Showing posts with label BATHMINI. Show all posts
Showing posts with label BATHMINI. Show all posts

Thursday, June 28, 2012

பத்மினி

பத்மினி - அ முத்துலிங்கம்

http://www.bollywood501.com/classic_f/Padmini/index01.jpg

நடிகை பத்மினியின் முதல் படம் ‘மணமகள்’ என்று நினைக்கிறேன். அது யாழ்ப்பாணத்து தியேட்டரில் ஓடத் தொடங்கியபோது நான் விடுதியில் படித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தை மாற்றும் முன்னர் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என ஆர்வம். நானும் இன்னொரு நண்பனும் இரவு களவாக விடுதி கேட் ஏறிப் பாய்ந்து சென்று இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்தோம். மணமகள் படத்தில் வந்த யௌவன பத்மினியின் அழகும் ஆட்டமும் என்னைப் படுத்தியபாட்டை விவரிக்க முடியாது. 


என்னுடன் படம் பார்த்த நண்பன்கூட அறியமாட்டான். ஓர் இடத்தில் பத்மினி சற்று தலை குனிந்து கூந்தல் வழியாக என்னை மட்டும் பார்த்து நெருங்கிய பற்களை பாதி காட்டி சிரித்தார். தமிழ்ப் பாடத்தில் ’செறி எயிற்று அரிவை’ என்று படித்தது சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது. அன்றிலிருந்து நான் அவருக்கு அடிமையாகிவிட்டேன்.

பத்மினி நடித்த படங்கள் எல்லாவற்றையும் ஒன்று தவறாமல் பார்த்தேன். ஒரு காலத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு வருவார் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. 2003&ம் ஆண்டு பத்மினி ஒரு விழாவுக்காக ரொறொன்ரோ வந்தபோது எங்கள் வீட்டில் 3 நாட்கள் தங்கினார். மணமகள் திரைப்படத்தில் நான் பார்த்து மயங்கிய பத்மினிதான். 


தங்கத்தை கரைத்துப் பூசியதுபோல அதே மேனி. கால்மேல் கால் போட்டு, ஒரு பூனைக்குட்டியை அணைப்பதுபோல மடியிலே கைப்பையை வைத்துக்கொண்டு உட்கார்ந்தார். உடனேயே ஒரு சங்கதி  புலப்பட்டது. அவர் வாழ்நாள் முழுக்க அதிகாரம் செய்து பழக்கப்பட்டவர். புகழ் வெளிச்சத்தில் இருந்து விலக விருப்பம் கொள்ளாதவர். சாதாரண பேச்சும் கட்டளை போலவே இருக்கும்.


 கேள்விகள் எல்லாம் துப்பாக்கி ரவைகள்போல சட்சட்டென்று வந்தன. ’ரொறொன்ரோவில் நண்டு இருக்கிறதா? என்ன நண்டு, ஆற்று நண்டா கடல் நண்டா? றால் இருக்கிறதா? உங்களுக்கு றால் பொரிக்கத் தெரியுமா? என்ன என்ன மீன் இருக்கிறது? கரி மீன் இருக்கிறதா? பால் மீன் இருக்கிறதா? சுறா மீன் இருக்கிறதா?’ என்று எல்லாம் கேட்கத் தொடங்கினார். ‘இங்கே புட்டு எப்படியிருக்கும்? வீட்டிலே இடியப்பம் செய்வீர்களா? ஓ, மறந்துவிட்டேன். ரொறொன்ரோவில் நல்ல அப்பம் கிடைக்கும் என்று சொன்னார்களே.’ ஒவ்வொரு கேள்வியும் எங்களைக் கலங்கடித்தது.

அடுத்து வந்த கேள்வி என் மனைவியைத் திடுக்கிட வைத்தது. ‘ஆறு மணி மருந்தை எடுத்தேனா?' என்றார். மனைவி என்னைப் பார்த்தார். நான் அவரைப் பார்த்தேன். இப்பொழுதுதானே வந்து இறங்கியிருக்கிறார். எங்களுக்கு எப்படித் தெரியும்? மடியிலே படுத்துக் கிடந்த கைப்பையை திறந்து இரண்டு கை நிறைய மருந்துகளையும், வைட்டமின் மாத்திரைகளையும் அள்ளி எடுத்தார்.


 எல்லா நிறங்களிலும் எல்லா அளவுகளிலும் அவை இருந்தன. அது தவிர நாளுக்கு ஒருதரம் போடவேண்டிய ஊசியும் இருந்தது. மனைவி ஒரு சொல் பேசாமல், வாழ்நாள் முழுக்க இந்தத் தொழிலைச் செய்த தாதிபோல, அத்தனை பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். பத்மினியின் ஞாபக சக்தி புகழ் பெற்றது என்பது எல்லோருக்கும் தெரியும். கண்ணாடியைப் பார்த்து நடிகை மேக்கப் போடும்போது அந்தக் கால வழக்கப்படி வசனகர்த்தா நீண்ட நீண்ட வசனங்களை நின்றபடி சொல்லிக் கொடுப்பார். சிவாஜிக்குப் போட்டியாகப் பேச வேண்டிய வசனங்கள் அவை. அத்தனையையும் பத்மினி, இயக்குநர் வியக்கும்படி ஒரே டேக்கிலேயே பேசி அசத்திவிடுவார். 


பழைய கதைகள் பேசும்போது பத்மினி இப்படித்தான் ஆரம்பிப்பார். ‘1958&ல் எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலாவுடன் நான் நடித்து வெளியான வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில்’ அல்லது ‘1967&ல் சிவாஜி, கே.ஆர்.விஜயாவுடன் நான் நடித்து திருலோகசந்தர் இயக்கத்தில் வெளிவந்த இருமலர்கள் படத்தில்’ என்று ஒரு படத்தைப் பற்றி சொல்லும்போது அதில் நடித்தவர்கள், அதை இயக்கியவர், அது வெளிவந்த வருடம் போன்ற சகல விவரங்களையும் மறக்காமல் சேர்த்துக்கொள்வது அவர் இயல்பு. 


அத்தனை வியக்கவைக்கும் ஞாபகசக்தி அவருக்கு. அப்படிப்பட்ட பத்மினிக்கும் என் மனைவிக்கும் இடையில் தினம் சண்டை மூளும். ’இதைப் போடுங்கள்’ என்று என் மனைவி ஒரு மருந்தை நீட்டுவார். ‘இதை ஏற்கெனவே சாப்பிட்டுவிட்டேனே’ என்பார் பத்மினி. ‘அது வைட்டமின். இதுதான் ரத்த அழுத்த மாத்திரை.’ அப்படியா என்று அதை வாங்கிப் போடுவார். ஒரு பதினைந்து நிமிடம் போயிருக்கும். ‘பாருங்கள், இந்த மாத்திரையைத் தர மறந்து விட்டீர்கள்’ என்று குற்றம் சாட்டிவிட்டு ஒன்றை எடுத்து வாயைத் திறப்பார். என் மனைவி எங்கேயோவிருந்து பாய்ந்து வந்து அதைப் பறித்து ‘இதைத்தான் 15 நிமிடம் முன்பு நீங்கள் சாப்பிட்டீர்கள்’ என்று சொல்வார். பத்மினி, வங்கி மெசினில் பணம் இல்லையென்று சொன்னதுபோல திடுக்கிட்டுப் பார்ப்பார். ஒரு மாற்றமில்லாமல் தினம் தினம் இது நடந்தது.

ரொறொன்ரோவில் ஓர் இரவு விருந்துக்கு அழைக்கப்பட்டு நாங்கள் புறப்பட்டபோதுதான் பிரச்னை ஆரம்பமானது. அலங்கார சம்பிரமங்களை பத்மினி ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தார். பொற்சரிகை வைத்த இரண்டு நிறமான பட்டுச் சேலைகளில் எதை உடுப்பது என்று தடுமாறினார். கழுத்து மணியாரத்தை எடுத்து அணிந்தார். நீலக்கல் பதித்த அட்டிகையைக் கட்டுவதா விடுவதா என்று முடிவெடுக்க முடியவில்லை. அதற்கு இரண்டில் மூன்று பெரும்பான்மை தேவைப்பட்டது. வளையல்கள் மாட்ட வேண்டுமென்று நினைத்ததுதான் விபரீத முடிவு. முன்கையிலிருந்து முழங்கைவரை அவை நிரப்பப்பட்டன. எண்ணிப் பார்த்தபோது ஒரு கையில் 16ம் மறு கையில் 17ம் ஏறிவிட்டது. எத்தனை தரம் எண்ணினாலும் அதே தானம்தான் வந்தது. விருந்திலே யாராவது எண்ணிப் பார்த்து விடக்கூடும் என்ற அச்சத்தில் பத்மினி அமைதி இழந்தார்.

விருந்துக்குப் புறப்பட்டபோது இரவு 10 மணிக்குத் திரும்பிவிடவேண்டும். ரசிகர்களின் அநாவசிய தொந்திரவு அவருக்குப் பிடிக்காது என்று சொல்லிவிட்டார். ஆனால் அங்கே நடந்தது வேறு. விருந்துக்கு  வந்திருந்தவர்கள் எல்லோரும் பத்மினியுடன் படம் எடுக்க ஆசைப்பட்டார்கள். எல்லோருக்கும் கையெழுத்து வேண்டும். எல்லோரிடமும் கேள்விகள் இருந்தன. முக்கியமான கேள்வி ‘நீங்கள் ஏன் சிவாஜியை மணமுடிக்கவில்லை?’ ஆயிரம் கி.மீட்டர் பயணம்செய்து வந்தது இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கவா? எனினும் பத்மினி மலர்ந்துபோய், சௌந்தர்யம் அதிகமாகி காட்சியளித்தார். ஒரு சின்னப் பெண் சலுங் சலுங் என்று நடந்துவந்து அவர் காலைத் தொட்டபோது அப்படியே அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்.  புகழின் உச்சியில் இருந்த ஒரு தருணத்தை அவர் மறுபடியும் வாழ்ந்துகொண்டிருந்தார். வீடு திரும்ப இரவு ஒரு மணியாகிவிட்டது. ஆனால் அடுத்த நாள் நடந்த சம்பவம்தான் அத்தனையையும் கெடுத்துவிட்டது.

பத்மினி கேட்ட சகல உணவு வகையும் அகப்படும் ஓர் உணவகம் ரொறொன்ரோவில் இருந்தது. ஓர் ஈழத்துக்காரர்தான் அதை நடத்தினார். பெயர் Hopper Hut. பத்மினியை அங்கே அழைத்துப் போனோம். பத்மினி மெனு அட்டையைப் பார்த்து தனக்கு வேண்டிய அத்தனை உணவு வகைகளுக்கும் ஆணை கொடுத்தார். அப்பம், நண்டு, மீன், றால், கோழிப் பிரியாணி. அப்பத்தின் நடுவில் மீனை வைத்து மடித்து, பின்னர் றாலை வைத்து இன்னொருதரம் மடித்து ருசித்து ருசித்துச் சாப்பிட்டார். பரிசாரகன்  20 வயதுப் பையன். அவன் பத்மினியைக் கவனித்ததாகவே தெரியவில்லை. பத்மினி அவன் முகத்தைப் பார்த்தார், பின்னர் அப்பத்தைப் பார்த்தார். மறுபடியும் பையனின் முகத்தைப் பார்த்தார். அவன் கவனத்தை என்ன செய்தும் திருப்பமுடியவில்லை. இறுதியில் ஆற்றாமல் ‘நான் யாரென்று தெரிகிறதா?’ என்றார்


 மேசை துடைத்த பையன் அரைக் கணம் அந்த வேலையை நிறுத்திவிட்டு ‘தெரியாது’ என்றான். அந்த மேசையை சுற்றிய இலையானின் மேல் அவனுக்கிருந்த கவனம்கூட பத்மினியின் மேல் இல்லை. பில் கொடுத்தபோது மறுபடியும் ‘நான் யார் தெரியுமா?’ என்றார். வாயைத் திறக்காமல் தலையை கிழக்கு மேற்காக ஆட்டினான். இந்த வேதனையை நீடிக்கவிடாமல் நான் ‘இவர்தான் நடிகை பத்மினி' என்றேன். அவன் ‘எந்த பத்மினி?' என்றான். பத்மினியின் அத்தனை நடிப்பும், அத்தனை அழகும், அத்தனை புகழும் அந்த ஒரு வார்த்தையில் அடிபட்டுப் போயின.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-9hIWqP0BD8fQUqOJiqVMWWth8PuHTHbGuB0o0X8pQ3O3b0pq-iv9UUuzTEw7p_-9WEU_vpXXWznBwxQdZ-5UL_tkpshwnx4GaJN9KRf-bnLJi6wbgtB0nLnK6CjtiqFeKqzNNRLTS8s/s1600/padmini_jis_desh.jpg

பத்மினியை விமான நிலையத்தில் ஏற்றிவிடப் போனபோது அவரை மறுபடியும் பார்க்கக்கூடும் என நான் எண்ணவில்லை. அதுவே கடைசி என்று நினைத்தேன். சில மாதங்கள் கழித்து நியூயோர்க்கில்  ஒரு விழாவில் சுதா ரகுநாதன்  பாடினார். ஜி.ராமநாதன் இசையமைத்த ‘பாற்கடல் அலைமேலே, பாம்பணை யின் மீதே’ என்ற ராகமாலிகை. திடீரென்று அந்தப் பாடலுக்கு பத்மினி அபிநயம் பிடிக்கத் தொடங்கிவிட்டார். உலகம் காணவேண்டிய அருமையான காட்சி. இசை அரசியின் பாடலுக்கு நாட்டிய அரசியின் நடனம். பத்மினிக்கு அப்போது வயது 72. அதுவே பத்மினி மேடையில் ஆடிய கடைசி நடனம் என்று நினைக்கிறேன். 


விழா முடிந்த பின்னர் பத்மினியை அமைதியாகச் சந்தித்தேன். நலம்தானா? என்றார். நேரில் பார்க்கும்போதும் டெலிபோனில் அழைக்கும்போதும் அப்படித்தான் பேச ஆரம்பிப்பார். அவர்  முகத்தில் புது ரத்தம் பாய்ந்து அழகாகத் தெரிந்தார். ‘என்ன இன்று இவ்வளவு மகிழ்ச்சி?’ என்றேன். ‘பல நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர் களை முகம் முகமாகப் பார்க் கிறேன்’ என்றுவிட்டு தலையைச் சற்று குனிந்தார். 


தாயின் கையைப் பறித்துக்கொண்டு ஓடும் குழந்தை போல ஒரு முடிக்கற்றை நெற்றியிலே விழுந்தது. அதை அகற்றாமல் என்னைப் பார்த்து சிரித்தார். சட்டென்று மாணவப் பருவத்தில் எனை மயக்கிய மணமகள் படத்து சிரிப்பு ஞாபகத்துக்கு வந்தது. அவர் திரும்பவும் இந்தியாவுக்குப் போய்விடப் போவதாகச் சொன்னார். நான் அதை ஒன்றும் பெரிதாக எடுக்கவில்லை. விடை பெறும்போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். எங்கேயிருந்தாலும் தொடர்பில் இருங்கள் என்று சொன்னேன். சரியென்றார்.



2006-ம் ஆண்டு, 25 ஆம் தேதி செப்டம்பர் மாதம் திங்கள் கிழமை இரவு நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது  செய்தி வந்தது. சென்னையில் ஒரு விழாவுக்கு பத்மினி சக்கர நாற்காலியில் போயிருக்கிறார். இரண்டு வருடத்துக்கு முன்னர் மேடையில் அவர் நடனம் ஆடியது நினைவுக்கு வந்தது. இந்த இடைக்காலத்தில் அவர் சக்கர நாற்காலி ஏறிவிட்டார். 


விழாவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த பின்னர் உயிர் பிரிந்துபோனது என்று சொன்னார்கள். நான்  உண்பதை நிறுத்திவிட்டு கடைசியாக நியூயோர்க் விழாவில் அவரிடம் விடைபெற்றதை நினைத்துக் கொண்டேன். சற்று குனிந்து நெற்றி யில் வழிந்த கூந்தல் வழியாக சிரித்த படி மேல் கண்ணால் என்னைப் பார்க்கிறார் நாட்டியப் பேரொளி.



 நன்றி - த சண்டே இந்தியன்