Showing posts with label MANGAIYAR MALAR. Show all posts
Showing posts with label MANGAIYAR MALAR. Show all posts

Wednesday, August 01, 2012

சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு ரூ 12,500 பரிசு பெற்ற மங்கையர் மலர் சிறுகதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyuaAWvx_l9LovRTGuCGgKhDPmznWaA9QiVfMtu4atfMnQ1-guCPhTwmnw-ajFQ8sm9d1OsfkP9zWJ8hOFc_ySegln1Y3WHL6axy0GjPZ4saToBzT76KNLHz1TUrwii85rlSMoGMaa4IHZ/s1600/p86.jpg 


தெளிவு!



கதை: ர.கிருஷ்ணவேணி



ஓவியம்: ஸ்யாம்





வங்கி சற்றே மூச்சுவிடும் மதிய நேரம். கலகலவென்று சாப்பாட்டு நேரம் நடந்து கொண்டிருந்தது. புளியோதரையும், புலாவும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தன.



இந்தா உஷா, உனக்காக புளி சாதமும், வெங்காய வத்தலும் கொண்டு வந்திருக்கேன்... சாப்பிடு."



அதென்ன உஷாவுக்கு மட்டும் ஸ்பெஷல்? இந்தப் பக்கம் கொஞ்சம் திருப்புங்க ராதா!"


உஷா உண்டாயிருக்கா. அதுக்காகக் கொண்டு வந்தேன். உனக்கென்ன வேண்டிக்கெடக்கு?"


நான் குண்டாயிருக்கேன். போதாதா?"



சிரிப்பு அலைகள் எழுந்தவண்ணம் இருந்தன. பேச்சு சினிமா, புடவை என்று திரும்பியது.


சாந்தா மேடம், உங்களுக்கு ஃபோன் வந்திருக்கு."


பியூனின் குரல் கேட்டு, வாயில் போட்ட தோசையை அவசரமாக விழுங்கி, தண்ணீரைக் குடித்தாள் சாந்தா.



‘யாராக இருக்கும்?’



ஹலோ, நான் திவ்யா பேசறேன்."



திவ்யா? சட்டென புரியவில்லை.



யாரு?"



போன ஞாயிற்றுக்கிழமை, என்னைப் பொண்ணுப் பாக்க வந்தீங்களே. அந்த திவ்யா தான்".



ஓ! ஆமாம். என் ஃப்ரெண்டோட பொண்ணு பேரும் திவ்யாதான். ஆனா, அவ கல்யாணமாகி அமெரிக்கா போயிட்டா. இந்த நேரத்துல கூப்பிட சான்ஸே இல்லை. அதான் யோசிச்சேன். சொல்லும்மா திவ்யா. என்ன விஷயம்?"



உங்களோட கொஞ்சம் பேசணும்."



சொல்லும்மா."



இல்ல, நேர்ல பாத்து பேசணும்."



பொண்ணுப் பாத்து, சம்மதம் சொல்லி, நிச்சயத்துக்கு நாள் குறிக்கும் நிலையில், பொண்ணு வருங்கால மாமியாரிடம் தனியாகப் பேச வேண்டுமென்றால், விஷயம் என்னவாக இருக்கும்? காதல்... திருமணம் செய்ய சம்மதம் இல்லை என்று ஏதாவது சொல்லப் போகிறாளோ?’



மைலாப்பூர் கற்பகாம்பாள் கோயிலுக்கு வாம்மா திவ்யா. நேர்ல பாக்கலாம்" சொல்லி ஃபோனை வைத்தாள் சாந்தா.



அம்மா, புதுப் பூமா. இரண்டு முழம் பத்து ரூபாதாம்மா." பூக்காரியின் குரலுக்கு மதிப்பு கொடுத்து, தேவையான பூவை வாங்கிக்கொண்டாள். திவ்யாவுக்கு என்று தனியாகக் கொஞ்சம் வாங்கினாள்.



மஞ்சள் நிற சுடிதாரில், பளிச்சென்று ஸ்கூட்டியில் வந்து இறங்கினாள் திவ்யா. வண்டியை நிறுத்த வேண்டிய இடம் பார்த்து நிறுத்திவிட்டு வந்தாள். பக்கத்திலிருந்த கடையில் அர்ச்சனைத் தட்டு வாங்கிக் கொண்டாள்.



என்னம்மா திவ்யா பொண்ணு, கோவில் பக்கம் பாத்து ரொம்ப நாளாச்சு?"



ஆமாம் கனகவள்ளியம்மா! வேலைக்குப் போறேன். நேரம் சரியாப் போயிடுது. உங்கப் பொண்ணு நல்லா படிக்குதா?"



படிக்குதும்மா."


நல்லா படிக்க வைங்க. எதுக்காகவும் படிப்ப நிறுத்திடாதீங்க. ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க."



சரி கண்ணு."


தங்கவேலு அண்ணன் எங்க காணோம்?"



இங்கதான் இருந்தாரு. டீ குடிக்க எங்கனா போயிருப்பாரு. உம் பேச்சுதான் அவருக்கு. நீதான ஆபரேஷன் பண்ண, தெரிஞ்சவங்க மூலம் ஏற்பாடு பண்ணி பிழைக்க வச்ச?"



வரும்போது அவரைப் பாக்கறேன். இருக்கச் சொல்லுங்க." பேசியவாறே சாந்தாவைப் பார்த்து அருகே வந்தாள்.




ரொம்ப நேரமாய் காத்துக்கிட்டு இருக்கீங்களா?"



இல்லம்மா. இப்பதான் வந்தேன். இந்தா, பூ வச்சுக்கோ."


உள்ளே போகலாமா?"




சென்றார்கள். அர்ச்சனை முடித்து, பிரசாதம் வாங்கி வெளியில் வந்தார்கள். ஒதுக்குப்புறமாக உட்கார்ந்தார்கள்.



சொல்லு திவ்யா! என்ன விஷயம்?" நேரடியாக வந்தாள் சாந்தா.


எங்கம்மா, உங்ககிட்ட எங்கக் குடும்பத்தைப் பத்தி என்ன சொல்லி இருக்காங்க?"



ஏன் இப்ப என்ன பிரச்னை திவ்யா?"



நீங்க முதல்ல சொல்லுங்க."



உங்கப்பா சின்ன வயசுல இறந்துபோயிட்டாரு! நீ ஒரே பொண்ணு. வேற யாரும் உறவுக்காரங்க இல்லைன்னு சொன்னாங்க."




எங்கப்பா சாகலை. உயிரோடதான் இருக்காரு."



உங்கம்மா வெத்து நெத்தியோட, கழுத்தில தாலி இல்லாம இருக்காங்களே!"




அது, எங்கப்பா செஞ்ச தப்புக்கு, எங்கம்மா தனக்குத் தானே கொடுத்துக்கிட்ட தண்டனை." திவ்யா மேலே பேசிக் கொண்டே போனாள்.



பொறுப்பில்லாத கணவனுக்கு வாழ்க்கைப்பட்டும், பொறுமை காத்தாள் என் அம்மா. காலம் போனால் எல்லாம் சரியாகி விடும் என்று நம்பினாள். ஆனால், வேறொரு பெண்ணைத் தேடி, அவளை, தான் இருக்குமிடத்துக்கே அழைத்து வந்தபோது தாங்க முடியாதவளாய் தட்டிக் கேட்டவளை எட்டி உதைத்தான் கணவன்.




அவ இங்கதான் இருப்பா. என்ன செய்வ?" திமிராகக் கேட்டான்.



கணவன் கட்டிய தாலியைக் கழற்றி, அவன் கையிலே தந்தாள். என்னைப் பொறுத்தவரை, இன்னிக்கே நீ செத்துட்ட; கட்டிய பெண்டாட்டிக்கும் பிறந்த குழந்தைக்கும் மட்டும் துரோகம் செய்யல. இன்னொருத்தன் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு வந்து, அந்தப் புருஷனுக்கும் கெடுதல் செஞ்சுட்ட. இனிமே உன்கூட வாழ நான் தயாரில்லை" என்று தூக்கி எறிந்துவிட்டு, கைகுழந்தையான என்னைத் தூக்கிக்கொண்டு வெளியேறிய என் அம்மாவை, நான்கு பெண்களுடன் இருந்த அவள் பிறந்தகம், அணைத்துக் கொள்ள மறுத்தது.




இப்புடி சடக்குனு வந்துட்டா எப்பிடிம்மா? ஆம்பிளைங்க முன்ன, பின்ன இருந்தாலும், நாமதான் அனுசரிச்சுக்கிட்டு போகணும். உனக்கு நாலு தங்கச்சிங்க இருக்காங்க. நீயும் ஒரு பொண்ணைப் பெத்து வச்சிருக்க. எல்லாத்தையும் யோசிச்சுப்பாரு. அவசரப்படாத" என்று அறிவுரைதான் வழங்கியது. பிறந்த வீட்டையும் துறந்து, தனித்து ஜெயித்துக் காட்டுவதாக சபதம் செய்து, தெரிந்தவர்கள் உதவியால் மேலே படித்து, பள்ளி ஆசிரியையாகி, தன்னை வளர்த்து ஆளாக்கின கதையை நீளமாக முடித்தாள் திவ்யா.





எங்கம்மாவைப் பொறுத்தவரைக்கும், எங்கப்பா என்னைக்கோ செத்துட்டாரு. ஆனா, எனக்கு விவரம் புரியற வயசு வந்த பிறகு, ஒருநாள், எங்கம்மா என்னைக் கூப்பிட்டு, எல்லா விவரமும் சொன்னாங்க. தஞ்சாவூர் பக்கம், முனிசிபல் சேர்மனா எங்கப்பா இருக்கிறதா தகவல் சொன்னாங்க.




உனக்கு வசதியாய் வாழணும்னா, அவர் செஞ்சது தப்பில்லைன்னு பட்டா, நீ அவரோட போய் சேர்ந்திருக்கலாம்’னு சொன்னாங்க. எனக்குப் பிடிக்கலை. அதனால நான் போகலை. ஆனா, அம்மா இந்த உண்மையை உங்கக்கிட்ட சொல்லியிருக்கணும். உங்களுக்கு நான் மருமகளாய் வந்தபிறகு, வேற யார் மூலமாவது உங்களுக்குத் தெரிய வந்து, எங்கம்மாவ நீங்க தவறாய் நினைக்கக்கூடாது இல்லையா? அதுக்காகத்தான். உங்களை நேர்ல பாத்து சொல்லணும்னு நெனச்சேன். இப்ப நீங்க என்ன முடிவு எடுத்தாலும் சரி."




பேசி முடித்த திவ்யா, கைப்பையிலிருந்த பாட்டிலிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடித்து தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தன.



வா, திவ்யா போகலாம்."



நீங்க என்ன சொல்றீங்க? எனக்குப் புரியலையே."




நிச்சயத்துக்கு நாள் குறிக்கணும். முகூர்த்தப் புடவை எடுக்கணும். நிறைய வேலைகள் இருக்கு. உனக்கு என்ன கலர் பிடிக்கும்?" பேசிக்கொண்டே போன சாந்தாவை புரியாமலே பார்த்தாள் திவ்யா.



எதையும் போட்டுக் குழம்பிக்காம கிளம்பு."



நான் இவ்வளவு சொன்னதுக்கப்புறமும் நீங்க...?"



நீ இன்னிக்கு ஃபோன் பண்ணினபோது, இந்தப் பொண்ணு என்ன பேசப் போகுது?" அப்படின்னு யோசன போச்சு. இங்க கோயில் வாசல்ல உன்னைப் பார்த்தேன். உன்னோட வண்டிய, முறையாய் பார்க்கிங்ல நிறுத்தி வந்ததப் பார்த்தேன். அங்க இருந்தவங்ககிட்ட, தன்மையாய் பேசறதப் பார்த்தேன். அவங்களுக்கெல்லாம், உன்னாலான உதவிகள் செய்யறேங்கறதும் புரிஞ்சது. கோயிலுக்கு, அடிக்கடி வர்ர தெய்வ பக்தி உள்ள பொண்ணுங்கறதும் தெரிஞ்சது.




என்கிட்ட பேசும்போது, உனக்கு படபடப்பு இல்லை. உண்மைய சொல்லணும்கற நேர்மை மட்டுமே இருந்தது. உங்கப்பா யாருன்னு உங்கம்மா சொன்னதுக்கப்புறமும், வசதியான வாழ்க்கை வாழணும்னு நீ ஓடலை. எது தப்பு, எது சரின்னு, உனக்குள்ள ஒரு தெளிவு இருக்கு. இந்த விஷயத்த வேற யார் மூலமும், ஏன் என் பிள்ளைக்குக்கூட சொல்லாம, என்னை நேர்ல கூப்பிட்டு, என் கண்ணைப் பாத்து சொல்ற துணிவு இருக்கு. சுருக்கமாய் சொன்னா, உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு."



எங்கம்மா...?"





இவ்வளவு தெளிவான பெண்ணா, உன்னை வளர்த்திருக்காங்கன்னா, உங்கம்மாவைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இப்பிடி ஒரு பொண்ணு வேற எங்க தேடினாலும் என் ஹரிக்கு கிடைக்காது. உங்கம்மா செஞ்சது தப்பே இல்லை. இதைப்பத்தி, நானே உங்கம்மாகிட்ட பேசிக்கறேன்."



எனக்கு இப்பத்தான் ரொம்ப பயமாய் இருக்கு."



என்ன திவ்யா நான் இவ்வளவு விளக்கு சொன்னதுக்கப்பறம், பயம்னா என்ன அர்த்தம்?"



நான் சொல்லாத விஷயங்களைக்கூட, நீங்களாய் புரிஞ்சுக்கிட்டீங்க. எதையுமே பட்டுன்னு முடிவெடுக்காம, யோசிக்கிறீங்க. அடுத்தவங்க பக்கம் இருக்கற நியாயத்த புரிஞ்சுக்கிறீங்க. உங்களுக்கு, நல்ல மருமகளாய் நான் இருக்கணும்கற பயம்தான்."



என்ன திவ்யா! இப்படி புகழ்ந்தா எனக்கு ரொம்ப வெட்கமாய் இருக்கு. குளிருது வேற."



பொய்யாக நடுங்கி, புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொண்ட சாந்தாவைப் பார்த்து கலகலவென சிரித்தாள் திவ்யா. மரியாதையுடன் பார்த்தாள். இத்தனை நல்ல உறவை தனக்குக் கொடுத்த இறைவனுக்கு மனதால் நன்றி கூறினாள்.




கிளம்பலாமா திவ்யா?"



வீட்டுக்குத்தானே போறீங்க?"



ஆமாம்...!"



நான் உங்களை ட்ராப் பண்ணட்டுமா?"



ஓ.கே. தாரளமா. ஆனா அதுக்கு முன்னால ஒரு சின்ன வேலை இருக்கு."





என்ன வேலை?"

எதுத்த ஹோட்டல்ல பாதாம் அல்வா சூப்பரா இருக்கும். ஒரு பிடி பிடிச்சுட்டு போகலாமா?"



ம்... எனக்கும் பாதாம் அல்வா பிடிக்கும்!"



நீ சொல்லாமலே, உனக்கு மஞ்சள் கலர் பிடிக்கும்னும் புரிஞ்சுக்கிட்டேன்."



கோயிலைவிட்டு வெளியே வந்த போது, கடல் காற்று, இதமாக வீசத் தொடங்கியிருந்தது. மாமியாரும், மருமகளும் பழகும் தோழமை உணர்வும் அதில் அழகாய்க் கலந்திருந்திருந்தது.


நன்றி - சீதாரவி, அமிர்தம் சூர்யா, கதிர் பாரதி , புலவர் தருமி , மங்கயர் மலர்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhn-xl2jh03RD1KwiamDSMkG1SXBg1rDBPGgQvNbqszY-qAH6hWFjrmLVkx1TXYfc5fC_zkfM73AN6bhLUFC_cuovUXKoIzI4ihT8NCvWDmwHERrX4z5F-xvHRfN3DVgj6T3zkalQsNoUc/
ஈரோடு நகர படங்கள்


1. அபிராமி  70 MM AC  DTS - பில்லா 2

2. தேவி அபிராமி AC  - சகுனி


3. ராயல் - மனங்கொத்தி பறவை


4. வி எஸ் பி AC  DTS - பொல்லாங்கு


5. ஆனூர் AC  DTS - நான் ஈ


6. ஸ்ரீ சண்டிகா - பில்லா 2


7. ஸ்ரீ கிருஷ்ணா  DTS- THE DARK KNIGHT RISES ( BAT MAN 3)


8. அன்ன பூரணி -மாலைப்பொழுதின் மயக்கத்திலே

9. ஸ்ரீ லட்சுமி   DTS- நாடோடி மன்னன்


10. ஸ்டார் - BLOOD MARY


11. பாரதி - கொஞ்சும் இளமை


12. அண்ணா  DTS - சுழல்


13. ஸ்ரீநிவாசா   DTS  மாலைப்பொழுதின் மயக்கத்திலே


14. சங்கீதா DTS- திருடி திருடன்


15. மாணிக்கம்  - பாட்ஷா