தினமலர் விமர்சனம்
சிறுகதை மன்னன் ஓ ஹென்றியின் ‘கடைசி இலை’ சிறுகதையை தழுவிய காதல்காவியம். ஐம்பொன் சிலையை களவாட வந்தவனிடம், அழகுப்பெண் ஒருத்தி காதலில் வீழ்வதும், கடைசியில்... பட்ட மரத்தின், ஒற்றை இலையாக அவள் தனியே தவிப்பதும்தான் கதை.
பாஜ்பாய் (ஆரிப் ஜாகாரியா) பலே கடத்தல்காரன். அவனுடைய குறி எல்லாம் பழங்கால சிலைகள். ஜமீன்தார் சவுமித்ர ராய் சவுத்ரியின் (பருன் சந்தா) குலக்கோயில் சிலையை திருட அனுப்பப்படுகிறான் வருண் ஸ்ரீவத்சவ் (ரன்வீர் சிங்). மூச்சுத்திணறல் நோயால் அவதிப்படும் ஜமீன்தாரின் ஒரே மகள் சவுதாமினி பக்கி ராய் சவுத்ரி (சோனாக்ஷி சின்கா), வருணால் காப்பாற்றப்படுகிறாள். காதல் அங்கே பற்றிக் கொள்கிறது.
வருண் தன் குறிக்கோளில் ஜெயிக்கிறான். அந்த
நேரத்தில் ஜமீன்தாரின் சொத்து அரசு வசமாகிறது. துயரம் தாளாமல் கடவுளோடு
ஐக்கியமாகிறார் ஜமீன்தார். ‘தன் காதலை களவுக்குப் பயன்படுத்திக் கொண்டானே
தன் காதலன்’ என்கிற சோகத்தோடு... எல்லாம் அற்றுப்போய், ஒற்றை இலையாக,
உயிரைப் பற்றிக்கொண்டிருக்கும் பக்கி ராயின் வாழ்வில், மீண்டும் வசந்தம்
வீசியதா? என்பது, இன்னும் கொஞ்ச காலத்துக்கு மறக்க முடியாத ‘ஸ்வீட்’
க்ளைமாக்ஸ்.
ஐம்பதுகளின் ரம்மியத்தை, அழகு குலையாமல் டிஜிட்டலில் எடுத்து, தங்கத் தட்டில் பரிமாறி இருக்கிறார் இயக்குனர் விக்கிரமாதித்யா மோட்வானே. வட இந்தியாவின் ஆங்கிலேய கால சூழலை, அச்சு பிசகாமல் அள்ளி வந்திருக்கிறது மகேந்திர ஷெட்டியின் கேமரா! சென்ற நூற்றாண்டை நினைவில் கொண்டுவரும், இனிமையான பாடல்களை தந்திருக்கிறது அமித் திரிவேதியின் இசை. ரன்வீர் சிங்கும், சோனாக்ஷி சின்ஹாவும் பாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள். இன்றைய திரைச் சூழலுக்கு 142 நிமிடங்கள் என்பது கொஞ்சம் நீளம்தான்! ஆனால்... நல்ல ஓவியமோ, சிற்பமோ, நாள் கணக்கு வைத்தா உருவாக்கப்படுகிறது?
மொத்தத்தில் ‘லூட்டேரா’ - உயிர் பருகும் காதல்
ரசிகன் குரல்: ஏன் பங்காளி... 60 வருஷத்துக்கு முன்னாடி லவ்வர்ஸ் கிஸ் பண்ணிக்க மாட்டாங்களோ?
- நடிகர் : ரன்வீர் சிங்
- நடிகை : சோனாக்ஷி சின்ஹா
- இயக்குனர் :விக்கிரமாதித்யா மோத்வானே
A