'குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள்' என்ற திருவிளையாடல்
தருமியின் புலம்பலைப் போல, கிண்டல் அடித்தே புகழ் பெற்று விடும் நபர்களும்இருக்கவே செய்கின்றனர். அமெரிக்காவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இப்படி தான் கிண்டல் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றனர். இணைய உலகில் பரவலாக தங்களைப் பற்றி பேச வைத்து இணைய நட்சத்திரங்களாகி இருக்கிறார்கள்.
ஆடம் ஸ்மித், ஸ்டேசி லேம்ப் என்னும் அந்த இரண்டு இளைஞர்களும் அமெரிக்க
வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை கிண்டல் செய்து இணையநட்சத்திரங்களாக உருவாகி இருக்கின்றனர். ஆனால் அவர்களின் கிண்டல் நாகரீகமாகவும் அதைவிட நேர்த்தியாக அமைந்திருந்தன என்பதை கவனிக்க வேண்டும்.
ஹிலாரியோ உலகறிந்த பெண்மணி! திருமதி கிளின்டனாக அறிமுகமான அவர், ஓபாமாஅமைச்சரவையில் இடம் பெற்று இன்று நட்சத்திர அந்தஸ்து பெற்ற அமைச்சராக புகழ் பெற்றிருக்கிறார்.
ஹிலாரி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் சளைக்காமல் பேட்டி
கொடுக்கிறார். எந்த பிரச்னையானாலும் கருத்து தெரிவிக்கிறார். ஹிலாரி சொல்வதை அமெரிக்கா மட்டும் அல்ல உலகமே உற்று கவனிக்கிறது.
இத்தகைய ஹிலாரி தலைவர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ் செய்திகளை படிக்கமுடிந்தால் எப்படி இருக்கும்?
அதைத் தான் ஸ்மித்தும் லேம்பும் செய்தனர். டம்பலர் (www.tumblr.com) இணையத்தில் ஒரு தளத்தை துவக்கி அதல் ஹிலாரி அனுப்பும் எஸ்.எம்.எஸ் செய்திகளை இடம் பெற வைத்தனர். அதாவது ஹிலாரி அனுப்புவது போல செய்திகளை இவர்களே உருவாக்கி தளத்தில் இடம் பெற வைத்தனர். அதுவும் ஹிலாரி கறுப்பு நிறக் கண்ணாடியோடு காட்சி தரும் (கையில் செல்போனோடும் தான்) அசத்தலான புகைப்படத்தை போட்டு அதில் புகைப்பட குறிப்பு போல ஹிலாரியின் செய்திகளை இடம் பெற வைத்தனர்.
உதாரணத்திற்கு ஒரு பதிவில் ஹிலாரியிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா, "ஹே ஹில்.. என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்க, ஹிலாரியோ கூலாக "உலகை இயக்கி கொண்டிருக்கிறேன்" என பதில் சொல்வது போல அமைந்திருந்தது.
இதே போல இன்னும் பல தலைவர்களுடனும் பிரபலங்களுடனும் ஹிலாரி குறுஞ்செய்தி வடிவில் உரையாடுவது போல படங்களை உருவாக்கி புதுப்புது பதிவாக வெளியிட்டு வந்தனர்.
கற்பனை தான் என்றாலும் இதில் இருந்த நகைச்சுவை உணர்வும் நேர்த்தியும் படித்தவர்களை கவர்ந்தது. இதனை ரசித்தவர்கள் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டனர். அவர்கள் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டவர். அவ்வளவு தான்.. இணைய உலகம் முழுவதும் 'textsfromhillaryclinton' என்னும் இந்த தளம் பற்றி தான் பேச்சானது.
நண்பர்கள் அந்த பதிவுகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டனர்; டிவிட்டரில் பகிர்ந்து கொண்டனர். நாளிதழ்களும் பத்திரிகைகளும் இந்த பரபரப்பு பற்றி செய்தி வெளியிட்டு மேலும் பரபரப்பை உண்டாக்கின.
நண்பர்கள் ஸ்மித்தும், லேம்பும் தங்கள் ஐடியா இந்த அளவுக்கு ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்களைப் பொருத்தவரை ஜாலியாக பேசிக்கொண்டிருந்த போது விளையாட்டாக உருவான எண்ணம் இது.
இருவருமே வாஷிங்டன் நகரை சேர்ந்தவர்கள். சமீபத்தில் ஒரு நாள் இருவரும் பார் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஸ்மித்,தனது நண்பரிடம் ஹிலாரியின் கருப்பு கண்ணாடி அணிந்த அசத்தலான புகைப்படத்தை காண்பித்து, இந்த புகைப்படத்தை பார்த்திருக்கிறாயா, கண்ணாடியும் செல்போனுமாக எவ்வளவு கம்பீரமாக கச்சிதமாக இருக்கிறது என்று கேட்டிருக்கிறார். நண்பர் லேம்பும்அதனை ஆமோதிக்க, அந்த நொடியில் ஹிலாரியை எஸ்.எம்.எஸ் செய்தி அனுப்ப வைத்தால் என்ன என்று தோன்றியிருக்கிறது.
உடனே 'டெக்ஸ்ட் ஃப்ரம் ஹிலாரி க்ளின்டன்' என்னும் பெயரில் வலைப்பதிவு செய்யத் துவங்கி விட்டனர். அடுத்த ஒரு வார்த்தில் அந்த தளம் சூப்பர் ஹிட்டாகிவிட்டது. கற்பனையான செய்திகள் தான் என்றாலும் அவற்றை கண்ணியத்தோடே வெளியிட்டனர். நகைச்சுவயில் எல்லை தாண்டாமலும் பார்த்து கொண்டனர். எனவே அந்த பதிவுகள் ரசிக்கும்படியே இருந்தன.
இதனால் இருவரும் இணைய உலகில் புகழ் பெற்றது ஒரு ஆச்சர்யம் என்றால் அதைவிட ஆச்சர்யம் ஒன்று அவர்களுக்கு காத்திருந்தது. அவர்கள் தளத்தின் நாயகி ஹிலாரியிடம் இருந்தே இருவருக்கும் அழைப்பு வந்தது. ஆம்.. யாரை கிண்டல் செய்து குறுஞ்செய்தி வெளியிட்டு கொண்டிருந்தனரே அவரே நண்பர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது.
நேரில் ஹிலாரியை சந்தித்த போது ஹிலாரி தானும் அந்த தளத்தின் ரசிகர் என்று கூறி, நண்பர்களை பிரம்மிப்பில் ஆழத்தி விட்டார். சில நிமிடங்களே அந்த சந்திப்பு நீடித்தாலும் நண்பர்கள் இருவரும் ஹிலாரியுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். அதனை பெருமையோடு தங்கள் தளத்தில் வெளியிடவும்
செய்தனர்.
ஹிலாரியை நையாண்டி செய்து ஹிலாரியையே ரசிகையாக்கிக் கொண்ட இந்த இருவரும் இணைய கில்லாடிகள் தான். ஆனால் ஒரு சின்ன வருத்தம். இருவரும் புதிய பதிவுகள் வெளியிடுவதை நிறுத்திக் கொண்டு விட்டனர்.
இந்த புகழே போடும் என நினைத்து விட்டனர் போலும். ஆனால் இதுவும் கூட புத்திசாலித்தனம் தான். இனி எப்படி தொடர்வது என தடுமாற்றம் வந்து தரம் குறையும் முன்னே குட்பை சொல்லிவிட்டனர்.
அந்த தளம் அப்படியே இருக்கிறது. இப்போதும் பழைய படங்களையும் குறுஞ்செய்திகளையும் பார்க்கலாம். ரசிக்கலாம்!
இணையதள முகவரி : http://textsfromhillaryclinton.tumblr.com/