Showing posts with label HONEY MOON. Show all posts
Showing posts with label HONEY MOON. Show all posts

Sunday, July 29, 2012

ஒரே ஒரு மாலை -சுஜாதா. - சிறுகதை ( ஹனிமூன் ட்ரிப் )



இந்தக் கதை எழுதுகிற எனக்கு, இதைப் படிக்கிற உங்களைவிட அதிகமாக ஆத்மாவையும் இந்துமதியையும் தெரியும். அவர்களைப் பற்றி என்ன சொல்ல வேண்டும், என்ன சொல்லக் கூடாது என்று பாகுபடுத்தும் உரிமை என்னிடம் இருக்கிறது. இந்த ‘கேஸி’ல் கொஞ்சம் சங்கடமான நிலைமையாக இருக்கிறது.



பாருங்கள், இருவரும் புதிதாகக் கல்யாணம் ஆனவர்கள். புதிதாக என்றால், மிகப் புதிதாக. கையில் கட்டிய கயிறும், சங்கிலியில் தெரியும் மஞ்சளும், ஒருவரைப் பற்றி ஒருவர் அதிகம் தெரியாத ஆர்வமும், பயமும், ஒருவரை ஒருவர் தொடும்போது ஏற்படும் பிரத்யேகத் துடிப்பும் கலையாத சமயம். இந்தச் சமயத்தில் நடப்பது முழுவதும் சொல்வது கடினமான காரியம். மேலும், சில வேளை அநாகரிகமான காரியம்… அவர்கள் நடந்துகொண்ட புது நிலையை வர்ணிக்கப் புதிதாய்க் கல்யாணம் ஆன ஒருவனால்தான் முழுவதும் இயலும். என் கல்யாணம் முடிந்துவிட்டது. அந்த நாட்கள் என் ஞாபகத்தில் ஆறு வருஷம் பின்னால் இருக்கின்றன.



ஆனால், என் சங்கடம் இதில் இல்லை. இந்தக் கதையில் என் பொறுப்பு ஒன்று இருக்கிறது. ஒரு நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அது அதை எப்படிச் சொல்வது, எங்கே சொல்வது அல்லது, சொல்லாமல் விட்டுவிடலாமா என்பதுதான் என் குழப்பம். அதைப் பற்றி நான் இன்னும் தீர்மானிக்கவில்லை.



ஆத்மா, ஹல்வாராவில் விமானப் படையில் வேலை பார்க்கும் ஒரு பறக்காத ‘பைலட் ஆபீஸர்’. பதினைந்தே நாள் லீவு எடுத்துக்கொண்டு புயலாகச் சென்னைக்கு வந்து ரயில் மாறி, திருச்சி வந்து, சத்திரத்தில் மாடியில் இறங்கி, அவசரமாக க்ஷவரம் செய்துகொண்டு, சட்டை மாற்றி, சூட் அணிந்துகொண்டு, பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் ‘லோக்கல்’ சின்னப்பன் நாயனத்துடன் ஒரு பழைய எம்.டி.ஒய். காரில் ‘டாப்’பை விலக்கி, ஊர்வலம் போய் உட்கார்ந்து, மந்திரங்களின் மத்தியில் புகைக் கண்ணீரில் அருகே இருப்பவளைப் பார்க்கச் சந்தர்ப்பமில்லாமல் மணம் செய்துகொண்டவன்.



இந்துமதி பி.யூஸியைப் பாதியில் நிறுத்திவிட்டு, ஒரு நாள் திடீரென்று தனக்கு வந்த முக்கியத்துவத்தில், புடவை சாகரத்தில், எவர்சில்வர் மத்தியில், வைர ஜொலிப்பில், வரிவரியாக ஜரிகைப் பட்டுப் புடவையின் ஜாதிக்கட்டின் அசௌகரியத்தில், மாலையின் உறுத்தலில், மையின் கரிப்பில் அம்மா அவ்வப்போது தந்த ‘ஆர்டர்’களில், மாமாவின் கேலியில் மணம் செய்துகொண்டவள்.



ஆத்மாவை நிமிர்ந்து ஒரு தடவை பார்த்ததில்லை. பார்த்தது போன மாத போட்டோ ஒன்று; மார்பு வரை எடுத்த, எதிரே பார்க்கும் போட்டோ. அப்போது கல்யாணம் நிச்சயமாகுமா என்பது சரிவரத் தெரியாததால் அம்மா அதை அதிகம் பார்க்க அனுமதிக்கவில்லை. பார்த்து என்ன நினைப்பது என்று தெரியாத தவிப்பு. அழகான முகமா என்று அலசுவதற்கு உரிமையில்லாத சமயம். நினைவில் தேக்கிக்கொள்ள முடியாத தவிப்பு. கல்யாணம் முடிந்துவிட்டது. முடிந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தூரத்து உறவினர் படுக்கைகளைச் சுருட்டிக்கொண்டு தேங்காய்களைக் கவர்ந்துகொண்டு விலகிவிட்டனர். ஆத்மா அவளை உடன் அழைத்துச் செல்வதற்கு ஆறு நாட்கள் இருந்தன. பந்தங்கள் பிரிந்தன.



முறையாக அவர்கள் அரைஇருட்டில் சந்தித்தாகிவிட்டது. இந்துமதிக்கு ஓர் ஆணின் தொடுகை எப்படிப்பட்டது என்று தெரிந்துவிட்டது. அந்த எழுபத்திரண்டு மணி நேரங் களில் விதம்விதமான அனுப வங்கள் இருவருக்கும். ஆத்மா வின் கல்யாணத்துக்கு வர முடியாத பெரியப்பாவைச் சேவித்துவிட்டு வந்தார்கள். கோயில்களுக்குப் போய் வந்தார்கள். அவனுடன் நடக்கும்போதே, அந்த வெயில் படாத பாதங்களையும், செருப்பையும், ஜரிகைக் கரையின் அறுப்பையும், நிழலையும் பார்த்துக்கொண்டே உடன் நடக்கும்போதே இந்துமதிக்குச் சந்தோஷம் திகட்டியது.

 எனினும், அவன் ஒவ்வொரு தடவையும் அவளைத் தொடும்போது அவளுக்குப் புல்லரிப்பைவிட பயம்தான் தெரிந்தது. இதை ஆத்மா உணர்ந்தான். ஸ்பரிசத்தில் உள்ளுக்குள் அவள் உடம்பின் தசைகள் மிக மெலிதாக இறுகுவதை அவன் கவனித்தான். பெண் புதியவள், மிகப் புதியவள் என்று எண்ணிக்கொண்டான். மேலும் மேலும் அவனுள் ஓர் அச்சம் இருந்தது. அடிக்கடி அவளை தொடுவதில் தயக்கம் இருந்தது.





முக்கியமாகப் பெண்ணுக்கு செக்ஸில் பயம் ஏற்படுத்தக் கூடாது. மிக ஜாக்கிரதையாக அணுக வேண்டும். பசித்த புலி இரை தேடுவதை ஞாபகப்படுத்தக் கூடாது. மேலும், எனக்கே எவ்வளவு தெரியும்? நான் படித்த புத்தகங்கள் வழங்கும் உபதேசம் சரியா, தப்பா?



‘நம் கல்யாண அமைப்பு குரூரமானது. திடீரென்று ஓர் ஆணிடம் ஒரு பெண்ணைக் கொடுத்து, இவள் உன்னுடையவள் என்று வசதி செய்து கொடுப்பது கொடுமை’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான் ஆத்மா.



இருந்தும்…

கவிதையிலோ, உரைநடையிலோ வார்த்தைகளால் சொல்லவே முடியாத மிக அபாரமான தருணங்கள் அவர்களின் புதிய உறவில் இருந்தன. (இந்தத் தருணங்கள் எல்லாக் கல்யாணங்களிலும் இருக்கின்றன யோசித்துப் பாருங்கள் ‘நீடித்து இருக்கின்றன’ என்பதற்கு நான் ‘கேரண்டி’ இல்லை. முதலில்? நிச்சயம்.) அந்தத் தருணங்கள் இவர்களுக்கு ஒரு சிவாஜிகணேசன் படத்தின் இருட்டில் இருந்தன. சூப்பர் மார்க்கெட் செல்லும்போது முன் பஸ்ஸின் பின்புறத்தில் ‘இரண்டு அல்லது மூன்று போதுமே’ என்ற விளம்பரம் துரத்தித் துரத்தி அடித்தபோது, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டபோது இருந்தன.



”பெட் ரூமில் அரசாங்கம் புகுந்துவிட்டது” என்பான் ஆத்மா.



அப்புறம் மாடியில் இவர்கள் தனிப் படுக்கை சம்பிரதாயத்தில்… எவ்வளவு பாடு இந்துமதிக்கு! ஆத்மா முதலில் போய்விடுவான். இவள், எல்லோரும் தூங்கிய பிறகு, வாசல் விளக்கை அணைத்துவிட்டு அந்தப் பாழாய்ப்போகிற மெட்டி சப்தமிடாமல், திண்ணையில் தூங்குகிறவர்களின் கனமான மௌனத்தைத் தாண்டி, மரப்படியேறி… எவ்வளவு சஸ்பென்ஸ்!



அதன்பின், அதன்பின், அதன்பின்!


தருணங்கள்! அபாரமான தருணங்கள்!



நான் சொல்ல வந்தது ஒரே ஒரு மாலை நேரத்தைப் பற்றி. இரண்டு பேரும் மெதுவாக வீட்டின் சந்தடியிலிருந்து விடுபட்டு நடக் கிறார்கள். தெற்கு வாசல் தாண்டி, பஸ் ஸ்டாண்ட் தாண்டி, அம்மா மண்டபம் வந்து தனியான இடம் தேடுகிறார்கள்.



நதிக் கரை, காவிரி நதி, ஆடி மாத ஆரம்பம். மேட்டூர் அணை நிரம்பி வழிந்த பழுப்புத் தண்ணீர். இங்கிருந்து அந்தக் கரை வரை நிரம்பி, அவர்கள் புதிய உறவு போல் உற்சாகமாக நழுவிக் கொண்டிருந்த நதி. இந்துமதி போல் அந்த நதி. சிறிய சிறிய பையன்கள் குதித்துக் குதித்து, எதிர்த்து எதிர்த்து நீந்திக் கரைக்கு மறுபடி வருகிறார்கள். இந்துமதிக்கு அதைப் பார்க்க ஆசை. ஆத்மாவுக்கு மாந்தோப்பின் கரையில் தனியிடம் தேட ஆசை. அவளை அணைத்து அழைத்துச் சென்று தனியாக உட்காருகிறான். ”உன்னிடம் நிறையப் பேச வேண்டியது இருக்கிறது. நாம் இரண்டு பேரும் முழுவதும் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டும். கல்யாணம் என்கிறது ஒரு ‘லைஃப் டைம்’ சமாசாரம்…”




(அவன் பேச்சில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். அவர்கள் சம்பாஷணையைப் பின்னால் தொடர உத்தேசம். அதற்குள் நான் முன்பு சொன்ன என் பொறுப்பு குறுக்கிடுகிறது. சொல்வதற்கு இதுதான் சமயம் என்று எனக்குப் படுகிறது. சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.) அவர்கள் சுமார் அரை மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அதன் பிறகு இந்துமதி ஆத்மாவைக் கேட்டாள்…



”உங்களுக்கு நீந்தத் தெரியுமா?”



”ஓ! நன்றாக நீந்துவேன். உனக்கு?”



”எனக்கும் கொஞ்சம் தெரியும். அப்பா கேரளத்தில் இருந்தபோது கற்றுக்கொண்டேன். சுமாராகத் தெரியும்.”



”கிரேட்! ஹொவ்  எபவுட் நௌ?”


”இப்பவா? ம்ஹூம்! இந்த நதியில் எல்லாம் எனக்கு நீந்திப் பழக்கமில்லை.”



”பயமா?”


”ஆம்.”


”நான் இருக்கிறேன். ஹரித்வாரில் கங்கையில் நீந்தியிருக்கிறேன். ஹல்வாரா போனதும் உன்னை அழைத்துப் போகிறேன். அந்த நதியின் வேகத்தைவிடவா! சீறும் கங்கை! வா. நீந்தலாம்.”



”நான் மாட்டேன். நீங்களும் வேண்டாம்.”



”கம்ஆன் டியர்!” ஆத்மாவுக்குத் தன் மனைவியை நனைந்த உடைகளில் பார்க்க வேண்டும் என்கிற இச்சை பிடிவாதமாக மாறியது.



”இங்கே ஒருத்தரும் இல்லை.”



”சே…சே! என்ன கஷ்டமாகப் போய்விட்டது. எதற்குப் பேச்சை எடுத்தோம் என்று ஆகிவிட்டது.”


”வர மாட்டாய்?”


”ம்ஹூம், நீங்களும் போகக் கூடாது.”



‘அப்படியா?” என்று தன் டெரிலினைக் கழற்றினான் ஆத்மா. பனியனைக் கழற்றினான். சிறிய டிராயரில் வந்து கரைக்குச் சென்று குதித்தான். தண்ணீர் ஒரு துளி தெறிக்கவில்லை. அம்பு போலப் பாய்ச்சல். மிக அழகாக நீந்தினான். ஆற்றை எதிர்க்காமல் ஒரு பக்கம் வாங்கி, இருபத்தைந்து அடி தள்ளிக் கரை சேர்ந்து, தலையைச் சிலிர்த்துக்கொண்டான். மிகப் புனிதமாக, அழகாக இருந்தான். அவன் முடிகளிலிருந்து தங்கமாகச் சொட்டின தண்ணீர்த் துளிகள். இந்துமதிக்கு அவன் உடம்பின் தசைகளையும், (சூரியன் உபயம்) அவன் சிரித்துக்கொண்டே நடந்து வருவதையும் பார்க்க மிகப் பெருமையாக இருந்தது. ஆனால், முதல் தடவையாகத் தெரிந்த அவன் பிடிவாதம் அவளைப் பயப்படுத்தியது.




”போதும், சளி பிடித்துக்கொள்ளும்” என்றாள்.



”நீ வர மாட்டாய்?”



”நான் வர மாட்டேன். போதுமே நீந்தினது.”



”இன்னும் ஒரு தடவை, அவ்வளவுதான்.”



குதித்தான். மறுபடி அழகான குதிப்பு. நீந்தினான். மறுபடி அழகான நீச்சல். கரையிலிருந்து முப்பதடி போயிருப்பான். ஆழமான, இதமான சற்றுக் குளிர்ந்த தண்ணீர். அப்போதுதான் அவனுக்கு ‘க்ராம்ப்ஸ்’ ஏற்பட்டது. காலின் தசைகள் பிடித்துக்கொண்டன. காலை அசைக்க முடியவில்லை.



‘க்ராம்ப்ஸ்’ வருவது அவனுக்கு முதல் தடவை. நண்பர்கள் எச்சரித்திருக்கிறார்கள். ”வந்தால் கலவரப்படாதே. மித!” கலவரப்படாமல் இருக்க முடியவில்லை. ஆற்றின் வேகம் அவனைத் தள்ளிக்கொண்டு சென்றது. காலை அசைக்க முடியவில்லை. மேலும் மேலும் கைகளை அடித்துக்கொள்ள முயன்றான். ஒரு தடவை முழுகித் தண்ணீர் ஏகப்பட்டது உள்ளே இறங்கியது. நதி அவனைக் கடத்திக்கொண்டிருந்தது. இந்துமதியைக் கூப்பிட முயன்றான். பயம் அவனை நிரப்பியது.



தூர தூரமாகத் தன் கணவன் செல்வதையும் சீராக அவன் நீந்தாமல் பதற்றமாக அடித்துக்கொள்வதையும் பார்த்த இந்துமதி, திகைக்காமல், யோசிக்காமல் ஒரே பாய்ச்சலாகப் பட்டுப் புடவையுடனும் நகைகளுடனும் குதித்தாள்.



இரண்டு நாள் கழித்து அவர்கள் இருவரும் கொள்ளிடம் சேரும் கல்லணையில் கண்டெடுக்கப்பட்டனர்.



குறுக்கிட்டதற்கு மன்னிக்கவும். அவர்கள் அரை மணிக்கு முன் பேசிக்கொண்ட பேச்சைத் தொடர்வோம்…




ஆத்மா, ”கல்யாணம் என்பது லைஃப் டைம் சமாசாரம். நாம் ஒருவரையருவர் மெதுவாகத் தெரிந்துகொள்வோம். நிறைய ‘டயம்’ இருக்கிறது. ஒருவிதத்திலே அது ஒரு ‘காம்பிள்’. நம் சுதந்திரம் கொஞ்சம் பறிபோகிறது. இனி மேல் நமக்கு ஒரு பொறுப்பு. அதுவும் எனக்கு ஒரு பொறுப்பு. உன்னைத் தனியாக அழைத்துக்கொண்டு போய், பாஷை தெரியாத காட்டில், ஒரு வீட்டில் அடைக்கப் போகிறேன். அங்கே நாம் இரண்டு பேரும்தான். சந்தோஷமாக இருக்க முயல வேண்டும். சந்தோஷமாக இருக்க வேண்டும். ‘கன்னா பின்னா’ என்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடாது. இரண்டு வருஷம் ‘இடைவெளி’. என்ன?”




இந்துமதி சிரித்தாள். தலைகுனிந்து கன்னங்கள் நிறம் மாறின.



”அப்புறம் சில புத்தகங்கள் தருகிறேன். படிக்கணும். இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். அப்புறம் என்கிட்டே என்ன பிடிக்கிறது… என்ன பிடிக்கவில்லை என்று சொல்லு.”



மௌனம்.


”ம்… சொல்லு…”



”உங்களை எனக்கு நாலு நாளாகத்தானே தெரியும்!”



”நாலு நாளிலே என்ன என்ன பிடிக்கவில்லை சொல்லேன். என்னிடம் நீ ஃப்ரீயாக இருக்க வேண்டும்.”


”…”

”டாமிட்! சொல்லேன். ஏதாவது இருக்குமே!”



”டாமிட்… டாமிட் என்று நீங்கள் அடிக்கடி சொல்கிறது பிடிக்கலை” என்றாள் தயக்கமாக.



”வெரிகுட். அப்புறம்?”



”ம். யோசிக்கிறேன்.”



”யோசி.”



”தலையை இப்படிப் படியாமல் வாரிக்கொள்வது…”



”ஓ மை காட்!” என்று தலையைக் கோதிக்கொண்டான்.



”என்கிட்ட என்ன பிடிக்கலை உங்களுக்கு?”



”ஒன்றே ஒன்றுதான் பிடிக்கவில்லை.”



”என்ன?” என்றான் ஆவலுடன்.



”என்ன…. நீ இரண்டு மூன்று தடவை ‘அத்தான்’ என்று கூப்பிட்டது. அத்தான் என்பது என் அகராதியில் ஆபாச வார்த்தை. சினிமா எக்ஸ்ட்ராக்களை ஞாபகப்படுத்தும் வார்த்தை.”



”எப்படி உங்களைக் கூப்பிடுவது என்று எனக்குத் தெரியவில்லையே!”



”ஆத்மா என்று.”



”முடியாது… செத்தாலும் முடியாது.”



”சொல்லு, ஆ…”



”ஆ…”



”த்…”

”த்…”

”மா…”

”மா…”

”ஆத்மா!”

சிரித்தாள். ”ஹூம்” என்று தலையாட்டினாள். அவன், அவளை மார்பில் தொட்டான். பனி போல் உறைந்தாள்.



”நான் தொட்டால் பயமாக இருக்கிறதா?”



”இல்லை, வெட்கமாக!”



”உன்னைத் தொடுவதற்கு எனக்கு லைசென்ஸ் இருக்கிறதே?”



”இப்படி லைசென்ஸ் என்று சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை. என்னை உங்களுக்குப் பிடிக்கிறதா?”



”இது என்ன கேள்வி?”



”என்னை உங்களுக்குப் பிடிக்கிறதா?”



”பாதாதிகேசம் ஒவ்வொரு சதுர மில்லி மீட்டரும் பிடிக்கிறது.”



”நான் உங்களுக்குத் தகுதியானவளா?”



”எல்லா விதத்திலும்.”



”அதிகம் படிக்கவில்லையே?”



”ஸோ வாட்?”



”எனக்கு முன்னால் எத்தனை பெண்களைப் பார்த்தீர்கள்?”



”36,621.”


”வேடிக்கை வேண்டாம். நிஜமாகச் சொல்லுங்கள்.”



”நான் பார்த்து ஆமோதித்த ஒரே, முதல் பெண் நீ.”



”என்னைப் பார்த்தபோது, முதலில் பார்த்தபோது என்ன தோன்றியது உங்களுக்கு?”



”உன்னைப் பார்க்கவேயில்லையே! நீதான் குனிந்த தலை நிமிரவில்லையே!”



”பின் எதற்காகக் கல்யாணம் செய்துகொண்டீர்களாம்?”



”இதற்காக” என்று சொல்லிவிட்டு, அவன் அவளைத் தொட்டதை அவள் விரும்பவில்லை. கோபித்துக்கொண்டாள். பொய்க் கோபம்.



”உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?”



”டேக் ஹோம் பே 621. அதில் 300 ரூபாய் உனக்கு வீட்டுச் செலவுக்குக் கொடுத்துவிடுவேன். போதுமா?”



”நான் 300 ரூபாய் நோட்டுக்களைச் சேர்த்தாற்போல் பார்த்ததில்லை இதுவரை.”



”பார்க்கப் போகிறாயே…”



”உங்களுக்கு ஆக்ட்டர்ஸ் யாரார் பிடிக்கும்?”



”சிவாஜி கணேசன், பால்நியூமன்.”



”அப்புறம்?”



”கே.ஆர்.விஜயா.”



இந்துமதிக்கு கே.ஆர்.விஜயாவின் மேல் பொறாமை ஏற்பட்டது.



”உனக்கு என்ன புத்தகம் பிடிக்கும்?”



”எனிட் பிளைட்டன்.”



”பதினைந்து வயதுப் பெண்கள் படிக்கிற புத்தகம் அது.”



”எனக்கு என்ன வயசு?”



”பதினைந்தா?”



”என்னப் பார்த்தால் என்ன வயது மதிப்பிடுவீர்கள்?”



”நான்கு.”



கோபித்துக்கொண்டாள். ”நான் சத்தியமாக உங்களுடன் பேசவே போகிறதில்லை.”



ஆத்மா சிரித்தான். அதில் உண்மையான சந்தோஷம் நிலவியது. அதன் பின் அவர்களிடையே பிரமாதமான, பூராவும் ஒருவரை ஒருவர் உணர்ந்த, பேச்சுக்கு அவசியமில்லாத கொஞ்ச நேரம் அற்புத மௌனம் நிலவியது. அவர்களும் அந்தச் சூரியனும் அந்த இடத்து மூன்று பெரிய உண்மைகளாக… அதன் பிறகு இந்துமதி ஆத்மாவைக் கேட்டாள்…



”உங்களுக்கு நீந்தத் தெரியுமா?”

Saturday, June 30, 2012

தேனிலவு - சுஜாதா - கிளு கிளு சிறுகதை

http://10hot.files.wordpress.com/2009/07/sujatha-8-writers-authors-magz-issues-uyirmmai-march-2008-front-cover.jpg 

கார், அநாயாசமாக மலை ஏறிக்கொண்டு இருந்தது. நெட்டையான நாகலிங்க மரங்களின் உடம்பெல்லாம் பூத்திருந்தது. காற்றுடன் நீலகிரித் தைல வாசனை கலந்திருந்தது. போலீஸ்காரர்கள் கறுப்பாகக் கோட்டு அணிந்திருந்தார்கள். தொப்பி வைத்துக்கொண்டு மைசூர்த்தனத்துடன் சிற்சிலர் கூடைகளில் சிவப்பு சிவப்பாகப் பழம் விற்றார்கள்.

சோபனாவுக்கு நிறுத்தி வாங்க வேண்டும் போலிருந்தது. நிறுத்திப் பூப்பறிக்க வேண்டும் போலிருந்தது. அந்தத் துல்லியமான காற்றை நெஞ்சு பூரா நிரப்பிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

காருக்குள் ரவி சோபனா என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. ரவி ஒரு கையால் கார் ஓட்டிக்கொண்டு இருந்தான். மற்றொரு கை…

அதை விலக்கி ”ஏதாவது பாட்டுப் போடுங்களேன்” என்றாள் சோபனா. அவன் காருக்குள் இருந்த கேஸட் ரிக்கார்டரைத் தட்ட, கீச்சுக்குரல் ஒலித்தது.

‘அட அபிஷ்ட்டு

நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
ஆத்திலே இருக்கா கண்ணாடி
பாத்துக்க உம் மூஞ்சி!’


”எப்படி பாட்டு?” என்று ரவி சிரித்தான்.

”வேற இல்லியா?”

”சிரி சிரி மாமா, இருக்கு” என்றான் ரவி.

”சம்சா! சம்சா! சம்சா!” என்றது டேப்.

”பெரிசா வெக்கட்டுமா?”

”நிறுத்திடுங்க.”

”புடிக்கலியா? உனக்கு சினிமா பாட்டு யார்து புடிக்கும். ஜானகியா? ஈஸ்வரியா? சுசீலாவா?”

”ஜோன் பேயஸ் இருக்கா?”

”அது யாரு? ஊட்டில கிடைக் கும்னா வாங்கிடலாம்.”

சோபனா வெளியே பார்த்தாள். மலைச்சரிவு குளிருக்குப் பச்சைப் போர்வை போர்த்திருந்தது. ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் கவிதை ஞாபகம் வந்தது.

சோபனாவுக்கு மலைப்பாக இருந்தது. இரண்டு தினங்களில் எத்தனை புதுசான சமாசாரங்கள், எத்தனை புதிய முகங்கள், உறவுகள்… ரவியின் இடக்கை மறுபடி அவளை நாடியது. அதை எடுத்து ஸ்டீயரிங் சக்கரத்தின் மேல் வைத்து ”ரெண்டு கையாலயும் ஓட்டுங்க” என்றாள்.


”நான் என்வி சாப்பிடுவேன். ஸ்மோக் பண்ணுவேன். தெரியுமில்ல?” என்றான் ரவி.

”தெரியும். சொன்னீங்களே!”

”ஆரம்பத்திலேயே இதை எல்லாம் சொல்லிடணும் பாரு! உனக்கு ஆட்சேபனை இல்லையே!”

”இல்லை.”

முட்டையைப் பார்த்தாலே குமட்டும் சோபனாவுக்கு.

”யூரோப் போனபோது கத்துக்கிட்டேன். அங்கெல்லாம் நான் வெஜ் இல்லாம உயிர் வாழ முடியாது.”


”எத்தனை நாள் போயிருந்தீங்க?”



”ஒரு வாரம். நாம ஃபாரின் போகலாமா சோபனா?”

”ம்.”


”எங்கே போகணும் சொல்லு? கம்பெனில எக்ஸ்போர்ட் பண்றதால எந்த கன்ட்ரி வேணும்னாலும் போகலாம்.”


”சரி, யோசிச்சுச் சொல்றேன்.”


மலை ஏறிக் கொஞ்சம் இறங்கிச் சரிந்து வளைந்து சென்ற பாதையில் உயர்ந்து தனியாகத் தெரிந்தது அந்த ஓட்டல்.


”ஏ.ஸி. ரூம் இல்லீங்களா?”


”ஊட்டில ஏ.ஸி. ரூம் எதுக் குங்க. ஊரே ஏ.ஸிதானே!”


”சரி, இருக்கிறதுக்குள்ளேயே டீலக்ஸ் பார்த்துக் கொடுங்க. ரெண்டு பேப்பர் ரோஸ்ட் அனுப்பிடுங்க.”


”டிபன் செக்ஷன் ஆரம்பிக்கிறதுக்கு மூணரை ஆயிடுங்க.” அலுத்துக்கொண்டான். ”க்ளார்க்ஸ் போயிரலாமா சோபனா?”


”இங்கேயே பரவாயில்லை” என்றாள்.


”உனக்காகப் போனாப்போறதுன்னு இந்த ஓட்டல்ல இருக் கலாம்!”


அறைக்குள் புதிய பெயின்ட் வாசனை அடித்தது. கீழே கயிற்றுப் பாய் விரித்து, சுவர்களில் மர யானை முகங்கள் கோட் ஸ்டாண்டுகளாக நின்றன. ஒரு மஹா மஹா படுக்கை காத்திருந்தது. அதில் படுத்துக்கொண்டு ரவி, ”வா சோபனா” என்றான். சோபனா ஜன்னல் கதவைத் திறந்து வெளியே பார்த்தாள்.


”ரவி, இங்க பாருங்க. ப்யூட்டிஃபுல்!”


”வா சோபனா!”


”ரவி, இங்கேருந்து கீழே பெரிய குதிரைப் பந்தய மைதானம் தெரியுது. குதிரையெல்லாம் சுத்திச் சுத்தி வந்து நடை பழகுது. ஊர் பூராத் தெரியுது. அங்கங்கே அட்டைப்பெட்டி சொருகிச்சொருகி வெச்சாப்பல வீடுகள்.”


”அட்டைப்பெட்டி கிடக்கட்டும் சோபனா. இப்ப வர்றியா இல்லியா நீ?”


”ஏரிக்குப் போகலாம் ரவி!”


”க்ளிக்!” ஆஸாஹி பென்டாக்ஸ் அவளை நோக்கிக் கண் சிமிட்டியது. விசைப் படகில் ஏரியில் அவளை அவன் அணைத்துக்கொண்டு இருக்க, எதிரே படகுக்காரன் எடுத்த ‘க்ளிக்’ ”ஆட்டோவைப் போட்டுட்டாப் போதும். யார் வேணா எடுக்கலாம். நாலாயிரம் ரூபா. லென்ஸே நாலாயிரம் ஆச்சு!” ரவி அதை வாங்கிக்கொண்டு அதன் கழுத்தைப் பல கோணங்களில் திருகி, சோபனாவை வரிசையாக க்ளிக் க்ளிக் என்று தட்டிக் கொண்டு இருந்தான்.



”வீட்ல ஒரு போலராய்ட் இருக்கு. ஃபிலிம் ஆப்படலை!”


சோபனா தன் விரல்களால் நீரைத் தொட்டுப் பார்த்தாள். சில்லென்று எதிர்பாராத குளிர்ச்சி.


”கொஞ்சம் பெரிய எடம் போலிருக்கே! நமக்குச் சரிப்பட்டு வருமா?”


”பையன் பொண்ணைப் பார்த்துப் புடிச்சுப்போய் அவனே கேக்கறான். ரொம்பப் பணக் காராடி அவா!”


”நம்ம சோபனாவுக்கு அடிச்ச அதிர்ஷ்டத்தைப் பார்த்திங்களா! இருந்தாலும் அவளை ஒரு வார்த்தை கேட்டுர்றது நல்லதில்லையா?”


”பால் பாயசம் சாப்பிடறதுக்குச் சம்மதம் கேக்கணுமா என்ன? என்னடி சோபனா?”


”………..”
”எப்பவாவது அவ வாயைத் திறந்து பதில் சொல்லியிருக்காளா?”


”அவங்க வீட்டிலே மூணு கார் இருக்குக்கா!”


”க்ளிக். ஏ.எஸ்.ஏ.நம்பர் செட் பண்ணிட்டாப் போதும். பாக்கி எல்லாத்தையும் கேமராவே பாத்துக்கும். உள்ளுக்குள்ள எல்லாமே எலெக்ட்ரிக் வேலை… இதை ரிப்பேர் பண்றதுக்கு ஜப்பான்லதான் முடியும்! ரூமுக்குப் போக லாமா சோபனா?”


”இல்லை. பொட்டானிக்கல் கார்டன் போகலாம்.”


புல்வெளியில் புரள வேண்டும் போல இருந்தது. சரிவில் சின்னக் குழந்தை போல உருள வேண்டும் போல இருந்தது. ஒரே மாதிரி உடை அணிந்து ஏறக்குறைய ஒரே வயசுள்ள குழந்தைகள் வரிசையாக உட்கார்ந்திருக்க, அவர்களுடன் தானும் உட்கார்ந்து பிஸ்கட்டோ ஏதோ சாப்பிட வேண்டும் போல இருந்தது.


”ரூமுக்குப் போகலாமா சோபனா?”


”இப்பவேயா?”


”ஆரம்பிச்சதை முடிச்சுட வேண்டாம்?”


”இந்தப் பூக்கள் எல்லாம் எவ்வளவு நல்லா இருக்கு?”


”நிக்கறயா, ஒரு க்ளிக் எடுத் துடறேன்.”


”கொஞ்ச நேரம் நடக்கலாமே!”

”உன் இஷ்டம். நீ சொன்னா சரி” என்று கடிகாரத்தைப் பார்த் தான்.

சரியாக ஒரு நிமிஷம் நடந்ததும், ”நடந்தது போதுமா?” என்றான்.

”எங்கே போகலாம்?”


”காருக்குப் போய் கேஸட் போட்டுக் கேட்கலாம். அப்புறம் ரூம்ல போய் டிபன் சாப்பிட்டுட்டு ராத்திரி ஃபிலிம் போகலாம்.”


”’லட்சுமி’ ஓடுது. நான் இன்னும் பார்க்கலை. நீ பாத்தியோ?”


”என்ன?”

”லட்சுமி; ஒரு குரங்கு டாப்ஸா ஆக்ட் பண்ணியிருக்காம்!”


”அப்படியா?”


”ஒரு ஸாங் நல்லா இருக்குன்னு எழுதியிருந்தான்.”


”அப்படியா? ரவி இங்க கொஞ்ச நேரம் உட்காரலாமே.”


”உக்காந்து போட்டோ எடுக்கலாமா?”


”இல்லை, படிக்கலாம்.”


பைக்குள்ளிருந்து அவள் கலீல் கிப்ரானின் ‘A Jear and a Smile’ என்கிற புத்தகத்தை எடுத்தாள். அவன் ஒரு வாரப் பத்திரிகையை எடுத்து சிகரெட் பற்றவைத்துக்கொண்டான்.


I freed myself yesterday from the clamour of the city and walked in the quiet fields until I gained the heights which nature had clothed in her choicest garments.


”இதோ இப்படித்தான்” என்று இளவரசன் தன் கூர்வாளை உறையிலிருந்து உருவி சிறைக்கூடத்தின் தரைப்பாகத்தில் சில இடங்களை வாள்முனையால் தட்டிப் பார்த்தான்…”

”மனசுக்குள்ள படிங்க?”

”இந்தத் தொடர்கதை படிக்கறியோ? டாப்பா இருக்குது.”


”இல்லை.”

”ரஜினி மறுபடி நடிக்க வந்துட்டான், தெரியுமா?”


”அப்படியா?”

Sleep then, my child, for your father looks down upon us from eternal pastures.

”தீர சாகசம் புரிந்த வீர இளைஞனே வருக…”

”ரெண்டு ஜாதகமும் என்னமாப் பொருந்தியிருக்குங்கறேள்!”

”சோபனா வாயேன். ரூமுக்குப் போயிர�
��ாம். எத்தனை நேரம் பூவையே பாத்துக்கிட்டு… புஸ்தகம் படிச்சுக்கிட்டு… ரூமுக்கு ஒரு நாளைக்கு நூறு ரூபா கொடுத்துட்டு… கொஞ்ச நேரமாவது இருக்கலாமே!”



அறையில் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டான் ரவி.

”என் மீசை உனக்குப் பிடிச்சிருக்கா?”

”ம்.”

”ஸ்டெப் கட்?”

”ம்?”

”இதுக்குன்னே சலூன்ல அஞ்சு ரூபா வாங்கறான்.”

”அப்படியா?”

ரவி தன் உடம்பெல்லாம் பர்ஃப்யூம் அடித்துக்கொண்டான்.

”புடிச்சிருக்கில்ல!”

”ம்!”

”இந்தா, இதை மாத்திக்கிட்டு வந்துரு! பாரிஸ்ல வாங்கினது இது, போ, வெக்கப்படாதே. கட்டின புருசன்கிட்ட என்ன வெக்கம்!”


சோபனா பாத்ரூம் பக்கம் சென்றாள்.


ரவி தன் சட்டையைக் கழற்றினான்.

”சோபனா! சொர்க்கம்னா இதுதான் இல்லையா? இந்த மாதிரி க்ளைமேட்! இந்த மாதிரி ரூம்! இந்த மாதிரி மனைவி! சோபனா! ‘நினைத்தாலே இனிக்கும்’ கேட்டிருக்கியா?”


”சோபனா…”

”சோபனா…”

ரவி சற்றுக் கவலைப்பட்டு பாத்ரூம் கதவைத் தட்டினான்.

கதவு திறந்துகொண்டது.

சோபனா தரையில் உட்கார்ந்துகொண்டு விசித்து விசித்து அழுது கொண்டு இருந்தாள்.

மலை வாசஸ்தலமான உதக மண்டலத்துக்குக் கல்யாண சீஸ னின்போது தினம் நூறு ஜோடிகள் தேனிலவுக்கக வருகிறார்கள்!

நன்றி - சுஜாதா ,உயிர்மை,சிறுகதைகள்


http://www.bharatmoms.com/uploads/Image/writer-sujatha1.jpg