்யும் பெர்ஃபெக்ஷனிஸ்ட். ஒருநாள் பாலாவைச் சந்திக்க எனது சிங்கப்பூர்  நண்பரை அழைத்துச் சென்றேன். அவர் பாலாவின் எளிமையை, வெளிப்படையாகத் தன்னையே கேலி செய்துகொள்ளும் பண்பைக் கண்டு, 'என்ன அண்ணே, பாலா இப்படி இருக்கிறார்!’ என்று வியந்து பேசினார். ஒன்றரை ஆண்டுகள் அவரோடு சேர்ந்து வேலை செய்தும், அந்த வியப்பு இன்றும் எனக்கும் இருக்கிறது. அதுதான் பாலா.

ஓர் இயக்குநர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, பில்லி வைல்டர் என்ற அமெரிக்க இயக்குநர் சொன்ன பதில் இது:   A director must be a policeman, a midwife, a psycho analyst, a sycophant and a fool. இது பாலாவுக்கும் பொருந்தக்கூடியதே!''


5.  '' 'எங்கள் பகல் உங்கள் இரவுகளைவிடக் கருமையானவை’ என்று பார்வையற்றவர்களின் உலகத்தைச் சொல்லும் புதினம் இதுவரை வந்துள்ளதா? விளக்கவும்?'' 

'' 'நிறங்களின் உலகம்’ என்று தேனிசீருடையான் ஒரு சிறந்த நாவலை எழுதிஇருக்கிறார். அவர் சிறு வயதில் பார்வைஇழந்து, அவதிப்பட்டு, பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் பயின்றவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அறுவை சிகிச்சை செய்து, பார்வை கிடைத்திருக்கிறது. தனது இருண்ட வாழ்வனுபவத்தை அவர் ஒரு நாவலாக எழுதிஇருக்கிறார். மிக முக்கியமான நாவல் அது!''


6.  ''அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கலை - இலக்கியம் ஆரோக்கிய மாக இருக்கும் அளவுக்கு, தமிழகத்தில் இல்லை என்கிறார்கள் (சினிமா விதிவிலக்கு). உண்மையா?'' 


''உண்மையே! நாம் இலக்கியப் பெருமை பேசுகிறோமே தவிர, எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை. தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, கிரிக்கெட் - இந்த மூன்றுக்கும் தரப்படும் முக்கியத்துவம் வேறு எந்தத் துறைக்கும் தரப்படுவது இல்லை. காரணம், அதன் உடனடி பரபரப்புத்தன்மை.

இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் இரண்டாம்பட்சமாகவே நடத்துகிறார்கள். தமிழில் முதன்முறையாக நான் தாகூர் விருது வாங்கி இருக்கிறேன். இங்கு பெரும்பான்மை நாளிதழ்களில் அது செய்தியாகக்கூட வெளியாகவில்லை. ஆனால், அஸ்ஸாமிய எழுத்தாளர் அதே விருது வாங்கியது அங்கே முதல் பக்கச் செய்தி. அரசு அதற்காகப் பாராட்டு விழா நடத்துகிறது.

கல்வி நிலையங்கள் அவரைக் கொண்டாடுகின்றன. இதே சூழல்தான் கேரளாவிலும் கர்நாடகாவிலும் இருக்கிறது.  அங்கே எழுத்தாளர்களை பப்ளிக் இன்டெலக்சுவல் என்று கருதுகிறார்கள். எல்லா முக்கியப் பிரச்னைகளிலும் கருத்து கேட்கிறார்கள், ஆலோசகர்களாக நியமிக்கிறார்கள். கேரளாவில் எழுத்தாளன்தான் தன் குழந்தையின் கையைப் பிடித்து அட்சரம் எழுதக் கற்றுத் தர வேண்டும் என்று மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த எழுத்தாளருக்கும் இன்று வரை அந்த மரியாதை கிடைக்கவே இல்லை!''

 http://maduraivaasagan.files.wordpress.com/2010/12/dhesandhiri.jpg?w=447&h=288
7. ''இணையத்தின் பயன்பாடு அதிகமாகிவிட்ட சூழலில், புத்தகத்துக்கு என்று தனியாக இருக்கும் மதிப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம் உங்களை எப்போதாவது சூழ்ந்து உள்ளதா?'' 


''ஒருபோதும் இல்லை. காரணம்,   இணையத்தின் வருகையால் தகவல்களைப் பெறுவது மட்டுமே எளிமையாகி இருக்கிறது. அதிலும், பெரும்பான்மை தகவல்களை நம்ப முடியவில்லை. பெரும்பான்மை வாசகர்கள் இன்றும் புத்தகங்களைத் தேடுகிறார்கள். இணையத்தால் புத்தகங்களின் முக்கியத்துவம் அதிகமாகிவிட்டது. நிறையப் புத்தகங்கள் விற்பனையாகின்றன. ஈபுக் ரீடர். ஐ-பேட், ஐ-போன் போன்ற உபகரணங்களில் காகிதம் இல்லாத புத்தகங்கள் பெருகி வருகின்றன. ஆனாலும், அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான முக்கியத்துவம் அப்படியே இருக்கிறது.


10 கிராம் உள்ள டூத் பிரஷை என்னால்  ஐந்து நிமிடங்களுக்கு மேல் கையில் வைத்து இருக்க முடியாது. ஆனால், 'பொன்னியின் செல்வன்’ போன்ற ஆயிரம் பக்க நாவலை மணிக்கணக்கில் கையில் வைத்து, அதன் எடை பற்றிய கவனமே இல்லாமல் படிக்க முடிகிறதே, அதுதான் புத்தகத்தின் தனித்துவம். புத்தகம் என்பது வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதம் இல்லை. அது மனித வாழ்வின் அழியாத நினைவுத் திரட்டு. எல்லை அற்ற மனித அனுபவங்களை, நினைவுகளைத் தொகுத்து ஆவணப்படுத்தி வைத்திருப்பதே புத்தகங்களின் இருப்புக்கான முதற் காரணம். அது என்றும் மாறாதது!''


8.  ''அண்ணா ஹஜாரே, ராம்தேவ் ஆகியோரின் போராட்டங்களை ஆதரிக்கிறீர்களா? இல்லை என்றால், ஏன்?'' 

அண்ணா ஹஜாரேவை ஆதரிக்கிறேன். அவர் ஒரு காந்தியவாதி. பல ஆண்டுகாலமாக மக்கள் சேவையில் இருப்பவர். ஆனால், பாபா ராம்தேவை ஆதரிக்கவில்லை. காரணம், அவர் ஒரு மதத் துறவி என்ற அடையாளத்தில் நடமாடும் ஆன்மிக வியாபாரி. 1,000 கோடி சொத்துள்ள ராம்தேவ் ஊழலை எதிர்க்க முன்வந்திருப்பது ஒரு சந்தர்ப்பவாத அரசியல். ஊழலுக்கு  முக்கியப் பிரச்னை, குறுக்கு வழியில்  பணம் சம்பாதிக்க நினைக்கும் பேராசை. இது அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லை, சாமான்ய மக்களுக்கும் இருக்கவே செய்கிறது. 

லஞ்சம்  வாங்குவதைத் தனது திறமை என்று  எண்ணும் மனப்பாங்கு நமக்குள் உருவாகி இருக்கிறது. குற்ற உணர்ச்சி இன்றி அதை நியாயப்படுத்துகிறோம். அந்தத் தொற்றுநோயின் முற்றிய நிலைதான் ஊழல். ஊழல் இன்று தேசிய அடையாளம்போல் ஆகிவிட்டது. 

அதற்கான எதிர்ப்பு உணர்வு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் துவங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஊழலுக்கு எதிராக தான் என்ன செய்யப்போகிறோம் என்று யோசிக்கவும் செயல்படவும் வேண்டும். கடுமையான சட்டமும், சமூக அக்கறைகொண்ட ஊடகங்களும், மக்கள் சக்தியும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இது சாத்தியம்!''


- அடுத்த வாரம்... 


''உங்களுக்கு தமிழ்நாட்டில் பிடித்த அரசியல்வாதி யார்?'' 

''உங்களைப்போன்ற எழுத்தாளர்கள் துணிச்சலான அரசியல் கருத்துகளை முன்வைப்பது இல்லையே... பயமா?'' 

''சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்... யாருக்கு ரசிகர்கள் அதிகம்?'' 


- விறுவிறு பதில்கள் தொடர்கின்றன... 

நன்றி - விகடன்