கேபிள் பாலிடிக்ஸ்
ஆட்டம் காணும் அரசு கேபிள்?
ப்ரியன்
சென்னை உட்பட பெரிய நகரங்களில் செட்டாப் பாக்ஸ் மூலமே சேனல்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு ஒருபுறம்; அப்படிச் சேவையைத் தொடர உரிய உரிமம் கிடைக்காமல் திண்டாடும் அரசு கேபிள் டி.வி. மறுபுறம். 200 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட நிலையில் தமிழக அரசு கேபிள் கார்பரேஷனின் எதிர்காலம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது" என்கிறார்கள் கேபிள் டி.வி. தொழிலில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள். என்ன தான் நடக்கிறது?
தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்னையான காவிரி விவகாரத்தில் கூட ஒற்றுமை காட்டாமல் பிரிந்து கிடக்கும் தமிழக அரசியல் நிலையில், கேபிள் டி.வி. தொழில் மட்டும் விதிவிலக்கா? இந்தத் தொழிலைக் கட்சி அரசியல் ஒரு பக்கம் இழுக்க, அதிலும் குடும்ப அரசியலை நுழைத்து மக்கள் பணத்தை விரயமாக்கியவர் தான் கருணாநிதி.
தமிழ்நாட்டு மக்களுக்கு ஞாபகமறதி மிக அதிகம். எனவே ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடந்ததை ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் பார்க்கலாம். தொலைக்காட்சித் தொழிலில் மட்டுமல்ல; அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கேபிள் டி.வி.தொழிலிலும் கொடிகட்டிப் பறந்தவர்கள் மாறன் சகோதரர்கள். தமிழ்நாட்டு மக்கள் அறுபது சதவிகிதம் பேர் இவர்களது எஸ்.சி.வி. மூலம்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு வந்தார்கள்.
2007
- 2008 ஆண்டுகளில் குடும்ப வாரிசுகளைக் குறித்து தினகரன் பத்திரிகை சர்வே வெளியிட்டதால் மதுரை உடன்பிறப்புகள் தினகரன் அலுவலகத்துக்குள் புகுந்து அந்நாளிதழை எரித்தார்கள். அப்போது ஏற்பட்ட குடும்பப் பகை காரணமாக கேபிள் டி.வி. தொழிலை மாறன் குடும்பத்திலிருந்து மீட்டெடுக்க, அரசு பணத்தில் கருணாநிதி தொடங்கியது தான் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன். இந்த கார்ப்பரேஷனின் வேலைகளை விரைவுபடுத்த நியமிக்கப்பட்டவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர். பாவம் அவர் மிக சீரியஸாகக் காரியங்களை ஆற்றினார்.
பல ஊர்களில் எஸ்.சி.வி. ஆதிக்கம் ஒடுக்கப்பட்டது. 2009
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் பிரிந்த குடும்பம் சேர்ந்தது. அரசு கேபிளுக்கு ஆப்பு. கருணாநிதி மேல் மாறன் சகோதரர்கள் கோபத்தைக் காண்பிக்க முடியாது. எனவே உமாசங்கர் மேல் குற்றம் சாட்ட வைத்து அவரைப் பழிவாங்கினார்கள். அதற்கு அப்புறம் அரசு கேபிள் கோமா ஸ்டேஜ்ஜுக்குப் போய்விட்டது!
2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் கோமாவிலிருந்த அரசு கேபிளுக்கு ஆக்ஸிஜன் கொடுத்தார். இன்று 31 மாவட்டங்களில் அரசு கேபிள் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 60 லட்சம் வீடுகளில் மாதம் 70 ரூபாய் செலவில் மக்கள் 70 சேனல்களுக்கு மேல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மாவட்டங்களில் அரசு கேபிள் இருந்தாலும் சின்னச் சின்ன ஊர்களில் தனியார்களும் சுயேச்சையாகத் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மாறன் சகோதரர்கள் சன் குழுமச் சேனல்களை அரசு கேபிளுக்குக் கொடுக்காமல் கொஞ்சம் இழுத்தடித்தார்கள்.
சன் தொலைக்காட்சி இல்லாமல் மக்கள் எப்படி அரசு கேபிளுக்கு ஆதரவு தருவார்கள்? இறுதியில் அரசு கேபிளுடன் மாறன் சகோதரர்கள் ஒப்பந்தம் போட்டு விட்டனர். இந்தச் சூழலில்தான் மத்திய அரசு சென்னை மாநகரில் கேபிள் டி.வி. விநியோகத்துக்கு செட்டாப் பாக்ஸ் கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று கெடு வைத்து விட்டது.
அக்டோபர்
31ம் தேதி கெடு முடிந்து விட்டது. ஆனால் Conditional Access System உரிமம் வைத்திருக்கும் அரசு கேபிள், digital addressable system
உரிமம் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. ‘தகவல் ஒலிபரப்பு (ஒளிபரப்பு உட்படத்தான்) துறையில் அரசாங்கம் ஈடுபடக் கூடாது’ என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒரு கொள்கை முடிவு எடுத்திருப்பதால் உரிமம் கிடைக்கவில்லை.
பல மாநிலங்கள் தொலைக்காட்சி சேனல்களும், கேபிள் டி.வி.யும் நடத்த விருப்பம் தெரிவித்திருப்பதால், மத்திய அரசு தொலைத் தொடர்பு ஆணையத்தை மீண்டும் இந்த விஷயத்தைப் பரிசீலிக்கச் சொல்லியிருக்கிறது. நாளை டிராய் ஒப்புக் கொண்டாலும் நீதிமன்றங்களில் அந்த முடிவு பரிசீலிக்கப்படும் வாய்ப்புண்டு. அரசு கையில் இந்தத் துறை இருந்தால் அதில் அரசியல் நுழையும். மக்களுக்கு சரியான தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் வரும் என்பதால் தான் டிராய் மறுக்கிறது" என்கிறார் கேபிள் தொழிலில் இருக்கும் சங்கர்.
செட்டாப் பாக்ஸ் இன்று பெரிய நகரங்களில் அவசியம் என்ற மத்திய அரசின்
உத்தரவு காலத்தின் கட்டாயம். 2013ல் மேலும் 35 நகரங்களில் செட்டாப் பாக்ஸ் கட்டாயமாகப் போகிறது. சேனல்களின் டிஜிட்டல் ஒளிபரப்பை அதே தரத்தோடு பெற டி.வி. செட்டாப் பாக்ஸ் அவசியம். அடுத்து எதிர் காலத்தில் இன்னமும் நூற்றுக்கணக்கான சேனல்கள் வரும் நிலையில் இப்போது இருக்கும் தெழில்நுட்ப முறையில் (analog) அவற்றைப் பெற முடியாது. செட்டாப் பாக்ஸ் மூலமே நூற்றுக்கணக்கான சேனல்களைத் தரமான டிஜிட்டல் முறையில் பெற முடியும்.
அடுத்து Conditional Access System என்கிற முறையைக் கண்டிப்பாக அமல்படுத்த முடியும். ஒளிபரப்பும் சேனல்களுக்கு உரிய கட்டணத்தை மக்களிடமிருந்து வாங்க முடியும். அவர்கள் கேட்ட சேனலை மட்டும் கொடுக்க முடியும். பணம் கட்டாவிட்டால் ஒளிபரப்பை நிறுத்தவும் முடியும். இந்த செட்டாப் பாக்ஸ் வருவதன் மூலம் ஒரு வெளிப்படையான தன்மை நிலவும். எவ்வளவு கனெக்ஷன்கள் இருக்கின்றன என்பது கேபிள் டி.வி. நடத்தும் அரசு கேபிள் போன்ற எம்.எஸ்.ஓக்களுக்கு (Multi system operator) தெரிய வரும். சேனல்களும் அரசாங்கங்களும் சரியான புள்ளிவிவரம் கிடைப்பதால் உரிய வருவாயைத் தேடிக் கொள்ள முடியும். இன்றைக்குக் கிட்டத்தட்ட எல்லா சேனல்களும் பேய் - சேனல் ஆகிவிட வருவாயை ஒழுங்குபடுத்த செட்டாப் பாக்ஸ் ரொம்பவே உதவும்," என்கிறார் சங்கர்.
எம்.எஸ்.ஓக்கள் நேரடியாக கனெக்ஷனின் எண்ணிக்கையைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதும் பணம் கட்டாதவர்களின் கனெக்ஷனை கட் செய்ய முடியும் என்பதும் கேபிள் ஆபரேட்டர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது. நுகர்வோர்கள் மேல் அவர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு கைநழுவிப் போகிறதே என்ற கலக்கம். நாங்க எதுக்கு இருக்கோம்? அப்புறம் எங்களுக்கு என்ன வேலை. நாங்க தொழிலை மூட்டை கட்டிட்டுப் போக வேண்டியதுதான்" என்று பொருமுகிறார் ஒரு லோக்கல் கேபிள் ஆபரேட்டர். இது தொடர்பாக வழக்கும் போடப்பட்டிருக்கிறது. ஆனால் தொழில் நுட்ப முன்னேற்றங்களை நீண்டகாலம் தள்ளிப்போட முடியாது என்று கேபிள் ஆபரேட்டர்கள் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் சீனாவிலிருந்து இரண்டு லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் இறக்குமதி செய்கிறது அரசு கேபிள். இன்னமும் பத்து நாட்களில் வந்து விடும்" என்கிறார் அரசு கேபிள் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன். சென்னையில் இன்னமும் சோதனை ஓட்டமாகத்தான் அரசு கேபிள் செயல்படுகிறது. எத்தனை கனெக்ஷன் என்ற புள்ளிவிவரம் இல்லை. அதே சமயம் சென்னையில் எஸ்.சி.வி.யும், ஜாக் கேபிள் நிறுவனமும் 80 சதவிகித கனெக்ஷன்களை வைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கேபிள் டி.வி. தொழிலில் கட்சி அரசியல் இல்லை. அதைத் தொழிலாகப் பாவித்தே அங்கே தனியார் துறையினர் செய்கிறார்கள்.
தனியார்களும் கேபிள் டி.வி. தொழில் செய்யலாம் என்ற சூழலில் அரசு கேபிளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. வழக்கமான சுணக்கமும், தாமதங்களும், தயக்கங்களும், மிக முக்கியமாக இங்கு நிலவும் அரசியலும் அரசு கேபிளுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்காது. சென்னையிலேயே செட்டாப் பாக்ஸ் போட்டு கேபிள் மூலம் டிஜிட்டல் தரத்தில் சேனல்களை ஒளிபரப்ப எட்டு தனியார்களுக்கு உரிமம் கொடுக்கப் பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் நகரங்கள், கிராமங்கள் என்று எல்லா இடங்களிலும் செட்டாப் பாக்ஸ் கட்டாயம் என்ற நிலை வரும். இன்னமும் தனியார் எம்.எஸ்.ஓக்கள் பெருகுவார்கள். அரசு இந்தத் தொழில் செய்யலாமா என்ற பாலிசி குளறுபடி வேறு. எனவே தமிழக அரசு கௌரவம் பார்க்காமல் உடனடியாக அரசு கேபிளை நிறுத்தி, மக்கள் பணம் மேலும் விரயமாகாமல் தடுக்கலாம்.
நன்றி - கல்கி
நன்றி - கல்கி