.
செவ்வாய் கிரகத்திலும் வாழலாம் என்று நிரூபிக்கப்பட்டு, இப்போது அங்கு வாழ அட்வான்ஸ் புக்கிங் செய்யும் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது
சிறு வயதிலிருந்தே எலைஸியம் எனப்படும் இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்பதுதான் கதாநாயகன் மேட் டேமனின் லட்சியம். இதற்காக ஒரு பெட்டிதீஃபாக மாறி காசுகளைச் சூறையாடுகிறார். ஹீரோவின் சிறு வயது ஜிகுரி தோஸ்த் தான் நாயகி அலைஸ் பிராகா.
எலைஸியம் பணம் படைத்தவர்களின் உலகமாய் மாற, இச்செல்வந்தர்கள் வாழ்க்கை நடத்த, சாதாரண மனிதர்கள் அமெரிக்காவில் அடிமைகள் போல் ட்ரீட் செய்யப்படுகின்றனர். அதில் ஒருவராய் ஹீரோ, லாஸ் ஏஞ்ஜல்சில் நடக்கும் ஒரு பாதி கதைக்களம். ரோபோட் உற்பத்தி செய்யும் இடத்தில் நாயகன் வேலை பார்க்கிறார். ஒரு முறை ஹீரோ மைனிங் அறையில் மாட்டிக் கொண்டு, அதிகமான ரேடியேஷனால் தாக்கப்பட்டு, கடும் பாதிப்பை அடைகிறார். ரேடியேஷன் தாக்குதலால் வெகு சில நாட்களுக்குள் உயிர் இழக்கும் சூழல் நாயகனுக்கு. அதற்குள் எப்படியாவது எலைஸியம் போய் தன் நோயை தீர்த்து உயிரை காத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் நாயகன் தவிக்கிறார்.
இதன் பின் மேட் டேமன் எலைஸியம் சென்றாரா உயிர் பிழைத்தாரா என்பது க்ளைமாக்ஸ்.
முதலில் ஏதோ நடக்கும் ஏதோ நடக்கும் என்று தோன்ற வைக்கும் திரைக்கதை, கடைசி வரை ஏதோ வித்தியாசமாக நடக்கும் என நம்ப வைத்தே கடுக்காய் கொடுக்கிறது. க்ளைமாக்ஸ் வந்தவுடன் என்னது சிவாஜி செத்துட்டாரா? என்ற அனுபவத்தையே தருகின்றது க்ளைமாக்ஸ்.
கதையில் ஹீரோ போய் எலைஸியம் ரீச் பண்ணுவாரா? இது ஒரு முதல் நாட், அப்படி சேருவார் என்றால், அது எப்படி சாத்தியம்? இது தான் கதையின் மையமா என்றால் அதுவும் பெரிசா சொல்லப்படலை. ஒரு பக்கம் ஜோடி பாஸ்டர் எலைஸியமின் பிரஸிடண்ட் ஆக பல சகுனி வேலைகள் செய்கிறார். சரி இது அரசியல் நையாண்டியாக இருக்குமோ!! என்று நினைத்தால் அதுவும் நடக்கலை. கடைசியில் ஏதோ பழைய படங்களில் டைரிக்கு சண்டை போடுவது போல் ஒரு சிப்பிற்கு சண்டை போட்டு, வாரி வாரி விழுகிறது திரைக்கதை.
படத்தை பொருத்தவரை நிறைய இடங்கள் துகள்களாக ரசிக்க வைக்கிறது. இயந்திர உலகத்திலே மெஷின்கள் நம்மை ஆளப்போகும் காலம் வெகு தூரம் இல்லை என்பதை சொல்லாமல் உணர்த்தும் காட்சிகள். வெளிநாடு செல்ல இசைவு விசா இன்றி வாழும் மனிதர்களைப் போல் வேற்றுலகம் செல்ல விசா இன்றி வாழும் மனிதர்களை காட்டியிருப்பது அழகிய கற்பனை.
என்னதான் இப்படி துகள்களாக சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும், மைய அஸ்திவாரம் ஆட்டம் கண்டிட கடைசியில் அதிருப்தியே மிச்சமாகிறது.
ஸ்டீபன் ஸ்பீல்பர்க் படத்தில் காணப்பட்ட பிரம்மாண்டம் இல்லை, சரி! க்ருஸ்டோபர் நோலான் படத்திலிருப்பது போன்ற அட்டகாசமான கதைக்களம்.. அதுவும் இல்லை. சரி!!! ட்ரான்ஸ்பார்மர்ஸ் இயக்குனர் ‘மைக்கேல் பே’ படத்தில் காணப்படுகின்ற மசாலா பாக்டர் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
வில் ஸ்மித் ‘ஐ ரோபோட்’ இருபது வருடங்களுக்கு முன் வெளியான ஜேம்ஸ் கேமரூனின் ‘டெர்மினேட்டர்’ கொடுத்த திருப்தியில் கால் சதவீதம் கூட எலீஸியத்தில் கிடைக்கவில்லை.
மொத்தத்தில் எலைஸியம் – இது சொர்க்கத்தின் வாசற்படியும் அல்ல, நரகத்தின் படுகுழியும் அல்ல, திரிசங்கு சொர்க்கம்.
- நடிகர் : மேட் டேமன்
- நடிகை : அலைஸ் பிராகா
- இயக்குனர் :நெய்ல் புளோம்காம்ப்
நன்றி : தினமலர்