தினமலர் விமர்சனம்
ஆமென் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பஹாத் பாசில், சுப்ரமணியபுரம் சுவாதியுடன் இணைந்துள்ள படம் தான் நார்த் 24 காதம்.
கதைச்சுருக்கம் - ஹரி கிருஷ்ணன் (பஹாத் பாசில்) மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஐ.டி.என்ஜினியர். ரிசர்வ்டாகவும், சில தருணங்களில் மேனியாக் போலவும் நடந்துகொள்ளும் இவர் தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களால் வெறுக்கப்படுகிறார். வேலையை ரிசைன் செய்யலாம் என முடிவெடுக்கும் பஹாத், இவரின் வெளியேற்றம் பலருக்கு சந்தோஷம் தருவதை உணர்ந்து முடிவினை மாற்றிக் கொள்கிறார். எர்ணாகுளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு மீட்டிங்கிற்காக ரயிலில் செல்கிறார்.
ரயிலில் உடன் பயணித்த வயதான வாத்தியார் (நெடுமுடி வேணு (இந்தியனில் போலீஸ் கிருஷ்ணசாமியாக, அந்நியனில் விக்ரமின் தந்தையாக வந்திருப்பாரே!!) கை பேசியில் ஒரு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைகிறார். தன் மனைவி சீரியஸாக இருக்கும் செய்தியை அறிந்த வேணு அடுத்த ஸ்டேஷனில் இறங்கி திரும்பிப் போக முடிவெடுக்கிறார்.
அர்த்த நிசியில் இவரின் தள்ளாடிய நிலையை பார்த்து இவருக்கு உதவுகிறார் சுப்ரமணியபுரம் சுவாதி. இருவரும் அடுத்த ஸ்டேஷனில் இறங்குகின்றனர். அவசரத்தில் நெடுமுடி வேணு கைப்பேசியை தவறவிடுகிறார். அதில் ஒரு ரிங்டோன் அடிக்க, பஹாத் பாசில் போனை எடுக்கிறார். அப்போது அதில் வந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடையும் பஹாத் ரயிலிலிருந்து இறங்கி நெடுமுடி வேணுவிற்கு உதவ முன்வருகிறார். மூவரும் இணைந்து கோழிக்கோடு செல்ல முடிவெடுக்கின்றனர். இப்பயணத்தில் வரும் நிகழ்வுகள் பஹாத் பாசிலின் நடவடிக்கையை மாற்றியமைப்பது தான் மீதிக் கதை.
கதை மிகவும் சாதாரண ரகம் தான். கிளைமாக்ஸ் கூட இப்படித்தான் நடக்கும் என்று நம்மால் அறுதியிட்டுக் கூற முடியும். ஆனால், இப்படம் நம்மைக் கவர்வது கதையால் அல்ல, அதைக் கொண்டு சென்ற விதத்தால் தான். டூயட்டிற்கென்று தனியாக பாடல் வைக்கப்படவில்லை. படத்தில் கதாபாத்திரங்களோடு இணைந்து பின்னணி இசையும் பாடல்களும் பிரயாணித்துக் கொண்டே இருந்தது.
ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் மிக நேர்த்தியாக கையாளப்பட்ட விதம், படத்தை ஒரு ஆல்பம் போல் தோன்ற வைத்துள்ளது. முதல் பாதி வரை ஸ்வாரஸ்யமாக செல்லும் திரைக்கதை இரண்டாம் பாதியில் ஆட்டம் கண்டது. ஏனெனில் பெரிதாக எவ்வித மாற்றமுமில்லை. ஏதோ நிமிடத்தை கடப்பதற்கென்றே வைக்கப்பட்ட தருணங்களாய்த் தோன்றின.
தமிழனென்றாலே உதவும் தன்மை கொண்டவன் என்று தொடர்ந்து மலையாளப் படங்களில் சித்தரிக்கப்படுவது பெருமிதம் தரக் கூடியவையாய் அமைந்துள்ளது.
தாத்தாவாக நெடுமுடி வேணு, நாராயணி அலைஸ் நாணியாக சுப்ரமணியபுரம் சுவாதியின் நடிப்பு அளவாக, அழகாக அமைந்துள்ளது. எல்லாவற்றையும் தாண்டி இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் நாயகன் பஹாத் பாசில். இவர் முழுமையாக படத்தை தன் தோளில் சுமந்து செல்கிறார். இவருடைய கண்கள் பேசுவது போல் மலையாளத்தில் வேறு எந்த நடிகரின் கண்ணும் பேசுவது இல்லை. ஐ.டி அம்பி (அந்நியன்) போல் அமைந்திருந்த ஹரிகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் சென்சூரி அடிக்கிறார்.
மொத்தத்தில் - நார்த் 24 காதம் சாதாரண கதை, அளவான, ஆழமான நடிப்பால் மிக அழகாக டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
thanx - dinamalar
- நடிகர் : பஹாத் பாசில்
- நடிகை : சுவாதி
- இயக்குனர் :அனில் ராதாகிருஷ்ணன் மேனன்