Showing posts with label 66ஏ. Show all posts
Showing posts with label 66ஏ. Show all posts

Saturday, March 16, 2013

66ஏ எது சரி... எது தப்பு? -ஃபேஸ்புக், ட்விட்டர் - 140 பேர் மீது வழக்கு

66ஏ எது சரி... எது தப்பு?
பாரதி தம்பி

ஃபேஸ்புக்கில் யாரோ போட்ட ஸ்டேட்டஸுக்கு லைக் போட்டுவிட்டு ஒரு டீ குடிக்க வந்திருக்கிறீர்களா? எச்சரிக்கை... திரும்பிச் செல்லும்போது உங்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு இருக்கலாம். 'ஒரு லைக் போடுறது குத்தமாய்யா?’ என்று நீங்கள் அலறினாலும், இந்தியாவில் இப்போது இதுவே யதார்த்தம். 

கேரளா-சூரியநெல்லி பெண் பாலியல் பலாத்கார வழக்கில் பி.ஜே.குரியனுக்கு ஆதரவாக இருக்கும் மகளிர் காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணாவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து எழுதிய; அதை ஷேர் செய்துகொண்ட 140 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது கேரளக் காவல் துறை. சமூக இணையதளத்தில் சொன்ன கருத்துக்காக இத்தனை அதிகம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை. 


 இந்தியாவில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களும், பொதுச் சொத்தைச் சூறையாடியவர்களும் எந்த வம்பு வழக்கும் இல்லாமல் சொகுசாக இருக்க... ஃபேஸ்புக்கில் தனது கருத்தை வெளியிட்ட ஒரே காரணத்துக்காக வழக்குப் போட்டிருப்பது இணைய உலகை அதிரவைத்திருக்கிறது.


''கருத்துச் சுதந்திரத்துக்கு இதைவிட நெருக்கடியான காலம் இருக்க முடியாது'' என்று ஒரு சாரார் சொல்லிவரும் நிலையில், சமூக வலைதளங்களில் சொல்லப்படும் பொறுப்பற்ற கருத்துகள்குறித்த விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. இரண்டையும் இணைத்து இங்கே விவாதிப்போம்...


முதலில் ஃபேஸ்புக் கருத்துக்குச் சட்டப்பூர்வ நடவடிக்கை என்பது இது முதல்முறை அல்ல; சில மாதங்களுக்கு முன்பு தமிழ் சினிமா பின்னணிப் பாடகி சின்மயி, ட்விட்டரில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் சிலர் சின்மயியை விமர் சித்தனர். இதற்காக சின்மயி போலீஸில் புகார் கொடுக்க, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். 


இதன் பிறகு, புதுச்சேரியைச் சேர்ந்த ரவி சீனிவாசன் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்பற்றி விமர்சிக்க... அதிரடியாக அவரும் கைது செய்யப்பட்டார். இவை மாநில அளவில் நடந்ததால் தேசிய கவனத்தைப் பெறவில்லை. அதன் பிறகு, பால் தாக்கரே மரணம் அடைந்தார். மும்பையே ஸ்தம்பித்தது. இதை விமர்சித்து, ''ஒருவரின் மரணம்குறித்து நமக்கு எழும் மரியாதை இயல்பானதாக இருக்க வேண்டும். கட்டாயப்படுத்திப் பெறக் கூடாது'' என ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் இட்டார் கள் இரு மாணவிகள். கடும் எதிர்ப்புகள் எழுந்ததும் இருவரும் கைது செய்யப்பட்டனர். 



சம்பவம் நிகழ்ந்தது மும்பை என்பதால், இது தேசியச் செய்தியானது. எக்கச் சக்கக் கண்டனங்கள் எழவே, கைது உத்தரவு பிறப்பித்த மாஜிஸ்திரேட் இடமாற்றம் செய்யப்பட்டார். கைது செய்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப் பட்டனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகாராஷ்டிர அரசைக் கடுமையாகக் கண்டித்ததோடு, இதுவரை இணையதளக் கருத்துகளுக்காக நடவடிக்கை எடுத்திருக்கும் மேற்கு வங்காளம், புதுச்சேரி, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பிறகு, இந்த வழக்கின் நிலவரம் என்ன ஆனது என்று தெரியவில்லை; இப்போது கேரளாவில் 140 பேர் மீது வழக்கு பாய்ந்து இருக்கிறது.


இந்த வழக்குகள் அனைத்தும் 66ஏ என்ற சட்டப்பிரிவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இணையதளம் வழியாக வெளியிடப்படும் கருத்து ஒருவரை அச்சுறுத்தினால்; தொந்தரவு செய்தால்; சங்கடம் ஏற்படுத்தினால், புகார் அளிப்பதற்கு இந்தச் சட்டம் இடம் அளிக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படலாம். இந்தச் சட்டம் அரசியல் சட்டம் வழங்கும் சுதந்திரக் கருத்துரிமைக்கு எதிரானதாக இருப்பதால், இதை சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ். அந்த வழக்கு நடந்துகொண்டு இருக்கிறது. அரசின் நடவடிக்கைகளும் தொடர்கின்றன.



ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் முன்னெப்போதும் இல்லாத வாசலை மக்களுக்குத் திறந்துவிட்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு சமூகப் பிரச்னைகுறித்த தனது கருத்தை ஒருவர் உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் எனில், பத்திரிகைகளும் தொலைக் காட்சிகளும் மட்டுமே ஒரே வழி. அதேபோல 'கருத்து சொல்வதற்கு’ நீங்கள் 'வி.ஐ.பி’-யாக அல்லது குறிப்பிட்ட விஷயத்தில் நிபுணராக இருக்க வேண்டும். சமூக வலைதளங்கள் இந்த இரண்டு எல்லைகளையும் உடைத்துவிட்டன. யாரும், எதைப் பற்றியும் கருத்து வெளியிடலாம். அந்தக் கருத்து சரியானதாகவோ, தவறானதாகவோ, முட்டாள்தனமாகவோ, விஷமத்தனம்கொண்டதாகவோ இருக்கலாம். ஆனால், உங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் அதை எழுத முடியும். பல்லாயிரம் பேர் அதைப் படிக்க; பகிர முடியும். புகழுக்கும் அங்கீகாரத்துக்கும் ஏங்கும் மனித மனதின் ஆசைகளுக்கு மேடை அமைத்துத் தந்து 'நீங்களும் வி.ஐ.பி-தான்’ என்று ஒவ்வொருவரையும் திருப்தியடையவைக்கின்றன சமூக இணையதளங்கள்.



குறிப்பாக, அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதமும், காரியவாதமும் ஃபேஸ்புக்கில் தயவுதாட்சண்யம் இன்றி விமர்சிக்கப்படுகிறது. அதை எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் படித்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும். இப்படி செல்வாக்கு மிக்கவர் களைத் துணிவுடன் விமர்சிப்பது, இப்போது உள்ள சூழலில் சமூக இணையதளங்களில் மட்டுமே சாத்தியம். மன்மோகன் சிங் பற்றிய ட்விட்டர், ஃபேஸ்புக் விமர்சனங்களைத் தொகுத்தால், நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளியிடலாம்.



உண்மையில் சமூக வலைதளங்கள் மனிதகுலத்தின் மகத்தான வரம். இவை மாபெரும் அறிவுச் சுரங்கத்தைத் திறந்துவிட்டிருக்கின்றன. ஆனால், இன்னொருபுறம் இந்தக் 'கட்டற்ற வெளி’ பொறுப்பின்மையைப் பொதுப் பண்பாக வளர்க்கிறது. மனதின் வக்கிரங்களுக்கு வடிகால் அமைத்துத் தருகிறது. விலைவாசி உயர்வு முதல் விலைஇல்லா அரிசி வரை; காஷ்மீர் அடக்குமுறை முதல் காவி பயங்கரவாதம் வரை பற்றி எரியும் மக்கள் பிரச்னைகள்குறித்து எந்தத் தெளிவும் அக்கறையும் இல்லாமல் மேலோட்டமாகக் கிண்டல் செய்து நகர்ந்து செல்வதற்கு சமூக இணையதளங்கள் கற்றுத்தருகின்றன.


 இதன் மூலம், ஆளும் சக்திகள் செலுத்தும் அடக்குமுறையை ஏற்றுக்கொள்வதற்கு மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பயிற்றுவிக்கின்றன. ஃபேஸ்புக்கில் இரண்டு வரி ஸ்டேட்டஸ் எழுதிவிட்டு, சமூகத்துக்காகப் போராடிவிட்டதாகத் திருப்திப்பட்டுக்கொள்பவர்கள் அநேகம் பேர். இது அரசாங்கத்துக்கு வசதியானது. நாட்டைச் சுரண்டு பவர்களுக்கு எதிராகப் பெரும் எண்ணிக்கையில் திரண்டு போராடாமல், பெயருக்கு நாலு வரி எழுதிவிட்டு ஒதுங்கிக்கொள்வது அரசுக்குத் தொந்தரவு இல்லாத அம்சம்தானே?



''அப்படி முழுக்கவே ஒதுக்கிவிட முடியாது. சமூக இணையதளங்கள் என்ற நவீன தொழில்நுட்பத்தை நியாயம் பெறுவதற்கான கருவியாகவும் பயன்படுத்த முடியும். 'மல்லிகைப் புரட்சி’ என்று அழைக்கப்பட்ட துனிஷிய மக்கள் புரட்சிக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாகவே மக்கள் திரண்டனர். எகிப்து நாட்டின் மக்கள் புரட்சி அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்டபோது, சமூக இணையதளங்கள்தான் மக்களுக்கான ஒரே ஊடகமாக இருந்தன. இன்றைய நிலையில் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு நிறையக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவற்றால் ஓர் அளவுக்கு மேல் அரசுக்கு எதிராகச் செயல்பட முடியாது. சமூக இணையதளங்கள் அப்படி இல்லை. இங்கு சுதந்திரமாகச் செயல்பட முடியும். அதனால்தான் உலகின் பல நாடுகள் சமூக இணையதளங்களைக் கட்டுப்படுத்தத் துடிக்கின்றன!'' என்கிறார் கள் இவற்றின் ஆதரவாளர்கள்.



ஆனால், சமூக இணையதளங்களின் நோக்கம் எல்லோரது கருத்தையும் உலகத்துக்குக் கொண்டு சேர்ப்பது அல்ல. அவை இதை ஒரு வியாபாரமாகவே பார்க்கின்றன என்பதோடு, அந்தந்த நாட்டின் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டே சமூக இணையதளங்கள் இயங்கு கின்றன. தன்னால் கண்காணிக்க முடியாத எந்த ஒன்றை யும் அரசாங்கம் செயல்பட அனுமதிப்பது இல்லை. ஆகவே, இதை ஒரு நிபந்தனையற்ற சுதந்திரமாகப் புரிந்துகொள்வது சரியானது ஆகாது.



குறிப்பாக, இணையதளக் கருத்துக்காக வழக்கு; கைது என்ற அரசின் நடவடிக்கையை எடுத்துக்கொள்வோம். 'கருத்துக்குக் கைது’ என்பதை யாரும் ஆதரிக்கப்போவது இல்லை. ஆனால், ஃபேஸ்புக்கில் எழுதலாம் என்பதற்காக எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுத முடியுமா? அதற்கு என்ன வரம்பு? முதலில், தான் வெளியிடும் கருத்து பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்குச் சென்று சேரப்போகிறது என்ற பொறுப்பு உணர்ச்சி அதை வெளியிடுபவர்களுக்கு வர வேண்டும். எழுதியதை வெளியிடும் முன்பு சுய தணிக்கை செய்து கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலா னோரிடம் அது இல்லை.



இதற்கு முன்பு சீரியஸான கட்டுரைகள் சில இணையதளங்களில் எழுதப்படும். அரட்டைத் தளங்கள் தனியே இருக்கும். புகைப்படங்கள்; வீடியோக்கள் வெளியிடும் தளங்கள் தனியே செயல்படும். ஃபேஸ்புக் வந்து இவை அனைத்தையும் ஒரே இடத்துக்குக் கொண்டுவந்துவிட்டது. இது ஒரு டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர். இங்கு புரட்சியும் கிடைக்கும்; புடலங்காய் கூட்டு செய்முறையும் கிடைக்கும். போர்க் குற்றம்பற்றியும் படிக்கலாம்; போர்னோகிராஃபியும் பார்க்கலாம். 'அனைத்தும் ஒரே இடத்தில்’ என்ற இந்த உத்தி அந்தத் தளத்தின் வியாபார வெற்றிக்கு வழிவகுத்திருக்கலாம். ஆனால், அவற்றைப் பயன்படுத்தும் மக்களின் மனதில் 'அனைத்தும் ஒன்றே’ என்ற மனநிலையை இது உருவாக்குகிறது. தனித்தனியே பிரித்துப் பகுத்துப் பார்க்கும் ஆய்வு மனப்பான்மை பலருக்கும் இல்லாத நிலையில் இதன் ஜிகினாத்தன்மையில் மனதைப் பறிகொடுக்கின்றனர். இதன் உண்மையான ஆபத்து இதுவே.




'அவன் ஒரு பட்டு வேட்டிபற்றிய கனவில் இருந்தபோது, கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது’ என்று எழுதியிருப்பார் வைரமுத்து. ஃபேஸ்புக் என்ற பட்டு வேட்டிக் கனவில் இருப்பவர்கள் உஷாராக வேண்டிய தருணம் இது!
thanx - vikatan

Wednesday, December 26, 2012

செக்‌ஷன் 66 ஏ நம் மீது பாயாமல் தற்காத்துக்கொள்வது எப்படி?

ட்விட்டர் பாலிடிக்ஸ்

66A வந்தாச்சு வாய்ப்பூட்டு!

ப்ரியன்

கடந்த அக்டோபர் மாதம் முப்பதாம் தேதி. மணி காலை ஐந்து. புதுச்சேரி குறிஞ்சி நகர் ஒன்பதாவது குறுக்குத் தெருவின் அமைதியைச் சீர்குலைத்தவாறு, போலீஸ் ஜீப் ஒன்று சிறு தொழிலதிபர் ரவி சீனிவாசன் வீட்டின் முன் நிற்கிறது. உள்ளே வந்த போலீஸ்காரர்கள் காலிங் பெல்லை அடிக்கிறார்கள். மகனை டியூஷன் கூட்டிக் கொண்டு போக வந்திருக்கும் ஆட்டோ டிரைவர்தான் என சற்று மெதுவாகவே வந்து கதவைத் திறந்தார் ரவியின் மனைவி. பார்த்தால் போலீஸ். கலவரமாகி உள்ளே போய் கணவரை எழுப்புகிறார். அவரும் சற்றுக் குழப்பத்துடனே வாசலுக்கு வருகிறார்.
நாங்க போலீஸ்... நீங்க தானே ரவிஎன்று ஒருவர் கேட்க, ‘ஆமாம்என்று ரவி சொல்லஎங்க கூட வாங்க உங்களைப் பற்றி புகார் வந்திருக்கு.’
ரவிக்கு திடீரென்று சந்தேகம். ‘வந்திருப்பவர்கள் போலீஸ்காரர்கள் தானா?’ சுதாரித்துக் கொண்டு .டி. கேட்க போலீஸுக்கு வழக்கமான கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. ‘ஒழுங்கா ஸ்டேஷனுக்கு வந்து பேசிக்கோங்கஎன்று ரவியை பேண்ட் போடக் கூட அனுமதிக்காமல், செல் எடுத்துக் கொள்வதைத் தடுத்து, ஷார்ட்ஸ்ஸோடு அழைத்துக் கொண்டு போனார்கள். ரவியின் மனைவிக்கும் மாமனாருக்கும் இந்த அதிரடி ஒன்றும் புரியவில்லை. எல்லாம் நிமிடத்துக்குள் நடந்து விட்டது. ‘கணவரை எங்கே கூட்டிப் போகிறார்கள்என்ற பயம் மனைவிக்கு தொற்றிக் கொண்டது.

எனக்கே பெரிய ஷாக். நான் சட்டத்தை மதிக்கும் சாதாரண குடிமகன். ஏதோ பெரிய கிரிமினல் குற்றம் செய்தது போல் போலீஸ் கூட்டிப் போகிறதே... குழப்பம். ஏதாவது ஆள் மாறாட்டமா... யோசனையில் ஆழ்ந்தேன்" என்று சொல்லும் ரவியின் கண்களில் சம்பவம் நடந்து முப்பது நாட்களாகியும் பயம் தெளியவில்லை. ஜீப்பில் போகும்போது, ‘கம்ப்யூட்டரில் என்ன எழுதினீங்க... கார்த்திக் சிதம்பரம் பற்றி...’ என்று எஸ்..கேட்க, அப்போதுதான் ட்விட்டரில் கார்த்திக் சிதம்பரம் பற்றி ஒரு கருத்து சொன்னது அவர் நினைவுக்கு வந்தது. ‘வதேராவை விட கார்த்திக் சிதம்பரத்துக்கு அதிக சொத்துகள் இருக்குஎன்பதுதான் ரவி போட்ட செய்தி.



 ‘இதன் காரணமாகத் திட்டமிட்டு என் புகழுக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவும்என்று முதல் நாள் இரவு கார்த்தி அனுப்பிய ஃபேக்ஸ் புகார் மீதுதான் அத்தனை அவசர நடவடிக்கை எடுத்திருக்கிறது புதுச்சேரி போலீஸ். அண்ணா ஹசாரேயின்ஊழலுக்கு எதிரான இந்தியாஅமைப்பின் சுறுசுறு ஆர்வலர் ரவி. கேஜரிவால், வதேராவைப் பற்றிய ஊழல் செய்திகளை அம்பலப்படுத்தியபோது கார்த்தியைப் பற்றிய கருத்தை டுவிட்டரில் பதிவு செய்தார் ரவி.

என் ட்விட்டரைத் தொடருபவர்கள் மொத்தம் 16 பேர். இவர்கள் என் நண்பர்கள். உறவினர்கள். கருத்துப் பரிமாற்றம் எங்களுக்குள்தான். ஒரு வருடத்துக்கு முன் சிதம்பரத்தைப் பற்றியும் எனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன். அதையும் குறிப்பிட்டு, ‘என் குடும்பத்தைத் திட்டமிட்டு களங்கப் படுத்துகிறார்கள்என்று புகார் கொடுத்திருக்கிறார் கார்த்தி. என்னைப் பிடித்துப் போன போலீஸுக்கு ட்விட்டர் என்றால் என்ன என்று கூடத் தெரியவில்லை.


 பகல் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து விட்டு மாலையில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினார்கள். பின்னர்தான் ஜாமீன் கிடைத்தது. 2008, தகவல் தொழில்நுட்பச் சட்டம், பிரிவு 66A ன் கீழ் என் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்தச் சட்டப் பிரிவு மூலம் அரசியல் சட்டம் நமக்கு உறுதியளித்துள்ள கருத்துச் சுதந்திரத்துக்கு பேராபத்து வந்திருக்கிறது," என்கிறார் ரவி சீனிவாசன்.
இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல; ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் கருத்துச் சொன்ன பலர் இந்த 66A சட்டப்பிரிவின் கீழ் மாட்டிக் கொண்டு கேஸ், ஜெயில் என்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வலைத்தளம் வழியாக விமர்சனம் செய்த ஒரு கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுத்தார் மம்தா பானர்ஜி.

‘மும்பையில் கடைகள் மூடப்பட்டது பால் தாக்கரேயின் மீதுள்ள மரியாதை அல்ல; பயம்என்று சமூக வலைத்தளத்தில் கருத்துச் சொன்ன இரு இளம்பெண்கள் போலீஸால் கைது செய்யப்பட்டார்கள். (இதனால் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்) பாடகி சின்மயி சர்ச்சைக்குரிய விஷயங்களில் தமது கருத்தை ட்விட்டரில் போட, விவாதத்தின் தொடர்ச்சியில் சின்மயி மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள்தனிப்பட்டவகையில் போக, அவர் புகார் கொடுக்க இருவர் மீது வழக்குப் பாய்ந்தது. சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவன தொழிற்சங்க விவகாரத்தில், கோஷ்டிப் பூசலில் அரசியல் செல்வாக்குமிக்க ஒரு கோஷ்டி மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்த இருவரை இதே 66A- ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வைத்து 12 நாட்கள் ஜெயிலில் வைத்து விட்டது.


 ‘நாடு முழுவதும் இந்தச் சட்டப் பிரிவு கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே இதை உடனே சட்டப் புத்தகத்திலிருந்து எடுக்க வேண்டும்என்று மனித உரிமை ஆர்வலர்களும், சமூக வலைத்தள ஆர்வலர்களும் களத்தில் குதித்திருக்கிறார்கள். வரும் காலத்தில் இவர்கள் குரல் இன்னமும் பலமாகவே ஒலிக்கும். புதுச்சேரி ரவியிடம் தொலைபேசியில் பேசிய சுப்பிரமணியம் சுவாமி, அவருக்காக நீதிமன்றத்தில் வழக்காடத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

அதேநேரத்தில் சமூக நிலையைப் பற்றிப் புரிதலோ, ஆர்வமோ பலருக்கு இருப்பதில்லை. கருத்தைப் பதிவு செய்பவர்கள் எல்லோருமே, சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிபுணர்களாகவோ, தொடர்புடையவர்களாகவோ இருப்பதில்லை. மின்னலெனப் பளிச்சென்று மனத்தில் தோன்றியதை உடனே பதிவு செய்கிறார்கள். இதனால் கோபம், பகை உருவாகி, வம்பு வழக்கு என்று வந்து சேருகிறது.
சமூக வலைத்தளங்கள் எல்லையற்ற பரந்த தளம். அவற்றைக் கையாள்வதற்கு சுயகட்டுப்பாடு தேவை" என்கிறார் பிரபல தினசரி பத்திரிகையின் வலைத்தள ஆசிரியர். ஒரு பதிவர் தாம் தொடங்கி வைத்த விவாதத்தின் மீது வரும் கருத்துக்கள் அது தனிப்பட்ட தாக்குதலாக மாறும்போது, அந்த நபரை தமது பதிவை விட்டு நீக்க முடியும். வேண்டும் என்றே விவாதத்தில் தொடர்ந்தால் நிலைமை இன்னமும் மோசமாகும்.

மேலும் சமூக வலைத்தளங்களில் உள்ள பதிவர்கள் நண்பர்கள், உறவினர்கள் என்று குழு ஒன்றை உருவாக்கிக்கொண்டு செயல்பட்டால் கருத்துப் பரிமாற்றம் அவர்களுக்குள்ளேயே ஆரோக்கியமாக இருக்கும். இதைவிட்டு பதிவர்கள், தங்கள் கருத்துக்களை பொது மக்கள் கவனிப்புக்கு (Public domain) விஸ்தரிக்கும்போது கற்களும் வீசப்படலாம்; மலர்களும் கொடுக்கப்படலாம்.
நான்கு நண்பர்கள் அவர்களுக்கு ஒரு அரசியல்வாதியைக் குறித்துப் பேசும்போது எப்படியும் பேசிக் கொள்ளலாம். ஆனால் அதையே ட்விட்டரில் பதிவுசெய்தால் விபரீதம்.

மும்பையே கலவர பீதியில் இருக்கும் போது தாக்கரேயைக் குறித்து அப்படிச் செய்தியைப் போட்டிருக்கக் கூடாது. இந்தச் சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்தி, நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்குபவர்களும், வதந்தியைப் பரப்பியவர்களும் இருக்கிறார்கள். எனவே கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கும், சட்டவிரோதமாகச் செயல்படுவதைத் தடுக்கவும் சட்டங்கள் தேவை. தண்டனைகள் மூலமே தவறுகள் குறையும்" என்கிறார் அந்த வலைத்தள ஆசிரியர்.
கம்ப்யூட்டர் வழியாக ஒருவரை அச்சுறுத்தும்படி செய்தியை, கருத்தைப் பதிவு செய்வது, அதன்மூலம் தொந்தரவு, எரிச்சல், சங்கட மேற்படுத்துவது ஆகியவை தகவல் தொழில் நுட்பச் சட்டப் பிரிவு 66A-ன் கீழ் மூன்றாண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய அல்லது அபராதம் அல்லாத தண்டனைக்குரியது. இதைச் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும்" என்று உயர்நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார் மனித உரிமை ஆர்வலர் .மார்க்ஸ்.

அரசியல் சட்டம் பிரிவு 19(2)ன் கீழ் நமக்கு அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்துக்கு முரணான பிரிவு இது. தகவல் தொழில் நுட்பச் சட்டம் முதலில் கொண்டு வந்தபோது இந்தப் பிரிவு இல்லை. அப்புறம்தான் திருத்தம் கொண்டு வந்து சேர்த்தார்கள். சமூக வலைத்தளங்களில் சொல்லும் கருத்தையே பொது இடங்களில் பேசினாலோ, எழுதினாலோ தண்டனை அவதூறு வழக்குத்தான் போட முடியும்.
கார்த்தி சிதம்பரம் பற்றி பொதுமேடைகளில் இன்னமும் மோசமான விமர்சனம் வைக்கப்படுகிறதே. அதற்கெல்லாம் வழக்குக் கிடையாது. ட்விட்டரில் கண்ணியமான விமர்சனக் கருத்து சொன்னால் வழக்கா? கருத்துகளால் பாதிக்கப்பட்டால் அவதூறு சட்டப்படி வழக்குப் போட்டு நிவாரணம் பெறலாமே. அதைவிட்டு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை பயமுறுத்தும் கிரிமினல் பிரிவுகள் எதற்காக? வலைத்தளங்களில் விவாதங்கள் தொடர்ச்சியாக நடக்கும் போது பதிவர்கள் ஆணித்தரமான பதில்களை வைக்கும் அளவுக்கு திறமையானவர்களாக இருக்க வேண்டும்.
கார்த்தி சிதம்பரம் கோபப்படாமல் எங்கே... நிரூபியுங்கள்?" என் றல்லவா எதிர் சவால் விட வேண்டும். அதை விட்டு வாய்ப்பூட்டுப் போடும் விதமாக வழக்கைப் போடத் தூண்டுவது எந்தவிதத்தில் சரி? 66A பிரிவை நீக்கும்வரை எங்கள் போராட்டம் தொடரும்," என்கிறார் மார்க்ஸின் வழக்கறிஞர் ரஜினி.

மெத்தப் படித்த வழக்கறிஞரும் அமைச்சருமான கபில்சிபல், ‘66A குறிப்பிடுவது ஜாமீனில் வரக்கூடிய குற்றம்தான்என்று அடக்கி வாசிக்கப் பார்க்கிறார். இது அநியாயம்" என்கிறார் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த ஹென்றிடிபேன்.
கைது செய்த பிறகுதானய்யா ஜாமீன். எங்கள் கேள்வியே எதற்குக் கைது? மாற்றுக் கருத்துகளோ விமர்சனங்களோ இருக்கக் கூடாது என்று கருதும் அரசியல்வாதிகள் ஏற்பாடுதான் இந்தக் கொடுமையான சட்டப் பிரிவு. கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கும் இவர்களைப் பற்றிய குற்றச்சாட்டுகளோ, விமர்சனமோ சமூக வலைத்தளங்களில் வரக்கூடாது என்பதுதான் நோக்கம். ஏனென்றால் இந்தச் சமூக வலைத்தளங்கள் இன்று கருத்துகளை உருவாக்கும் மாபெரும் தளங்களாக மாறிவிட்டனவே," என்கிறார் அவர்.
மொத்தத்தில் இந்த விவகாரம் இன்னமும் சூட்டைக் கிளப்பும் வகையில் வெடிக்கப் போகிறது. கருத்தோடு கருத்து மோதலாமே தவிர, கண்ணியமான கருத்துகளுக்கு சிறை வாசம் என்ற நிலை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதே
 
 
நன்றி - கல்கி , புலவர் தருமி