Showing posts with label CHARU NIVETHITHA. Show all posts
Showing posts with label CHARU NIVETHITHA. Show all posts

Friday, October 26, 2012

சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து


கருத்துச் சுதந்திரத்தை மிகப் பெரிதும் மதிப்பவன் நான்.  ஆனால் நம்முடைய சுதந்திரம் என்பது மற்றவர்களின் மூக்கை உடைப்பதாக இருக்கக் கூடாது.  நீங்கள் புகை பிடிப்பவராக இருக்கலாம்.  ஆனால் மற்றவரின் முன்னே புகை பிடிப்பது அவரைத் துன்புறுத்தும் செயல் அல்லவா?  இவ்வளவு சின்ன விஷயத்துக்குக் கூட இத்தனை யோசிக்கும் நாம் கருத்துத் தளத்தில் எப்படி இருக்கிறோம்?  ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னால் அதற்காக அவரை வாயில் வந்தபடியெல்லாம் ஏசுகிறார்கள். அதுவும் அவர் ஒரு பெண்ணாக இருந்தால் கதை கந்தல். மீனா கந்தசாமி விவகாரத்தில் நடந்தது நம் அனைவருக்கும் தெரியும்.  ”நடுத்தெருவில் வைத்து உன்னை ரேப் பண்ண வேண்டும்” என்றெல்லாம் சில பொறுக்கிகள் எழுதினார்கள்.   அவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.



என் மீது பகைமை கொண்டவர்கள் அதிகம் என்பதால் அதிக அளவில் பாதிக்கப்பட்டவன் நான்.  எனக்கு வரும் வசைக் கடிதங்களைப் படிப்பதிலிருந்துதான் என் நாளே துவங்குகிறது.  முதல் வார்த்தையைப் படித்ததுமே delete செய்து விடுவேன் என்றாலும் இவ்வளவு நீளமான கடிதத்தை கஷ்டப்பட்டு டைப் செய்திருக்கிறார்களே என்ற ஆச்சரியம் மட்டுமே எஞ்சும் எனக்கு.  இவர்கள் என் மீது ஏன் இத்தனை கோபம் கொண்டு அசிங்கமாகத் திட்டுகிறார்கள் என்றும் புரியாது.  என் அம்மாவிலிருந்து ஆரம்பித்து என் மனைவி, என் பிறப்புறுப்பு வரை திட்டுவார்கள்.  பரிதாப உணர்ச்சியே மிகும்.



ஆனால் ஒரு கட்டத்தில் இது வசைக் கடிதங்கள் என்பதிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வேறொரு கிரிமினல் தன்மையை அடைந்தது.  எனது நண்பர்களின் அலுவலகங்களுக்குக் கடிதம் எழுதி அவர்களைப் போட்டுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.  அவர்களுக்கு வேலை போய் நடுத்தெருவில் நிற்க வேண்டும் என்பது அந்த நலம் விரும்பிகளின் விருப்பம்.  எனது வாசகர் வட்டத்தைச் சேர்ந்த சில பெண்களின் கணவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.  (உங்கள் மனைவியை இந்த வாசகர் வட்டத்திலிருந்து விலகச் சொல்லுங்கள், அவர்களெல்லாம் கெட்டப் பசங்கள்… இன்னும் நீங்கள் யாரும் கற்பனையே செய்ய முடியாத பயங்கரங்களையெல்லாம் எழுதியிருக்கிறார்கள்).  இது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்? அந்தப் பெண்களின் குடும்ப வாழ்க்கை இதனால் பாதிக்கப்பட்டால் அதற்கு யார் காரணம்?  இதற்கெல்லாம் நான் சும்மாவே இருந்தேன்.  ஏனென்றால், என்னுடைய புகார்ப் பெட்டி, கடவுள் மட்டுமே.


சுமார் ஒரு பத்து ப்ளாகர்கள் இருப்பார்கள்.  நான் என்ன எழுதினாலும் அதை அப்படியே நகல் எடுத்து வரிக்கு வரி என்னைத் திட்டி, அவமானப்படுத்தி, கொச்சைப்படுத்தி தன் ப்ளாகில் எழுதி விடுவார்கள்.  இதற்காக அவர்கள் மணிக் கணக்கில் செலவிட்டதுதான் எனக்குப் பெரும் ஆச்சரியம்.  இப்படித் தனக்குப் பிடிக்கவே பிடிக்காத ஒரு எழுத்தாளனைப் படித்து, அவனைத் திட்டி பக்கம் பக்கமாக தன் ப்ளாகில் எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தை அவர்கள் தங்கள் குழந்தையையோ மனைவியையோ கொஞ்சுவதற்கு எடுத்துக் கொண்டிருந்தால் இப்படி ஸைக்கோவாக மாறி இருக்க மாட்டார்கள்.  இவர்களின் எழுத்தைப் படித்தால் இவர்கள் கிரிமினல்கள் மட்டும் அல்ல, ஸைக்கோக்கள் என்றே முடிவுக்கு வர வேண்டியுள்ளது.


நேர் வாழ்க்கையிலோ அல்லது அச்சு ஊடகத்திலோ இவர்கள் இப்படி ஸைக்கோ வேலைகள் செய்ய முடியாது.  உடனடியாகத் தூக்கி உள்ளே தள்ளி விடுவார்கள்.  இணைய வெளி கொடுக்கும் எல்லையில்லாத சுதந்திரமே இவர்களை இப்படி ஸைக்கோக்களாக்கி விடுகிறது.  தகுதியில்லாதவர்களிடம் சுதந்திரம் கிடைத்தால் இப்படித்தான் ஆகும்.  அதனால்தான் நான் எப்போதும் சுதந்திரம் பற்றிப் பேசும்போதெல்லாம் பொறுப்பு (responsibility) பற்றியும் பேசி வருகிறேன்.  பொறுப்பற்ற சுதந்திரம் இப்படித்தான் பொறுக்கித்தனமாக வெளிப்படும்.



ஊடக வெளி தரும் எல்லையற்ற சுதந்திரத்தினால் ஒரு அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருப்பவன் கூடத் தன்னை சே குவேராக நினைத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறான்.  இலங்கைத் தமிழர் ஆதரவு, கருணாநிதி-ஜெயலலிதா எதிர்ப்பு, தலித் ஆதரவு, பிராமண எதிர்ப்பு (பிராமண என்று எழுதக் கூடாது; பார்ப்பன என்று எழுத வேண்டும்), தமிழ்ப் பாசம் போன்ற templates-ஐ நெற்றியில் ஒட்டிக் கொண்டால் முடிந்தது கதை – நீங்கள் ஒரு சே குவேரா.  எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்; யாரையும் திட்டலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.  கேட்க நாதி இல்லை.  இல்லாவிட்டால் ஒரு பெண்ணைப் பார்த்து ஒருவன் “உன்னை நடுத்தெருவில் வைத்து ரேப் பண்ண வேண்டும்” என்று சொல்லத் துணிவானா?



இந்தப் பொறுக்கித்தனத்துக்கு எப்போது தீர்வு வரும் என்று காத்துக் கொண்டே இருந்தேன்.  இன்று சின்மயி அதை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.  நான் சின்மயி ஆதரவாளன் அல்ல.  நேற்று வரை அவர் பெயர் கூட எனக்குத் தெரியாது.  நான் தமிழ் சினிமாப் பாடல் கேட்பவன் அல்ல.  ஆனால் அவருடைய கருத்துக்களுக்காக அவரை உளவியல் சித்ரவதை செய்த பொறுக்கிகள் தண்டிக்கப் பட வேண்டும்.  சின்மயி சொன்னது என்ன?  சின்மயி என்ன அருந்ததி ராயா?  அருந்ததி ராயைப் போலவே எல்லாப் பெண்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அப்படி இல்லாவிட்டால் பொறுக்கித்தனம் செய்வதும் ஃபாஸிஸம் அல்லவா?



மேலும், இப்படி இணையத்தில் சே குவேரா வேஷம் போடுபவர்கள் நிஜ வாழ்க்கையில் ஏன் எலிக்குஞ்சாக இருக்கிறார்கள்?  போலீஸ் என்றதுமே தன் ஒரு வயதுக் குழந்தையைக் காட்டி, “என் குழந்தைக்காக என்னை மன்னித்து விடுங்கள்” என்று காலில் விழுகிறார்களே, இவர்களெல்லாம் எங்கிருந்து வருகிறார்கள்?


என்னை இந்தப் பொறுக்கிகள் எப்படியெல்லாம் டார்ச்சர் செய்கிறார்கள் தெரியுமா? நான் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு எழுதினால் அந்தப் பத்திரிகைக்கு நூறு பெயர்களில் என்னைப் பற்றி அவதூறாகக் கடிதம் எழுதுகிறார்கள்.  என் மொழிபெயர்ப்பாளர்களை அச்சுறுத்துகிறார்கள்.  என்னுடைய மொழிபெயர்ப்பாளர் ஒருவருக்கு ஒரு வாரம் முன்னால் குழந்தை பிறந்திருக்கிறது.  அந்தக் குழந்தையைத் திட்டி ட்வீட் போட்டிருக்கிறான் ஒரு பொறுக்கி.  அவனும் ஃபேஸ்புக்கில் ஒரு ஹீரோ தான்.  அவனையும் 5000 பேர் ஃபாலோ செய்கிறார்கள்.  என்னை இவர்கள் செய்யும் டார்ச்சருக்கு வேறு வேறு ஆளாக இருந்தால் தற்கொலைதான் செய்து கொள்வான். அல்லது, பைத்தியம் பிடித்திருக்கும்.   நானோ வெளியில் கூட சொல்லிக் கொள்வதில்லை.  ஏனென்றால், இவர்களின் செயல்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற ஒரே நம்பிக்கைதான் காரணம்.



இன்னொரு பெரிய வேடிக்கை என்னவென்றால், என் மீது பொறுக்கித்தனமான அவதூறுகளை எழுதிய ஒரு இணைய ”சே குவேரா”  இன்று போலீஸிடம் மாட்டிக் கொண்டவர்களை பொறுக்கிகள் என்று எழுதியிருக்கிறார்.  சக பதிவரை ஒருமுறை கொலை செய்ய முயன்றவர் இவர்.  இவர் போலீஸிடம் மாட்டவில்லை.  அதனால் இவர் சே குவேரா.  மாட்டிக் கொண்டவர்கள் மாட்டிக் கொண்டு விட்டதால் பொறுக்கிகள்.  இல்லை?


சமூகப் பொதுவெளியில் நாம் நாகரீகம் தவறினால் அடுத்த கணமே பொளேர் பொளேர் என்று தர்ம அடி கிடைக்கும்.  போலீஸ் வரும் வரையெல்லாம் பொதுமக்கள் காத்திருக்க மாட்டார்கள்.  இணைய வெளியில் போலீஸ் வரும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.


பொதுவாக, இந்தியா பெண்கள் பாதுகாப்பாக வாழக் கூடிய தேசம் அல்ல.  தினந்தோறும் வரும் கற்பழிப்புச் சம்பவங்களைப் பார்த்தாலே அது தெரியும்.  நம் தமிழ் சினிமாவும் ஆண் வர்க்கப் பொறுக்கித்தனத்தையே பிரதானப் படுத்தி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒன்றிரண்டு பேர் தான் பங்கேற்க முன்வருகிறார்கள்.  அவர்களுக்கும் இந்த நிலைதான் என்றால் இந்தச் சமூகத்தில் ஆணாதிக்கம் என்பது எவ்வளவு கொடூரமாக செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதையும் மீறி இத்தளங்களில் செயல்படும் ஒருசில பெண்கள் இந்த இணைய தாதாக்களிடம் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.  தாதாக்களுக்கு மாமூல் கொடுப்போம் இல்லையா, அது போல இந்த இணைய தாதாக்களுக்கு லைக் போடுவது, retweet போடுவது, follow செய்வது இதெல்லாம்தான் மாமூல்.  இந்த மாமூலைக் கொடுத்தால்தான் அந்தப் பெண்களைப் பற்றி இணைய தாதாக்கள் அசிங்கமாக எழுத மாட்டார்கள்.  இந்த மாமூலை சின்மயி கொடுக்கத் தவறி விட்டார்.  அதனால்தான் அவர் இரண்டு ஆண்டுகளாக அனுபவித்த சித்ரவதை.



சுதந்திரம் என்பது பொறுக்கித்தனம் இல்லை;  பொறுப்புணர்வு என்பதை இணைய தாதாக்கள் இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வெறும் தமிழ் சினிமா பார்த்து விட்டு ப்ளாகில் எழுதி, எழுத்தாளன் என்று பேர் சூட்டிக் கொள்ளும் இந்த தாதாக்கள் இப்படித்தான் சீரழிய வேண்டியிருக்கும்.  தன் குழந்தையைக் காட்டி மன்னிப்புக் கேட்டால், இந்தியாவில் இருக்கும் அத்தனை சிறைக் கைதிகளுக்கும் கூட மன்னிப்பு வழங்கி விடலாம்.  ஏனென்றால், அவர்கள் எல்லோருக்குமே குழந்தைகள் இருப்பார்கள்.  இந்தியாவில் மிகச் சுலபமாக உற்பத்தியாவது குழந்தைகள்தானே?

நன்றி - சாரு ஆன் லைன்



டிஸ்கி - 1 - சின்மயி போலீசில் புகார் - http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html



டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html





டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html

டிஸ்கி 7. -லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள்

http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html


Tuesday, July 17, 2012

சாரு நிவேதிதா. - உலகப்புகழ் பெற்ற மொழி பெயர்ப்பு சிறுகதை -உலக முடிவு வரை – தாமஸ் ஜோசப்

http://chummaaorublog.files.wordpress.com/2010/12/avanthika.jpgகதை ஆசிரியர்: சாரு நிவேதிதா.

குளிராக இருந்த ஒரு விடியற்காலையில்தான் இறந்துபோன அந்த மனிதன் வீங்கிய ஒரு சூட்கேசுடனும் அக்குளில் இடுக்கிய சில நாளிதழ்களுடனும் இங்கிலாந்திலுள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் பறந்து வந்து இறங்கினான்.கைவசம் விசா இல்லாததனால் பிரிட்டிஷ் விமானத்தள அதிகாரிகள் அவனை பாரீசிலுள்ள சார்ள்ஸ் டி கால் விமான நிலையத்துக்குத் திருப்பி அனுப்பினார்கள்.இதற்குப் பிறகு சில வருடங்கள் கடந்து போயின.அவனுடைய சூட்கேஸ் பழையதாகிப் பிய்ந்தது.எல்லா இரவுகளிலும் முதலாவது டெர்மினலிருக்கும் தளத்தில் ஒரு சிவப்பு பிளாஸ்டிக் பெஞ்சில் அவன் தூங்குகிறான்.வினோதச் செய்திகளின் பத்தியில் நீங்கள் அவனை வாசிக்கிறீர்கள்.


விமான நிலைய அலுவலர்கள் அவனை ஆல்பர்ட் என்று அழைக்கிறார்கள்.தன்னுடைய சிவப்புப் படுக்கையையும் பழகி நைந்துபோன சூட்கேசையும் புத்தகங்களையும் நேசித்துக்கொண்டு அவன் பிரிட்டனை மறக்க முயற்சி செய்கிறான்.காலையில் ஐந்தரை மணிக்கு இருட்டு விலகும் முன்பே அவன் விழித்தெழுகிறான்.

குளியலறைக்குப் போய் குளித்து சவரம் செய்து , பிரிட்டனுக்குப் பறந்து செல்வதற்கான அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பகல் முழுவதும் விமான நிலைய பெஞ்சில் அமர்ந்து படிப்பில் மூழ்கியிருக்கிறான்.அழகான விமானப் பணிப்பெண்களும் கம்பெனி ஊழியர்களும் ஓட்டல் பணியாளர்களும் கஸ்டம்ஸ் அதிகாரிகளும் அவனிடம் நலம் விசாரிக்கிறார்கள்.மிக மெதுவான சத்தத்தில் ஆல்பர்ட்டும் அவர்களை நலம் விசாரிக்கிறான். ஒரு கட்டுக்கதைபோல பத்திரிகைகளில் நீங்கள் அந்த மனிதனை வாசிக்கிறீர்கள்.



தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி ஆல்பர்ட்டுக்குப் புகார்கள் எதுவும் இல்லை.விமான நிலைய அலுவலர்கள் கொடுக்கும் வவுச்சர்களால் அவன் பட்டினியில்லாமல் சமாளித்துக்கொள்ளுகிறான்.தான் வசிக்கிற அந்த விமான நிலையம் எந்த இடத்திலிருக்கிறது என்று கூடத் தெரியாமல் கனவில் வாழ்வது போல அவன் காலம்கழித்துக்கொண்டிருந்தான்.


வரைபடத்தில் அந்த இடம் எங்கேயிருக்கிறது என்று ஆல்பர்ட் தேடிக்கொண்டிருக்கிறான்.ஆனாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாததுதான் அவனைப் பொறுத்தவரை மிகவும் துரதிருஷ்டமான உண்மையாக இருந்தது.நிலப்படத்தை விரித்துப் போட்டு பைத்தியக்காரனைப்போல புவியியலுக்குள் அலைந்து திரிந்தும் பிரிட்டன் எங்கேயிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் தத்தளிக்கிறான்.


பத்திரிகைகளில் செய்தியுடன் ஆல்பர்ட்டின் படமும் இருக்கிறது.குளியலறைக் கண்ணாடியில் அவன் சவரம் செய்கிறான்.அவன் தன்னுடைய முக சருமத்தில் வளரும் துக்கத்தின் மஞ்சள் படலத்தையும் நரைத்த ரோமங்களையும் மழிக்க முயற்சி செய்கிறான்.சவரம் செய்துகொண்டிருக்கும்போது ஒரு வெளிறிய அமைதியினூடே அந்த முகத்தில் துக்கத்தின் புன்னகையும் ஒளிருகிறது.தான் வாழ்க்கையை நேசிப்பதாக அவன் மௌனமானக்ச் சொல்லுவதுபோலத் தோன்றுகிறது.ஆல்பர்ட்டின் வழுக்கையேறிய தலையும் ஒடுங்கிய கன்ன எலும்புகளும் கருணைக்காக யாசிப்பதுபோல உங்களை உற்றுப் பார்க்கின்றன.


குளியலறைக் கண்ணாடியில் சவரம் செய்யும்போது ஆல்பர்ட்டிடம் அசைவே இருக்காது.விமான நிலையச் சிற்றுண்டிச் சாலையில் பர்கரும் பிட்சாவும் சாண்ட்விச்சும் சாப்பிடும்போது அவனுடைய கை மட்டும் உதடுகளை நோக்கி உயரும்.சிவப்பு பெஞ்சை அடையும்போது அவன் புத்தகத்தில் கண்களைப் புதைத்து உட்காரும் உருவமாக மாறுகிறான்.


ஆல்பர்ட் அணிந்திருக்கும் உடைகள் நிழிந்து தொங்கத் தொடங்கியிருக்கின்றன.என்றாவது ஒருநாள் தன்னால் பிரிட்டன்னுக்குப் போய்ச் சேரமுடியுமென்று நம்பும்போதே ஒருபோதும் அப்படி சம்பவிக்காது என்பதும் அவனுக்கு நிச்சயமாக இருந்திருக்கவேண்டும். எனினும் ஒரு நம்பிக்கையை அவன் இறுகப் பிடித்திருந்தான்.ஒரு பட்டுப் பூச்சியின் சிறகு வீச்சுப்போல ஆல்பர்ட்டின் இதயத்தில் ஒரு இளங்காற்று மிச்சமிருக்கிறது.


நீங்கள் மீண்டும் ஆல்பர்ட்டைப் பார்க்கிறீர்கள்.தன்னுடைய முகத்தில் பிரதிபலிக்கும் இதய வேதனையையும் உணர்ச்சியின்மையையும் அவன் சவரம் செய்கிறான்.அவனுடைய குழிந்த கன்ன எலும்புகளிலும் விழிப்பள்ளங்களிலும் மரணத்தின் படலங்கள் விழுந்திருக்கின்றன.அவன் மீண்டும் மீண்டும் சவரம் செய்கிறான்.காலத்தைத் தோற்கடிப்பதற்காக அவன் அதைத் தொடருகிறான்.


கடைசியான போது ஆல்பர்ட்டின் முகத்திலும் உதடுகளிலும் மின்னியிருந்த புன்னகை மறைந்தது.அவனால் சிரிக்கவோ ஏதாவது பேசவோ முடியவைல்லை. தன்னுடைய புத்தகங்களையெல்லாம் அவன் சுரண்டித்தின்றிருந்தான். பயணிகளில் சிலர் அந்த செத்துப்போன மனிதனிடம் சௌக்கியங்கள் விசாரித்து இன்னொரு உலகத்துக்குக் கடந்து சென்றார்கள்.பிரிட்டன் அப்போதும் அவன் மூளைக்குள்ளே ஒரு பழைய கனவாக மிஞ்சியிருக்கிறது….


விமான நிலையப் பணியாளர்களுக்கு ஆல்பர்ட் ஒரு தொந்தரவாக மாறியிருந்தான்.அவனுக்கு இலவசமாக வவுச்சர்கள் கொடுக்கும் வழக்கதையும் அவர்கள் மறந்துவிட்டிருந்தார்கள்.அவனுடைய இதயத்தில் இளங்காற்றும் முடிந்துபோயிருந்தது.ஆல்பர்ட்டின் வாழ்க்கை நிச்சலனமல்லாமல் வேறு என்ன ?



ஒரு விடியற்காலையில் பத்திரிகையில் குளியலறைக் கண்ணாடிக்குக் கீழே விழுந்துகிடக்கும் ஆல்பர்ட்டை நீங்கள் பார்க்கிறீர்கள்.அவனுடைய தாடையெலும்புக்கு கீழே கழுத்து நரம்புகளில் ரத்தம் கசிந்திருக்கிறது. அவனுடைய சூனியமான கண்கள் மேற் சுவர்களில் பதிந்திருக்கின்றன.வினோதச் செய்திகளின் பத்தியில் வியப்பூட்டும் ஒரு கொலையையோ திவ்வியமான ஒரு காதல் கதையையோ நீங்கள் தேடுவதாக இருக்கலாம்.விவாதிப்பதற்காக , மெய் சிலிர்ப்புடன் புன்னகை பூப்பதற்காக , சமையலறையிருந்து கண்ணீரைத் துடைத்துக்கொள்வதற்காக ஒரு கதையை நீங்கள் எப்போதும் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.


அநேக வருடங்களுக்குப் பிறகு அந்த விமான நிலையத்தின் சிவப்பு பெஞ்சில் இறந்துபோன ஆல்பர்ட்டின் களிம்பேறிய மஞ்சள் நிற முகச்சாயலில் இன்னொருவன் இடம்பிடித்திருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.அவன் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறான்.பசியிலும் தனிமையிலும் வதங்கி துக்கத்தின்மஞ்சள் முகத்துடன் அவன் பிரிட்டனைக் கனவு காண்கிறான். ஒருவேளை , உலக முடிவுவரை அங்கே அதுபோல அநேக மனிதர்களை நீங்கள் பார்க்க நேரலாம்.

வரைபடத்தில் எங்கே பிரிட்டன் என்று தேடுவதற்கிடையில் படத்தின் கோடுகள் அவர்களது தலையெழுத்துபோல சிக்கலாகின்றன.ஒருவேளை அந்த கண்டமே பூமியின் மறுபக்கம் எங்காவது இருக்கலாம் என்று அவர்கள் யோசிக்கலாம்.அல்லது அந்த இடம் வேறு ஏதாவது கிரகமாக இருக்கலாம் என்று நினைப்பார்களாக இருக்கலாம்.இந்த உலகமும் மறக்கப்பட்ட கண்டங்களின் அரசியல் தலைவர்களும் அவர்களுக்கு எதிராக மறக்கப்பட்ட நிலைப்பாட்டைக் கைக்கொள்ளுகிறார்கள்.

கடந்துபோகும் நூற்றாண்டுகளுக்கிடையில் மகா நகரங்களில் விமான நிலையங்களிலும் ரெயில்வே ஸ்டேஷன்களிலும் விசாவும் டிக்கெட்டுமில்லாமல் அவர்கள் நிரந்தரமாக வசிக்கிறார்கள் – எவருமில்லாதவர்களாக , பசியில் நடுங்கிக்கொண்டு.பிச்சையாகக் கிடைக்கிற வவுச்சர்கள் மூலம் பர்கரும் பிட்சாவும் சாண்ட்விச்சும் தின்று கொண்டு அந்த உலகக் குடிமக்கள் கனவு காண்கிறார்கள்.


ஆசிரியர் பற்றிய குறிப்பு

தாமஸ் ஜோசப்

எர்ணாகுளம் மாவட்டம் ஏலூரில் 1954 இல் பிறந்தவர். ஆலுவாய் பாக்ட் டவுன் ஷிப் பள்ளியிலும் செயிண்ட் பால் கல்லூரியிலும் கல்வி கற்றார்.மனைவி ரோசிலி , குழந்தைகள் தீப்தி மரியா , ஜெஸ்ஸே ஆகியோருடன் ஆலுவாயில் வசிக்கிறார்.

மிக வித்தியாசமான கதைகளை எழுதியிருப்பவர் தாமஸ் ஜோசப்.அதற்கான அங்கீகாரம் மிகக் குறைவாகவே பெற்றிருப்பவர். 1995 இல் கதா விருதும் , 96 இல் எஸ்.பி.டி.விருதும் பெற்றார்.உலகமுடிவுவரை என்ற இந்தக் கதை கே.ஏ.கொடுங்ஙல்லூர் விருதைப் பெற்றது.


ஓர் ஆங்கில நாளிதழில் பிழை திருந்துநராகப் பணியாற்றி வருகிறார்.

Sunday, July 08, 2012

சாரு நிவேதிதா. - நகைச்சுவை சிறுகதை - கையருகே ஆகாயம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC_BfKip_CufzCxFgHvY0zElslpq6TWGWwmYY74CwqZkHLF90SeaW9Pavbh65LkWmt-EWOTlE1DcsZiebxEzA6t2Qv8SMemUdj_kAuEmOOpuanFOequLSFVk1t562f5yEtBa7BHpMBqKc/s400/charu02+(1).JPGகதை ஆசிரியர்: சாரு நிவேதிதா.


ராமசாமியை எனக்கு முன்பின் தெரியாது. என் வாசகர் என்று எனக்கு அறிமுகமானார். ஓரிரு மாதப் பழக்கத்திற்குப் பிறகு , ” நீங்கள் பாரீஸ் பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள். உங்களோடு ஒருமுறை அங்கே போக வேண்டும்! “ என்றார்.


எனக்கும் ஒரு துணை கிடைத்தது என்ற சந்தோஷத்தில் உற்சாகமாகக் கிளம்பினேன். அப்போது டிசம்பர் மாதம். டிசம்பர் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம்.


என் பிறந்த நாள் டிசம்பரில் தான். வருடா வருடம் டிசம்பர் மாதம் பாரீசுக்குச் சென்று என் பிறந்த நாளை நானே கொண்டாடுவது வழக்கம். ஐரோப்பாவில் குளிர்காலம் வித்தியாசமாக இருக்கும். ஊட்டியில் கூட குளிர் காலத்தில் குளிர் ஜீரோ டிகிரிக்குப் போகும் என்றாலும் , அதே ஜீரோ டிகிரி ஐரோப்பாவில் வேறு மாதிரி இருக்கும். காலம் , காலமாக வெப்பத்தைக் காணாமல் குளிரிலேயே உறைந்து கிடப்பதால் ஐரோப்பிய மண்ணின் குளிருக்கு வீரியம் அதிகம். ஆனால் , ராமசாமியால் எப்படி அந்தக் குளிரைத் தாங்க முடியும்.


” நாம் ஏப்ரல் , மே கோடைக் காலத்தில் போகலாம் “ என்றேன். அவர் கேட்கவில்லை. இப்போதே கிளம்பினால் தான் ஆயிற்று என்று ஒற்றைக் காலில் நின்றார். ராமசாமி , நாமக்கல்லில் ஒரு கோடீஸ்வரர் ; பண்ணையார். ஏகப்பட்ட லாரிகள் ஒடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் , பார்ப்பதற்கு ஏதோ டாஸ்மாக் பாரில் எடுபிடி வேலை செய்பவர் போல் தோற்றம் தருவார். காலில் ரப்பர் செருப்பு ; அதிலும் , ஒரு அறுந்த வாரை ஊக்கு போட்டு மாட்டியிருப்பார். சுருக்கம் விழுந்த சட்டை. எவ்வளவு அவசரமாக இருந்தாலும் ஆட்டோவில் ஏற மாட்டார் ; எல்லாவற்றுக்கும் பஸ் தான்.


” இப்படியெல்லாம் பாரீஸ் வந்தால் குளிரில் விறைத்துச் செத்துப் போய் விடுவீர்!“ என்று எச்சரித்தேன். பாரீஸ் போய் வாங்கினால் , நம்மூர் காசுக்கு விலை ஐந்து மடங்கு ஆகி விடும் என்று சொல்லியும் செவி சாய்க்கவில்லை. பிறகு கட்டாயப்படுத்தி ஷூ , ஸ்வெட்டர் எல்லாம் வாங்கச் செய்தேன்.ஜீரோ டிகிரி குளிரில் வாழ வேண்டுமானால் , ஒருவர் குறைந்தபட்சம் 12 கிலோ எடையுள்ள கம்பளி உடுப்புகளை அணிந்திருக்க வேண்டும்.


கம்பளி சாக்ஸ் , குளிர் நாடுகளுக்கேற்ற ஷூ (அதன் விலை இந்தியாவில் ரூ. 10,000), கையுறை , ஸ்வெட்டர் , கம்பளி கோட்டு , மப்ளர் , குல்லாய் என்று இத்தனை உருப்படி தேவை. ஆனால் , ராமசாமி ரூ. 300 க்கு ஒரு ஷூவை வாங்கினார். கோட்டு இல்லை ; மப்ளர் இல்லை ; கையுறை இல்லை ; எதுவுமே இல்லை! கிளம்பி விட்டார். விமானத்திலேயே பிரச்னை ஆரம்பமாகி விட்டது. ராமசாமியிடம் ஒரு விநோத பழக்கம் என்னவென்றால் – அவருக்கு அருகிலேயே , அவரைத் தொடக் கூடிய தூரத்திலேயே நீங்கள் அமர்ந்திருந்தாலும் எங்கோ அடுத்த வயக்காட்டில் நின்று கொண்டிருக்கும் ஒருவரைக் கூப்பிடுவது போன்ற குரலில் பேசுவார் ; கத்துவார் என்பதே சாலப் பொருத்தம்.


விமானத்தில் அவருக்குப் பக்கத்து சீட்டு தான் எனக்கு. ஆனாலும் , வானில் பறந்து கொண்டிருக்கும் மற்றொரு விமானத்தில் அமர்ந்திருக்கும் ஒருவரோடு பேசுவதாக நினைத்து , என் செவிச் சவ்வுகளைக் கிழித்துக் கொண்டிருந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஒரு வெள்ளைக்காரர் , ராமசாமியிடம் மெதுவாகப் பேசுமாறு கேட்டுக் கொண்ட போது , இரண்டு நிமிடம் அடங்கி விட்டு , பிறகு , மீண்டும் அதே உச்சத்தில் ஆரம்பித்தார். நான் , சைகையில் வெள்ளைக்காரனைக் காண்பித்தேன். உடனே சப்தமாக , ” அவங்கெடக்கான்… நம்ப ஊருக்கு வந்துட்டு அவன் என்ன நம்பள நாட்டாமை பண்றது ? “ என்றார்.



” இது உம்முடைய நாமக்கல் அல்ல ; இப்போது நாம் ஆகாயத்தில் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம். அநேகமாக துருக்கியாக இருக்கலாம்.. “ என்று அவரிடம் சொல்ல நினைத்தேன்.ஆனால் , அதற்கும் ஏதாவது குதர்க்கமாக பதில் சொல்வார். அதனால் , கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தேன். தூக்கம் வரவில்லை ; இருந்தாலும் , கண்களைத் திறக்க அச்சமாக இருந்தது. எவ்வளவு நேரம் அப்படி இருக்க முடியும் ? பிறகு லேசாகக் கண்ணைத் திறந்து பார்ப்பேன். அவ்வளவுதான் , எலியை கவ்வுவதற்காகப் பாயும் பூனையைப் போல் பாய்ந்து பிடித்துக் கொள்வார்.


பிறகு , மறுபடியும் ஆரம்பிக்கும் கச்சேரி. இப்போது முன்னை விட சுதி ஏறியிருக்கும். ஆமாம் , விமானத்தில் தரும் ஸ்காட்ச் விஸ்கியை அதற்குள் நாலைந்து ரவுண்ட் போட்டிருப்பார். ஏதாவது சுவாரசியமாக இருந்தாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம். எல்லாம் அவருடைய மனைவியைப் பற்றிய புகார் கதைகள். ஆனால் , எனக்கு என்னவோ அந்தப் பெண்மணி மீது மதிப்பு தான் கூடியது. இப்படி 24 மணி நேரமும் தவளையைப் போல் கத்திக் கொண்டிருக்கும் மனிதரோடு இத்தனை வருடம் குடித்தனம் நடத்திஇருக்கிறாளே , அவள் எப்பேர்ப்பட்ட பொறுமைசாலியாக இருக்க வேண்டும்!


பாரீஸ் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் என் தோள் பையைத் திறந்து ஒரு பொருளை எடுத்து , ; இதோ பாருங்கள் பெருமாள்! ; என்று பெருமையுடன் காண்பித்தார் ராமசாமி. இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். எனக்கு அந்த ஆண்டு தான் இதய அறுவை சிகிச்சை நடந்திருந்ததால் , சுமை எதுவும் தூக்க வேண்டாம்! என்று எச்சரித்திருந்தார் மருத்துவர். ஆக , என் பையையும் ராமசாமியேதான் தூக்கி வர வேண்டியிருந்தது. உண்மையில் எனக்கு இத்தனை உதவி செய்த ஒரு நண்பரைப் பற்றி பொல்லாங்கு சொல்வது பற்றி எனக்கே நாணமாகத் தான் இருக்கிறது. என்ன செய்ய ? என் தொழில் (எழுத்து) அப்படி!


என் கைப்பையிலிருந்து ராமசாமி எடுத்துக் காண்பித்த பொருளைப் பார்த்ததும் நான் ஒருகணம் ஆடிப் போய் விட்டேன். விமானத்தில் போர்த்திக் கொள்வதற்காக போர்வை கொடுப்பர் அல்லவா , அந்தப் போர்வையை என் பையில் வைத்து எடுத்து வந்திருக்கிறார்! அந்தக் குளிரிலும் எனக்கு வேர்த்து விட்டது. மாட்டியிருந்தால் அவமானமாகப் போயிருக்குமே! ” இங்கே குளிர் அதிகமில்லே ? அதுதான் எடுத்து வைத்துக் கொண்டேன் ” என்றார் ராமசாமி. எனக்கு வந்த கோபத்தில் எதுவும் பேசவில்லை.

விமான நிலையத்திலிருந்து டாக்சி பிடித்து லாட்ஜில் ரூம் போட்டோம் ; ஆனால் , அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. நாங்கள் சென்ற இடம் கார் துநோர் என்ற பாரீசின் வடக்குப் பகுதி. அங்கே வசிக்கும் பெரும்பான்மையோர் வட ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த கறுப்பின முஸ்லீம் மக்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள்.சிறிய லாட்ஜுகளின் உரிமையாளர்கள் பலரும் அல்ஜீரியர்கள். அவர்களிடம் சென்று , “ எங்கள் இருவருக்கும் ஒரே அறை வேண்டும்… ” என்று சொன்னதும் சைத்தானை நேரில் கண்டது போல் , ” ஹராம் , ஹராம்… “ என்று கத்தினர்.


இந்த இடத்தில் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. என் நண்பர் ஒருவரின் மகன் அமெரிக்காவில் வேலை செய்கிறான். அவன் ஒரு அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.விசனத்தில் இருந்த நண்பருக்கு ஆதரவாக என் மற்றொரு


நண்பனான நிக்கி என்ன சொன்னான் தெரியுமா ? “ சந்தோஷப்படுங்கள் , அட்லீஸ்ட் அவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டானே என்று! “, இன்னமும் புரியவில்லையா ?


அதாவது , அந்த அல்ஜீரியர்கள் என்னையும் , ராமசாமியையும் , ‘ ஹோமோ ‘ என்று நினைத்து விட்டனர். சே… சே… என் வாழ்விலேயே அப்படி ஒரு அவமானகரமான சம்பவத்தை நான் அனுபவித்தது இல்லை. பிறகு ஒரு மூன்றாந்தரமான லாட்ஜில் ரூம் போட்டோம். ஓனர் ஒரு வயதான ப்ரெஞ்சுக்காரி என்பதால் பிரச்னை இல்லை.முதல் நாளே ஆரம்பித்து விட்டது பிரச்னை. குளிர் ஜுரம் கண்டவனைப் போல் வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தார் ராமசாமி. அறையை விட்டு வெளியே வரவே இல்லை.


மதிய உணவுக்கும் , இரவு உணவுக்கும் மட்டும் தான் வெளியே வந்தார். வடக்கு பாரீசில் நாங்கள் தங்கியிருந்த இடத்தின் பெயர் லா சப்பல். இது ஒரு குட்டி யாழ்ப்பாணம். திரும்பின இடமெல்லாம் தமிழ்க் கடைகள் தான். அதனால் , தமிழ்ச் சாப்பாட்டுக்குப் பிரச்னை இல்லை. ஆனால் , இவ்வளவு தூரம் வந்து , இவ்வளவு பணம் செலவு செய்து ரசமும் , சாம்பாரும் சாப்பிட வேண்டுமா என்பது தான் என் கேள்வி. இருபத்து நாலு மணி நேரமும் அறையிலேயே அடைந்து கிடந்து , சாம்பார் சாதம் சாப்பிடுவதற்கு ஒரு ஆள் ஏன் பாரீஸ் வரை வர வேண்டும் ?


அறையில் மற்றொரு பிரச்னை , சிகரட். ராமசாமிக்கு விழித்திருக்கும் நேரமெல்லாம் வாயில் சிகரட் புகைத்து கொண்டிருக்க வேண்டும். அதிலும் , அவர் குடிக்கும் சிகரட் , இந்த உலகத்திலேயே படு மட்டமான ரகம். எங்களுடைய நிதி நிலமை தனித்தனி அறைகளில் தங்குவதற்கு மதிக்கவில்லை. இது எல்லாவற்றையும் கூட மன்னித்து விடுவேன். ஆனால் , ஸ்பெய்னிலிருந்து நாங்கள் பாரீசுக்கு வந்த ரயில் பயணத்தில் ராமசாமி செய்த ஒரு காரியத்தை மட்டும் என்னால் மன்னிக்கவே முடியாது.


பிரான்சிலிருந்து ஸ்பெய்ன் சென்று விட்டு , அங்கிருந்து பாரீசுக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தோம். முந்தின தினம் தான் கிறிஸ்துமஸ். அது ஒரு பகல் நேரம். வரும் வழியெல்லாம் கிறிஸ்துமஸ் மரங்களும் மற்றும் பெயர் தெரியாத ஆயிரக் கணக்கான மரங்களிலும் பனித் துகள்கள் பொடிப் பொடியாக விழுந்து , மரங்களையே மறைத்துக் கொண்டிருந்தன. இந்த இடத்தில் வாசகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். அந்தப் பரவசமான காட்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலாதவனாக இருக்கிறேன்.


ஒரு மகா அற்புதம் கண் முன்னே விரிந்து கிடந்தது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஸ்டேஷன் வரும். அப்புறம் வருவதெல்லாம் அந்த அற்புதம் தான். அந்த ரயிலைத் தவிர அங்கே மனித வாழ்வின் சுவடே தெரியாமல் கிடந்தது. எதிரே தூங்கிக் கொண்டிருந்தார் ராமசாமி. ஆம் , சொல்ல மறந்து விட்டேன். அவர் சிகரட் குடிக்காத நேரத்திலெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தார். உட்கார்ந்தபடி தூக்கம் , நின்றபடி தூக்கம். மனிதர் சல்லாப நேரத்தில் கூட தூங்கிக் கொண்டிருந்திருப்பாரோ என்ற அச்சம் ஏற்பட்டது


எனக்கு.எழுப்பி விட்டு அந்த அற்புதத்தைப் பார்க்கச் சொன்னேன். கண்களில் எந்த பாவமும் இன்றி ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்து விட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தார். காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறு மணிக்கு பாரீஸ் வந்து சேரும் வரை தூக்கம் தான். ஆனால் , சைத்தான் எனக்குள்ளேயும் இருக்கிறான் என்று தோன்றியது. கடவுள் உனக்கு சொர்க்கத்தைக் காண்பித்தான். அதைப் பார்த்து அனுபவிப்பதை விட்டு விட்டு , உன்னை எவன் , பக்கத்திலிருப்பவனின் தூக்கத்தைப் பற்றி எண்ணி எரிச்சலடையச் சொன்னது ? பாரீஸ் வந்ததுமே பயணத் தேதியை முன்னதாகவே மாற்றிக் கொண்டு ஊருக்கு வந்து சேர்ந்தேன்.


சென்னை வந்து இரண்டு வாரம் இருக்கும். ராமசாமிக்கு போன் போட்டேன். அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று தெரிந்தது. அப்போது ஒரு நாள் – ஒரு பெண்ணிடமிருந்து எனக்கு போன் வந்தது.ராமசாமியின் மனைவி. அப்போது தான் முதல் முறையாக என்னோடு பேசுகிறார். அவர் கேட்ட முதல் கேள்வி:


“ ராமசாமி எங்கே ? “


“அடப்பாவி , நாங்கள் வந்தே இரண்டு வாரம் ஆகிறதே! இன்னுமா அவர் ஊர் வந்து சேரவில்லை ? “


ராமசாமியின் மனைவி உஷ்ணமாகி விட்டார்…


“ராமசாமி காணவில்லை என்று நான் போலீஸில் புகார் கொடுக்கப் போகிறேன். போலீஸ் உங்களிடம் வருவார்கள். தயாராக இருங்கள்
 http://covers.openlibrary.org/w/id/6276273-M.jpg

Wednesday, July 04, 2012

சாரு நிவேதிதா. - நையாண்டி சிறுகதை - கோடம்பாக்கம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOgd3oWACDPUujjr02doet3s0PFzZxsBgHM240FL4qZC_qEm7Y7RidaaGHBPViEjHDDLxfe8hcfRLrOoJZnkDu7dFXS3XjAIGIGhQYlTcG4P77RJ4ndzDo_6dPVyJg-V_NUAtw4dT46jo/s400/apayam1.jpg 

சாரு நிவேதிதா.

ஹாலிவுட் படங்களைக் கொஞ்சம் உல்டா பண்ணி தமிழ் மக்களுக்குக் கொடுத்து, அவர்களைச் சந்தோஷப்படுத்துவது கோடம்பாக்கத்து வழக்கங்களில் ஒன்று. அதன்படி, பிரபல எழுத்தாளன் கச்சிராயனைச் சந்தித்த சிரஞ்சீவி என்ற ஓர் இளம் தயாரிப்பாளர், அவன் கையில் ஒரு டி.வி.டி-யைக் கொடுத்து “இதுதான் என் அடுத்த படம். இதற்கு நீங்கள்தான் வசனம்” என்று சொன்னார்.


சிரஞ்சீவி பற்றி அவன் கேள்விப்பட்டு இருக்கிறான். அவர் இதற்கு முன் தயாரித்த இரண்டு படங்களுமே ஓரளவுக்கு வசூல் கொடுத்தவை. இப்போது இந்தப் படத்துக்கு அவர்தான் இயக்கம். அவரே ஹீரோ, அவரே தயாரிப்பாளர்!


அந்த டி.வி.டி-யைப் பார்த்த அவன் தன் வாழ்நாளின் உச்சகட்ட அதிர்ச்சியை அடைந்தான். காரணம், ‘U Turn’ என்ற அந்தப் படத்தின் கதை அப்படி.

ஜெனிஃபர் லோபஸ் நடித்த அந்தப் படத்தை நீங்கள் பார்த்திருந்தால், உங்களுக்கு அதன் விபரீதம் இதற்குள் புரிந்திருக்கும். பார்த்திருக்காவிட்டால் இப்போது அதன் கதையைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.


ஒரு ஆளிடம் வாங்கிய மிகப் பெரிய கடனைத் திருப்பித் தருவதற்காக ஒரு பெரும் தொகையை எடுத்துக்கொண்டு போகிறான் பாபி என்ற இளைஞன். இடையில், ஓர் ஊரில் அவனுடைய கார் ரிப்பேர் ஆகிவிடுகிறது. அந்த நேரத்தில் அவன் நுழைந்த கடையில் நடந்த கொள்ளை முயற்சியில், அவனுடைய பணம் அத்தனையும் பறிபோகிறது. ஏற்கெனவே குறிப்பிட்ட தவணையில் வட்டி கட்டாததால், அந்த ஈட்டிக்காரன் பாபியின் இரண்டு விரல்களைத் துண்டித்திருக்கிறான். இப்போது சொன்னபடி கொடுக்காவிட்டால் எந்த உறுப்பைத் துண்டிப்பானோ?


அதே ஊரில் வாழும் ஒரு தம்பதி ஜெனிஃபரும் அவளுடைய 54 வயதுக் கணவன் ஜாக்கும். ஜெனிஃபரைக் கொன்றுவிட்டால் பெரும் பணம் கொடுத்து பாபியை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதாகச் சொல்கிறான் ஜாக். ஆனால், ஜெனிஃபர் கூறும் கதையோ படுபயங்கரமாக இருக்கிறது. ‘தான் ஜாக்குக்கு மனைவி மட்டும் அல்ல… அவனுடைய மகளும்தான். தன்னைச் சிறு வயதில் இருந்தே பாலியல்ரீதியாகத் துன்புறுத்திக்கொண்டு இருக்கும் ஜாக், என் அம்மாவைக் கொன்றுவிட்டு என்னை மனைவியாக வைத்துக்கொண்டு இருக்கிறான்’ என்கிறாள். ”நீ ஜாக்கைக் கொன்றுவிட்டால் உனக்குப் பெரும் தொகை தருகிறேன்” என்று பாபியிடம் சொல்கிறாள் ஜெனி.


கடைசியில் என்ன நடக்கிறது என்பது இப்போது நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் இந்தக் கதைக்குத் தேவை இல்லை. டி.வி.டி-யைப் பார்த்த ராயன் அடித்துப் பிடித்துக்கொண்டு சிரஞ்சீவியைப் பார்க்க ஓடினான். ஏற்கெனவே இலக்கிய உலகில் அவனுடைய பெயர் கன்னாபின்னா என்று கெட்டுக்கிடந்தது. எப்போதும் பாரிலேயே விழுந்துகிடப்பான்… ஸ்த்ரீலோலன் அப்படி இப்படி என்று அவனைப்பற்றி ஏகப்பட்ட வதந்திகள் உலவிக்கொண்டு இருந்தன. இதெல்லாம் போதாது என்று கச்சிராயனே ‘இன்செஸ்ட்’டை மையமாகவைத்து ஓரிரண்டு கதைகளை எழுதி இருக்கிறான். போதாதா?


ஆனால், சிரஞ்சீவி பேச்சில் வல்லவர். “கதையை நாம் தமிழ்ச் சூழலுக்கு ஏற்றபடி மாற்றிவிடுவோம். கவலையைவிடுங்கள். அப்பாவுக்குப் பதில் மாமா” என்றார்.


“அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? மாமா என்றால் ஜெனி முறைப்பெண் ஆகிவிட மாட்டாளா?”


“சரி, வளர்ப்புத் தந்தை என்று வைத்துக்கொள்ளுங்கள். அதோடு, கதையின் முடிவில் அந்த வில்லனைக் கொன்றுவிடுவோம். பிறகென்ன?”


கச்சிராயன் யோசனையில் ஆழ்ந்தபோது அவன் கையில் ஒரு பணக்கட்டை வைத்தார் சிரஞ்சீவி. “இது அட்வான்ஸ்தான். 10,000 ரூபா. வசனத்தை முடிச்சிட்டா இன்னொரு 40 குடுத்துர்றேன். இது ரொம்ப சின்ன அமௌன்ட். ஆனா, படம் நிச்சயம் பிச்சுக்கிட்டு ஓடும். அப்போ உங்களைச் செமத்தியா கவனிச்சுர்றேன்.”


அவனுடைய இலக்கிய சகாக்கள் எல்லாம் லகரங்களில் வாங்கிக்கொண்டு இருக்கும்போது,இது என்ன பிசாத்து ஐம்பதாயிரம் என்று யோசித்தான் ராயன். ஆனால், அவன் ஒரு சினிமா பைத்தியம். தவிர, எடுத்த எடுப்பிலேயே பணத்தைப்பற்றிப் பேசிக்கொண்டு இருந்தால் இண்டஸ்ட்ரியில் ‘அந்த ஆள் ஒரு வில்லங்கம்’ என்ற பெயர் வந்துவிடும் அல்லவா?


முதலில் கே.கே. நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆபீஸ் போடப்பட்டது. மதியம் 12 மணிக்கு ஆரம்பிக்கும் டிஸ்கஷன். அதற்குள்ளாகவே ஓர் உதவி (இயக்குநர்) மதியச் சாப்பாடு வாங்கக் கிளம்பி இருப்பார்.


சிரஞ்சீவியைச் சுற்றி ஆறு உதவிகள் இருந்தனர். இவர்களிடையே சீனியா ரிட்டி உண்டு. ஆக, சீனியராக இருந்தவர் பெயர் நாதன். 65 வயதுக்கு மேல் இருக்கும். பார்க்க அந்தக் காலத்து ‘என்னத்தே கண்ணையா’வைப் போல் இருப்பார். 45 ஆண்டுகளாக உதவி இயக்குநர். ஆரம்ப கட்டத்தில் கச்சிராயனுக்கு இது ஒரு புதிராகவே இருந்தது. பிறகு, போகப் போகக் காரணம் விளங்கிவிட்டது. சிவாஜி மற்றும் அவர்படங் களுக்கு வசனம் எழுதிய தூயவன் போன்றவர்களிடம் எல்லாம் வேலை செய்திருக்கிறார் நாதன். இதில் என்ன விசேஷம் என்றால், தூயவனும் கச்சிராயனின் சொந்த ஊரான நாகூரைச் சேர்ந்தவர்.


நாகூரில் இருந்து பிரபலமானவர்கள் யார்? நாகூர் ஹனிபா தவிர, தூயவன். இவர்களுக்குப் பிறகு நாம்தான் என்ற ஓர் எண்ணம் லேசாகத் தலைதூக்கியது ராயனுக்கு. ஆனால், நாதனைப் பார்க்கும்போது எல்லாம் கொஞ்சம் கலவரமாகும். ஓர் ஆள் 45 ஆண்டுகளாக உதவி இயக்குநராகவே காலம் கழிப்பது என்றால், இது என்ன சினிமா உலகம்?


அன்றைய தினம் ராயப்பேட்டையில் உள்ள சபாரி ஹோட்டல் வரை போயிருந்தார் உதவி. அங்கேதான் ஃபிஷ் பிரியாணி நன்றாக இருக்கும். மறுநாள் ஆழ்வார்பேட்டை சாம்கோ உணவகத்தில் இருந்து பிரெய்ன் பிரியாணி வரும். இதே போல் கோடம்பாக்கம், வடபழனி வட்டாரங்களில் உள்ள பல மெஸ்களில் இருந்தும் தருவிக்கப்படும்.


”இதெல்லாம் பரவால்ல சார். முன்னாடி இருந்த டைரக்டர் சபாரில ஃபிஷ் பிரியாணி வாங்கச் சொல்லுவான்; சாம்கோவுல காடை ஃப்ரை; அப்புறம் அங்கேர்ந்து செனடாப்ரோடு தாபா எக்ஸ்பிரஸ்ல ஷாமி கபாப். இப்படி ஒருவேளை சாப்பிடறதுக்கே நாலு கடைக்கு அலையணும். என் சொத்தையே காலி பண்ணிட்டான்” என்று மூக்கால் அழுவார் சிரஞ்சீவி. அந்தப் பழைய இயக்குநர் கொடுத்த டார்ச்சரின் காரணமாகத்தான்இவரே இயக்குவது என்று முடிவு செய்து விட்டதாகவும் சொன்னார்.


இது தவிர, சினிமா துறையில் இருப்பதால் கிடைக்கும் இன்னொரு அனுகூலம், அங்கே கிடைக்கும் அதி பயங்கரமான கிசுகிசுச் செய்திகள். சிரஞ்சீவியின் உதவிகளுள் ஒருவனான கிரி சொன்ன கிசுகிசுவைக் கேட்டு, மூளையே கிறுகிறுத்துப் போனது அவனுக்கு.


இப்போது கிரிக்கு 35 வயது இருக்கலாம். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவன் சென்னைக்கு வந்த புதிது. சினிமா சான்ஸ் தேடி அலைந்த நண்பர்கள், சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்தவர்கள், வேலை தேடிக்கொண்டு இருந்தவர்கள் என்று சிலர் ஒரே அறையில் தங்கி இருந்தார்கள்.


ஒரு நாள் இரவு, அவன் அறையில் தங்கியிருந்த ஒருவன் மிகுந்த பதற்றமாக வந்தான். இப்போது பிரபலமாக இருக்கும் ஒரு நடிகரின் அல்லக்கை அவன். அந்த நடிகரும் அவரது அல்லக்கைகள் சிலரும் சென்னைக்கு வெளியே உள்ள ஒரு பீச்சில் குடித்துக் கும்மாளமிட்டுவிட்டுத் திரும்பி இருக்கிறார்கள். வரும் வழியில் ஏதோ தோன்ற… கார் நேராக ஓர் அநாதை ஆசிரமத்துக்குத் திரும்பிவிட்டது.


அந்த ஆசிரமத்துக்குப் படியளக்கும் தர்மகர்த்தாக்களில் நடிகரும் ஒருவர். அங்கிருந்த பார்வைஅற்ற ஒரு பெண்ணை காரில் தூக்கிப் போட்டு ஃபார்ம் ஹவுஸ் சென்றுஇருக்கிறார்கள். நாலு பேர். இறுதியாக இவனை அழைத்தார்களாம். இவன் போகும்போது அவளுக்கு மூச்சுப் பேச்சே இல்லை. இவன் பயந்து போய் வெளியே வந்துவிட்டான். இவனைத் தவிர மற்ற எல்லோரும் வி.ஐ.பி. நபர்களின் பிள்ளைகள்.


”ஒருவேளை ஏதாவது பிரச்னை என்றால் நாங்க பணம் தர்றோம். நீ ஸ்டேஷன் போறியா?” என்று கேட்டுஇருக்கிறார்கள். அவன் மிரண்டு போய் இரண்டு நாட்கள் தலைமறை வாக இருந்தான். நல்லவேளை அந்தப் பெண் பிழைத்துக் கொண்டதால் பிரச்னை இல்லாமல் போயிற்று.


”இது நடந்து 10 வருடங்கள் இருக்கும். இப்போது அந்த ரூம்மேட்கள் எல்லாரும் எங்கே இருக்கிறார்கள்; என்ன செய்கி றார்கள் என்று தெரியவில்லை. அந்த ஆசிரமம் இன்னும் இருக்கிறது. அந்த நடிகர் இப்போது ரொம்பப் பிரபலம்” என்று சொல்லி முடித்தான் கிரி.


இதுபோல் திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா மாதிரி எக்கச்சக்கமான கிசுகிசுக்கள் வந்து விழுந்து கொண்டே இருந்தன.


மதிய உணவுக்குப் பிறகு 3 மணிக்கு ஆரம்பித்தால் டிஸ்கஷன் இடைவேளை மாலை 7 மணிக்கு. அதற்குப் பிறகு டிஸ்கஷன் சரக்கோடு துவங்கும். ராயனுக்கும் சிரஞ்சீவிக்கும் ஆர்.சி.கோல்டு. மற்ற உதவிகளுக்கு ஓல்டு மாங்க், எம்.சி.பிராந்தி, எம்.ஜி.எம்.வோட்கா என்று அவரவர் பிரியப்படி வந்துவிடும். ஆனால், உதவிகள் யாரும் ஒரேயடியாகக் குடித்துவிட்டு மட்டையாகிவிட மாட்டார்கள். அந்தச் சலுகை இயக்குநருக்கும் ரைட்டருக்கும் மட்டும்தான்.


எல்லாம் ராணுவ ஒழுங்கோடும் கட்டுக்கோப்புடனும் நடக்கும். இந்த உதவி இயக்குநர்கள் என்ற பிரிவு மட்டும் இல்லாவிட்டால் சினிமா துறையே ஸ்தம்பித்துவிடும். எல்லோரும் சாப்பிட்ட இலைகளை எடுக்க வேண்டும். டீ கிளாஸை எடுக்க வேண்டும். ஆஷ்ட்ரேயைச் சுத்தப்படுத்த வேண்டும். இன்னும் இப்படிநூற்றுக் கணக்கான வேலைகள். எல்லாம் எதற்காக? ஒரு காலத்தில் ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் போன்றவர் களைப் போல் ஆக வேண்டும்என்ற கனவுதான்.


சரக்கோடு ஆரம்பிக்கும் இரண் டாவது செஷன் டிஸ்கஷன்தான் இன்னும் சூடாக இருக்கும். சமயங் களில் இரவு 3 மணி வரைக்கும் கூட நீளும். அதிலும் இந்த கிரிக்கும் நாதனுக்கும் ஆகவே ஆகாது. கிரி ஒன்று சொன்னால் நாதன் அதற்கு நேர் எதிராக ஒன்று சொல்வார். சமயங்களில் இரண்டு பேரும் கட்டிப்புரண்டு அடித்துக்கொள்வார்களோ என்றுகூடப் பயமாக இருக்கும். இது தவிர, கதை பற்றி இயக்குநர் ஏதாவது சொன்னால் அதற்கும் கட்டையைப் போடுவார் நாதன். கட்டை என்றால் சாதாரண கட்டை அல்ல. பைக்கில் சென்றுகொண்டு இருக்கும்போது குறுக்கே கட்டையைப் போட்டால் எப்படி இருக்கும், அந்த மாதிரி கட்டை.


இயக்குநர் சூடாகி ஏதாவது பதில் சொன்னால், “இவ்வளவும் ஏன் செய்றேன்? படம் ஓட வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவு போராடுறேன். டைரக்டருக்கு ஜால்ரா போடணும்னா சொல்லுங்க. நீங்க எது சொன்னா லும் சரி சரின்னு தலை ஆட்டுறேன். எப்படி இருக்கணும் சொல்லுங்க?” என்று இயக்குநரையே மடக்குவார்.


ம்ஹ§ம்… இவ்வளவு தட்டையாகச் சொல்ல மாட்டார். உள்ளமும் உயிரும் கரைந்து உருகுவது போன்ற தொனியுடன் சொல்லுவார். அது நடிப்போ பாவனையோ இல்லை. நிஜம். ஒன்று மட்டும் சொல்கிறேன். சினிமா மீது அவர்களுக்கு இருந்த காதலைப் போல் இந்த உலகத்தில் யாருக்கும் எதன் மீதும் அவ்வளவு காதல் இருக்காது.


அதிலும் நாதன் இந்தப் படத்தின் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். வில்லன் ஜாக் தன் மனைவியை அதாவது, மகளைக் கற்பழிக்கும்போதும், கொல்ல முயற்சி செய்யும்போதும் நாதன் ஜாக்காகவே மாறி விடுவார். அப்போது கிரிதான் ஜெனியாக நடிப்பான்.


”நாதனின் இந்த இன்வால்வ்மென்ட்தான் இவரை இன்னமும் சகித்துக்கொண்டு இருப்பதன் காரணம்” என்பார் சிரஞ்சீவி.

மேலும், நாதனால் வேறொரு உபயோகமும் இருந்தது. படத்தின் ஒரு கட்டத்தில் விழும் சிக்கலை அவிழ்க்க முடியாமல் உதவி இயக்குநர்கள் எல்லோரும் ஒரு முட்டுச் சந்துக்கு வந்து நிற்கும் போது, சட்டென்று ஒரு வழியை உருவாக்குவார் நாதன்.


கதையில் ஒரு முக்கியமான கட்டம், ஜெனியை ஜாக் ஒரு மலை உச்சியிலிருந்து தள்ளிவிடுவது, ”வில்லன் ஹீரோயினை மலையில் இருந்து தள்ளி விடுவதை ‘மந்திரிகுமாரி’யில் வில்லன் எஸ்.ஏ. நடராஜன் ஏற்கெனவே செய்திருக்கிறார்; அது வேண்டாம்” என்று கட்டை போட்டார் நாதன். அவர் சொல்லித்தான் அந்த விஷயமே மற்றவர்களுக்குத் தெரிந்தது என்றாலும், அந்த ஆட்சேபனை ஏற்கப்பட்டது.


இந்தப் படம் முழுக்கவுமே ஹாலிவுட் படத்தின் ரீ-மேக். அது போதாது என்று பல்வேறு ஹாலிவுட் படங்களிலிருந்து காட்சிகளைச் சுடுவதற்கென்றே இரண்டு உதவி இயக்குநர்களைக் கொண்ட தனி டிபார்ட்மென்ட் ஒன்று இயங்கியது. இருந்தாலும் ஒரு தமிழ்ப் படத்தில் வந்த காட்சி மற்றொன்றில் வரக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தார்கள். அப்படி யானால் ஜெனியை வேறு எப்படிக் கொல்வது?


இதற்கு மட்டுமே டிஸ்கஷன் இரண்டு வார காலத்துக்கு ஓடியது. பல்வேறுவிதமான கொலைகள். ராயனுக்கு கொலைக் கனவாக வந்து கொண்டு இருந்தது. கடைசியில் நாதன்தான் வழி சொன்னார். வில்லன் ஹீரோயினை மலை உச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டியது. சிலருக்கு உயரம் ஒப்புக்கொள்ளாது. அது ஒருமாதிரி ஃபோபியா. அதனால் கீழே விழுந்து செத்துப்போகிறாள் ஹீரோயின்.


ஆர்வம் தாங்க முடியாமல் “ஃபோபியான்னா?” என்று வாயைத் திறந்து கேட்டுவிட்டான் கிரி.

குரலில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் ”பயம்” என்றார் நாதன். “ஆனால் அந்த ஃபோபியாவுக்கு ஏதோ ஒரு பெயர் இருக்கிறது. அந்தக் காலத்தில் ‘பிரக்ஞை’யில் படித்திருக்கிறேன். மறந்துவிட்டது.”


“அக்ரோஃபோபியா” என்று சிக்ஸர் அடித்தான் கச்சிராயன். கூடியிருந்த அத்தனை பேரும் ஆடிப் போய்விட்டார்கள். ஆனால், ராயனுக்கு மட்டும் நாதனைப்பற்றி ஆச்சர்யம். ‘அடப்பாவி. பிரக்ஞைஎல்லாம் படித்திருக்கிறாரே இந்த மனுஷன்!’ என்று. 30 ஆண்டுகளுக்கு முன்னால் வந்துகொண்டு இருந்த ஒரு தீவிரமான இலக்கியப் பத்திரிகை அது.


அன்றைய தினம் எல்லோருக்குமே ஆர்.சி. கோல்டு தருவிக்கப்பட்டது. இதற்கிடையில் வில்ல னுக்கும் ஹீரோயினுக்குமான உறவு தந்தை-மகள் என்று இருக்கக் கூடாது என்பதில் மட்டும் கவனமாகவே இருந்து வந்தான் கச்சிராயன். வளர்ப்புத் தந்தையாக இருந்தாலும் அது வேண்டாம் என்றே விவாதித்தான். சித்தப்பா என்று வைக்கலாம் என்பது நாதனின் கட்சி. இப்படியே அப்பா, சித்தப்பா, மாமா என்று அந்த உறவு மாறி மாறிச் சென்றது.


வளர்ப்புத் தந்தை என்று வைக்கலாம் என்பது சிரஞ்சீவியின் வாதம். ”ஒரு பெண் தன் கணவனை ஹனிமூனுக்கு அழைத்துச் சென்று தன் கள்ளக் காதலனை வைத்துத் தீர்த்துக்கட்டவில்லையா? சொசைட்டில என்னென்னமோ நடக்குது. சினிமாவில் காண்பிக்கக் கூடாதா?” என்றார் அவர். இப்போது என்றால், ‘ஒரு பெண் தன் கள்ளக் காதலைத் தட்டிக்கேட்ட சொந்த மகனையே துண்டுதுண்டாக வெட்டி ஃப்ரிஜ்ஜில் ஒளித்து வைக்கவில்லையா?’ என்று கேட்டிருப்பார்.


படத்தின் டயலாக் போர்ஷன் முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும் ஹீரோயினுக்கும் வில்லனுக்கும் என்ன உறவு என்று முடிவு செய்யப்படவில்லை. ‘சரி, அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டு, நடிகர்களைத் தேடும் படலத்தை ஆரம்பித்தார் சிரஞ்சீவி. எவ்வளவு முயன்றும் வில்லன் நடிகருக்குத் தோதான ஆள் கிடைக்கவில்லை. நடிகர் கிடைத்தால் சம்பளம் கட்டுப்படி ஆகவில்லை.


கடைசியில் கச்சிராயனே அந்த வில்லன் ரோலைச் செய்வது என்று முடிவாயிற்று. கச்சி ராயனின் வயதும் 54 என்பதால் அதுவும் பொருத்தமாகவே அமைந்தது. திடீரென்று இப்படி நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் அவனுக்கு சந்தோஷமே என்றாலும், இந்த உறவுப் பிரச்னைதான் பெரிய தலைவலியாக இருந்தது.


ஹீரோயின் ஒரு புது நடிகை. நடிகைக்கு வேண்டிய முதல் தகுதி கவர்ச்சியும் அழகும். அது அந்தப் பெண்ணிடம் இருந்தது. ஆனால், மற்ற நடிகைகளிடம் இல்லாத ஒரு புது விஷயமும் அவளிடம் இருந்தது. அவள் மும்பையின் காலா கோடா மார்கில் (கறுப்புக் குதிரைச் சதுக்கம்) நடக்கும் பரீட்சார்த்த நாடகக் குழுக்களில் நடித்துக்கொண்டு இருந்த புத்திஜீவி ரகம்.


‘யு டர்ன்’ என்பதால் சம்மதித்துவிட்டாள். புத்திஜீவி என்பதால் சிகரெட், தண்ணி எல்லாம் உண்டு. சிரஞ்சீவி கோஷ்டியோடு சேர்ந்தே தண்ணி அடித்தாள். இரவு 3 மணி ஆகிவிட்டால் அங்கேயே தூங்கிவிட்டு காலையில்தான் போவாள். சுருக்கமாகச் சொன்னால், ஆண்-பெண் வித்தியாசம் இல்லாமல் பழகினாள்.


நாதன், கச்சிராயன் இருவர் காட்டிலும் மழை. சினிமா டிஸ்கஷனுக்கு ஊடாகவே அந்த மும்பைப் பெண்ணுடன் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி (நாடகம்), கீஸ்லோவ்ஸ்கி (சினிமா), ட்சைக்கோவ்ஸ்கி (இசை) போன்ற பல ‘இஸ்கி’களைப் பற்றி மணிக்கணக்கில் விவாதித்தார்கள். அந்த விவாதங்களில் மற்றவர்கள் யாரும் கலந்துகொள்வதில்லை என்பதை சொல்லத் தேவை இல்லை.


இவ்வாறாக, சுமார் ஆறு மாத காலம் ஓடியது கச்சிராயனின் சினிமா பிரவேசம். படப்பிடிப்புக்கு லொகேஷன்கூடப் பார்த்துவிட்டார்கள். படத் துக்குப் பெயர் வைத்தாகிவிட்டது. ஹீரோ சிரஞ்சீவிக்கும் புதிய நாமகரணம் ஆனது. தெலுங்கில் ஒரு சிரஞ்சீவி சூப்பர் ஸ்டாராக இருக்கும்போது அதே பெயரில் எப்படி இன்னொரு சிரஞ்சீவி இருக்க முடியும்?


ஒரு கட்டத்தில் மதிய உணவு கே.கே.நகரில் ஒரு சாதாரண மெஸ்ஸில் இருந்து வர ஆரம்பித்தது. தொட்டுக்கொள்ள அவித்த முட்டைகூட இல்லை என்றதும் கச்சிராயன் புரிந்துகொண்டான். கம்பெனியில் பல மாற்றங்கள் தெரிந்தன.


முன்பெல்லாம் ராயனை பிக்கப் பண்ண கார் வரும்.பிறகு, ஓர் உதவி இயக்குநர் அவருடைய அரதப் பழசான ஒரு பைக்கை எடுத்துக்கொண்டு வந்து ராயனை அழைத்துப் போனார். பிறகு, அந்த பைக் வருவதும் நின்றுபோனது. கச்சிராயனும் பழையபடி தன்னுடைய இலக்கிய உலகத் துக்குத் திரும்பி வந்து சக இலக்கியவாதிகளுடன் ஹோதாவை ஆரம்பித்தான்.


இதெல்லாம் முடிந்து ஆறு மாதங்கள் இருக்கும். ஒருநாள் எதேச்சையாக கிரியைப்பார்த் தான் கச்சிராயன். ராயனை நோக்கி ஆர்வத்துடன் ஓடி வந்த கிரி, ”விஷயம் தெரியுமா சார்?” என்று ஆரம்பித்தான்.


“என்ன?”
“அந்த பாம்பே பொண்ணு இல்ல… நம்ம ஹீரோயின். அதுகிட்ட வேலையைக் காமிச்சுட்டாங்க நம்ம ஆளுங்க. டைரக்டரோ இல்ல அந்த நாதனோதான்… வேற யாரும் செஞ்சிருக்க முடியாது. (வயிற்றைக் கைகளால் சுட்டிக்காட்டி) நாலு மாசம்… உயிருக்கே ரொம்பப் பிரச்னையாப் போய்டுச்சு. டைரக்டர்தான் பேர் கெட்டுரக் கூடாதுன்னு ரொம்ப அலைஞ்சுக் கிட்டு இருந்தாரு… தேவையா இது?”


விஷயத்தைக் கேட்டதும் கச்சிராயனுக்குத் துணுக்கென்றது. அவளிடம் படித்துப் படித்துச் சொன்னோமே, ஐபில் மாத்திரையைப் போட்டுக் கொள்ளச் சொல்லி? போதையில் மறந்துவிட்டாள் போல… அடடா!


http://i.ytimg.com/vi/kXF-Zk_0EHs/0.jpg


நன்றி  - சாரு நிவேதிதா, சிறுகதைகள், உயிர் மெய் பதிப்பகம்