தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கும் திரைக்கதை - வசனகர்த்தாக்கள் சிலரிடம், ''நீங்கள் எழுதிய வசனங்களிலேயே, நீங்கள் ரசித்து மகிழ்ந்த வசனம் எது?'' என்று கேட்டோம். அவர்கள் ரசித்த சில வசனங்கள்:
பிரஸ்டீஜ் பத்மநாபன் ரிட்டையரான அன்று வீட்டுக்குள்ளே வந்ததும், தான் யூஸ் பண்ணின டிஃபன் கேரியர்வைத்த கூடையிடம் பேசுவார்: ''நாளைலேருந்து நீ ஆபீஸுக்குப் போக மாட்டே... இன்னி யோடு சரி!'' அடுத்து, கோட்டுகிட்டே சொல்வார்: ''இனிமே யூ ஆர் நாட் நெசஸரி... என் சர்வீஸே கம்பெனிக்கு நாட் நெசஸரின்னுட்டா... இவ்வளவு வருஷம் வேலை செஞ்சோம்... அட, வயசாயிடுத்துன்னு அவன் ஆத்துக்கு அனுப்பிச்சுட் டான்... நானாவது கேட்டிருக்கலாம். நேக்கு ஒரு பிரஸ்டீஜ். பிரஸ்டீஜ் பத்மநாபனோல்லியோ... வந்துடுத்து... குழந்தைகள்லாம் சின்ன குழந்தைகள்... விவரம் தெரியாம வளர்த்துட்டேன்... பொறுப்பு வரல்லே... சாவித்திரிக்கே இன்னும் பொறுப்பு வரலை...'' என்று சொல்லிவிட்டுத் தாயார் படத்தின் முன்னே நின்று, ''அம்மா! நான் ரிட்டையராயிட்டேன்... உன் குழந்தைக்கு 55 வயசாயிடுத்து... ஹி இஸ் கௌன்ட்டிங் ஹிஸ் டேஸ் டு தி க்ரேவ்''னு சொல்லிண்டே அழுவார் சிவாஜி.
கடைசியில் ஆஸ்பத்திரிக்குப் பத்மநாபன் கிளம்பும் முன், தன்னை வளர்த்து ஆளாக்கின அத்தையிடம் பணத்தைக் கொடுத்து... ''நீ காசிக்குப் போகணும்னு சொன்னே பார்... இந்தா, வெச்சுக்கோ'' என்பார். ''இப்ப எதுக்கப்பா?'' என்று அத்தை கேட்பாள்.
''இருக்கட்டும்... வெச்சிக்கோ... நீ முந்திண்டா நோக்கு... நான் முந்திண்டா நேக்கு...'' என்று குலுங்கக் குலுங்க அழுது மற்றவர்களையும் அழவைத்தார் பத்மநாபனாக வரும் சிவாஜி!
ஏ.எஸ்.பிரகாசம்:
'புகுந்த வீடு’ படத்தில் மனைவி ஒரு புதிர் போடுகிறாள். விடுகதைபோலச் சொல்லி விடையும் சொல்லும் அந்த வசனம்: ''சேர்ந்தது ரெண்டு பேரு... சிக்கினது ஒரு புதையல்... ஒருத்தருக்குத் தெரியும், ஒருத்தருக்குத் தெரியாது... இதிலே சேர்ந்தது நீங்களும் நானும்... புதையலைத் தெரிஞ்சது நான். தெரியாதது நீங்க. புதையல்... இப்ப என் வயித்துலே வளர்ந்துக்கிட்டிருக்கற உங்கக் குழந்தை...''
'வீட்டு மாப்பிள்ளை’ படத்தில் மாமனார் சுந்தர்ராஜன் தன் இரு மாப்பிள்ளைகளில் பணக்கார மாப்பிள்ளையைத் தன் 'பைப்’புக்கும், ஏழை மாப்பிள்ளையைச் செருப்புக்கும் உதாரணம் காட்டு வார்.
ஏழை மாப்பிள்ளையான ஏவி.எம்.ராஜன் சொல்வார், ''மாமா!... நீங்க கையிலே பிடிச்சுக்கிட்டிருக்கிற 'பைப்’ உங்களைத் தேச்சிக்கிட்டு இருக்கு... நீங்க கால்லே போட்டிருக்கற செருப்போ உங்களுக்காகத் தேஞ்சிக்கிட்டிருக்கு...''
விசு: 'அவன்... அவள்... அது’ படத்தில் 'குழந்தை மேல் பாசம்கொண்டு சொந்தம் கொண்டாடக் கூடாது’ என்று கண்டிஷன் போடும் லட்சுமியிடம், ஸ்ரீப்ரியா பதில் சொல்வார்: ''பெத்த பொண்ணை ரயில்வே லைன்லே போட்டுட்டுப் பக்கத்து வீட்டுக்காரனோட ஓடினவளுக்குப் பொறந்தவம்மா நான். என் பரம்பரைக்கே பாசம் கிடையாது... நீ என்னை நம்பலாம்...''
'சதுரங்கம்’ படத்தில் லஞ்சம் வாங்காத ரஜினியை லஞ்சம் வாங்கத் தூண்டுவார் பிரமீளா.
பிரமீளா: உங்க ஆபீஸ் கிளார்க் சிவகுமார் தன் பொண்டாட்டிக்கு வைர மூக்குத்தி வாங்கிக் கொடுத்திருக்கார்... என்ன மூக்குத்தி... வைர... வைர... மூக்குத்தி...
ரஜினி: சிவகுமாரோட பொண்டாட்டி ஊர்லே கண்டவனோட போறாளாம்... நீயும் போறியா..? அப்ப நானும் வைர மூக்குத்தி வாங்கித் தரேன்...
மணிவண்ணன்:
'அலைகள் ஓய்வதில்லை’ படத்தில்:
அம்மா: ஏண்டா விச்சு, பேச முடியாம படுத்துண்டிருக்கியா..? இல்லே, பேசக் கூடாதுன்னு படுத்துண்டிருக்கியா?
விச்சு: அம்மா... அவ இல்லாம என்னாலே இருக்க முடியாதும்மா... பசிக்குது... என்னாலே சாப்பிட முடியலே... தூக்கம் வருது... என்னாலே தூங்க முடியலே... நா அவளைப் பார்க்கணும்... அவளோட பேசணும்... அவளோட வாழணும்... இல்லே, அவளோட சாகணும்மா...
அதே படத்தில் இன்னொரு சீன்ல...
பாதிரியார்: கவலைப்படாதீங்க... கர்த்தரோட ஆசீர்வாதத்தால் எல்லாம் நல்லபடியா நடக்கும்மா...
அம்மா: எல்லாம் நல்லபடியா நடந்தா சரிங்க... அது கர்த்தரோட ஆசியிலே நடந்தாலும் சரி, கந்தனோட கருணையாலே நடந்தாலும் சரி...
மௌலி:
பள்ளிப் பருவத்தில் தன் தந்தை மிகவும் கண்டிப்பாகத் தன்னை வளர்த்ததைத் தனக்கு இழைத்த கொடுமையாக எண்ணிக்கொண்டு தன் மகனுக்கு அளவுக்கு மீறி வசதிகள் செய்துதருகிறார் தந்தை. இதனால் பாட்டனார் உள்ளே இருக்கும் ரூமில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்து வாசல் கதவு வரை வந்துவிடுகிறார்.
வாய் மூடிக்கிடக்கும் பாட்டனாரைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வீட்டுக்கு வரும் குடும்ப நண்பன் கான் ஆச்சர்யப்பட்டுக் கேட்கிறான்.
கான்: என்ன பெரியவரே... இங்க மூலையிலே குந்தியிருக்கீங்க...?
பெரியவர்: பேரனுக்கு விவரம் தெரியாம இருந்தப்ப உள்ளாற இருந்தேன். விவரம் தெரிஞ்சுது - ஹாலுக்கு வந்தேன். வேலைக்குப் போனான் - இங்கே வந்துட்டேன். நாளைக்கு வெளியே வராந்தாவில் போடறதுக்குள்ளாற போயிடணும்பா...
'ஒரு வாரிசு உருவாகிறது’ படத்தில் இடம்பெறும் இந்த வசனத்தை வயதானவர்களும் ரசிப்பார்கள் என நம்புகிறேன்!
நன்றி - விகடன்