பெங்களூருவில் புது சசிகலா!
16 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டுகொண்டே போகும்
சொத்துக் குவிப்பு வழக்கு, புதிய நீதிபதி பாலகிருஷ்ணாவின் அதிரடிப்
பாய்ச்சலால் மீண்டும் சூடு பிடித்து விட்டது.
பெங்களூரு கோர்ட்டில் கடந்த ஆண்டு ஆஜராகி 1,384 கேள்விகளுக்குப் பதில்
அளித்தார் ஜெயலலிதா. அவரைத் தொடர்ந்து இரண்டாவது குற்றவாளியான சசிகலாவிடம்
கேள்வி கேட்டு முடிப்பதற்குள் நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் ஓய்வு,
அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யாவின் திடீர்
போன்ற காட்சிகள் அரங்கேறின. புதிய நீதிபதி நியமனம் நடந்தது. ஏழு
மாதங்களுக்கும் மேலாகத் தாமதித்து வந்த சசிகலா, இப்போது பெங்களூரு
கோர்ட்டில் 'பவ்யமாக’ பதில் சொல்கிறார். கடந்த புதன் மற்றும்
வியாழக்கிழமைகளில் அரங்கேறிய காட்சிகள் இங்கே...
பெங்களூரு குளிர்
பிடிச்சிருக்கு!
18-ம் தேதி இரவே பெங்களூரு வந்து இறங்கினார் சசிகலா. அவருக்கு முன்பே
பெங்களூரு வந்த வக்கீல் படை கேபிடல் ஹோட்டலில் காத்திருந்தனர். கடந்த முறை,
தனியாக வந்த சசிகலா இந்த முறை சுரேஷ் என்பவரை உதவிக்கு அழைத்து
வந்திருந்தார். சுதாகரனும் இளவரசியும் ஏனோ வரவில்லை. பெங்களூருவில் நிலவும்
அதிகப்படியான குளிரை ரசித்துக்கொண்டே, 'பெங்களூரு குளிர் நல்லா இருக்
குல்ல’ என அதிகாலையிலே உற்சாகமாக வாக்கிங் போனாராம்.
அதன்பிறகு, தன்னுடைய
வக்கீல் மணி சங்கரிடமும் செந்திலிடமும் ஸ்பெஷல் கோச்சிங் எடுத்து விட்டு,
சரியாக 10.35 மணிக்கு தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வெள்ளைக் காரில் உற்சாகமாக
வந்து இறங்கினார். கடந்த முறை வாக்குமூலம் அளிக்க பெங்களூரு வந்தபோது,
ஜெயலலிதாவுடன் பிரிவு என்பதால் சுணக்கமாகக் காணப்பட்ட சசி, இந்த முறை வைரக்
கம்மல், புது டிசைன் நெக்லஸ், சிவப்பு ரத்தினக் கல் மோதிரம் எனப் புதுப்
பொலிவோடு வந்திருந்தார். சசிகலாவை வரவேற்பதற்காக ஏராளமான வக்கீல்களும் கரை
வேட்டி கட்டாத ரத்தத்தின் ரத்தங்களும் வந்திருந்தனர்.
நீதிபதியின் திடீர்
கேள்வி!
கோர்ட் ஹாலுக்குள் நுழைந்த சசிகலா சிறிது நேரம் வக்கீல்களிடம்
பேசிவிட்டு, சரியாக காலை 11 மணிக்கு குற்றவாளிக் கூண்டில் அமர்ந்து
கொண்டார். நீதிபதி 11.20-க்கு வந்ததும், 'ஏன் அங்கு அமர்ந்திருக்கிறீர்கள்.
முன்னாடி வாங்க’ என அழைத்ததும், நீதிபதியின் முன்பு போடப்பட்ட
நாற்காலியில் வந்து அமர்ந்தார்.
வழக்கமாக தன் னோடு கொண்டுவரும் கைக்குட்டை,
சின்ன கைப்பை, கறுப்புக் கண்ணாடி, பிளாஸ்க், ஒரு ஃபைல், அதில் கட்டாக
வெள்ளைத் தாள்களுடன் ஆஜராகி இருந்தார். இதுவரை 632 கேள்விகளுக்குப் பதில்
சொல்லி இருந்த சசிகலாவிடம், 'எவ்வளவு படித்தி ருக்கிறீர்கள்?’ என நீதிபதி
திடீரென ஒரு கேள்வி கேட்கவே ஷாக்காகி, பதில் சொல்ல முடியாமல் திணறினார்.
உடனே அவரது வக்கீல் மணிசங்கர், 'எஸ்.எஸ்.எல்.சி.’ என்று
எடுத்துக்கொடுத்ததும் சசிகலாவும் அப்படியே பதில் சொன்னார்.
'அப்போ
உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது...
ஓகே.?’ என்றபடி சந்தேகக் கண்ணோடு சசிகலாவைப் பார்த்துவிட்டு,
மொழிபெயர்ப்பாளர் ஹாரீஸை அழைத்தார் நீதிபதி.
மீண்டும் பிட்!
கோர்ட்டுக்கு உற்சாகமாக வந்த
சசிகலா, நீதிபதி கேள்விகளைக் கேட்க ஆரம்பித்ததும் செம அப்செட். முதல்நாள்
முழுக்கவே ஜெ.ஜெ. பிரின்டர்ஸ், ஜெயா பப்ளிகேஷன்ஸ், ஜெயா ஃபார்ம் ஹவுஸ்,
நமது எம்.ஜி.ஆர்., சசி என்டர்பிரைசஸ், வினோத் வீடியோ விஷன், ஆஞ்சநேயா
என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான கேள்விகள்
என்பதால், கேள்வியை ஒரு முறைக்கு இரண்டு முறை தெளிவாகக் கேட்ட பின்னரே
பதில் அளித்தார்.
பெரும்பாலான கேள்விகளுக்கு 'தெரியாது’ என்றும் 'உண்மை’
என்றும் பதில் சொன்ன சசிகலா, சில கேள்விகளுக்கு மட்டும் தன்னுடைய ஃபைலில்
இருந்த வெள்ளைத் தாளின் ஒரு புறத்தில் மெலிதாக பென்சிலில் எழுதிக்கொண்டு
வந்திருந்ததை லாகவமாகப் பார்த்துப் பதில் சொன்னார் 'சசிகலா காப்பி
அடிக்கிறார்’ என்று சொல்லி கோர்ட்டையே கலக்கிய அரசுத் தரப்பு மூத்த வக்கீல்
ஆச்சார்யா அன்று இல்லை.
'சுதாகரன்... இளவரசியா?
ஐ டோன்ட் நோ!’
சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்றாவது குற்றவாளியான சுதாகரன்,
நான்காவது குற்றவாளியான இளவரசி தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு கண்களை
மூடிக்கொண்டு, 'தெரியாது’ என்ற பதிலையே சொன்னார்.
ஆனாலும் நீதிபதி விடாமல்
சுதாகரன், இளவரசி தொடர்பான கேள்விகளையே 20-க்கும் மேல் கேட்க, 'ஜெயா
பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ், நெக்ஸ்ட் பிராப்பர்ட்டிஸ், ஆஞ்சநேயா
பிரின்டர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் சுதாகரனும் இளவரசியும்
பங்குதாரர்கள். ஆனால் அவர்கள் செக் கொடுத்தது, டி.டி. கொடுத்தது, பணப்
பரிவர்த்தனைகளில் ஈடுபட்டது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது’ என்றார்
சசிகலா.
இதைக் கேட்ட கன்னட மீடியாவினர், 'ஜெயலலிதாவிடம் நீதிபதி
மல்லிகார்ஜுனைய்யா கேள்வி கேட்டபோது, 'எனக்குத் தெரியாது. நான் சைலன்ட்
பார்ட்னர்
மட்டும்தான். சசிகலாவுக்குத்தான்
எல்லாம் தெரியும்’ என்று சொல்லித் தப்பித்தார். இவரோ, 'எனக்கு எதுவும்
தெரியாது’ என்று சொல்கிறாரே’ என்று சந்தேகம் கிளப்பினர்.
மேலிடத்து உத்தரவு?
மதிய இடைவேளைக்குப் பிறகு, கேள்விகள் இன்னும் வேகமெடுத்தது. மதியம் 3
மணிக்குப் பிறகு ஜெயலலிதா சம்பந்தப்பட்ட கேள்விகளே கேட்கப்பட்டன. ஆனால்,
அத்தனை கேள்விகளுக்கும் 'எனக்குத் தெரியாது’ என்ற பதிலை மட்டுமே மீண்டும்
மீண்டும் சொன்னார் சசிகலா.
ஒரு சில கேள்விகளுக்கு மட்டும், 'முதல்வர்
ஜெயலலிதாவும் நானும் பல நிறுவனங்களுக்குப் பங்குதாரர்களாக இருந்ததால்,
எங்கள் சொந்த வங்கிக் கணக்கு மட்டுமின்றி, நிறுவனங்களின் வங்கிக்
கணக்குகளிலும் வியாபாரத்துக்குத் தேவைப்படும் பணம் அடிக்கடி பரிமாற்றம்
செய்யப்பட்டது. ஆனால், அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கு குறித்த எந்த
விவரமும் எனக்குத் தெரியாது’ என்று தெளிவாகச் சொன்னார்.
அடுத்து நீதிபதி,
'நமது எம்ஜிஆர் நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து உங்களுடைய தனிப்பட்ட
வங்கிக் கணக்குக்குப் பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறதே?’ என்று கேட்டதும்,
'அ.இ.அ.தி.மு.க. கட்சியின் பொதுச் செயலாளரின் அறிக்கைகள், செய்திகள்
தொண்டர்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக 'நமது எம்ஜிஆர்’ பத்திரிகை
1990-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது ஜெயா பப்ளிகேஷனின் துணை நிறுவனம். 'நமது
எம்ஜிஆர்’ நாளிதழைப் பெற தொண்டர்களிடம் 12 ஆயிரம் ரூபாய் சந்தாவாகப்
பெறப்பட்டு, அதை வங்கியில் டெபாசிட் செய்தோம். மேலும் ஜெயா பப்ளிகேஷன், சசி
என்டர்பிரைசஸ் போன்ற நிறுவனங்களில் கிடைத்த லாபமும் 'நமது எம்ஜிஆர்’
நாளிதழுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது’ என்றார்.
முதல் நாள் முடிவில் சசி
கலாவிடம் 110 கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றார் நீதிபதி பாலகிருஷ்ணா.
அசமந்த வியாழன்!
இரண்டாவது நாளும் முழுக்க முழுக்க ஜெயா பப்ளிகேஷன், ஜெயா பிரிண்டர்ஸ்,
சசி என்டர்பிரைசஸ், நமது எம்ஜிஆர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் நடந்த
பணப் பரிவர்த்தனைகள் பற்றிய கேள்விகளே கேட்கப்பட்டன. தயாரித்து வந்திருந்த
'மறைப்பு’ குறிப்புகளைப் பார்த்து அலட்டிக் கொள்ளாமலே பதில் அளித்தார்
சசிகலா.
நீதிபதி பாலகிருஷ்ணா 1993 - 94 காலகட்டத்தில் நடந்த அத்தனை வங்கிக்
கணக்குகளையும் சல்லடை போட்டு இரண்டரை பக்க அளவுக்குக் கேள்விகள்
தயாரித்திருந்தார். ஆனால் சசிகலா கொஞ்சமும் மெனக்கெடாமல், 'தெரி யாது’,
'உண்மை’, 'உண்மையாக இருக்கலாம்’ என சர்வ சாதாரணமாகப் பதில் அளித்தார்.
நீதிபதியின் நீண்ட கேள்விகளை எல்லாம் மொழிபெயர்ப்பாளர் ஹாரீஸ் தமிழில்
சசிகலாவிடம் தெளிவாகச் சொல்லி, அதை அவர் சின்சியராகக் குறிப்பெடுத்துக்
கொண்டார். ஆனால், ஒற்றை வார்த்தையில் கேசுவலாகப் பதில் சொன்னதுதான்
பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஒரு கட்டத்தில் சசிகலாவின் மனநிலையை
முழுதாகப் புரிந்து கொண்ட நீதிபதி, 'என்ன.. இந்த கேள்விக்கும் பதில்,
தெரியாதுதானே?’ என்று சொல்லி சசிகலாவுக்கு ஷாக் கொடுத்தார்.
இரண்டாவது நாள் முழுக்க ஆமை வேகத்தில் பயணித்ததால் 83 கேள்விகள் மட்டுமே
கேட்கப்பட்டன. ஆக மொத்தம் வியாழன் வரை சசிகலாவிடம் இருந்து 825
கேள்விகளுக்கான பதில்கள் பெறப்பட்டுள்ளன. இன்னும் 500-க்கும் மேற்பட்ட
கேள்விகள் இருப்பதால் வெள்ளியன்றும் விசாரணை தொடர்கிறது.
பகல் முழுவதும் கோர்ட்டில் இருக்கும் சசிகலா, மாலை நேரங்களில் வெளியே
கிளம்பி விடுகிறார். கலர் கலராக சுடிதார், தொப்பி அணிந்து கொண்டு
எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, கருடா மால் ஆகிய இடங்களுக்கு ஹாயாக ஷாப்பிங்
போகிறார். அதனால், கோர்ட்டுக்கு வரும்போது விதவிதமான வாட்சுகள்,
வளையல்கள், மோதிரங்கள் பளபளக்கின்றன.
இப்படியே போனால் வழக்கு இன்னும் மூன்றே மாதங்களில் முடிந்துவிடும் என்ற
குரல் கோர்ட் வட்டாரத்தில் பலமாகக் கேட்கிறது. வேறு முட்டுக்கட்டை வராமல்
இருக்குமா?
- இரா.வினோத்
அட்டை மற்றும் படங்கள்: ந.வசந்தகுமார்
நன்றி - ஜூ வி
பெங்களூரு: ""மாதம், ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி, தமிழக முதல்வர் ஜெயலலிதா
சொத்து குவித்ததாக, சுப்பிரமணிய சாமி, பொய்யான புகார் கொடுத்து, அரசியல்
காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு தொடர்ந்தார். கொடநாடு டீ எஸ்டேட்
அபிவிருத்திக்கு அதிக பணம் செலவழித்ததாக, போலீசார் தவறான தகவலை
கூறியுள்ளனர்,'' என, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில்,
சசிகலா பதிலளித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு
வழக்கில், கடந்த, 19ம் தேதியிலிருந்து, சசிகலாவிடம் கேள்வி கேட்கும் பணி
துவங்கியது. 19ம் தேதி, 110, நேற்று முன்தினம், 82, நேற்று, 151
கேள்விகளுக்கும் சசிகலா பதிலளித்தார்.நேற்று முற்பகல், 11:05 மணிக்கு,
நீதிபதி பாலகிருஷ்ணா வந்தவுடன், கேள்வி கேட்கும் பணி துவங்கியது.
நீதிபதி:
கொடநாடு டீ எஸ்டேட்டுக்கு, மின் சாதன பொருட்களை, 5.83 லட்ச ரூபாய்க்கு
வாங்கினீர்களா?
சசிகலா: கொடநாடு டீ எஸ்டேட் அபிவிருத்திக்காக,
2.48 லட்சம் ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. போலீசார் மிகைபடுத்தி
உள்ளனர்.
நீதிபதி: பையனூரில், 31.34 லட்ச ரூபாய் வீடு வாங்கினீர்களா?
சசிகலா:
கட்டடமாகத்தான் வாங்கப்பட்டது. மின் சாதனம் பொருத்தவில்லை. பின்னர்,
சினிமா துறையை சேர்ந்தவருக்கு விற்கப்பட்டது.
நீதிபதி: ஈக்காட்டுதாங்கல்லில்,
நமது எம்.ஜி.ஆர்., ஆஞ்சநேயா பிரின்டர்சுக்கு, 47 லட்சம் ரூபாய்க்கு மின்
சாதனம் வாங்கினீர்களா?
சசிகலா: ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், வாடகைக்கு
தான் இருந்தனர். ஆனால், நிறுவனத்தின் சொத்து என்று போலீசார் இணைத்துள்ளனர்.
மின் சாதனம் வாங்கப்பட்டது. சோதனை குறித்து எனக்கோ, கட்டட உரிமையாருக்கோ
நோட்டீஸ் அளிக்கப்படவில்லை.
\
நீதிபதி: போயஸ் கார்டனில், 1.5 கோடி
ரூபாய் மதிப்புள்ள, மின் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?
சசிகலா: எனக்கு
தெரியாது.
நீதிபதி: 1991-92ல், 2.62 லட்ச ரூபாய்க்கு, "ஹாலிடே
ஸ்பாட்' வாங்கப்பட்டதா?
சசிகலா: இச்சொத்தை, சசி எண்டர்பிரைசஸ்
வாங்கியது. 1990 ஏப்ரல், 23 ல், 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ்
கொடுக்கப்பட்டது; மீதி தொகையும் செலுத்தப்பட்டது. இந்நிறுவனத்தில் பங்கு
தாரராக மட்டுமே இருந்தேன். மானேஜிங் டைரக்டரல்ல.
பின்னர், மதியம்,
3:00 மணிக்கு நீதிமன்றம் கூடியவுடன், விசாரணை தொடர்ந்தது.
நீதிபதி: வருமான
வரி சரியாக செலுத்தினீர்களா? மார்பிள் மார்வல்ஸ் நிறுவனத்துக்கு வரி
செலுத்தாதது ஏன்?
சசிகலா: ஆம். மார்பிள் நிறுவனத்தில்
வருமானமில்லை.
நீதிபதி: ஜெயலலிதா, மாதம் ஒரு ரூபாய் சம்பளம்
பெறுவதாக கூறி, ஏராளமான சொத்துகள் சேர்த்துள்ளார் என்று, பார்லிமென்டில்
புகார் செய்த சுப்பிரமணிய சாமி, இங்கு வழக்கு தொடர்ந்துள்ளாரே.
சசிகலா:
பொய்யான புகாருடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி:
1995-96ல், உங்கள் நிறுவனங்கள், 36 போயஸ் கார்டன் என்ற முகவரியில்
அலுவலகமாக செயல்பட்டதா?
சசிகலா: 36, போயஸ் கார்டனில், ஒரு பகுதி
வீடாகவும், மற்றொரு பகுதி, அலுவலகமாகவும் செயல்பட்டது.
நீதிபதி:
ஜெயலலிதா வீட்டில், நீங்களும், சுதாகரனும் தங்கியிருந்தீர்களா?
சசிகலா:
ஆமாம்.
நீதிபதி: நாதள்ளா தங்க நகை கடையில், 3 லட்ச
ரூபாய்க்கு செக் கொடுத்து, 47 காரட் வைர நகைகள் வாங்கினீர்களா?
சசிகலா:
17 காரட் நகை தான் வாங்கினேன்.
நீதிபதி: 1996ல், ஜெயலலிதா,
சசிகலா, உங்கள் உறவினர்களின் பெயரில், வங்கி டாக்குமெண்டுகளை, போலீஸ்
அதிகாரி லத்திகா கைப்பற்றி விசாரணை நடத்தினாரா?
சசிகலா: சுப்பிரமணிய
சாமி கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டது. வாக்குமூலம் மட்டும்
வாங்கினர். அதன் பின், விசாரணை நடக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
இன்று
மீண்டும் விசாரணை தொடர்கிறது. இன்றுடன் கேள்விகள் முடிவடையும் என்று
நீதிபதி பாலகிருஷ்ணா அறிவித்தார்.
பெங்களூரு:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில்,
மீதமுள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக, சசிகலா, நேற்று நீதிமன்றத்தில்
ஆஜரானார். 110
கேள்விகளுக்கு பதிலளித்தார்; இன்றும் விசாரணை
தொடருகிறது."தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில்,
டிச., 19ம் தேதி முதல், சசிகலாவிடம் கேள்வி கேட்கும் பணி துவங்கும்' என்று
சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா அறிவித்திருந்தார்.இதுவரை,
சசிகலாவிடம், 632 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 633 கேள்விகளுக்கு
பதிலளிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில், நீதிபதி உத்தரவுபடி,
கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக, சசிகலா நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஏழு மாதங்களுக்கு பின், நீதிபதியின் கேள்விகளுக்கு, சசிகலா
பதிலளித்தார்.நேற்றைய விசாரணையில், அரசு தரப்பில் சந்தேஷ் சவுட்டா,
முதல்வர் ஜெயலலிதா வக்கீல் கந்தசாமி, சசிகலா வக்கீல் மணிசங்கர், சுதாகரன்
வக்கீல் மூர்த்தி, இளவரசி வக்கீல் அசோகன் மற்றும் வக்கீல் பரணி குமார்
உட்பட, பலர் ஆஜராகினர்.
முற்பகல், 11:20 மணிக்கு, நீதிபதி
பாலகிருஷ்ணா
வருகை தந்தார். கேள்விகளுக்கு பதிலளிக்க வசதியாக, தன் முன், நாற்காலியில்
அமரும்படி சசிகலாவிடம் கூறினார்.நீதிபதி கேட்ட கேள்வியும், அதற்கு சசிகலா
அளித்த பதிலும் வருமாறு:நீதிபதி: கல்வி தகுதி என்ன?சசிகலா: பத்தாம்
வகுப்பு.நீதிபதி: ஆங்கிலம் தெரியுமா?சசிகலா: சரியாக தெரியாது.இதேபோன்று பல
கேள்விகளுக்கு பதிலளித்தார்.சுதாகரனின் வங்கி பரிமாற்றம் பற்றிய
கேள்விகளுக்கு, "தெரியாது' என்றே பதிலளித்தார்.
இது போன்று, இளவரசி
சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கும், "தெரியாது' என்று பதிலளித்தார்.மதியம்,
3:00 மணியிலிருந்து, மாலை, 5:00 மணி வரை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு,
"ஆமாம், தெரியாது' என்று பதிலளித்தார்.கேள்வி கேட்பது முடிவடையாததால்,
"வழக்கு விசாரணை இன்று காலை, 11:00 மணிக்கு துவங்கும்' என்று, நீதிபதி
பாலகிருஷ்ணா அறிவித்தார்.முதன் முறையாக கேள்வி கேட்கும் பணிசிறப்பு
நீதிமன்ற நீதிபதியாக பாலகிருஷ்ணா பொறுப்பேற்ற பின், சொத்து குவிப்பு
வழக்கில், முதன் முறையாக கேள்விகள் கேட்கும் பணியை துவக்கியுள்ளார்.
சசிகலா,
நேற்று காலை, 11:20 மணியிலிருந்து மதியம், 1:45 மணி வரை, 82
கேள்விகளுக்கும், மதியம், 3:00 மணியிலிருந்து, மாலை, 5:00 மணி வரை, 28
கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அவர் பதிலளிக்க வேண்டிய, 633 கேள்விகளில்
நேற்று, 110 கேள்விகளுக்கு பதிலளித்தார். இன்னமும், 523 கேள்விகள்
மீதமுள்ளன.நேற்றைய விசாரணை முடிந்ததும், சசிகலா பெங்களூரிலேயே தங்கினார்.
பெங்களூரு: ""எனக்கு சொந்தமான, "வினோத் வீடியோ விஷன்' மூலம், அ.தி.மு.க.,
கட்சி நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகளின் மூலம், பல லட்சம் ரூபாய்
வருமானம் கிடைத்தது,'' என்று சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா
பதிலளித்தார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில்,
சசிகலாவிடம், கடந்த, 19ம் தேதியிலிருந்து கேள்வி கேட்கும் பணி துவங்கியது.
நேற்று முன்தினம், 110 கேள்விகளுக்கு சசிகலா பதிலளித்தார்.நேற்று முற்பகல்,
11:00 மணிக்கு, நீதிபதி பாலகிருஷ்ணா வருகை தந்தவுடன் கேள்விகள் கேட்க
துவங்கினார்.
நீதிபதி கேட்ட கேள்வியும், சசிகலா அளித்த பதிலும்:
நீதிபதி:
பேக்ஸ் யூனிவர்சலுக்கு, லட்சக்கணக்கில் பணம் பரிமாற்றம்
செய்யப்பட்டுள்ளதே.
சசிகலா: என் சார்பு நிறுவனம். வியாபார நிமித்தமாக
செய்யப்பட்டுள்ளது.நீதிபதி: வங்கியில் கணக்கு தொடர, 36, போயஸ் கார்டன்,
சென்னை முகவரியை கொடுத்துள்ளீர்கள். நீங்கள் அதில் வசிக்கிறீர்களா?
சசிகலா:
வங்கியில் கணக்கு துவங்கும் போது, அந்த முகவரியில் இருந்தேன்.
நீதிபதி: சசி
எண்டர்பிரைசஸ் நிறுவனத்திலிருந்து, பல லட்சம் ரூபாய் ஜெயலலிதா, சுதாகரன்
கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதே.
சசிகலா: சசி எண்டர்பிரைசஸில், அவர்கள்
இருவரும் பங்குதாரர்கள்.நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன், நமது எம்.ஜி.ஆர்.,
நிறுவனங்களிலிருந்து பணம் பரிமாற்றம் நடந்துள்ளது.
உங்களுக்கும், அந்த
நிறுவனத்துக்கும் என்ன தொடர்பு.
சசிகலா: நிறுவனங்களில் பங்குதாரர்.
நீதிபதி:
உங்களது வங்கி கணக்கிற்கு, ராம் விஜயன் என்பவர், பல லட்சம் ரூபாயை டெபாசிட்
செய்துள்ளாரே.
சசிகலா: கடந்த, 1996ல் வினோத் வீடியோ விஷனை, நான்
துவக்கினேன். தமிழகம் முழுவதும், அ.தி.மு.க., கட்சி நிகழ்ச்சிகளை படம்
பிடிப்பது உட்பட பல தனியார் நிகழ்ச்சிகளின் மூலம் கிடைக்கும் வருவாயை,
நிறுவன பொறுப்பாளரான ராம் விஜயன், என் வங்கி கணக்கில் செலுத்துவார். இது
மட்டுமின்றி, எனக்கு சொந்தமான, இரும்பு மாடி படிகள், கேட் கிரில்கள்,
இரும்பு சேர் உட்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமும் உள்ளது.
இதில் கிடைக்கும் பணத்தையும் செலுத்துவார்.
நீதிபதி: சசி எண்டர்பிரைசஸ்,
ஜெயா எண்டர்பிரைசஸ், நமது எம்.ஜி.ஆர்., பேக்ஸ் யூனிவர்சல் ஆகிய
நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன? இதில், யார், யார்
பங்குதாரர்கள்?
சசிகலா: இவைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சார்பு நிறுவனங்கள்.
ஜெயலலிதா, நான் (சசிகலா), சுதாகரன், இளவரசி, திவாகர், தினகரன் ஆகியோர்
பங்குதாரர்கள்.நீதிபதி: சசி எண்டர்பிரைசஸிலிருந்து, சுதாகரன், இளவரசி,
ஜெயலலிதா ஆகியோரின் வங்கி கணக்கிற்கு, பல லட்சம் ரூபாய் பண பரிமாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
சசிகலா: அனைவரும் நிறுவன பங்குதாரர்கள்.
பல
கேள்விகளுக்கு, "இருக்கலாம்' என்றும், ஒரு சில கேள்விகளுக்கு, "ஞாபகமில்லை'
என்றும், ஒரு சில கேள்விகளுக்கு, எழுத்து பூர்வமாக எழுதி கொடுப்பதாகவும்
பதிலளித்தார்.விசாரணை இன்று தொடர்வதால், சசிகலா பெங்களூருவில் தங்கி
உள்ளார். இன்று, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி, கேள்விகளுக்கு பதில்
அளிக்கிறார்.
நன்றி - தினமல்ர்