Showing posts with label 555. Show all posts
Showing posts with label 555. Show all posts

Sunday, April 21, 2013

555 - பூ இயக்குநர் சசி பேட்டி

எனக்குனு எந்த இலக்கையும் நான் ஃபிக்ஸ் பண்ணிக்கலை. வருஷத்துக்கு ஒரு படம் எடுத்தே ஆகணும்னு யோசிச்சதும் இல்லை. மனசில் தோணும் கதை எப்ப என்னைப் பிடிச்சுத் தள்ளுதோ, அப்பதான் படம் இயக்குவேன். தரமான படத்தைத்தான் தருவேனே தவிர, தப்பான படத்தைத் தர மாட்டேன்!''- சின்னதாகப் புன்னகைக்கிறார் இயக்குநர் சசி. 15 வருடங்களில் ஐந்து படங்கள் மட்டும் இயக்கியவர், 'பூ’வுக்குப் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து 'ஐந்து ஐந்து ஐந்து’ என்ற தலைப்போடு வருகிறார்.


''அதென்ன 'ஐந்து ஐந்து ஐந்து’?''


''அது பார்க்க வெறும் நம்பரா தெரியும். ஆனா, அதான் படத்தோட மெயின் சப்ஜெக்ட். பரத், சாஃப்ட்வேர் இன்ஜினீயர். வெளிநாட்டில் வேலை பார்த்து செட்டில் ஆகணும்கிறது அவரோட கனவு. திடீர்னு ஒரு விபத்து பரத்தின் எதிர்காலத்தைச் சிதைக்குது. அதிலிருந்து மீண்டு தன் இலக்கை அடைகிறாரா, இல்லையா என்பதுதான் படம்!''


''திறமைசாலினு நிரூபிச்சும் இன்னமும் முன்னணி ஹீரோ அந்தஸ்து பரத்துக்குக் கிடைக்கலையே?''


''அவரோட சில தப்பான சாய்ஸ்கள்தான் அதுக்குக் காரணம். ஆனா, இந்தப் படம் நிச்சயம் பரத்தின் அடையாளத்தை மாத்தும். அவர் மேல இருக்கும் எல்லா அழுக்கையும் துடைக்கிற அளவுக்கு உழைச்சிருக்கார். அதே மாதிரி சந்தானம் வழக்கமான ஃப்ரெண்ட் கேரக்டர்ல, இந்தப் படத்துல நடிக்கலை. பரத்துக்கு அண்ணனா காமெடி ப்ளஸ் குணச்சித்திர ரோல்ல கலக்கி இருக்கார். 'முதல் தடவையா கிளிசரின் போட்டு அழச் சொல்றீங்க’னு ஆச்சர்யத்தோட நடிச்சார் சந்தானம்!''


'' 'பூ’ படம் இப்போ ரிலீஸ் ஆகியிருந்தா, இன்னும் அதிக அளவில் ரீச் ஆகி இருக்கும்னு நினைக்கிறீங்களா?''


''கல்யாணத்துக்குப் பிறகும் காதலன் மேல அன்புடனும் அதே சமயம் கணவனுக்கு நேர்மையாகவும் இருக்கும் பெண்தான் 'பூ’ ஹீரோயின் மாரி. அந்தப் படம் இப்போதைய சூழ்நிலையிலும் ஓடாது. ஒருவேளை 25 வருஷங்களுக்கு அப்புறம் ரிலீஸானால் ஓடலாம். இதுதான் உண்மை. கோயில் கொடைக்குப் போறேன்னு புருஷன்கிட்ட சொல்லிட்டு, விழுந்தடிச்சு அம்மா வீட்டுக்கு ஓடி வர்ற பொண்ணு அரக்கப் பறக்க சாப்பிட்டதும், வேகாத வெயில்ல பனைமரம் பக்கம் வருவா. குட்டிப் பனைமரத்தைப் பார்த்துட்டு சந்தோஷத்துல கட்டிப் பிடிச்சுக்குறவ, பெரிய பனைமரத்தை சுத்திச் சுத்தி வருவா. அவளுக்கு வேறொரு ஆணோட கல்யாணமாகிட்டதால, ஹீரோவா நினைக்குற பெரிய பனைமரத்தைத் தொடமாட்டா. ஆனாலும், அந்த மாரியை மக்கள் ஏத்துக்கல. 


க்ளைமாக்ஸ்ல மாரி உடைஞ்சு அழும்போதாவது ரசிகர்கள் சமாதானமடைவாங்கனு எதிர்பார்த்தேன். அதுவும் நடக்கலை. 'கல்யாணம் ஆனவளுக்குப் புருஷன் இருக்கானே? எப்படிப் பழைய காதலை நெனச்சுப்பார்க்கலாம்?’னு கேள்வி கேட்டாங்க. ஆனா, இதையே 'அழகி’ படத்துல பார்த்திபன் பண்ணும்போது கை தட்டிக் கண்ணீர் மல்கி ஏத்துக்கிட்டாங்க. இன்னும் 25, 50 வருஷங்கள் கழிச்சு, 'அப்பவே அப்படி ஒரு படம் பண்ணியிருக்காங்க’னு ஆச்சர்யப்பட்டு 'பூ’ படத்தைக் கொண்டாடுவாங்க!''



''தமிழ்ல எவ்வளவோ நல்ல இலக்கியக் கதைகள் இருந்தும் படமாக உருவெடுப்பது இல்லையே... ஏன்?''


''சென்ட்ரல் ஸ்டேஷன்ல கேமரா வெச்சுப் பார்த்தா, வாசல்ல இருந்து புத்தகக் கடை நோக்கி ஓடி வர்றவங்க குறைவு. பிளாட்ஃபார்ம்ல டாப் ஆங்கிள் ஷாட் வெச்சா யார் புத்தகம் படிச்சுக்கிட்டே போறாங்கனு பார்க்கலாம். இப்போ புத்தகம் வாசிக்கிற பழக்கமே குறைஞ்சுபோச்சேங்கே. அதிர்ஷ்டவசமா என் பொண்ணு நிறையப் படிப்பா. அவ கண் மூடித் தூங்கிட்டு இருந்தா, பக்கத்துல ஏதாவது ஒரு புத்தகத்தின் பக்கங்கள் விரிஞ்சுகிடக்கும். ஏழாவது படிக்கிற என் பொண்ணை நான் கொஞ்சம் கொஞ்சமா தமிழுக்கு மாத்திக்கிட்டு இருக்கேன். ஜெயமோகனோட 'யானை டாக்டர்’ கதையைப் படமா பண்ணணும்னு மனசு துடிக்குது.




 ஊட்டிக்குச் சுற்றுலா வர்றவன் தண்ணி அடிச்சிட்டு தூக்கி எறியுற பீர் பாட்டில், யானையோட காலை எந்த அளவுக்குப் பாதிக்கும்னு வலியும் அழுகையுமாப் படம் பண்ண நினைக்கிறேன். ஆனா, அந்தக் கதையைப் படிச்சவங்கதானே அந்தப் படத்தை எதிர்பார்த்து, படம் பார்த்துக் கொண்டாடி ரசிப்பாங்க. ஆனா, இங்கே 25 வயசு வரைக்கும் தமிழ் படிக்காமலேயே காலம் தள்ளிரலாம்னுதானே நிலைமை இருக்கு. இங்கிலீஷ்லயே படிச்சவங்களுக்கு அவங்களுக்குத் தகுந்த மாதிரிதான் கதை சொல்ல வேண்டியிருக்கு. எல்லாரையும் தாய்மொழியில படிக்க வெச்சா, இலக்கியத்தின் அருமை புரிஞ்சு இன்னும் படைப்புகளுக்கு மரியாதை கொடுப்பாங்க!''


நன்றி - விகடன்