Showing posts with label KUMBAKONAM. Show all posts
Showing posts with label KUMBAKONAM. Show all posts

Tuesday, October 04, 2011

வித்தியாசமாண கோணத்தில் ஏமாற்றப்பட்ட கும்ப கோணம் பதிவர் - உண்மை சம்பவம்

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணம் ஒரு திருப்பு முனை.. ஆனால் பலருக்கு அது வெறுப்பு நிலை ஆகி விடுகிறது...நான் ஏற்கனவே பகிர்ந்த சென்னை பெண் பதிவர் வாழ்வில் நடந்த உண்மைச்சம்பவம் படித்து அதே போல் தன் வாழ்வில் நடந்த ஒரு துக்க சம்பவம் குறித்து நண்பர் மெயில் அனுப்பினார்...


கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப்பயிர் தான்... ஒரு நல்ல காரியம் நடக்கனும்னா 1000 பொய் கூட சொல்லலாம் என்ற வாதமே தவறு.. 1000 முறை போய் சொல்லி.. அதாவது எல்லா சொந்தக்காரர்கள் ,நண்பர்கள் வீட்டுக்கும் 1000 முறை போய் சொல்லி விசேஷம் நிகழ்த்த வேண்டும்.. அதுதான் கல்யாணம்.. காலப்போக்கில் நம்ம ஆளுங்க ஏதோ  பொய் சொல்லி எப்படியோ கல்யாணம் நடத்துனா சரின்னு நினைக்கறாங்க.. . கும்ப கோணத்தை சேர்ந்த நண்பர் ஒருவரின் கதை இது..

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2011/march/ponguniuthiram3.jpg

பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றும்  பொருட்டு கடினமாக படித்து, காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தான். இது போதும் என் பிறவிப்பலனை அனுபவித்தேன் என்ற நிம்மதியில் தூக்கத்திலேயே தந்தையின் உயிர் பிரிந்தது. அன்றில் பறவை போல் இணை பிரியாதிருந்த அன்னை தன் மகனுக்காக தன் துக்கத்தை விழுங்கி முன்போல் நடமாடினார். தன் தாயே தனக்காக துக்கத்தை ஜீரணித்ததைக் கண்டு, தாயிற்காக தானும் துக்கத்தை மறந்து முன்போல் இயங்க ஆரம்பித்தான்.

இப்படியே காலம் சென்றிருந்தால், நன்றாகவே இருந்திருக்கும். ஆனால் விதி யாரை விட்டது. அதற்கு தெரியுமா? நல்லவன், கெட்டவன், படித்தவன், படிக்காதவன் என்று. ரஞ்சித் வாழ்விலும் விதி விளையாட ஆரம்பித்த போது அவனுக்கு திருமண வயது நெருங்கியது.



தந்தையில்லாத குறை தன் மகனுக்கு தெரிய கூடாதென்று பார்த்து பார்த்து மகனுக்கு பெண் தேடினாள் அந்த தாய். தாய் மீது கொண்ட அன்பினால் எதிலயும் தலையிடாமல், தாய் மேல் பாரத்தைப்  போட்டுவிட்டு, ஏகப்பட்ட‌ கனவுகளுடன், தரகர் மூலம் வரனாக வந்த ரேவதியை பெண்பார்க்க சென்றான். ஒரே பெண். இளங்கலை கணிதம் படித்த, சமையல், வீட்டு வேலை அனைத்தும் தெரிந்த பெண் வரனாக வீடு தேடி வந்தது.


நிமிர்ந்தும் பாராத அடக்கம் ரஞ்சித்திற்கும், எந்நேரமும் அம்மாவுடனோ, உறவுப் பெண்கள் துணையுடன் இருந்த வெட்கம் தாயிற்கும் பிடித்துப் போகவே சம்மதம் சொல்லி பிப்ரவரி 2005 திருமண தேதி குறிக்கப்பட்டது.


வருங்கால மனைவியுடன் பேச ஆசைப்பட்டு, போன் போடும்போதெல்லாம் குளிக்குறா, வெளியில் போயிருக்கா, தூங்குறா, அவளுக்கு வெட்கமா இருக்காம் என்ற பதில்கள் வந்தாலும், சரி ஆத்து தண்ணியை, கிணத்து தண்ணியா கொண்டுபோகப்போகுதுனு தன் ஆசைகளை திருமணத்திற்கு பின் என ஒத்தி வைத்தான்

மணநாளும் வந்தது, திருமணமும் நடந்தது.  எப்பவும் தோழிகளுடனோ, உறவு பெண்களுடனோ  இருந்ததைக்  கண்டு சற்று எரிச்சல் பட்டாலும், தன் மனைவி, உலகம் அறியாதவள் அவளுக்கு நாம்தான் உலகத்தை புரிய வைக்க வேண்டுமென நினைத்து. தன் சின்ன சில்மிஷங்களை ஒத்திவைத்தான்.

மோகம் தீர்க்கும் முதலிரவு அறையில் உள்நுழைந்த மனைவியை கரம்பற்றி, அருகமர்த்தி பேச முயலும்போது, திக்கி திணறி பதிலுரைத்த போது, சிறு பெண்ணிற்கு பயம் என நினைத்து, பயத்தை போக்க கட்டியணைத்தபோது, வெறிவந்தவள் போல் அவனை கீழேத் தள்ளி, படுக்கையை கசக்கி, கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி மயங்கி விழுந்தவளை சற்று பயத்தோடுதான் பார்த்தான். இருந்தாலும் தாயின் மனம் கோணிடாமல் மறைத்து, விருந்து, மருந்தெல்லாம் முடித்து காஞ்சிப்புரத்திற்கு தனிக்குடித்தனம் வந்தாகிவிட்டது.

உறவினர்களெல்லாம் கலைய, தாயும், மகனும், மருமகளும் மட்டுமே. மெல்ல மெல்ல பெண்ணின் சாயம் வெளுக்க தொடங்கியது. எந்த வீட்டு வேலையும் செய்வதில்லை. சிறு பிள்ளைபோல டி.வி, விடியோ கேம்ஸ், தாயம் இதெல்லாம் ஆடுவதும், சாப்பிடுவதும், உறங்குவதும் தான் பிரதான வேலையே. சரி செல்லமாக வளர்ந்தப் பெண்,  குழந்தை பிறந்தால் சரியாகிடும்டா என மகனுக்கு ஆறுதல் சொல்ல, அப்போதான் மகன் வெடித்தான் அவ இன்னும் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்துவரலைனு. மகனின் எதிர்காலமே குறியென நினைத்து கஷ்டத்தையெல்லாம் தாங்கிய தாய் பொங்கியெழுந்து, மருமகளை அழைத்துக் கொண்டு சம்பந்தி வீட்டிற்கு நியாயம் கேட்க போனவளுக்கு அதிர்ச்சியும், அவமானம் மட்டுமே பதிலாய் கிடைத்தது.



ரேவதி மனதளவில் குழந்தையாகவும், உடலளவில் குமரியாகவும் இருக்கும் விஷயம் பேரிடியாய் இறங்கியது. படிப்பும் டிகிரிலாம் ஏதுமில்லை எனவும் தெரிய வந்தது. சரியென்று மனதை தேற்றிக்கொண்டு, தனக்கு மகள் இல்லை, அதனால் மகளாய் நினைத்து பார்த்துக் கொள்கிறேன் என திரும்ப அழைத்து வந்து மகனை சமாதானப்படுத்தி,மருத்துவ சிகிச்சை செய்தால் சரியாகிடும் னு மகனை தேற்ற தொடங்கினாள். அக்கம் பக்கம் வீட்டில் போய் திருடுவது, பொருட்களை உடைப்பது, மரியாதையில்லாமல் பேசுவது என நாளுக்கு நாள் ரேவதியின் அட்டகாசம் அதிகமாகியது,  அக்கம் பக்கம் வீட்டினர் வந்து புகார் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.


மனம் நொந்து போன தாயும், மகனும், ரேவதியை அவள் பிறந்த வீட்டிற்கே கொண்டு போய் விட்டுட்டு, இவளை சமாளிக்க முடியலை, இவளால் எங்களுக்கு கஷ்டம்தானே தவிர , மகிழ்ச்சியில்லை, அதனால் விவாகரத்து செய்ய போறோம்னு சொல்ல, தாராளமாக செய்யுங்க, ஆனால், 50 லட்சம் ஜீவனாம்சமா குடுத்துடுங்க, இல்லைனா வரதட்சனை கேட்குறீங்கனு உங்க மேலயே புகார் குடுப்போம் என்ற மிரட்ட, மிரட்டலுக்கு பணியாததால் பொய் புகாரளித்து, தாயையும்,மகனையும் சிறையில் அடைத்தனர்.


எப்படியோ போராடி, உண்மையை வெளிக்கொணர்ந்து,ஒருவழியாய் விவாகரத்து வாங்குவதற்குள் பல அவமானங்களை சந்தித்ததால் மனம் நொந்து போனார்கள் இருவரும். மெல்ல மெல்ல தன் கண் முன்னாலேயே தன் இயல்பை இழந்து சீரழியும் மகனைக் கண்ட தாய் மனதின் பாரம் தாளாமல் இதயம் வெடித்து இறந்தே போனாள். ( ஹார்ட் அட்டாக்)


தன் திருமண வாழ்வு பொய்த்து போனது, சமூகத்தில் தான் பட்ட அவமானம், தாயின் மரணம் எல்லாம் சேர்ந்து அவனை இன்று கவலையற்ற மனிதனாய் "மனநல காப்பகத்தில்" வாழ வைத்துள்ளது.


இதில் யார் செய்த  தவறு  ரஞ்சித்தின் இன்றைய நிலைக்கு காரணம்:?


1. பாசம் கண்ணை மறைக்க தீர விசாரியாமல் மணமுடித்த தாயின் மீதா?

2.தாய்ப்பாசம் கண்ணை மறைக்க, கண்ணை மூடிக்கொண்டு திருமணத்திற்கு சம்மதம் சொன்ன ரஞ்சித் மீதா?

3. பணத்திற்கு ஆசைப்பட்டு, உண்மைகளை மறைத்து, மணமுடித்த தரகர் மீதா?


4. திருமணம் செய்தால் தன் மகள் நோய் குண்மடையுமென்று நம்பி அப்பாவி பிள்ளைத் தலையில் கட்டி, மகள் வாழ்க்கையை காசாக்க நினைத்த பெண்ணின் பெற்றோர் மீதா?


யார் மீது தவறென்றாலும், பாதிக்கப்பட்டது ரஞ்சித்தும் அவன் தாயும்தான். இனி கோடிகோடியாக செலவழித்தாலும், ரஞ்சித்தின் தாயோ, இல்லை ரஞ்சித்தின் வளைமையான எதிர்காலமும், வனப்பும் ஆரோக்கியமும் திரும்பவருமா? சிந்தீப்பார்களா ரேவதியின் பெற்றோர் போன்ற மன நிலையை கொண்டோர்.


இந்த சம்பவத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது

1. திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையும், பொண்ணும் அவசியம் சந்தித்து பேச வேண்டும்.. வாழ்க்கை முழுவதும் சேர்ந்து வாழப்போகிறவர்கள் சில நிமிடங்கள் பேசினால் தப்பில்லை..

2. அக்கம் பக்கம் நல்லா விசாரிக்கனும்..

3. வரன்களின் நண்பர்கள், அக்கம் பக்கம், ஆஃபீசில் பணிபுரிபவர் என விசாரிப்பது நல்லது.

4. ஜாதகப்பொருத்தம் பார்ப்பது போல் திருமணத்துக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தகுதியானவர்தானா ? என்பதை  அறிந்து கொள்வது அவசியம்

(ஏன் எனில் எனக்குத்தெரிந்து 24 வயதாகியும் பூப்பெய்தாமல் மணம் முடித்துக்கொடுத்து விவாக ரத்து வரை போன கதை நடந்திருக்கிறது பல இடங்களில்)

5. கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகப்போயிடும் என்ற வாதம் அபத்தமானது..