a
நரேந்திர மோடியின் மனைவிபற்றிய விவாதம் ஊடகங்களில் அனல் பறக்கிறது. இதுநாள்வரை அவரை ஒண்டிக்கட்டையாகவே சித்தரித்து வந்த பா.ஜ.க-வினர், அவர் தேசியப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டதால் குடும்பத்தை விட்டுப் பிரிந்துவிட்டார் என்று சமாதானம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
காங்கிரஸும் பிற கட்சிகளும் மோடி பொய்யர் என்பதை நிரூபிக்க இது ஒன்றே போதாதா என்று ஓங்கி அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், ஹைமா தேஷ்பாண்டே என்னும் பத்திரிகையாளர் மோடியின் மனைவியைச் சந்தித்து விட்டு அதுபற்றி, 2009-ல் ‘ஓப்பன்’ இதழில் எழுதிய கட்டுரையைப் பலரும் மறந்துபோனார்கள். இன்று இந்த சர்ச்சை உருவாகியுள்ள சூழலில் அவரைத் தொடர்புகொண்டோம். மோடியின் மனைவியைத் தேடிச் சென்ற அனுபவத்தை நம்முடன் ஹைமா பகிர்ந்துகொள்கிறார்.
மோடியின் மனைவி இருக்கும் இடத்தை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?
மோடியின் மனைவியைச் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்ததும் பா.ஜ.க. வட்டாரங்களைத் தொடர்புகொண்டு விசாரிக்க ஆரம்பித்தேன். கிடைத்த தகவல்களை வைத்துக்கொண்டு மேலும் தேடியதில் அவர் இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிந்தது.
இந்தச் சந்திப்பின் மூலம் என்ன கிடைக்கும் என்று அனுமானித்தீர்கள்?
அனுமானம் என்று எதுவும் இல்லை. மாநில முதல்வருக்குக் கல்யாணமே ஆகவில்லை என்று பரவலாக நம்பப்படுகிறது. ஆனால், அவருக்குச் சிறு வயதில் திருமணமான விஷயம் தெரிய வருகிறது. அப்படியானால், அந்த மனைவி இப்போது எங்கே இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு, அதை வாசகர்களுக்குச் சொல்ல வேண்டும் அல்லவா? அதைத்தான் செய்ய வேண்டுமென்று நினைத்தேன்.
அவரைச் சந்தித்துப் பேசினால், அவர்கள் ஏன் பிரிய நேர்ந்தது என்பது உள்பட, பல விஷயங்களைக் கேட்கலாம் என்று நினைத்தேன். மோடியைப் பற்றிச் சொல்லப்படுவது உண்மையா என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். வேறு அனுமானங்கள் எதுவும் இல்லை.
அங்கே எப்படிச் சென்றீர்கள்?
கட்சி வட்டாரங்களில் குத்துமதிப்பாகக் கிடைத்த தகவல்களை வைத்துத் தேடலைத் தொடங்கினேன். மூன்று மாத முயற்சிக்குப் பிறகுதான் யசோதா வசிக்கும் ரஜோசனா கிராமத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. அங்கேதான் அவர் 1991லிருந்து வேலைபார்த்துவருகிறார் என்று தெரிந்தது. கிராமத்து மக்களிடம் விசாரித்த தகவல்களை வைத்துக்கொண்டு அங்குள்ள பள்ளிக்கூடத்துக்குப் போனேன். யசோதா பென்னைப் பார்த்தேன்.
அவர் எப்படி இருந்தார்?
முகத்தில் சுருக்கம் விழுந்திருந்தது. மிகவும் சாதாரண உடைதான் அணிந்திருந்தார். நெற்றியில் குங்குமப் பொட்டு இருந்தது. சாதாரண செருப்புதான் போட்டிருந்தார். என்னைப் பார்த்ததும் அவர் முகத்தில் ஒரு உற்சாகம் வந்தது. தன் கதையைச் சொல்ல ஆர்வத்துடன் இருந்ததாகவே எனக்குப் பட்டது.
ஆனால், பள்ளிக்கூட வேலைநேரத்தில் பேசக் கூடாது என்று பள்ளி முதல்வர் கண்டிப்புடன் சொன்னார். மாலை நாலரை மணிக்கு வாருங்கள் என்று கறாராகச் சொல்லிவிட்டார். மாலையில் பேசலாம் என்று சொல்லிவிட்டு, யசோதா பென் பாடம் எடுக்கப் போய்விட்டார். பேச வேண்டும் என்னும் ஆர்வம் அவரிடம் தெளிவாகத் தெரிந்தது. நான் கிளம்பினேன். அந்தக் கிராமத்திலிருந்து கொஞ்சம் தொலைவுக்குப் போய்விட்டு மீண்டும் வந்தேன். நான் திரும்பி வந்தபோது அந்தச் சூழலே மாறியிருந்தது. பள்ளியில் ஏகப்பட்ட மக்கள் சூழ்ந்திருந்தார்கள்.
அவர்கள் உங்களைத் தடுத்தார்களா?
நான் எதைப் பற்றியும் கவலைப்படாததுபோல யசோதா பென்னைப் பார்க்க உள்ளே சென்றேன். சிலர் என்னைத் தடுத்தார்கள். நான் அவர்களிடம் வாக்குவாதம் செய்தேன். பேச விடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அப்போது யசோதா பென் வெளியே வந்தார். அவர் முகம் காலையில் இருந்ததுபோல இல்லை. கலவரமாக இருந்தது. வேகமாக வெளியே சென்றார். நான் விடாமல் அவர் அருகில் சென்று பேச்சுக்கொடுத்தேன். அவர் என்னிடம் பேசத் தயாராக இல்லை.
அவருடைய முகபாவத்திலிருந்து ஏதாவது தெரிந்துகொள்ள முடிந்ததா?
“பேச விருப்பமில்லை” என்று சொன்னார். ஆனால், அவருடைய முகம் சொன்ன செய்தி வேறு. அவருடைய உடல் மொழியும் முகமும் என்னிடம் பேச விரும்புவதை எனக்கு உணர்த்தின. ஆனால், கூட்டத்தினர் அவரைப் பேசவிடவில்லை. சத்தம் போட்டுக்கொண்டே எங்களை நெருங்கினார்கள். அவர் ஆட்டோவில் ஏறிப் போய்விட்டார்.
பிறகு என்ன செய்தீர்கள்?
அவர் வீட்டுக்குப் போகலாமா என்று யோசித்தேன். ஆனால், அது சாத்தியமில்லை என்று புரிந்தது. கூட்டத்தினர் நான் வந்த காரை பலமாகத் தட்டினார்கள். ஓட்டுநரைத் தாக்க சிலர் முயற்சி செய்தார்கள். அதற்கு மேல் அங்கே இருந்தால் ஆபத்து என்று நான் கிளம்பிவிட்டேன்.
திரும்பி வரும்போது கிராமத்திலிருந்து விலகி, பிரதான சாலையை அடைந்ததும் அங்கே சிலர் நின்றிருந்தார்கள். ஆனால், அவர்களுடைய முகங்களில் கோபம் இல்லை; என்னிடம் பேசத் தயாராக இருந்தார்கள். நான் காரிலிருந்து இறங்கினேன். யசோதா எப்போது இங்கே வந்தார், அவருடைய சம்பளம், அவர் வாழும் விதம் என்று எல்லாவற்றையும் அவர்கள் சொன்னார்கள்.
மெஹ்சனா என்னும் மாவட்டத்தில் உள்ள வட்நகர் என்னும் கிராமம்தான் யசோதாவின் சொந்த ஊர். மோடியை அவர் மணந்தபோது அவருக்கு வயது 18. ஏழாவதுவரைதான் படித்திருந்தார். தான் படிக்கவில்லை என்று அவருக்கு வருத்தம். கல்யாணமாகிச் சில நாட்களில் படிப்பை முடிப்பதற்காக அவர் அப்பா சிமன்லால் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். 1972-ல் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார். பிறகு, ஆசிரியர் பயிற்சி முடித்து அகமதாபாதில் மூன்று மாதங்கள் வேலை பார்த்திருக்கிறார். 1978 மார்ச் மாதம் கிராமத்துப் பள்ளியொன்றில் யசோதா பென் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார்.
பிறகு, ரூபல் கிராமத்தில் உள்ள மாவட்டப் பஞ்சாயத்துப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். அங்கே 12 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறார். 1991 டிசம்பரில் அவர் இப்போது வசிக்கும் ரஜோசனா கிராமத்துக்கு வந்திருக்கிறார். இந்தத் தகவல்களை எல்லாம் அந்தக் கிராமத்து மக்கள் என்னிடம் சொன்னார்கள்.
நரேந்திர மோடி அவரைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் முறை என்று கிராமத்துப் பெரியவர் ஒருவர் என்னிடம் சொன்னார்.
இதையெல்லாம் எழுதிய பின் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்ததா?
இல்லை.
அதன் பிறகு அங்கே போனீர்களா?
இல்லை. அப்படிப் போவதால் அங்குள்ள மக்களால் அவருக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படுமோ என்று தோன்றியது.
அவரைச் சந்தித்ததில் அவரைப் பற்றிய உங்கள் மனப் பதிவு என்ன?
கணவருடன் சேர்ந்து வாழ விரும்பும் சராசரியான பெண்ணாகத் தான் எனக்கு அவர் தெரிந்தார். எவ்வளவு காலமானாலும் அந்த அங்கீகாரத்துக்காக அவர் காத்திருப்பதாகத்தான் தோன்றியது.
தொடர்புக்கு: [email protected]
thanx - the hindu
- Balan from Tirupurஅரிச்சந்திரன் நிஜத்தில் வாழ்ந்ததற்கு வரலாற்று ஆதாரம் இருக்கிறதா என எனக்கு தெரியவில்லை. உலகத்தில் உள்ள ஜனநாயக நாடுகளில், ஒரு பொய் கூட பேசி இருக்காத விஷயத்தை அளவுகோலாக வைத்து தான், ஒரு நபரை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்களா?. எதன் அடிப்படையில் ஒரு நபர் (அளவுகோல்!) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அலசலாமே. வெளி நாடுகளில் இருப்பவர்களும் நம்மை போன்ற மக்களே . அவங்க என்ன அளவுகோல் வைத்துள்ளார்கள் என தெரிந்து கொள்ளலாம்.about an hour ago · (0) · (0) · reply (0)
- Liyakath Basha Electrical Maintenance at ADNOC from Abu Dhabi
//மோடியை அவர் மணந்தபோது அவருக்கு வயது 18// அப்புறம் என்ன சின்ன வயசு கல்யாணம்னு ஊர ஏமாதிரிங்க.about 7 hours ago · (7) · (2) · reply (0)
- Janani
சிலநேரங்களில் தியாகம் எங்கிருந்து தோன்ற வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. தொடர்ச்சியாக மோடி மற்றும் அவர் மனைவி யசோதாவைப் பற்றி படித்து வரும் நிலையில், மோடியின் மெளனம் பல கேள்விகளை விட்டு செல்கிறது. எளிமையான பெண்ணாகவும், கனவுகளுக்கு திரை போட்டு வாழ்ந்தவராகவும் தான் யசோதா தெரிகிறார். அவருடைய அடையாளத்தை பல ஆண்டுகளாக காட்டி கொள்ளாமல் வாழ்ந்து வரும் அவரது வாழ்க்கையை நாம் அரசியலாக்க வேண்டாம். பல ஆண்டுகளாக தலைவர்கள் நம்மை ஏமாற்றுவதும், தலைமையாளர்களை சரியாக தேர்வு செய்யாமலும் பல குறைகளை நாம் செய்து கொண்டு இருக்கிறோம். யசோதா என்ற பெண்ணை அரசியலுக்காக பயன்படுத்தி ஏமாற்றங்களை அவர்க்கு கொடுக்க வேண்டாம். வெ.ஜனனிabout 11 hours ago · (6) · (0) · reply (0)
Francis Xavier Vasan Up Voted - ssm from Hyderabad
ஹ்ம்ம்ம்ம்ம்ம் தெரிந்து கொள்ளுங்கள் நேர்மையான (?????????) மோடியின் ஆதரவாளர்களே ஒரு பெண் ஆசிரியரை ஒரு பெண் பத்திரிக்கையாளர் சந்திக்க முடியவில்லை இது போன்ற செயல்களை மிக மிக திறமையாக செய்யும் சிறந்த நிர்வாகிதான் (!!!!!!!!!!!!!!!!!!!) மோடி