Showing posts with label G.NAGARAJAN. Show all posts
Showing posts with label G.NAGARAJAN. Show all posts

Saturday, July 21, 2012

ஜி. நாகராஜன் - ன் ஒரு நிமிடக்கதைகள் 4

http://farm4.staticflickr.com/3315/3643929380_30493ffca7_z.jpg?zz=1 

குத்தத்தை ஒத்துக்கிறயா ? ‘ என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார்.

‘ஆமாங்க ‘ என்றான் கைதி.

‘இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கணும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளச்சுபோ, மூணு மாச தண்டனை கொடுக்கிறேன் ‘ என்றார் மாஜிஸ்ட்ரேட்.

‘அய்யய்யோ எசமான்! நீங்க மூணுமாசந்தான் போடுவீங்கன்னா, நான் என் குத்தத்தை ஒத்துக்கலே. கேசே நடத்திப் பாத்துரேன். கெடச்சா ஆறுமாசம் இல்லண்ணா ஒண்ணுமில்லேன்னு போகணும் ‘ என்றான் கைதி. அதற்குள் இன்ஸ்பெக்டர் எழுந்திருந்து, ‘யுவர் ஆனர், கேஸ் நடந்தா தப்பிச்சாலும் தப்பிச்சிடுவான். அவன் கேக்கறபடி ஆறு மாசமே போட்டிடுங்க. ஒரு கன்விக்ஷன் என்றாவது டயரியில் வரும் ‘ என்றார்.


மாஜிஸ்ட்ரேட் ஆறு மாதத் தண்டனை விதித்தார்.

ஜெயித்தது யார் ? அந்த ஏழைக்கைதிதான்.


2.
மடத்துக்கு முன்னால் ஒரே கூட்டம். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் வருத்தம் தோய்ந்திருந்தது. குசுகுசு என்று மட்டும் பேசிக்கொண்டனர்.

‘சாமியார் சமாதியாகிவிட்டார். ‘ ‘இன்று காலை தியானத்தில் உட்கார்ந்திருந்தவர்தானாம், அப்படியே சமாதியாகிவிட்டார் ‘ என்றெல்லாம் பேசிக்கொண்டனர்.


ஊர்ச்சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தின் நடுவே குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டிருந்தனர். என்னவென்று புரிந்து கொள்ளாமலேயே அவர்களும் ‘சாமியார் சமாதியாகிவிட்டார் ‘ என்ற வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டனர். இறுதியில் மடத்துக்காரர்கள் சாமியாரை வெளியே கொண்டுவந்தனர். சாமியார் வெளியே தூக்கிக் கொண்டுவரப்படுவதையே உற்று நோக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் திடாரென்று, ‘டேய், சாமியார் செத்துப் போயிட்டாரு ‘ என்று கத்திக் கொண்டே கூட்டத்தைவிட்டு ஓடிவந்தான். உடனே அத்தனை சிறுவர்களும், ‘மடத்துச் சாமியாரு செத்துப் போயிட்டாரு ‘ என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திக்கொண்டு ஓடினர். பெரியவர்கள் சிறுவர்களைக் கூட்டத்தை விட்டு அரட்டி மிரட்டி ஓட்டினர்.



3.
அவள் ஒரு விபச்சாரி. அவளை வைத்துக் கதை எழுத வேண்டுமென்று எழுத்தாளன் விரும்பினான். ஆகவே அவன் அவளிடம் சென்றான்.

‘பெண்ணே! நீ இவ்வளவு கெட்ட நிலைக்கு வரக்காரணம் என்ன ? ‘ என்று எழுத்தாளன் கேட்டான்.

‘என்ன ? … கெட்ட நிலையா ? அப்படி ஒண்ணும் எனக்கு சீக்குக் கீக்குக் கிடையாது. ஒங்கிட்ட சீக்கில்லாமே இருந்தா அதுவே ஆண்டவன் புண்ணியம் ‘ என்றாள் விபச்சாரி.


‘இல்லே, உனக்கு சமுதாயம் எவ்வளவு பெரிய கொடுமையை இழைத்துவிட்டது! ‘ என்றான் எழுத்தாளன்.

‘கொடுமை என்ன கொடுமை! பசிக்கொடுமை எல்லோருக்குந்தானிருக்கு… இந்த போலீசுக்காரங்க தொந்தரவு இல்லாட்டி ஒண்ணுமில்லே ‘ என்றாள் விபச்சாரி.


‘கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகிறது உனக்கு கஷ்டமாக இல்லை ? ‘

‘யாரும் கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகல. எனக்குன்னு ஒரு புருஷன் இருக்காரு ‘

‘மற்ற பெண்கள் எல்லாம் கட்டின புருஷனோடு மட்டும்தான் இருக்கிறார்கள். வேறு ஆண்பிள்ளைகளோடு சம்பந்தம் வைத்துக்கொள்வதில்லை தெரியுமா ? ‘

‘அப்படியா ? ‘

‘பின்பு ? ‘

‘சரி, உங்களுக்கு பெஞ்சாதி இருக்குங்களா ? ‘

‘ஊம், இருக்கு ‘

‘நீங்க மட்டும் எங்கிட்ட வந்திருக்கீங்களே ஒங்களுக்கு வெக்கமா இல்லே ? .. சரி, அது கிடக்கட்டும்; நேரமாவுதுங்க ‘


கொடுமையிலும் கொடுமை, கொடுமையை கொடுமை என்று புரிந்து கொள்ளாததுதான். எழுத்தாளனுக்கு அது புரியவில்லையோ என்னவோ, விபச்சாரியைக் காட்டி, வாசகர்களின் கண்ணீரைப் பிதுக்கியெடுத்து, நாலு காசு சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டும் கைவிட்டான்.


4.
அவன் தாமரையைப் பற்றிக் கவிதைகளில் படித்திருக்கிறான். படங்களில் பார்த்திருக்கிறான். அதன் செம்மையும், மென்மையும், எழிலுருவும் அவன் உள்ளத்தைச் சுட்டெரித்தன. அதை அடைய விரும்பினான். தடாகத்துக்குச் சென்றான். அதோ! அங்கு மலர் தெரிகிறது. தண்ணீரின் மேல் கவலையற்று உறங்கிக் கிடக்கிறது. ‘வா, வா ‘ என்று அவனைக் கள்ளப் பார்வை கொடுத்து அழைக்கிறது. அவன் தடாகத்துக்குள் காலெடுத்து வைத்தான்.


‘யாரது ? தண்ணீரிலே இறங்காதே. ஒரே சகதி! தாமரைக் கொடி காலைச் சுத்திக்கிட்டா அப்புறம் உயிருக்கே ஆபத்து ‘ என்று எச்சரிக்கிறான் யாரோ ஒருவன்.


தாமரையைப் பார்த்து விரும்பிய அவனும் உடனே சட்டென்று நின்றுவிட்டான். மலரைப் பார்த்துப் பெருமூச்செறிந்து சற்று நேரம் நின்றுவிட்டு, அதோ அங்கே அவனும் தலை குனிந்து செல்கிறான். அவன் இன்னும் வாழ்கிறான். எனக்குத் தெரியும். ஆனால் என்றோ தற்கொலை புரிந்து கொண்டு விட்டான்!

Monday, July 16, 2012

ஜி. நாகராஜன் - ன் பச்சைக்குதிரை- சிறுகதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitDRYBtIiEoexZ8XagcXfYDmlwrLt7OfTtwxtn1NTklUeSlZ_8fp3ya_EfeXOBtOlTpv4Yqb4ycuC0Roj-R5D1yvkObpgmdZQlIDnZ7mdAbn8rUNqwurisXodaXM17SOuX1nS1AFPZHWE/s1600/gnagarajan.JPG 

ராஜுவுக்கு துக்கம் பீறிட்டு வந்தது; சாகலாம் போலிருந்தது.

‘பெரிய சண்டியரு! இவர் எதைக் கேட்டாலும் கொடுத்துடணும்; இல்லாட்டி மாட்ட வைப்பாராம், மாட்ட!’

ராஜுவுக்கு கோபமெல்லாம் செல்லத்துரை மீது.

‘எருமைமாடு மாதிரி இருந்துக்கிட்டு இவன் எதுக்கு நாலாம் கிளாசிலே இருக்கணும்? அன்னைக்கு மாணிக்கம் வாத்தியார்கூட, ‘டே தடியா! அய்யாகிட்டச் சொல்லி, ஏதாச்சும் கடைலே கிடைலே வைக்கச் சொல்லு’ என்கலே! இந்த மாணிக்கம் வாத்தியான்! அவன் ஒரு மண்டைக் கனம், மாணிக்கம், கீணிக்கம், சாணிக்கம், பூணிக்கம்…’


மாணிக்கம் வாத்தியார் திருகிய காதை ராஜு இலேசாகத் தொட்டுக் கொண்டான். இட்லியைத் தொட்ட மாதிரி இருந்தது. ‘இன்னைக்கு தின்ன என்னவோ?… இருட்டிடுச்சு… ஒருமிக்க சோத்தைத் தின்னுட்டு படுத்துர வேண்டியதுதான். ஐயோ, காதெ யாரும் பாக்காம இருக்கணுமே; ராஜு மீண்டும் காதைத் தொட்டுக் கொண்டான். துக்கம் நெஞ்சை அடைத்தது. ‘அம்மா பாத்தா ‘ஓ’ன்னு அலறிடுவா. ஊர்லே இல்லே, நல்லவேளை. அப்பா வரதுக்குள்ளே தூங்கிடணும்… போடா, ராஜு போ, உனக்குத் தூக்கம் வேறயா கெட்டிருக்கு.. காலையிலேயே போலீசுகாரன் வரும்போதல்ல தெரியும்’


இந்த வீட்டிலே ராஜு என்கிற செட்டிமார் பையன் ஒருத்தன் இருக்கானா? அய்யய்யோ, போலீசுக்காரன் வந்திட்டானே! மூஞ்சியைப் பாரு, குரங்குமாதிரி. ஆமாம் இந்த வீடுதான். என்ன விஷயம் என்று கேட்டுக்கொண்டு வாசலில் நிற்கிறார் அப்பா. ராஜு கதவருகே ஒளிந்து கொண்டு நிற்கிறான். ‘அந்தப் பையனே டேஷனுக்கு கூட்டிப் போகணும். யாரோ ஒரு பையன் கையை ஒடிச்சிட்டான்’ என்கிறான் போலீஸ்காரன். ‘எங்க வீட்டு ராஜுவா?

அவன் அப்படியெல்லாம் கையை ஒடிக்க மாட்டானே! பாவம், ரொம்ப சாது’ என்கிறார் அப்பா. போலீஸ்காரன் விட்டால் தானே! ‘ஒடிக்கமாட்டானா? அவுங்க மாணிக்கம் வாத்தியாரே பார்த்தாராம். இவன்தான் ஒடிச்சானாம். பச்சக்குதிரை விளையாடுறப்போ, குனிஞ்சிருந்த உங்க ராஜுதான் அந்த சோமுவைக் காலை வாரிவிட்டுக் கையை ஒடிசிருக்கான். செல்லத்துரைங்கிற பையன் கூடச் சொன்னான்.

‘பொய்யப் பாரு பொய்யை! நான் ஒன்ணும் காலை வாரிவிடலேப்பா… அந்தச் செல்லத் துரைக்கு பென்சில் தரலையாம், பொய் சொல்றான். மாணிக்கம் வாத்தியாரும் கூடச் சேர்ந்துக்கிட்டாரு’ என்று கத்திக்கொண்டு ராஜு அப்பாவின் முன் வருகிறான். ‘திருட்டுப்பயலே, நீதானா?’ என்று கூறிக்கொண்டு போலீஸ்காரன் ராஜுவை எட்டிப் பிடிக்கிறான். ராஜு ஓடுகிறான். போலீஸ்காரன் விரட்டுகிறான். அப்பா போலீஸ்காரனைக் தடுக்கப் பார்க்கிறார். அப்பா கைமீது போலீஸ்காரன் ஒரு போடு போடுகிறான். ராஜுவைத் தரதரவென்று இழுக்கிறான். அப்பா பின்னால் ஓடிவருகிறார். ‘பத்து வயசுக் குழந்தை அய்யா, அவனை விட்டிடுங்க.

நான் வேணா அந்தக் கையொடிஞ்ச பையனுக்கு நிறையப் பணம் தரேன். அவனை விட்டிடுங்க அய்யா!’ என்று கெஞ்சுகிறார் அப்பா. போலீஸ்காரனுக்கு நெஞ்சு கல். ‘கையை ஒடிச்சிருக்கான். பத்து வயசுக் குழந்தையாம்’ என்று இரைகிறான். பல்லைக் கடித்துக் கொண்டு ராஜுவை இழுத்துச் செல்கிறான். ‘இந்த ஒரு தரம் விட்டிடுங்கையா, இனிமே ஒடிக்கமாட்டேன். யார் கையையும் ஒடிக்கமாட்டேன்” என்று அழுகிறான் ராஜு…

ராஜுவின் கண்களிலிருந்து பொலபொல வென்று கண்ணீர் வடிந்தது. வாய் உலர்ந்தது, வாயைத் திறக்க முடியவில்லை. நாக்கு வாயோடு ஒட்டிக்கொண்டது. தொண்டையில் ஏதோ உருண்டை மாதிரி நின்றது. ‘நான் காலை வாரிவிடலேப்பா. எல்லாம் இந்த செல்லத் துரையாலே, எத்தனை பொய் சொல்றான்! அவன் சொல்றதை வச்சிக்கிட்டு இந்த மாணிக்கம் வாத்தியார் போலீசிலே பிடிச்சுத் தருவாராம், அப்பா.’


பாவம் அந்தச் சோமு! அவன் கையொடிஞ்சு போச்சு. ‘கையொடிஞ்சிருச்சே! வீட்டிலே கொன்னுப்புடுவாங்களே’ன்னு கத்தினான். ‘சோமு, சோமு எம்மேலே கோவப்படாதே. நான் ஒண்ணும் உன்னைக் காலை வரிவிடலே, நீ கையை வச்சு முதுகிலே அழுத்தினபோது இலேசாகக் குனிஞ்சேன், சோமு.’ சோமுவை பியூன் ஹென்றி தூக்கினபோதுதான் எப்படி அலறினான் அவன்! அய்யோ பாவம், ‘நான் வேணும்னு ஒண்ணும் செய்யலே சோமு, என்னை மட்டும் சும்மா விட்டாங்களா? இங்கே யாரு. இங்கே பார். தலைலே மங்கு மங்குன்னு குட்டினாரு. என் கன்னத்தைப் பாரு. பளீர் பளீர்ன்னு அடிச்சிருக்காரு. எல்லோரும் எம்மேலே விழுந்து என்னைக் கீழே தள்ளி மிதிச்சாங்க சோமு. என்னைப் போலீசிலே வேறே பிடிச்சித் தரப்போறாங்களாம் சோமு. அந்தச் செல்லத்துரை சொல்றான்.


‘சோமுவைத்தான் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டாங்களே! பாவம், இனிமே என்ன செய்வான்? பள்ளிக்கூடத்துக்கு வரமுடியாது. கையொடிஞ்சவனைக் கடையிலே வச்சிக்க மாட்டாங்க. பாவம் சோமு நொண்டிப் பிச்சைக்காரனா ஆக வேண்டியதுதான். ‘அய்யா சாமி! கொஞ்சம் தர்மம் போடுங்களேன். அந்த செட்டிப்பய ராஜு என் கையை ஒடிச்சிட்டானே’ இந்த அப்பா ஒண்ணு. அவனுக்கு ஏதாச்சியும் தாங்களேன்னா, ‘அவன் கையொடிஞ்சா நாம் என்ன செய்யறது?’ன்னுடுவார்.

‘இல்லேப்பா நான்தான் பாவம் அவன் கையை ஒடிச்சேன். ‘நீதான் ஒடிச்சயா! போ, அவனோடே நீயும் போ..’ ராஜு நந்தவனத்துக்கு வந்தான். தொட்டியிலிருந்த தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவினான். அங்கு சீப்பு, கண்ணாடி வைத்திருந்தார்கள். தலையைச் சீவிக் கொண்டான். சட்டையையும், டிராயரையும் சரிப்படுத்திக் கொண்டான். கழுவிய முகத்தில் கண்ணீர் மீண்டும் முத்துப் போல் உருண்டு விழுந்தது. துடைத்துக்கொண்டான். வீடு சேர்ந்ததும் யாருடனும் பேசவில்லை. வேலைக்காரி சோறு போட்டாள். சாப்பிட்டான். நேராகக் கட்டிலுக்குச் சென்று குப்புற விழுந்தான். அலைக்கழிந்த மனம் அமைதியை நாடியது.


இரண்டு மணி வெயில் மண்டையைப் பிளந்தது. ராஜுவும் அவர்களும் வேலாங்குளம் கண்மாயை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்களில் வேலுச்சாமி ஒருவன். தர்மராஜன் ஒருவன். மூன்றாவது யாரோ.. ராஜுவுக்கே தெரியாது. நிழலுக்காக, ரோட்டிலே நடக்காது ரோட்டோரமாக இருந்த மேட்டிலே நடந்து சென்றனர். ஒவ்வொருவராக சட்டையைக் கழற்றி முண்டாசாகக் கட்டிக்கொண்டனர். சற்று தூரத்தில் இருந்த தண்டவாளத்தின் மீது புகைவண்டி ஒன்று சென்றது. வண்டியைக் கண்டதும் அவர்கள் நின்று அதைப் பார்த்து கூச்சலிட ஆரம்பித்தனர். கண்டபடித் திட்டினர். ரெயிலில் போகிறவர்களை, வேலுச்சாமி மடித்துக் கட்டியிருந்த வேட்டியைத் தூக்கி வண்டியைப் பார்த்து கூத்தாடினான். ராஜுவுக்கு கூச்சலிடவும் கூத்தாடவும் மனமில்லை. ‘இதெல்லாம் என்ன?’ என்று உள்ளூர அலுத்துக் கொண்டான்.


கண்மாயில் ஏக கலாட்டா. நாலு பேரும் தண்ணீரிலே குதியாட்டம் போட்டனர். வேலுச்சாமி மட்டும் ஒரு கோவணம் கட்டியிருந்தான். மற்றவர்கள் பிறந்த மேனியில் இருந்தனர். நாலு பேர்களுக்கும் கையும் காலும் வெளிறிப்போய் கனத்துவிட்டது. கண்கள் சிவந்து நீரைக் கக்கின. தலையில் கல்லைக் கட்டி அழுத்துவது போலிருந்தது. போதாதற்கு வயிறு நிறைய தண்ணீர். ஒவ்வொருவராக வேலுச்சாமியைத் தவிர மற்ற மூவரும் கரைக்கு வந்து சேர்ந்தனர்.

அரைகுறை நீச்சலடித்து சுற்றி வந்தான் வேலுசாமி. அவ்வப்போது கால்களையோ கைகளையோ தரையில் ஊன்றிக் கொண்டான. சுற்றிச் சுற்றி வந்தவன் சற்று விலகிச் சென்றுவிட்டான். கால்கள் தரையை எட்டவில்லை. ஆழத்துக்குப் போய்விட்டான். தத்தளித்துத் தத்தளித்துத் தலையை மேலே தூக்கினான். உரக்கச் சத்தமிட முயன்றான். தண்ணீர் அலை அலையாக வாய்க்குள் புகுந்தது. ஒரே உளறல் மட்டும் கேட்டது. தரையிலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ‘திக்’கென்றது. தர்மராஜன் நிலைகுலையாது நின்றான். ஒருவன் ‘அய்யோ அப்பா’ என்று கத்திக் கொண்டு ஓட்டமெடுத்தான். ராஜு மட்டும் சரசரவென்று தண்ணீருக்குள் நடந்தான். வேலுச்சாமியை எட்டிப் பிடித்தான். இருவரும் தண்ணீரில் மல்லுக்கட்டினர். அவன் இவனை இழுத்தான். இவன் அவனை இழுத்தான். ராஜுவுக்கு மூச்சு முட்டியது.


பாவம் ராஜு செத்துவிட்டான். ராஜுவின் வீட்டு முன்பு கூட்டம். மாணிக்கம் வாத்தியார்கூட வந்திருந்தார். ‘நல்ல பையன், ரொம்ப சாது’ என்று அனுதாபப்பட்டார். ‘அந்த வேலுச்சாமிக்காகத் தான் ராஜு செத்துப் போனானாம்’ என்றார் யாரோ ஒருவர். எல்லாரும் ஆமோதிக்கும் பாவனையில் தலையை அசைத்துவிட்டு ராஜுவின் சாவுக்காக வருந்தினர். அந்தக் கூட்டத்திலே நின்று கொண்டிருந்த ராஜுவும் வருத்தத்தோடு தலையை அசைத்தான்.

‘தம்பி எழுந்திரு. உங்க பெரியய்யா, மகன் வந்திருக்காரு’ என்று வேலைக்காரி கூறியதும் ராஜு எழுந்து உட்கார்ந்தான். ‘செத்ததெல்லாம் கனவுதான்! உம் அந்த சோமுக்கு கையொடிஞ்சதும் கனவாயிருக்கக்கூடாதா?” ராஜு வெளியே நடந்து வந்தான். பெரியப்பா மகன் நடராசன் இரண்டு சகாக்களோடு நின்று கொண்டிருந்தான். ‘என்ன தம்பி, செல்லத்துரை நேத்து சேட்டை பண்ணினானாமே? உடனே எங்கிட்டே ஏன் சொல்லலே? பெரிய சண்டியருன்னு நினைச்சிட்டிருக்காம்போலே, இன்னைக்கில்லே அவனுக்கு தெரியப் போவுது!” என்று நடராஜன் ஆரம்பித்தான். ‘இல்லே, அண்ணே, நான் சோமு கையை ஒடிச்சிட்டேங்கிறாங்க’ என்று ராஜு இழுத்தான்.

”கையொடியரவரு ஏன் விளையாட வந்தாராம்” என்று கேட்டுவிட்டு, நடராஜன், ”தம்பி, நீ தின்னுட்டு வா… இன்னைக்குப் பள்ளிக்கூடத்திலே வச்சு சாத்தற சாத்திலே, அவரு சண்டியத்தனமெல்லாம் பறக்கணும், ஆமா’ என்று கூறிக்கொண்டே ராஜுவிடம் விடை பெற்றுக்கொண்டு, சகாக்களின் தோள்களில் கைகளை வைத்தவாறே நகர்ந்தான் நடராஜன். ராஜு துள்ளிக் குதித்து வீட்டுக்குள் ஓடினான்.


“கையொடியரவரு ஏன் பச்சக்குதிரை தாண்டணுமாம்?” என்று சொல்லிக்கொண்டே பல்லை விளக்கினான். உடனே நேராக அடுப்பங்கரைக்குள் நுழைந்தான். ”தம்பி வெந்நீர் ஊத்திவச்சிருக்கேன். குளிச்சிட்டு வந்திரு. இல்லாட்டி ஐயா கோவிப்பாரு” என்றாள் வேலைக்காரி. ”குளிக்கவும் மாட்டேன்; ஒண்ணும் மாட்டேன், நான் ஒடனே போகணும். இப்ப இட்லியை வைக்கிறயா, இல்லையா?” என்று அதட்டினான் ராஜு.


”உன் அதட்டலும் மிரட்டலும் இங்கே வச்சுக்காதே; மருவாதையாய் போய்க் குளி” என்று கண்டிப்புடன் பேசினாள் வேலைக்காரி.

”என்னை யாருன்னு நினைச்சே! இங்கே பார், நான் இன்ஸ்பெக்டராக்கும்” என்று சொல்லிக்கொண்டே கையிலிருந்த தோல் பெல்ட்டால் வேலைக்காரிக்கு ஓங்கி ஒரு அடி கொடுத்தான் ராஜு.



நன்றி - ஜி நாகராஜன், சிறுகதைகள், 

Monday, July 09, 2012

ஜி. நாகராஜன் - ன் டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்-சிறுகதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdVaPR7GczQIEhZN5Znw738T4f6zSQlkF3Ng8Q3byxxtAN0-Ac35Z8PdumvqD0yJJUoXHcSyyWQk2L0QeEr5vfpuXnekZEKMVjxZLtXQQvOzy9oRrmp7uIvTevpW0a7tIl_NsFup1UFNW1/s1600/Tomorrow+is+One+More+Day.jpg 

போலீஸ் ரெய்டு இருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால், கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் என்றுவிட்டான் அத்தான். ‘ஓரு மாதத்துக்கு முன் வீட்டைவிட்டு ஓடிவிட்ட கமலாவைப் பற்றி ஒரு செய்தியும் இல்லை. ஓணத்துக்குப் பிறந்த ஊர் போயிருந்த சரசா இன்னும் திரும்பி வரவில்லை. வெளிக் கதவை அடைத்துவிட்டு ரேழியை அடுத்திருந்த அறையில் குழல் விளக்கொளியில் மெத்தைக் கட்டிலின் மீது தனியே உட்கார்ந்திருந்த தேவயானைக்கு அலுப்புத் தட்டிற்று.


ஏதோ நினைவு வந்தவளாய் ரேழியிலிருந்து படிக்கட்டுகளின் வழியே ஏறி மாடியறைக்குச் சென்று விளக்கைப் போட்டாள். அங்கு கீழறையைக் காட்டிலும் சற்று அதிகமான வசதிகள் இருந்தன. பலவகை அந்நிய நாட்டுப் படங்கள் சுவரை அலங்கரித்தன. அறையில் மிகப் பெரிய செட்டிநாட்டுக் கட்டில் ஒன்றும். அதன் மீது ‘டபில்’ மெத்தை ஒன்றும் சுவரோரமாக ,ருந்தன. ‘நைட் புக்கிங்’குக்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த அவ்வறை சென்ற ஒரு மாத காலமாக மனித நடமாட்டம் அற்றுக் கிடந்தது. கமலாவுக்குத்தான் ‘நைட் புக்கிங்’ ராசி அதிகம். தேவயானை கட்டிலின் மீது ,ருந்த மெத்தையை இலேசாகத் திருப்பி, அதன் அடியிலிருந்து ஒரு நீளமான அரை டூஞ்சு மணிக்கயிற்றை எடுத்தாள். அவள் ஊரிலிருந்து வரும்போது அவளது தாயார் அவளது படுக்கையைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய கயிறு அது. அறையின் நடுவில் நின்றுகொண்டு, கயிற்றின் உறுதியைச் சோதிப்பது போல அதைப் பலவிடங்களில் டூழுத்துவிட்டுக்கொண்டே, மேலே அறையின் நெற்றுக் கண்ணைப் பார்த்தாள்.


உத்திரத்தில் ஒரு இரும்பு வளையம் தொங்கிக்கொண்டிருந்தது. அது கட்டிலின் விளிம்புக்கு நேர் மேலே சற்று விலகி அமைந்திருந்தது. கட்டிலின் மீது நின்றுகொண்டு, கயிற்றைக் கொண்டு வளையத்தை எட்ட முடியுமா? நடுவில் இருந்த மெர்க்குரி விளக்கின் மேற்பாதி, ஒரு வளைந்த தகட்டினால் மறைக்கப்பட்டிருந்ததால், வளையம் தெளிவாகக் கண்களுக்குக்குப் படவில்லை. சற்று அவசரமாகக் கீழே சென்று துணி உலர்த்தப் பயன்படும் நீளமான மூங்கிற் கழியொன்றை எடுத்து வந்தாள். கட்டிலின் மீது நின்றுகொண்டு, கழியின் ஒரு நுனியில் கயிற்றைச் செலுத்த முடியுமா என்று பார்த்தாள். கீழே கதவு தட்டும் சத்தம் கேட்டது. கழியையும் கயிற்றையும் கட்டிலில் போட்டுவிட்டு, கீழே ஓடினாள். வெளிக் கதவைத் திறக்குமுன் சற்றுத் தயங்கினாள். கதவை யாரும் தட்டவில்லை என்பதுபோல் பட்டது. அடுத்த பூங்காவனத்து வீட்டின் கதவு திறக்கும் சத்தம் மட்டுமே கேட்டது. கதவிடுக்கின் வழியே யாரும் நின்றுகொண்டிருந்தனரா என்று பார்த்தாள். யாரும் நின்றுகொண்டிருந்ததாகப் படவில்லை. தேவயானை மாடிப்படியறைக்கு வந்தாள்.


மீண்டும் கழியைக் கொண்டு கயிற்றை வளையத்தின் உள்ளே செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள். தோள்பட்டைகளில் நோவு எடுத்தது. முகத்தில் வியர்வை அரும்பி, நெற்றி வியர்வை ஜவ்வாதுப் பொட்டைக் கரைத்து வழிந்தது. தேவயானைக்கு ஒரு யோசனை வந்தது. அவசர அவசரமாகக் கழியையும் கயிற்றையும் தரையில் போட்டுவிட்டுக் கீழே ஓடிவந்தாள். புழக்கடையில் ஒரு சன்னலருகே கிடந்த அரையடி நீளமான துருப்பிடித்த ஆணியொன்றைக் கண்டுபிடித்தாள். அதை எடுத்துக்கொண்டு மாடியறைக்கு வந்தாள். ஆணியின் நடுவில் கயிற்றின் ஒரு நுனியை இறுகக் கட்டினாள். அவள் இழுத்த இழுப்பில் கயிறு கையை அறுத்துவிட்டது.

வலி பொறுக்காமல் கையில் எச்சிலைத் துப்பிவிட்டு, அதன் மீது ஊதிக்கொண்டாள். கட்டிலின் மீது நின்றுகொண்டு கழியின் உதவியால் ஆணியை இரும்பு வளையத்துக்குள் செலுத்த முயன்றாள். ஆணி கழி நுனியில் ஸ்திரமாக அமையாமல் பொத்துப் பொத்தென்று கீழே விழுந்தது. ஒரு நிமிஷம் இளைப்பாறிவிட்டு, கை நடுக்கத்தையும் சரிபடுத்திக்கொண்டாள். பிறகு ஆணியை இரும்பு வளையத்துக்குள் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள். ஆணியின் ஒரு பாதி வளையத்துக்குள் நுழைந்தாலும், மறு பாதி நுழைவதைக் கயிற்றின் முடிச்சு தடை செய்தது. கயிற்றின் கனமும் ஆணி வளையத்துக்குள் செல்வதைத் தடுத்தது. கயிறு நீளமான கயிறு. அவ்வளவு நீளம் கூடாதென்று தேவயானைக்குப் பட்டது. கயிற்றைப் போதுமான அளவுக்கு வெட்டக் கத்தி எங்கு கிடைக்கும் என்று யோசித்தாள்.


வீட்டில் கத்தி ஒன்றும் கிடையாது. பிளேடு? அதுவும் இல்லை. தேவயானைக்கு அடுப்பங்கரை அரிவாள்மனை நினைவுக்கு வந்தது. குதித்துத் கீழே சென்று அரிவாள்மணையை எடுத்து வந்தாள். கட்டிலின் விளிம்பில் நின்றுகொண்டு, தன் கழுத்துக்கும் இரும்பு வளையத்துக்கும் உள்ள இடைவெளியையும், சுறுக்கு விட வேண்டிய நீளத்தையும் உத்தேசமாகக் கயிற்றைத் துண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். நல்ல வேளையாக அரிவாள்மணை சற்றுப் பதமாகவே இருந்ததால் , கயிற்றை நறுக்குவதில் சிரமம் இல்லை. மற்றொரு யோசனையும் தேவயானைக்கு வந்தது. அரிவாள்மணையைக் கொண்டே கழியின் ஒரு நுனியை சிறிதளவுக்கு இரண்டாக வகுத்துக்கொண்டாள். இப்போது கயிற்று நுனியைக் கழிநுனியில் இருந்த பிளவில் கவ்வவைத்துக் கயிறு கீழே நழுவாதவாறு கழியை உயர்த்த முடிந்தது.


இவ்வாறு ஆணியை வளையத்துக்குள் செலுத்தி, ஆணி வளையத்தைக் குறுக்காக அழுத்திக்கொண்டிருக்க, கயிறு நேர்ச்செங்குத்தாகத் தொங்குமாறு செய்தாள். கட்டிலின் விளிம்பில் நின்றுகொண்டு கயிற்றின் நுனிப்புறம் தலை செல்லுமளவுக்கு ஒரு வளையம் செய்து சுறுக்கு முடிச்சுப் போடப் பார்த்தாள் தேவயானை. சுறுக்கு முடிச்சும் சரியாக விழவில்லை. அவளுக்கு இதிலெல்லாம் அனுபவம் போதாது. இரண்டு மூன்று தோல்விகளுக்குப் பிறகு, ஒருவாறாக முடிச்சு சரியாக விழுந்தது.

அப்போது கீழ்க் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. தேவயானை சற்றுத் தயங்கினாள். கீழே கதவைத் தட்டும் சத்தம் பலப்பட்டது. ‘இப்போது இதுக்கு என்ன அவசரம்?’ என்று நினைத்தவள் போல், தேவயானை கீழே ஓடிச்சென்று, சேலை முந்தானையால் முகத்தை ஒற்றிவிட்டு ஆடைகளையும் சரி செய்தவாறே வெளிக் கதவைத் திறந்தாள்.


அத்தானும் வேறொருவரும் வெளியே அறை வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தனர்.

”கதவெத் தெறக்க இந்நேரமா?” என்றான் அத்தான்.

”மேலே இருந்தேன்” என்றாள் தேவயானை.

”கதவை அடைச்சிட்டு, லைட்டை அணைச்சிட்டு இருன்னா, ஒன்னே யாரு மேலே போகச் சொன்னது?” என்றுகொண்டே அத்தான் நுழையவும், கூட இருந்தவரும் உள்ளே நுழைந்தார்.

”உம், லைட்டைப் போடு” என்றுவிட்டு அத்தான் வெளிக்கதவை அடைத்தான். ரேழி விளக்கைப் போட்டாள் தேவயானை. அத்தான கூட வந்திருந்தவர் நன்றாக வளர்ந்து இருந்தார். அரைகுறை பாகவதர் கிராப்போடு, டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்திருந்தார். வழக்கமாக வருபவர்களைப் போல் அவளையே உற்று நோக்காது ரேழியையும், ரேழியை ஒட்டியிருந்த அறையையும் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். ”சரிதானேங்க?” என்றான் அத்தான், அவரைப் பார்த்து.


ரேழியை அடுத்திருந்த அறையினுள் நுழைந்து, குழல் விளக்கொளியில் அறையின் சுவர்களை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ”பரவாயில்லை, எல்லாம் சுத்தமாகவே வச்சிருக்கீங்க” என்றார் அவர்.


”இங்கே எல்லாம் சுத்தமாகத்தான் இருக்கும்” என்றான் அத்தான் கள்ளச் சிரிப்போடு. ”அப்ப நா வர்றேன்.”


”பணம்?” என்றார் வந்தவர்.

”எல்லாம் டாக்டர்கிட்டே வாங்கிக்கறேன்” என்றுகொண்டே வெளியேறினான் அத்தான்.


வெளிக் கதவைச் சாத்தித் தள்ளிவிட்டு, ரேழி விளக்கையும் அணைத்துவிட்டு, வந்தவரிடத்து, ”வாங்க” என்று கூறிக்கொண்டே ரேழியை அடுத்திருந்த அறையின் குழல் விளக்கின் பிரகாசத்தில் பிரவேசித்தாள் தேவயானை. அவள் நேராகச் சென்று கட்டிலில் அமர்ந்தாள். அவர் தயங்கியவாறு அருகில் வந்து நின்றார்.


”இப்படி உட்காருங்க” என்றாள் அவள்.


”இல்லே, அந்த ரேழி ஓரத்துலே ஒரு நாற்காலி இருக்கே, அதை எடுத்திட்டு வா” என்றார் அவர். அவள் சிரித்தாள்.

”எப்போதுமே சாய்வு நாற்காலியில் சுகமாய் படுத்துத்தான் எனக்குப் பழக்கம்” என்று அவர் விளக்கினார்.

பலர் அந்தச் சாய்வான பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு தேவயானையைக் கொஞ்சியதுண்டு. எனவே உடன் எழுந்து பிரம்பு நாற்காலியை எடுத்து வந்து கட்டிலின் அருகே அதைப் போட்டாள். அவர் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டார்; அவள் மீண்டும் கட்டிலில் உட்கார்ந்துகொண்டாள். இருவரும் ஒருவரையொருவர் நோக்கிக் கொண்டனர்.


”நீ அழகா இருக்கே” என்றார் அவர். அவள் சிரித்தாள்.


”கொஞ்சம் சேலையை வெலெக்கிக்க” என்றார் அவர். அவள் மீண்டும் சிரித்தாள். ”உம், வேடிக்கைக்குச் சொல்லலே; ஒன் மார்ப முழுசும் மறைக்காதபடி சேலய கொஞ்சம் வெலெக்கிப் போட்டுக்க.”


அவள் அவ்வாறே செய்தாள்.

”கொஞ்சம் நிமிர்ந்து உட்காரு.”

அவள் மீண்டும் சிரித்தாள்.

”கொஞ்சம் நிமிர்ந்து உட்காரேன்” என்று கொஞ்சுவது போல் அவர் சொன்னார்.

”நீங்க என்ன போட்டாப் படம் பிடிக்கப் போறீங்களா?” என்று அவள் சிரித்தாள்.


”ஆமா, அப்படித்தான் வச்சிக்கயேன்” என்றார் அவர்.


அவளும் அவளது சேலையையும், முடியையும் ஒரு சைத்ரீகனுக்கு முன் உட்கார்ந்து சரி செய்துகொள்வதுபோல் சரி செய்துகொண்டாள். சற்று நேரம் அவளைப் பார்த்து ரசித்துவிட்டு, ஏதோ குறை கண்டவராய், ”உட்கார்ந்திருந்தா சரியாப்படலயே; கொஞ்சம் படுத்துக்க” என்றார் அவர்.


”நீங்க உட்கார்ந்துதானே இருக்கீங்க, வெறுமனே” என்றாள் அவள் சிரிக்காமல்.


”நான் இங்கே உக்காந்து இருந்திட்டுப் போகத்தானே வந்திருக்கேன்” என்றார் அவர். அவள் சிரித்துக்கொண்டே படுத்துக்கொண்டாள். ஒரு கையை மடித்து அதைக் கொண்டு தலையைத் தாங்கி அவரை நோக்கிச் சிரித்தவாறே அவள் படுத்துக்கொண்டாள். அவர் அவளைப் பார்த்துக் கொண்டு டூருந்தார்.


”உங்களுக்கு ஆசை இல்லையா?” என்றாள் அவள்.


”நிறைய இருக்கு.”

”அப்ப?”

”அதனாலேதான் ஒன்னைப் பார்த்துகிட்டே இருக்கேன்.”

”பாத்துகிட்டே இருந்தாப் போதுமா?” அவள் சிரித்தாள்.

”தொட்டுப் பார்க்கலாம்.”

”நீங்க தொட்டுப் பாக்கலயே.”

”தொட்டா நீ சும்மா இருக்கணுமே!” என்றார்.

அவள் சிரித்தாள். ”நான் ஒண்ணும் சேட்டை செய்யமாட்டேன்; நீங்க சும்மா தொட்டுப் பாருங்க.”

வெளிக்கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவள் எழுந்திருக்க முடியாது போல் தவித்தாள். அவர் நிதானமாக எழுந்து கதவைத் திறந்தார். கதவைத் தட்டியது அத்தான்தான். அத்தான் அவரை எதுவும் கேட்குமுன் அவர் பையிலிருந்து எதையோ எடுத்து அத்தானிடம் கொடுக்க வந்தார்.

”இல்லே வச்சிக்கோங்க, எல்லாம் டாக்டர்கிட்டேருந்து வாங்கிக்கறேன். டாக்டர் கடைக்கு வந்திட்டாரு; நீங்க வர்லயான்ட்டு கேட்டாரு” என்றான் அத்தான்.

”இப்ப வந்திடறேன்ட்டு சொல்லுங்க” என்றார் அவர்.

அத்தான் வெளியேறுகிறான்; அவர் கதவை அடைத்துத் தாளிடுகிறார்.

”கொடுமை” என்றுகொண்டே அவர் நாற்காலியில் சாய்கிறார்.

”எது?” என்றாள் அவள், கட்டிலிலிருந்து எழுந்து அவர் அருகே நின்றுகொண்டு.

”இந்த நேரக் கணக்குதான்” என்று அவர் சொல்லவும் அவள் அவரைக் கட்டியணைக்க முயன்றபடியே, அவரது இரு கன்னங்களிலும் இறுதியாக அவசரமாக அவர் உதடுகளிலும் முத்துகிறாள்.
”சரி, நீ போய்ப் படுத்துக்க” என்கிறார் அவர்.
”நீங்க என்ன செய்யறீங்க?” என்று கேட்டுக்கொண்டே அவள் மெத்தையில் சாய்கிறாள்.
”இங்கே இருக்கேன்” என்கிறார் அவர்.
”அதெக் கேக்கலே; என்ன தொளில் செய்யறீங்க?”
”பெறந்து, வளந்து, சாவற தொளில்தான் செய்யறேன்.”
அவள் கட்டிலிலிருந்து எழுந்து அவரை கட்டியணைக்க முயலுகிறாள். அவரோ நாற்காலியில் சாய்ந்தவராகவே கிடக்கிறார். தோல்வியுற்றவளாய் அவள் கட்டில் மெத்தைக்குச் சென்று அதன் மீது விழுகிறாள்.

”எனக்குத் தண்ணி தவிக்குது” என்கிறாள் தேவயானை.

அவர் எழுந்து, ரேழி விளக்கைப் போட்டு, மூலையிலிருந்த பானையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அவளுக்குக் கொடுக்கிறார். படுத்தபடியே அவள் தண்ணீரைப் பருகும்போது, அதில் ஒரு பகுதி வாய்க்குள் நுழையாது அவளது மார்பகத்தை நனைக்கிறது.

நின்றுகொண்டிருக்கும் அவர், ”சென்று வருகிறேன்” என்கிறார்.

”அடுத்த வாட்டி எப்ப வருவீங்க” என்றுவிட்டு அவர் பையிலிருந்து ஒரு ஐந்து ரூபாய்த் தாளை அவளிடத்து நீட்டுகிறார். அவள் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, தலையணைக்கு அடியில் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைக்கிறாள். அவர் கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்கிறார்.

இரவு மூன்று மணிக்கு அத்தான் வீட்டுக்கு வந்தான். அவரைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று அவளுக்கு ஆவல். ஆனால் வாடிக்கைக்காரர் யாரிடத்தும் அவள் விசேட ஆர்வம் காட்டுவது அத்தானுக்குப் பிடிக்காது. எனவே அவள் எடுத்த எடுப்பிலேயே, ”அவர் எனக்கு அஞ்சு ரூவா கொடுத்தார்” என்றாள்.


”யாரவன்?” என்றான் அத்தான்.

”அதான் நீங்க மொதல்லே கூட்டியாந்தீங்களே, அவருதான்.”

”மொதல்லே யாரக் கூட்டியாந்தேன்? நான் இன்னிக்கு ஒருவாட்டி தானே வந்தேன்?”
”அதான், ஏளு ஏளரை மணிக்குக் கூட்டியாந்தீங்களே, அவரே நெனப்பில்லையா?”

”ஏளு, ஏளரை மணிக்கா? நான் சுப்பு வீட்லேந்து கிளம்பும்போதே ஒம்பது மணி ஆயிருக்குமே!”

”இன்னிக்கு சுப்பு வீட்டுக்குப் போயிருந்தீங்களா?”

”ஆமாம், இருபது ரூபா வரைக்கும் கெலிப்பு. இன்னைக்கு ஒன்பது மணிவரைக்கும் தெருவுலே தலைகாட்ட வேண்டாம்னுட்டு ஏட்டையா சொல்லியிருந்தாரு. நானும் ஒம்பது வரைக்கும் சுப்பு வீட்டோடவே இருந்திட்டேன்.”


”அப்ப, அந்த டெர்லின் சட்டைக்காரரே நீங்க கூட்டியாரலையா? அவர் கூட ஒரு டாக்டர் வந்தாராமே; நீங்க கூட டாக்குட்டரே வேறே வீட்டுக்குக் கூட்டிப் போனீங்களே?”
”டாக்டரா? அவர் யாரு டாக்குட்டரு? ஒனக்கு என்ன புத்தி தடுமாறிடுச்சா, இல்லே கதவெத் தெறந்து போட்டுக்கிட்டு கனவு கண்டிட்டிருந்தயா?”

”இல்லயே, கதவ அடச்சிட்டு மேலேதான் இருந்தேன். நீங்க கதவைத் தட்டினப்பதான் கீளே வந்தேன்.”

அத்தான் முழித்தான். அவள் தொடர்ந்தாள்.

”கொஞ்சம் நீளமா முடி வச்சிருந்தார். நீலநெற டெர்லின் சட்டையும் எட்டு மொள வேட்டியும் கட்டிருந்தாரு. ஆனா என்னெத் தொட்டுக்கக் கூட இல்லே” என்றுவிட்டு தேவயானை சிரித்தாள்.

”தேவு, சும்மா உளறாதே. நான் தெருவுக்கு வரும்போதெ மணி ஒம்பதுக்கு மேலே ஆயிரிச்சே. அந்த சாயபுப் பையனே மட்டுந்தானே இன்னைக்கு நா கூட்டியாந்ததே. அதுக்கு முன்னாடி யாரெக் கூட்டியாந்தேன்?”

”நா உளர்றேனா, நீங்க உளர்றீங்களா?” என்றுகொண்டே, தான் அவரிடமிருந்து வாங்கிய ஐந்து ரூபாயை அத்தானிடம் காட்ட தலையணையைத் திருப்பினாள் தேவயானை. தலையணைக்கு அடியே எதுவும் காணப்படவில்லை. தேவயானைக்கு மெய் சிலிர்த்தது. பதட்டத்தில் தலையணையை முழுமையாகப் புரட்டினாள். எதுவும் காணோம். மெத்தைக்கு அடியிலும், பிறகு தலையணை உறைக்குள்ளும் தேடினாள். ஒன்றும் காணவில்லை. தலையணை உறையின் இரு முனைகளைப் பிடித்துக்கொண்டு தலையணையைத் தலைகீழாகக் கவிழ்த்தாள். தலையணை தலையில் விழுந்தது. உறையினுள் தேடினாள். தரையில் தேடினாள். ஐந்து ரூபாயைக் காணோம். அத்தான் முழித்தான்.


”எங்கே போயிருக்கும்; இங்கேதான் எங்காவது இருக்கணும்” என்றாள் தேவயானை நம்பிக்கையோடு.

”எது?” என்றான் அத்தான்.

”அந்த டெர்லின் சட்டைக்காரர் கொடுத்த அஞ்சு ரூபாதான்.”

”நீ என்ன கனவு ஏதாச்சும் கண்டாயா?” என்றுகொண்டே அத்தான் சிரித்தான்.

”நீங்கதான் வெறிச்சீலே எல்லாத்தையும் மறந்திடுவீங்க” என்றாள் தேவயானை, இன்னும் காணாமற் போன ஐந்து ரூபாயைத் தேடியவாறே.

”ஒருவேளை மேலே மாடியிலே இருக்கும்” என்றுகொண்டே, தேவயானை வேகமாகப் படிகளேறி மாடிறயறைக்குச் சென்றாள். அவள் அணைக்காது விட்டுப்போன மெர்க்குரி விளக்கு ஒளியில், அவள் பிரயாசைப்பட்டு இரும்பு வளையத்திலிருந்து தொங்கவிட்ட கயிறும், அதன் கீழ் நுனியை அலங்கரித்த வட்டமும் அவளைத் திகைக்க வைத்தன.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4TiDcriB3RhmJm-bw7QIzUuIekTyFwqw0cR2KYkqtGkeSCmg8HANXfsl1fXCNW36EgpXujB90Xq5r-9EZcnfizrmEIFbaJ8UBpw97NPcJLfBaqYN0EdrOcn6v6uR-SHrFP-Sq45STQ48/s1600/sheep.jpg

நன்றி - ஜி நாகராஜன், சிறுகதைகள்,  

Thursday, July 05, 2012

ஜி. நாகராஜன் - ன் கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா - சிறுகதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHnP1xgejDRG_le9w4H49RMRp6G0QmTe1l4saOrd9U2eyaTpZ0H7d3pUMwXoG9UgohLHb9vPAhCaKrc4yRnzuBLPqUHIC3FTi6xGzqHR9U8Tf_Da4yrZkLhc8wWYfbafk06UM36SOtq5Km/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF+%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%25811.JPG 

எனக்கு முதலில் பயமாய் இருந்தது; ஹாஸ்டலில் யாருமில்லை. ராணியும் ஜேனும் `ஷாப்பிங்’ சென்றிருந்தார்கள். எங்கள் மூவரைத் தவிர மற்றவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். நானும் கிளம்புவதாகத் தான் இருந்தேன். ஆனால் ராணிதான் இருவரும் ஒரு சினிமாப் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று வற்புறுத்திக்கொண்டிருந்தாள். மேலும் அந்தக் காதர் நான் குளிக்கப் போகும்போது, `பாப்பா, ஒரு நா இருந்திட்டுப் போயேன்’ என்றான். காதரை உனக்குத் தெரியுமே. மொட்டை மண்டை; பொக்கை வாய். அவனை நோட்டுப் புத்தகம், காகிதம், ஏதாவது வாங்கிக் கொண்டு வரச் சொல்லும்போது சமயங்களில் அவன் கை என்மீது பட்டுவிடும். அப்போது எனக்கு ஒரு மாதிரி இருக்கும். அவன் முகத்திலும் கள்ளத்தனம் தெரியும். ஆடவரே இல்லாத இடத்தில் அவன் ஒரே ஆடவனாக இருந்ததால் இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன்.


நான் என் அறையில் தனியே இருந்தேன். கொஞ்சம் பயம். இருந்தாலும் காதர் வர வேண்டும்போல் இருந்தது. அவன் வராது போய்விடுவானோ என்றுகூடப் பயம். ஹாஸ்டலில் அவனுக்கென்று ஒரு அறை உண்டு. அங்கு போய் ஏÊதாவது சாக்குச் சொல்லி அவனைப் பார்த்துவிடலாம் என்றுகூட நினைத்தேன். ஹாஸ்டலில் ஸ்டோர் ரூம்தான் அவனுடைய அறை. ஓரிரு தடவை அவனைக் கூப்பிட அங்கு சென்றிருக்கிறேன். மிகவும் சிறிய அறை, எப்படித்தான் காலை நீட்டிப் படுத்துறங்குவானோ? அந்த அறைக்குள் சென்று சுருண்டு படுத்துறங்க வேண்டும் என்ற ஆசை எனக்கு சில தடவைகள் வந்ததுண்டு.


காலடிச் சத்தம் கேட்டது. வழக்கமான மெல்லிய காலடிச் சத்தம். காதர் என் அறையைக் கடந்து இரண்டு எட்டு சென்றுவிட்டுத் திரும்பி நடந்து என் அறைக்குள் நுழைந்தான். `பாப்பாவுக்கு என்ன வேணும்?’ என்று கேட்பான் என்று எதிர்பார்த்தேன். உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டான். `என்ன காதர்?’ எனக் கத்தினேன். `ஏம் பாப்பா, கத்தறே, நான் கிளவன்’ என்றான் காதர். `ஏங் கதவே அடச்சே?’ என்றேன். `ஒன்னெத் தொட்டுக் கும்பிட’ என்று சொல்லிக்கொண்டே, காதர் மண்டியிட்டு என் இரு பாதங்களையும் பற்றினான். அவன் கை பட்டது எனக்கு இதமாக இருந்தது’’.


ஹெட்கிளார்க் சுகுணா உள்ளே வரவும் நிர்மலா கடிதத்தை மேஜைமீது வைத்து அதன்மீது ஒரு டேபிள் வெய்ட்டை வைத்தாள். “பாரதி மூப்பனார் வந்திருக்காரு’’ என்றாள் சுகுணா. “மூப்பனாரா? அவர் பில் பாஸ் ஆயிடுச்சின்னு சொல்லு. நாளைக்கழிச்சு வந்து செக்கை வாங்கிட்டுப் போகட்டும்’’ என்றாள் நிர்மலா. சுகுணா அறையை விட்டகலவும் கடிதத்தைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று தோன்றவில்லை நிர்மலாவுக்கு. அவள் ஏற்கனவே ஒருமுறை படித்த கடிதம்தான். இருந்தாலும் அது அவள் கையைச் சுற்றிச் சுற்றிக்கொண்டிருந்தது. இப்போது அவள் நினைவு அவளது மாணவிக் காலத்துக்குச் சென்றது.


மூன்று மணி நேரம் மெய் மறந்து, ஒரு முக்கோணத்தின் ஒன்பது புள்ளி வட்டம் அதன் உள்வட்டத்தைத் தொட்டுச் செல்லும் என்று நிரூபித்தது; பதினேழு பக்கங்கள் கொண்ட ஒரு ஒழுங்குப் பல கோணம் வரைய ஒரு மாதம் தொடர்ந்து முயன்று தோல்வியுற்றது; ஒரு கோணத்துக்கு இரு சமவெட்டி உண்டு என்று ஏற்றுக்கொண்டாலன்றி, அதனை வரைய முறை காணமுடியாதென்று ஆசிரியரோடு வாதிட்டது; இறுதியில் ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை மெய்ப்பிக்க முயன்று `ரிசேர்ச்’ உதவித்தொகையை இழந்தது, எல்லாமே அவள் மனத்தினூடே பாய்ந்து சென்றன.


மறக்க முடியாத அப்பாவின் நினைவு! `நீ எம் மூத்த குழந்தையாப் பிறந்த பாவத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுட்டேம்மா! இன்னைக்கு நெனெவிலே இருக்கு. உன்னை ஹாஸ்டல்லே வந்து பார்க்க வந்தேனே, அப்ப எல்லாக் குழந்தைகளும் விதவிதமாய் போட்டிட்டு, கவலையே இல்லாம, வரதும் போறதுமா இருக்கும்போது, நீ ஒரு கிழிஞ்ச ரவிக்கையைப் போட்டுக்கிட்டு எங்கூட ஸ்டேஷனுக்கு வரேனியே!’ `அய்யோ, அப்பா! இப்ப இதெல்லாம் பத்தி என்ன பேச்சு? நீங்க நிம்மதியா இருங்க

. உங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம். நான் எப்பவும் சந்தோஷமாத்தான் இருந்தேன்; இப்பவும் சந்தோஷமாத்தான் இருக்கேன். சாந்தாவைப் பத்தியோ, மனோகரைப் பத்தியோ கவலைப்படாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க ரொம்ப நல்லவர். ஆனா, நீங்க வாழத் தெரியாம வாழ்ந்திட்டீங்க…’


நிர்மலா மேஜை மீது இருந்த கடிதத்தை எடுத்துத் தொடர்ந்து படிக்கலானாள்.


“நிமிர்ந்து நின்றேன். என் பாதங்களைப் பற்றியிருந்த காதரின் கரங்கள் உயர்ந்துவந்து என் கணுக்கால்களை வருடின. காதரின் கைகள் மெல்ல உயர்ந்தன. என்னால் நிற்க முடியவில்லை; அப்படியே கட்டிலில் அமர்ந்தேன். `நில்லு பாப்பா, நில்லு’ என்று கெஞ்சினான் காதர். நான் மீண்டும் நிற்கவும், பொக்கை வாய் சிரிப்போடு, மண்டியிட்டு, காதர் என்னை நோக்கிக் கொண்டிருந்தான்…’’


நிர்மலா கடிதத்தை மேஜை மீது வைத்துவிட்டு இரு கைகளையும் அகல விரித்து சோம்பல் முறித்தாள்.

வருஷம் பூரா இரண்டு சேலை; மூணு ஜம்பர். அத்தனை அவமானமும் எதுக்கு? என்னத்தை சாதித்துவிட்டேன்? அர்த்தமில்லாத தியாகம். அது தியாகமா? அதுவுமில்லியே! ஒரு வகையில் நிர்ப்பந்தம்தானே? ஒன்றையும் காணவில்லையே! ஒரு தெய்வமும் எனக்குத் தட்டுப்படவில்லையே! ஒரு உண்மையும் பிடிபடவில்லையே! இருபது வருடங்களுக்கு முன் தோன்றிய வினாக்களுக்கு இன்னும் விடைகளில்லையே? சாந்தா சந்தோஷமாக இருக்கிறாள்; மனோகர் முன்னுக்கு வந்துவிட்டான். இப்ப இருவரும் சேர்ந்து `அக்காளுக்கு உலகம் தெரியவில்லை’ என்கிறார்கள்.

நிர்மலா கடிதத்தை எடுத்துத் தொடர்ந்து படித்தாள்.

“… என் கால்கள் தடுமாறின. எனக்குப் பசுவிடத்துப் பால் உண்ணும் கன்றின் நினைவு ஏற்பட்டு, அருகில் லயித்துத் தடுமாறினேன். காதர் எழுந்து என்னை அணைக்க வேண்டும்போல் இருந்தது. நான் விழுந்து விடாதபடி அவன் கைகள் ஆதரவாக என் பின்புறத்தைப் பற்றியிருந்தன.’’


மிஸ் நிர்மலா வாசித்த கடிதம் கடந்த ஆண்டு அவளது கல்லூரியில் படித்த லைலா தற்போது ஹாஸ்டலில் தங்கிப் படித்து வரும் இந்திராவுக்கு எழுதிய கடிதம். இந்திரா கவனக்குறைவாக அதைத் தனது சினிமா சஞ்சிகைக்குள் வைத்திருந்தாள். அந்த சஞ்சிகையை எடுத்த அண்ணன் மூலம் அது இந்திராவின் தகப்பனார் டாக்டர் சந்திரசேகரன் கைக்குப் போய்விட்டது. “நான் ஒரு டாக்டர். எனவேதான் அளவுக்கு மீறிக் கலவரப்படாது, இந்தக் கடிதத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவதோடு நிறுத்திக்கொண்டு, மேலும் பல்கலைக்கழக, அரசாங்க மட்டங்களில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்’’ என்று பயமுறுத்தாது, பயமுறுத்தியிருந்தார் டாக்டர்.


`அடேயப்பா, டாக்டரின் விசால புத்தியைப் பாராட்டத்தான் வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டே, நிர்மலா காதரைப் பற்றி நினைத்தாள். கிழவனுக்கு அப்படி ஒரு ஆசை! உம். எதைப்பற்றி ஆச்சரியப்படுவது? எல்லாமே ஆச்சரியப்பட வேண்டியதுதானே! நாமாக அது இயற்கை, இது இயல்பு, அது பகுத்தறிவு, இது நடைமுறை அனுபவம் என்று கற்பனை செய்துகொள்வதால்தானே இத்தனைப் `புதுமைகளும்’, `முரண்பாடுகளும்’, `இயற்கைக்கு மாறானவையும்!’ சன்னல் வழி வந்த சூரிய ஒளியின் பக்கம் நிர்மலா திரும்பினாள். ஒளி என்ன? புரியவில்லையே! மனிதனின் கணிதக் கட்டுக்கோப்புகள் அதை அடைத்து விடுவதால் அதைப் புரிந்துகொண்டதாகிவிடுமா? விஞ்ஞானிகளை முற்றிலும் புரிந்துகொள்ள முடிகிறதா?

ஆமாம். `லாசரை’யும், `டி.வி.’யையும் படைத்துவிடுகிறார்கள். இருந்தாலும் அந்தக் காதர்! அந்தக் காதர்!! அவள் கல்லூரியில் முதலாண்டில் படித்த புத்தகம் ஒன்று இப்போது அவள் நினைவுக்கு வந்தது. அழகழகான படங்களைக் கொண்ட புத்தகம். ஐன்ஸ்டைனின் வியப்பு நிறைந்த கண்கள். நீல்ஸ்போரின் பெருமிதம். மிலிக்கனின் சாமர்த்தியம். டிப்ராலியின் அழகு… காதர் முகத்திலும் எப்படி அப்படி ஒரு ஒளி? இல்லை, வெறும் கற்பனையா? எல்லாமே நாமாக நினைத்துக் கொள்வதுதானா?


நிர்மலா மணியை அழுத்தவும் சுகுணா வந்தாள்.

“ஹாஸ்டல் வாச்மேன் காதரை வரச் சொல்லு.’’

“சரிங்க, மிஸ்.’’

மிஸ், மிஸ், மிஸ்… ஆனால், படிப்புக்குக் குறைச்சல் இல்லை. அந்தஸ்துக்குக் குறைச்சல் இல்லை. ஆமாம், அவமானத்துக்கும் குறைச்சல் இல்லை. எதுக்குமே குறைச்சல் இல்லை! ஆனால்… நிர்மலா தனது வலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்துகொள்வதுபோல், இல்லை, மார்பகத்தைத் தடவிக்கொள்வது போல், சேலையைச் சரி செய்துகொண்டாள். லேசாக ஏதோ தட்டிற்று; அவ்வளவுதான்.


காதர் வந்து நின்றான். மொட்டை மண்டை. பொக்கை வாய்.

“ஹாஸ்டலுக்கு வேறே வாச்மேன் போட்டிருக்கேன்.’’


“நல்லதுங்க’’ என்றான் காதர்.

அரை நிமிடம் இருவரும் பேசவில்லை. நிர்மலா அந்தக் கடிதத்தைப் படிப்பதாகப் பாவனை செய்தாள்.


“உனக்குத் தோட்ட வேலை தெரியுமா?’’


“தோட்ட வேலைக்குத்தானே நம்ம காலேசுக்கு வந்தேன்?’’

“அப்படியா, எனக்குத் தெரியாதே! இனிமே எம் பங்களாத் தோட்டத்தெ கவனிச்சுக்க. ரத்தினம்மா ஹாஸ்டலைப் பார்த்துக்கட்டும்.’’

“உத்தரவு அம்மா’’ என்றான் காதர். இருந்தாலும் அவன் முகத்தில் ஒரு கள்ளத்தனம் இருந்ததாகப் பட்டது, மிஸ் நிர்மலாவுக்கு.

காதர் அறையை விட்டு வெளியேறவும், நிர்மலா தனது வலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்துகொள்வது போல், இல்லை, மார்பகத்தைத் தடவிக்கொள்வது போல், சேலையைச் சரி செய்து கொண்டாள். லேசாக ஏதோ தட்டிற்று; அவ்வளவுதான்.


நன்றி - ஜி நாகராஜன், சிறுகதைகள்,