உலகம் முழுவதும் புகழப்படும் அமெரிக்க எழுத்தாளர், இலக்கியவாதி ஹெலன் கெல்லரின் சுயசரிதை ‘என் கதை’ என்ற பெயரில் வெளிவந்தது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, லட்சக்கணக்கான வாசகர்களால் ஆராதிக்கப்பட்டுள்ளது. தமிழில் முதல் பதிப்பு மிகவும் காலம் கடந்து 2005-ல் வெளிவந்துள்ளது.
இந்த நூலைக் கையில் எடுத்தபின், கீழே வைக்க முடியாது. சோகம் கப்பிக் கிடக்கும் தனது வாழ்க்கையை ஹெலன் கெல்லர் சுவைபடச் சொல்வதுதான் அதற்குக் காரணம். 1880-ல் அமெரிக்காவின் அலபாமாவில் பிறந்த ஹெலனின் வாழ்க்கை 1968-ல் முடிவடைந்தது. 88 ஆண்டுகளில் அவரது வாழ்க்கை ஓயாத போராட்டத்தின் வரலாறு. 19- வது மாதத்தில் விஷக் காய்ச்சலால் தாக்கப்பட்டு, நிரந்தரமாகப் பேசுகிற, கேட்கிற, பார்க்கிற திறன்களை பறிகொடுத்துவிட்டு, தனது வாழ்க்கை முழுவதையும் அதே நிலையில் கழித்த ஹெலன், ஒரேயடியாய் செத்துபோய்விடலாம் என்று பலமுறை எண்ணியிருக்கிறார்.
12 வயதானபோது, வாழ வேண்டும் என்ற எண்ணம் அவருள் உயிர் கொண்டது. தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் போராடிப் போராடி முன்னேறியே தீர்வது என்ற உறுதியை ஏற்கிறார். அவரது காதுகளும், வாயும் கண்களும் முழுமையாகப் பழுதுபட்ட பிறகு அவரது மூக்கின் திறன் பன்மடங்கு அதிகரித்தது. மணத்தை மட்டும் வைத்துப் பொருட்களை அறிந்து கொள்ளும் திறனை இயற்கை அவருக்கு ஊட்டியது.
தாயும் தந்தையும் மிகவும் பரிவு காட்டினாலும், தான் பிறரோடு எவ்வாறு கருத்தைப் பரிமாறிக் கொள்வது என்ற தளராத முயற்சியில் அந்தக் குழந்தைக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், அவளைக் குழப்பத்திலும் ஆத்திரத்திலும் வெகுண்டெழச் செய்கின்றன.
தன்னைச் சூழ்ந்துகொண்டிருக்கும் இருளுக்கும் மவுனத்துக்கும் ஆழ்ந்த நிசப்தத்துக்கும் அவள் சிறுகச்சிறுகத் தன்னைப் பழக்கிக்கொள்கிறாள். வெளிச்சம் அவளை விட்டு மெதுவாக மறைந்துகொண்டிருக்கும் நாட்கள் மிகக் கொடுமையானவை. 19 மாதத்துக்குள் இந்த உலகில் அவள் உயிர்த்திருந்த காலம் மட்டுமே அவள் கண்முன் நிழலாடுகிறது. அந்த 19 மாதங்களில் அவள் வளர்ச்சி படுவேகமாக இருந்ததைப் பார்த்து அவளின் பெற்றோர் அதிசயித்தனர். இறுதியில் அவள் நிலை கண்டு அவர்கள் உறைந்து போயினர்.
அந்த வளர் இளம் நாட்களில் அவரது வீட்டின் பணிப்பெண்ணின் கருப்பின மகள் மார்த்தா வாஷிங்டனும், பெல்லி என்ற நாயும் அவளது இணை பிரியாத தோழிகளாக உள்ளனர். ஒவ்வொரு எழுத்தையும் அவள் கைகளில் எழுதிக் கற்பிக்க அவளுக்கெனவே நியமிக்கப்பட்ட சிறப்பாசிரியை ஆனி சலிவன் அவளோடு சேர்ந்து போராடுகிறார். ஆனி சலிவன் கடைசிவரை அவளுக்குத் துணையாகவும் தூணாகவும் இருக்கிறார். அவரைத் தன் தெய்வமாகவே ஹெலன் கருதுகிறாள்.
ஒவ்வொரு எழுத்தையும் எழுத்துக்கள் அடங்கிய வார்த்தையையும் ஹெலனின் கைகளில் எழுதுவதன் மூலம் மிகுந்த சிரத்தையுடன் சலிவன் கற்பிக்கிறார். WATER (தண்ணீர்) என்ற வார்த்தையை அவள் புரிந்து கொள்ள, பலமுறை தண்ணீரில் அவள் கைகளை நனைத்துக் காட்டுகிறார். காதல் (LOVE) என்ற வார்த்தையின் பொருளைப் புரிய வைக்கு முன், ஆசிரியை தன் பொறுமையையே இழந்து விடுகிறார்.
பேசுவதற்கு அவள் எடுத்த முயற்சிகள் சொல்லி மாளாதவை. நீண்ட நெடுங்கால முயற்சியில் கத்தக் கத்த தொண்டை இறுகி, முதலில் தெளிவற்றும் பின்பு தெளிவாகவும் பேசக்கூடிய திறனை ஹெலன் வளர்த்துக்கொண்டார். இவ்வாறு நமக்கெல்லாம் பிறவியிலேயே எளிதாக வாய்க்கப்பட்ட திறன்கள் ஒவ்வொன்றையும் பெற ஹெலன் பல ஆண்டுகள் போராடி யிருக்கிறார். அவரது போராட்டத்தை அவரது வார்த்தைகளிலேயே நாம் கேட்கலாம்: “பலமுறை நான் வழுக்கி விழுந்திருக்கிறேன். மீண்டும் எழுந்து நின்றுவிடுவேன். மறைந்திருந்த தடைக்கற்களின் விளிம்பைக் கடந்து முன்னேறினேன். சில நேரம் பொறுமையை இழந்து மறுபடியும் சுதாரித்துக்கொள்ளும் நான், மறுபடியும் உற்சாகமடைந்துவிடுவேன். நான் மிகவும் சிரமப்பட்டு, சிரமப்பட்டு, அங்குலம், அங்குலமாக முன்னேறினேன்.”
இந்த வார்த்தைகள் நம்மை;r சுடக்கூடும். நமக்கு அளிக்கப்பட்டுள்ள வாய்ப்புக்கள் மற்றும் திறன்களின் அருமை தெரியாமல், அவற்றை நாம் எவ்வாறு நழுவ விட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்த இந்த நூல் உதவக்கூடும். நமது பார்வையும், கூர்மையும் விரிவடையும்.
இந்த நூலைப் படிக்கும் போது ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடாமல் இருப்பவர்களுக்கு கல் நெஞ்சக்கார்கள் என்ற பட்டத்தை வழங்கலாம்.
ஹெலன் கெல்லர் எழுதிய அற்புதமான கவிதை:
இருட்குகையான பூமிக்குள்ளே
புதையுண்டிருந்தாலும் கூட
உச்சிமரத்தின் கொண்டாட்டப் பரவசத்தில்
பங்கேற்கின்றன, வேர்கள்.
சூரிய ஓளியையும்,
விசாலமான காற்றையும்
இயற்கையின் கருணையால்
அனுபவிக்கின்றன, வேர்கள்,
என்னைப் போலவே !
இந்த உணர்வுகளை நீங்கள் இந்தப் புத்தகத்தில் காணலாம்.
தொடர்புக்கு: [email protected]
நூல் தமிழாக்கம்: மு. சிவலிங்கம்,
கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை- 17.
தொடர்புக்கு: 044-24332682
பக்கம் 310, விலை ரூ.100
THE HINDU