சினிமாவுக்கு வராவிட்டால், செத்தே போயிருப்பேன்!"
'பரதேசி' பாலா
வாய்மொழி
கண்ணீருதான் ஏழையின்
தாய்மொழி’
- வைரமுத்துவின் பாடல் வரிகள் எடிட்டிங் அறையின் வெளியே சன்னமாகக் கேட்கின்றன.
அதர்வாவா இது? ஆச்சர்யம் கண்களில் விரிய எதிரில் இருந்த புகைப்படங்களில் அடிமைகளின் உறைந்த சரித்திரம். 100 வருடம் வளர்கிற தேயிலைச் செடிகளின் இலைகளைப் பறித்து, நறுக்கிக் குறுக்கி வளரவிடாமல் ஒரு செடியாகவே வைத்திருக்கிற பெரும் சோகம். நாம் அருந்தும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்காக, தேயிலைத் தோட்டங்களில் காலம் காலமாக ரத்தம் சிந்திய கொத்தடிமை உயிர்களின் உலகம்.
எடிட்டிங் அறையில் இருந்து பாலா வெளியே வருகிறார். உரையாடலில் இருந்து...
''பாலா பட வரிசையில் 'அவன் இவன்’ பெரிய ஏமாற்றம் தந்துச்சு. என்ன ஆச்சு உங்களுக்கு?''
''ஒண்ணும் ஆகலையே'' எனச் சிரிக்கிறார். ''சினிமா ஒரு பரமபதம். பகடைகள் இங்கே உருட்டப்பட்டுக்கிட்டே இருக்கும். எப்போ ஏணி... எப்போ பாம்பு வரும்னு தெரியாது. தெரிஞ்சா அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு? 'அவன் இவன்’ உங்க விமர்சனப் பார்வையில் தோல்விதான்.
ஆனா, என்ன விமர்சனம் வந்தா எனக்கென்ன? விஷாலுக்குள் ஒளிஞ்சிருந்த அற்புதமான கலைஞனைக் கண்டு பிடிச்சேன். ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருக்கும் ஆர்யாவை என் கிராமம் வரைக்கும் அழைச்சுக் கிட்டுப் போனேன். என்னோட தயாரிப்பாளரை நிம்மதியா தூங்க வெச்சேன். இது மாதிரி சில நல்ல விஷயங்கள் 'அவன் இவன்’ மூலமா நடந்துச்சு. 'ஜாலியா ஒரு படம் எடேன்’னு சொன்ன உங்களை மாதிரி ஆளுங்களே 'நீ உன் ஸ்டைல்லயே படம் எடுடா’னு கேட்டுக்கிட்ட தால் இப்ப 'பரதேசி’.''
''இந்த மாதிரி டைட்டில்களை எங்கே பிடிக்கிறீங்க? 'பரதேசி’ங்கிற தலைப்பே பயங்கரமா இருக்கே?''
''என்ன பயங்கரமா இருக்கு? நாம எல்லாருமே பரதேசிகள்தான். பிழைக்க வழி இல்லாமல் சொந்த மண்ணைவிட்டுப் பிரியும் ஒவ்வொருத்தனும் பரதேசிதான். படம் எடுக்கிற நானும் பேட்டி எடுக்கிற நீங்களும்கூட பரதேசிகள்தான். கார்ல போற பரதேசியும் இருக்கான்; பிச்சை எடுக்கிற பரதேசியும் இருக்கான். இப்படி 1940-கள்ல டீ எஸ்டேட்டுக்குக் கொத்தடிமையாப் போன பரதேசிகள்ல ஒருத்தன்தான் அதர்வா. நீங்க 'பரதேசி’ங்கிற தலைப்பே பயங்கரமா இருக்குங்கிறீங்க. இதுக்கு முதல்ல வெச்ச பேர்... 'சனி பகவான்’. சிரிக்காதீங்க!''
''விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால்... இப்போ அதர்வா?''
''அதர்வாவைக் கவனிச்சுப் பாருங்க. வெள்ளந்தியா சிரிக்கும்போதும் அவன் கண்ணுல மெல்லிசா ஒரு சோகம் தெரியும். ஒரு நடிகனுக்கு அது பேரழகு. நூறாவது படத்தில் தொட வேண்டிய உச்சத்தைத் தன்னோட மூணாவது படத்திலேயே அதர்வா தொட்டுட்டான்னு நினைக்கிறேன்.''
''ஒரு படத்துக்கான கதையை எப்படி முடிவு செய்றீங்க? 'ரெட் டீ’ நாவலைத்தான் 'பரதேசி’யாப் பண்றீங்களா?''
''அந்தக் களத்தை மட்டும் எடுத்துக்கிட்டு அதுல இந்தப் பரதேசியை இறக்கிவிட்டுஇருக்கேன். இன்ஸ்பிரேஷன் இல்லாம நாம யாருமே இல்லை. ஒரு மனுஷன் அவனோட இருபது வயசு வரைக்கும்தான் வாழ்றான். அப்புறம், வேலை, குடும்பம், குழந்தைகள், அவங்க கல்வினு பிழைப்புதான் எல்லாமே.
நான் தறிகெட்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்து இருக்கேன். அவ்வளவு அனுபவங்கள், மனிதர்கள், தரிசனங்கள் என் மனசுக்குள்ள இருக்கு. உள்ளுணர்வுதான் என்னை நகர்த் துது. என்னைப் பொறுத்தவரைக்கும் கதைனு ஒண்ணு கிடையாது. பாத்திரங்கள் தான். ஒரு காதல், ஒரு துரோகம், ஒரு பகை, ஒரு வலி, ஒரு வெற்றினு அவங்களுக்குள்ளே நடக்கிற பரமபதம்தான் எல்லாம்.
'இருட்டிண்ட ஆத்மா’னு ஒரு மலையாளச் சிறுகதை தந்த பாதிப்புதான் 'சேது’. ராமநாதபுரம் பகுதியில் பார்த்த அகதிகள் முகாம்தான் 'நந்தா’. ஜெயகாந்தனோட 'நந்தவனத்தில் ஒரு ஆண்டி’தான் 'பிதா மகன்’. கமல்ஹாசனின் 'அன்பே சிவம்’, ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்’, காசியில் பார்த்த அகோரிகளின் அமானுஷ்யம் எல்லாம் சேர்ந்து 'நான் கடவுள்’. இது எல்லாத்தையும் சேர்த்துவெச்சுப் பாருங்க. நான் எங்கே கதையை முடிவு பண்றேன்? இங்கே யாரும் சுயம்பு இல்லை!''
''கதாநாயகர்களை வதைக்கிறீங்களே... 'சேது’வில் தொடங்கி 'பரதேசி’ வரை உங்கள் ஹீரோக்கள் எல்லோரையும் 'ஒரு டைப்பாக’ மாத்திடுறீங்களே?''
''படங்கள் கேட்குதே... என்ன செய்ய? சினிமால ஒரு நடிகன் தனியா துருத்திக்கிட்டு தெரியக்கூடாதுனு நினைக்கிறேன். அவனை ஒரு மனுஷனா, அந்தக் கதாபாத்திரமாதான் நீங்க பார்க்கணும். அதுக் குக் கொஞ்சம் மெனக் கெடத்தான் செய்யணும்; 'ஒரு டைப்பா’ மாத்திதான் ஆகணும்!''
''இந்தப் படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?''
''நீங்கள் எதிர்பார்க்காத விஷயங்கள்தான் இருக்கும். கிட்டத்தட்ட என்னைத் தவிர, கேமராமேன் செழியன் முதல் எடிட்டர் கிஷோர் வரைக்கும் எல்லோரும் இதில் புதுசு.
முதல்முறையா என் படத்தில் வைரமுத்து பாடல்கள், ஜி.வி.பிரகாஷ் இசை. 25 வயசுக்கு 25 படங்கள் முடிச்சு நிக்கிறான் ஜி.வி.பிரகாஷ். அவனுக்குள்ள இருக்கிற பணிவும் பக்குவமும் பிரமிக்கவைக்குது. 'பரதேசி’யில பிரமாதப்படுத்தி இருக்கான்.
வைரமுத்து சார்... ஜி.வி.பிரகாஷின் வயசைக் காட்டிலும் கவிஞரின் அனுப வத்துக்கு வயசு பெருசு. அதுவும் இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொண்ணும் கதை பேசணும். மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்துல கெடந்தவன்தான் அதை எழுத முடியும். மொத்தப் படத்தையும் முடிச்சுட்டு வந்து, எடிட் பண்ணிப் போட்டுக் காட்டித்தான் பாடல்கள் கேட்டேன். மூணு மாசமாப் போராடி எடுத்துட்டு வந்த கதைக்கு மூணே வாரத்தில் வலி கூட்டிட்டார். நெஞ்சுக்குள்ள முள்ளு குத்துற தமிழ்!''
''ஆமா, உங்களுக்குப் பெண்கள் மீது மரியாதையே கிடையாதா? உங்க படங்கள்ல ஏன் ஆணாதிக்கம் தலைவிரிச்சு ஆடுது?''
''ஆணாதிக்கம் இருந்ததுங்கிறது உண்மைதான். எனக்கு ஒரு மகள் பிறந்து, அவள் தன்னோட பிஞ்சுக் கைகளால் அடிக்க ஆரம்பிச்சப்பவே எனக்குள் இருந்த, நான் கர்வப்பட்ட ஆணாதிக்க உணர்வு போய்டுச்சு. அவள் கற்றுத்தந்த அன்பு இந்தப் படத்தில் வேதிகா, தன்ஷிகாவுல ஆரம் பிச்சு படத்துல வர்ற ஒரு குட்டிப் பாப்பா வரைக்கும் இருக்கும்!''
''ஜாலியாப் பதில் சொல்லுங்க. பாலாவோட டாப் 10 மாதிரி வெச்சுக்கலாம்...''
''ம்... இது வேறயா?''
''பிடித்த 10 மனிதர்கள்... பிடித்த படைப்புகள் சொல்லுங்களேன்?''
''எம்.ஜி.ஆர். - 'பெற்றால்தான் பிள்ளையா’
சிவாஜி - 'தேவர் மகன்’
கலைஞர் - 'பராசக்தி’
ஜெயலலிதா - 'எங்கிருந்தோ வந்தாள்’
கமல் - 'மகாநதி’
ரஜினி - 'முள்ளும் மலரும்’
பாலுமகேந்திரா - 'வீடு’
போதும்ல?''
''இன்னும் மூணு இருக்கே...''
''இன்னுமா?''
''உங்களுக்குப் பிடிச்ச இயக்குநர்?''
''ருத்ரய்யா, மணிரத்னம், பாலாஜி சக்திவேல்.''
''நீங்க இயக்க விரும்பின நடிகர்கள்?''
''நானா படேகர். ஜோதிகா.''
''பிடித்த நடிகர்கள்?''
''என் பட நாயகர்கள் எல்லோரும். இப்போ தைய மனநிலையில்... அதர்வா. ஹீரோயின்... அனுஷ்கா.''
''சரி, சினிமாவுக்கு வரலைன்னா, என்னவாகி இருப்பீர்கள்?''
''டாக்டராவா ஆயிருப்பேன்... ம்ஹூம்... நான் வாழ்ந்த கேடுகெட்ட வாழ்க்கைக்கு, செத்தே போயிருப்பேன். போதுமா? முடிச்சுக்குங்க!''
நன்றி - விகடன்