Showing posts with label S I P. Show all posts
Showing posts with label S I P. Show all posts

Tuesday, January 01, 2013

S I P = சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் செய்யலாமா? - சோம. வள்ளியப்பன்

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்!

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் செய்யலாமா?

சோம. வள்ளியப்பன்

அப்படி இப்படி என்று பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் முந்தைய உச்சத்துக்கு அருகில் வந்துவிட்டன. சென்செக்ஸ் 19,500 புள்ளிகள், நிப்டி 5,950 புள்ளிகள். முந்தைய உச்சம், இனி கைக்கெட்டும் தூரம்தான்.
2008 ஜனவரி மாதம்தான் பங்குச்சந்தை உச்சாணிக் கொம்பில் நின்றது. பின், தவறி குப்புற விழுந்தது. அதன்பிறகு வரும் ஜனவரி 2013 மாதத்துடன் முழுசா ஐந்து ஆண்டுகள் முடிகின்றன.
ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட அதே அளவு வந்திருந்தாலும், குறியீட்டு எண்கள் மேலும் உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று கருதுவோர் உண்டு. காரணம், நிறுவனங்களின் சம்பாத்தியங்கள் அப்படி.
சென்செக்ஸ் PE என்பார்கள். அப்படி என்றால் என்ன?
ஒரு குடும்பம் 2003ம் ஆண்டில் மாதம் ஒன்றுக்கு 4000 ரூபாய்க்கு மளிகைப் பொருட்கள் வாங்கியது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குடும்பத்தின் வருமானம் தொடர்ந்து அதிகரிக்கின்றது என்று, குடும்பத்தினர் செலவையும் கூட்டிக் கொண்டே போனார்கள். மாதம் 10 ஆயிரம், 15 ஆயிரம் என்று உயர்த்திக் கொண்டே போய், 2008ம் ஆண்டு மாதம் 21 ஆயிரம் ரூபாய் செலவு செய்தார்கள். அந்த அளவு செலவு தாங்காது என்று, கடன்காரர்கள் விரட்ட பிரச்னைகள் அதிகமாகி, மாதம் 8000 என்கிற அளவுக்கு ஒரேயடியாகக் குறைத்துக் கொண்டார்கள்.
பின்பு கடன்கள் குறைந்து, மேலும் சில குடும்ப உறுப்பினர்களும் சம்பாதிக்கத் தொடங்க, ஏற்கெனவே சம்பாதிப்பவர்களின் வருமானங்களும் உயர, அந்தக் குடும்பம் மீண்டும் செலவைக் கூட்டியது. தற்சமயம் (டிசம்பர் 2012ல்) அது 19500 ஆக இருக்கிறது. அதிகபட்சம் 21,000 தான் வரமுடியும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கு மேலேயும் அந்தக் குடும்பத்தால் செலவு செய்யமுடியும் என்கிறார்கள் வேறு சிலர்.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், இப்போது 2012ல் அந்தக் குடும்ப உறுப்பினர்களின் சம்பாத்தியம் அதிகம் என்பது தான்.
21,000 என்பது ஒரு எண். அவ்வளவுதான். செலவு அதைத் தாண்ட முடியாது என்பதோ, அதைத் தாண்டினால்தான் சரி என்றோ சொல்ல முடியுமா?
சென்செக்ஸ் என்ற குறியீட்டு எண், குடும்பம் செலவு செய்கிற தொகைக்கு ஒப்பு. அந்தக் குடும்பம் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம், ஈட்டுகிற வருமானத்துக்கு ஏற்ப என்பது போல, சென்செக்ஸும் எவ்வளவு வேண்டுமானாலும் உயரலாம். வருமானம் குறைந்தால் மீண்டும் செலவும் குறையலாம். எந்த எண்ணும் இறுதியானது அல்ல.

ஒரு பங்கு ஆண்டுக்கு எவ்வளவு லாபம் ஈட்டுகிறது என்பதை E P S என்பார்கள். (எர்னிங்ஸ் பெர் ஷேர்). அந்த ஒரு பங்குக்கான லாபத்தைப் போல, அந்தப் பங்கு சந்தையில் எத்தனை மடங்கு விலை விற்கிறது என்று வகுத்துப் பார்த்துச் சொல்லுவதுதான் P E(பிரைஸ் எர்னிங் ரேஷியோ) கணக்கு.
தனிப்பட்ட நிறுவனப் பங்குகளுக்கு அந்த விதமாக, என்ன E P S மற்றும் என்ன P E இருக்கிறது என்று பார்த்து ஒருவர் பங்குகள் வாங்குவதைப் போல, மொத்த பங்குச் சந்தைக் குறியீட்டு எண் என்ன அளவு போகலாம் என்று கணிப்பதற்கும், இந்த P E முறையைப் பயன்படுத்துவார்கள்.
சென்ற அத்தியாயத்தில் பார்த்தது, டெக்னிக்கல் அனாலிசிஸ்சின் ஒரு சிறு பகுதி என்றால், இவை (E P S , P E எல்லாம்) ஃபண்டமெண்டல் அனாலிசிஸ்சின் சிறிய பகுதிகள்.
தற்சமயம் சென்செக்ஸ் 19,500 இருக்கிற போது அதன் P E, 17 ஆக இருக்கிறது. அப்படியென்றால், சென்செக்ஸ்சில் இருக்கும் 30 நிறுவனங்களின் மொத்த E P Sசைப் போல, 17 மடங்கு சென்செக்ஸ் இருக்கிறது என்று பொருள்.
முன்பு 2008 ஜனவரியில் சென்செக்ஸ் 21,000 போன போது, அது 26 அளவு P E ஆக இருந்தது. கூடுதல் P E என்பது ஒரு குடும்பம், அது சம்பாதிப்பதைப் போல பலமடங்கு செலவு செய்வதற்கு ஒப்பு. நிலைமை தற்சமயம் அப்படியில்லை. காரணம், தற்சமயம் சென்செக்ஸில் இருக்கும் பங்குகள் சம்பாதிப்பது 2008ல் சம்பாதித்ததைவிட அதிகம். அதனால்தான் P E குறைவாக இருக்கிறது.
செய்தி என்ன?
நிறுவனங்கள் சம்பாதிப்பதை மட்டும் வைத்துப் பார்த்தால், குறியீட்டு எண்கள் உயர்வதற்கு இன்னும் இடம் இருக்கிறது. இதை உச்சம் என்று சொல்லமுடியாது.
நானும் பார்க்கிறேன், நான் வாங்கிய பங்கு விலை இறங்குகிறது, நான் விற்ற பின்பு அதே பங்குகள் விலை ஏறுகின்றனஎன்று பலரும் சொல்வார்கள். ‘எதிர்பார்த்து நின்றால் அந்தப் பேருந்து வரவே வராது. ஆனால் வேறு வேலையாக வெளியில் போகும் போது பார்த்தால், அதே வழித்தடப் பேருந்து ஒன்றன்பின் ஒன்றாகப் போகும்என்று சொல்வது போன்றதுதான் இதுவும்.
பங்குச்சந்தை என்ற பெரும் கடலில், நாமெல்லாம் சின்னஞ்சிறு சோழிகள். ஆக தற்செயலாக நிகழ்வனவற்றை நாமாக நமக்கு எதிரான செயல்களாகக் கற்பனை செய்து கொள்கிறோம்.

எவராலும் மிகச் சரியாக விலை ஏறுவதற்கு முன்பு வாங்க முடியாது. விலை இறங்கும் முன் சரியாக விற்றுவிடவும் முடியாது. இது சந்தையைடைம்பண்ணுவதற்கான முயற்சி. தண்ணீரைக் கையில் பிடிக்கும் முயற்சி போன்றதேதான். நடக்காது.
வேறு என்ன வழி?
ஒரே ஒரு நிச்சய வழி இருக்கிறது. அதன் பெயர், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்.
இதில் இரண்டு வார்த்தைகள் முக்கியமானவை. ஒன்று, இன்வெஸ்ட்மென்ட். மற்றது சிஸ்டமேட்டிக்.
வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. ஒரே நாளில் வாங்காமல், கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ந்து வாங்குவது. அவ்வளவு தான். 100 பங்குகளை லட்ச ரூபாய்க்கு ஒரே தவணையில் வாங்கிவிட்டால், அதன் பிறகு இறங்கினால் வருத்தம் வரும். அதே போல், ஒரே தவணையில் 100 பங்குகளை, லட்ச ரூபாய்க்கு வாங்கிய உடனேயே, அந்தப் பங்கு விலை 20% உயர்ந்தால், அடடா இன்னும் கூடுதலாக வாங்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமாக இருக்கும் (பேராசைக்காரமனது!).
வாங்கிய பிறகு ஏறுமா இறங்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இடைப்பட்ட குறுகிய காலங்களில் எதுவும் நடக்கலாம். அதற்கு மாறுகிற அரசியல் நிலைமை, வெளிவரும் புள்ளிவிவரங்கள், சர்வதேச நிலைமைகள் என்று எவ்வளவோ இருக்கும். ஆனால், நல்ல நிறுவனங்கள், இடையில் விலைகள் இறங்கினாலும் நீண்ட காலத்தில் நன்றாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தால், அப்படிப்பட்ட பங்குகளை, சிறிய அளவுகளில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சிறுகச் சிறுக வாங்கிக் கொண்டேயிருப்பது ஒரு வழி.
மாதம் ஒரு பங்கு அல்லது மாதம் 5000 ரூபாய்க்கு என்பது போல், முன்கூட்டியே முடிவு செய்து கொண்ட தேதிகளில், என்ன விலை இருந்தாலும் தேர்ந்தெடுத்த பங்குகளை வாங்குவது. இதுதான் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான். நாமேதான் செய்ய வேண்டும் என்பதில்லை. பல பங்குத் தரகு நிறுவனங்களும், வங்கிகளும் கூட இப்படிப்பட்ட திட்டங்களை வைத்திருக்கிறார்கள். அதில் சேர்ந்து விட்டால் போதும். மாதம் 5000 என்பது ஓர் உதாரணம் தான். மாதம் 100 ரூபாய் என்கிற அளவில் கூட இந்தத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தைச் சுருக்கமாக SIP என்பார்கள்.
(தொடரும்)


நன்றி - கல்கி