கமலின் ‘விஸ்வரூப’த்தில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எனப்படும் கிரா ஃபிக்ஸ் பணியைச் செய்திருப்பவர் மது என்கிற மதுசூதனன்.
The Lord of the rings, ஸ்பைடர் மேன், Gulliver's travel என பல ஹாலிவுட் படங்களுக்கு கிராஃபிக்ஸ் செய்து, பீட்டர் ஜாக்ஸன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் போன்ற வெள்ளைக்கார இயக்குனர்களின் பாராட்டைப் பெற்ற மது, தர்மபுரி அருகே பாலக்கோட்டையைச் சேர்ந்த அக்மார்க் தமிழர். பி.எஸ்.சி. இயற்பியல் படித்துவிட்டு கம்ப்யூட்டர் துறையில் பணியிலிருந்தவர், இப்பணி பிடிக்காமல், உதறி விட்டு, விளம்பரங்களில் கிராஃபிக்ஸ் செய்து, 50 படங்கள் வரை தமிழில் முடித்துவிட்டு ஹாலிவுட்டில் நுழைந்தவர்.
அமெரிக்காவில் விஷுவல் எஃபெக்ட்ஸ் சொசைட்டியில் (VES) வழங்கப்படும் விருதுகள் ஆஸ்காருக்கு ஒரு படி மட்டும் கீழே இருப்பவையாகக் கருதப்படுகின்றன. VESல் சிறந்த கலைஞர்களுக்காக வழங்கப்படும் விருதுகளை, மதுவின் கையால் வழங்க வைத்து, மதுவை கௌரவப்படுத்தியிருக்கின்றனர் இவ்வமைப்பினர். கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் முதல்வரும் நடிகருமான அர்னால்ட், இவரின் திறமையைப் பெரிதும் பாராட்டியுள்ளார். இருப்பினும் ‘கமல்’ என்ற பள்ளியில் மட்டும்தான், தான் நிறைய கற்றுக்கொண்டேயிருப்பதாகச் சொல்கிறார் மது.
நான் கமலுடன் ஏழு படங்கள் வரை பணியாற்றியிருக்கிறேன். பணியாற்றியிருக்கிறேன் என்று சொல்வதைவிட கமலைப் பார்த்துக் கற்றுக்கொண்டேன் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். கமலுடன் சில படங்கள் வொர்க் செய்தால், பி.ஹெச்.டி. பட்டம் கிடைப்பதற்கு இணையானது. ‘விஸ்வரூபம்’ படப்பிடிப்பில் ஏதாவது ரிஸ்க் ஆன ஷாட் வைத்தால், கமல், இது MS ஷாட் என்பார். அதாவது, கிராஃபிக்ஸில் மது Suffer ஆகப்போகும் அல்லது தலைவலி தரப்போகும் ஷாட் என்பது இதன் அர்த்தம்.
கஷ்டமான விஷயத்தைக் கூட ஹாஸ்யமாகச் சொல்வதில் கமல் சமர்த்தர். உண்மையில் கமலிடம் பணியாற்றியபோது, கற்ற விஷயங்களைக் கொண்டு ஹாலிவுட்டில் பெயர் பெற்றேன். கமல் எப்போது அழைத்தாலும் பறந்து வந்துவிடுவேன். தாம் கற்றுக் கொள்வதோடு, தம்மைச் சுற்றி இருப்பவர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணுபவர் கமல். விஸ்வரூபத்தில் Time Spice எனும் கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளேன்.
க்ளைமாக்ஸ் காட்சியில் கமல் பணத்தை மேலே தூக்கி விசிறியடிக்கும் காட்சி, இந்த முறையில் கிராஃபிக்ஸ் பண்ணப்பட்டதுதான். இதை முன்பு மேட்ரிக்ஸ் முறையில் கிராஃபிக்ஸ் செய்தார்கள்!"
உங்கள் பார்வையில் கிராஃபிக்ஸ் என்பது என்ன?
கிராஃபிக்ஸ் என்பது கலையும் விஞ்ஞானமும் கல்யாணம் செய்துகொள்ளும் இடம். ஒரு படத்தில் கிராஃபிக்ஸ் என்பது தனியாகத் தெரியக்கூடாது. கதையின் ஓட்டத்திலேயே இருக்க வேண்டும்."
ஹாலிவுட் மேக்கிங்குக்கும் இந்திய மேக்கிங்குக்கும் என்ன வேறுபாடுகள்?
திட்டமிடல்தான் முக்கிய வேறுபாடு. ஹாலிவுட்டில் ஒரு படம் ஷூட்டிங்குக்கு முன்பு பிரி-புரொடக்ஷனில் இயக்குனர் என்னைப்போன்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் ஒரு மாதம் வரை டிஸ்கஸ் செய்வார். பல்வேறு விஷயங்களைப் பேசிப் பழகுவார். இயக்குனர் என்பதையும் தாண்டி, நண்பர் என்ற உணர்வு வந்துவிடுவதால், பகிர்தல் சுலபமாக இருக்கும். நான் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்த The Lord of the Rings படத்தின் இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன், என்னுடன் ஒரு மாதம் வரை பிரி-புரொடக்ஷனில் ஈடுபட்டதால், அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கமல் போன்ற ஒரு சிலர் மட்டும், இங்கே இது போன்ற விஷயங்களைச் செய்கிறார்கள்."
கிராஃபிக்ஸ் என்றாலே அதிகமான செலவு வைக்கக்கூடியதா?
இல்லை. செலவை படத்தின் திரைக்கதை மட்டுமே தீர்மானிக்கும். ஸ்கிரிப்டும், பிளானிங்கும் இருந்தால், குறைந்த பட்ஜெட் டில்கூட கிராஃபிக்ஸை செய்யமுடியும்."
இன்றைய இந்திய இயக்குனர்கள் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பத்தைச் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்களா?
இந்திய இயக்குனர்களிடம் புதிய தொழில் நுட்பத்தைத் தெரிந்துகொள்வதில் ஒருவித ஈகோ இருப்பது போன்றுதான் தோன்றுகிறது. கிரியேட்டிவிட்டியையும், தொழில்நுட்பத்தையும் எங்களைப் போன்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இயக்குனரின் கிரியேட்டிவிட்டியும், தொழில் நுட்ப அறிவும் இணையும் இடம்தான் வெற்றியின் மையப்புள்ளி. ஹாலிவுட் நிறுவனங்களின் வெற்றியின் ரகசியமும் இதுதான்."
நடிக-நடிகைகளுக்குக் கிடைக்கும் பாப்புலாரிட்டி, உங்களைப் போன்ற ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கலைஞர்களுக்குக் கிடைக்காதது வருத்தமாக உள்ளதா?
வருத்தமாகத்தான் உள்ளது. சினிமா முடிந்து கடைசியில்தான் எங்கள் பெயரைப் போடுகிறார்கள். எங்கள் பெயரைப் பார்ப்பதற்குக்கூட சீட்டில் ஆள் இருக்கமாட்டார்கள். மேற்கத்திய நாடுகளில் தற்காலத்தில் சிலருக்காவது ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கலைஞர்களின் பெயர்கள் தெரிந்திருக்கின்றன. இந்தியாவில் உங்களைப் போன்ற பத்திரிகைகளில் மட்டும் தான், எங்களை வெகுஜனங்களிடம் கொண்டு சேர்க்க முடியும்."
நன்றி - கல்கி வார இதழ் ,சீதாரவி, அமிர்தம் சூர்யா, புலவர் தருமி
நன்றி - கல்கி வார இதழ் ,சீதாரவி, அமிர்தம் சூர்யா, புலவர் தருமி