Showing posts with label .. கேரளா/வை அசத்தும் பெண் ஐஏஎஸ்!நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’/ ஜோதிகா. Show all posts
Showing posts with label .. கேரளா/வை அசத்தும் பெண் ஐஏஎஸ்!நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’/ ஜோதிகா. Show all posts

Thursday, November 05, 2015

.. கேரளாவை அசத்தும் பெண் ஐஏஎஸ்!நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா

மிழகத்தில் இருந்து கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் காய்கறிகளில் நச்சுப் பொருள் இருக்கிறது என கேரள அரசு குற்றம் சாட்டி வந்தது.  நாங்கள் அனுப்பும் காய்கறிகள் தரமானவை என தமிழக அரசும் விளக்கம் கொடுத்தும் இன்னும் சண்டைகள் ஓயவில்லை.
பூச்சிக் கொல்லி இருக்கிறதா இல்லையா? என்பதெல்லாம் அரசியலாக்கப்பட்டாலும், எந்த அரசியலும் செய்யாமல் இயற்கை உணவுகளின் பக்கம் மக்களை ஈர்த்து வருகிறார் கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். தொடர் ரெய்டுகள், அதையொட்டிய வழக்குகள் என நாள்தோறும் படு பிஸியாக இருக்கிறார்.
‘காய்கறிகளுக்காக தமிழ்நாடு, கர்நாடகாவை நம்பியிருக்க வேண்டாம்’ என்று சொல்லும் இவர், ‘36 வயதினிலே’ படத்தில் ஜோதிகா சொல்லியிருப்பது போல வீட்டுக்குள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறார். (அந்தப் படமே மலையாள சினிமாவான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ?’ படத்தின் ரீமேக்தான்!)
அவர்... கேரள உணவுப் பாதுகாப்பு ஆணையரான அனுபமா ஐ.ஏ.எஸ்தான்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்போது அனுபமாவின் பெயர்தான் ஹாட் ஆஃப் த டவுன். பெட்டிக் கடைகள் முதல் வணிக வளாகம் வரையில் எங்கு இவர் ரெய்டு நடத்துவார் எனத் தெரியாது. இவர் நுழைந்தாலே கடைக்காரர்கள் அச்சத்தில் உறைந்து போவார்கள். பாரபட்சமில்லாமல் இவர் எடுக்கும் நடவடிக்கைகள் அப்படி. தீங்கிழைக்கும் ரசாயன உணவுப் பொருட்களின் தீமைகள் பற்றி மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் அனுபமா. இவரது சமீபத்திய சாதனைகளில் முக்கியமான ஒன்றும் இருக்கிறது.
காய்கறிகளுக்காக கேரளா மிகவும் நம்பியிருப்பது அண்டை மாநிலங்களைத்தான். அவர்களுக்குத் தேவைப்படும் காய்கறிகளில் 70 சதவீதம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து செல்கிறது. இவற்றைக் குறைக்க ஒரே வழி வீடுகளில் இயற்கை பண்ணைத் தோட்டம் அமைக்க வேண்டும் என்பது. 'அவரவர் வீடுகளில் தேவைப்படும் காய்கறிகளை அவரவர் விளைவித்துக் கொண்டால் அண்டை மாநிலங்களை நாடும் அவசியம் இருக்காது. பூச்சிக் கொல்லி பயமும் இருக்காது' என்ற நோக்கில் இத்திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.
உடல் நலனில் தீவிர அக்கறை காட்டத் தொடங்கியிருக்கும் கேரள மக்கள்,  அனுபமாவின் வார்த்தைகளில் இருக்கும் அனுபவத்தை உணர்ந்து காய்கறி விளைச்சலில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கேரள வேளாண் துறை உதவியோடு விதைகள், சொட்டுநீர்ப் பாசன கருவிகள், செடி வளர்ப்பு பைகள் போன்றவற்றை மானிய விலையில் தருவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இதனால் கேரளாவில் மவுனமாக காய்கறிப் புரட்சி நடந்து வருவதாக அம்மாநில பத்திரிகைகள் வர்ணிக்கின்றன.
இவர் பதவிக்கு வந்த 15 மாதங்களில் மார்க்கெட், செக்போஸ்ட்களில் நடந்த சோதனைகளில் 6 ஆயிரம் மாதிரிகளை எடுத்து சோதனை செய்ய கொடுத்திருக்கிறார். இதில் 750 வழக்குகள் பதியப்பட்டன. மக்களுக்கு தீங்கிழைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தததற்காகத்தான் இந்த வழக்குகள்.
''ஆய்வு முடிவுகளைப் பார்த்து நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தேன். சில காய்கறி மற்றும் பழங்களில் 300 சதவீதம் அளவுக்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் இருந்தன'' என்கிறார் அனுபமா. அவர் பதவிக்கு வந்த நாள்களில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் உணவைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதுவே, இயற்கைவழி வேளாண்மையின் பக்கமும் மக்களை திசை திருப்பியுள்ளது.
"நான் என்னுடைய கடமையைத்தான் செய்கிறேன். அரசும், மக்களும் எப்போதும் என் பக்கம் இருக்கின்றனர்" என்கிறார் அனுபமா அமைதியாக.
2010 ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 4வது இடம் பிடித்த இந்த அதிகாரி. இயற்கை வேளாண்மையைக் கொண்டு செல்லும் பணியில் முதலிடத்தில் இருக்கிறார் என்பதே பெருமைதானே...!

-விகடன்