இயக்குநர் மகேஷ் பட்டின் பெற்றோர்களின் காதலைப் பின்னணியாக வைத்து எடுக்கப் பட்டிருக்கும் திரைப்படம் ‘ஹமாரி அதூரி கஹானி’ . ‘ஏக் வில்லன்’ படத்துக்கு பிறகு மோஹித் சூரி இயக்கியிருக்கும் படம் இது.
வசுதா பிரசாத்தின் (வித்யா பாலன்) கணவன் ஹரி(ராஜ்குமார் ராவ்) திருமண மான ஒரே ஆண்டில், திடீரென்று காணாமல் போய்விடுகிறான். ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஃப்ளோரிஸ்டாக இருக்கும் வசுதா, ஐந்து ஆண்டு களாகத் தன் மகனைத் தனியாக வளர்த்துவருகிறார். அந்த ஹோட்டலை வாங்க வரும் ‘ஹோட்டல் டைகூன்’ ஆரவ் ருபரேலுக்கு (இம்ரான் ஹாஸ்மி) வசுதா மீது காதல் வருகிறது.
ஒரு கட்டத்தில், வசுதாவுக்குத் தன் கணவன் ஹரி ஒரு தீவிரவாதி எனத் தெரிய வருகிறது. ஆரவ்வின் காதலை ஏற்றுக் கொள்ளலாம் என்று வசுதா முடிவெடுக் கும்போது, அவள் கணவன் ஹரி திரும்பி வந்துவிடுகிறான். இவர்கள் மூவருக்குள் நடக்கும் உணர்வுப் போராட்டமே ‘ஹமாரி அதூரி கஹானி’.
‘ஹமாரி அதூரி கஹானி’யின் திரைக்கதையை எழுபதுகளின் ரசிகர்களுக்காக எழுதியிருக்கிறார்கள். ஷகுஃப்தா ரஃபீக்கும், மகேஷ் பட்டும் ஏன் திரைக்கதையை இவ்வளவு அரதப் பழசான அம்சங்களுடன் அமைத்தார்கள் என்பது தெரியவில்லை. படம் முழுவதுமே காட்சிகளிலும் வசனங்களிலும் பிற்போக்குத்தனம் நிரம்பி வழிகிறது. அரசியலுக்கும் திரைக்கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், தேவையில் லாமல் அதை வலிந்து திணித்திருக் கிறார்கள்.
மிக சீரியஸான காட்சிகளில் ஹீரோ - ஹீரோயின் உணர்வுபூர்வமாக வசனம் பேசிக்கொண்டிருக்கும்போது, தியேட் டரில் சிரிப்பலை எழுகிறது. அது அடங்க வெகு நேரமாகிறது. படத் தின் வசனங்கள் அந்தளவுக்கு நாடகத்தனம். வசுதா கதாபாத்திரம் எப்போதும் ‘தாலி’யை பயபக்தியுடன் தொட்டுத் தொட்டுப் பார்ப்பது, ‘நான் வேறு ஒருவருடைய சொத்து’ என்று வசனம் பேசுவது, ‘நீங்கள் தெய்வம்’ என்று காலில் விழுவது போன்ற அம்சங்கள் பார்வையாளர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கின்றன.
வசுதா கதாபாத்திரம் மட்டுமில்லாமல் படத்தின் எல்லாக் கதாபாத்திரங்களின் கட்டமைப்பும் பிற்போக்குத்தனமாகவே உள்ளது. ஆரவ்வின் அம்மாவாக நடித் திருக்கும் அமலாவின் கதாபாத்திரமும் நாடகத்தனமாகவே கட்டமைக்கப் பட்டிருக்கிறது. படத்தில் ஆரவ் நண்பராக வரும் ஒரு கதாபாத்திரம், எல்லா முக்கியமான காட்சிகளிலும் ‘ஃபிளைட்டுக்கு நேரமாகிறது’ என்ற அதே வசனத்தை மீண்டும் மீண்டும் சொல்கிறது.
தியேட்டரில் அந்த கதாபாத்திரம் திரையில் தோன்றியவுடன் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இப்படி ஏராளமான சொதப்பல்கள். படத்தின் பெரிய பலவீனமாக திரைக்கதையையும் வசனங்களையும் சொல்லலாம்.
‘ஹமாரி அதூரி கஹானி’யின் அடுத்த பலவீனம் இயக்கம். மோஹித் சூரிக்கு காதல் தோல்விப் படங்கள் எடுப்பதில் அலாதிப்பிரியம். அவரது ‘ஆஷிக் 2’, ‘வோ லம்ஹே’ போன்ற படங்கள் உதாரணம்.அப்படி நினைத்துதான் ‘ஹமாரி அதூரி கஹானி’யையும் இயக்கியிருக்கிறார் மோஹித் சூரி. ஆனால், அவரது இயக்கம் படத்தை எந்த விதத்திலும் காப்பாற்றவில்லை. உணர்வுபூர்வமாகக் காதலை வெளிப் படுத்தும் படம் என்று விளம்பரப் படுத்தி விட்டு மோஹித் சூரி ஏன் இவ்வளவு சொதப்பினார் என்று தெரியவில்லை.
படம் மும்பை, துபாய், பஸ்தார் என மாறி மாறி பயணிக்கிறது. ஆனால், அது அலுப்பையே ஏற்படுத்துகிறது. கணவன், குழந்தை, காதலன் என மூவரிடமும் சிக்கித் தவிக்கும் வசுதா கதாபாத்திரத்துக்கு தன் நடிப்பு மூலம் நியாயம் செய்ய நிறைய முயன்றிருக்கிறார் வித்யா பாலன். ராஜ்குமார் ராவும் தன் பங்குக்குச் சிறப்பாகவே நடித்திருக்கிறார். இம்ரான் ஹாஸ்மியும் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால், இவையெல்லாம் படத்துக்குப் பெரிதாக உதவவில்லை. பலவீனமான திரைக்கதையால் ஜீத் கங்குலி, அமி மிஸ்ரா போன்றோரின் இசையும் பெரிதாக எடுபடவில்லை.
பிற்போக்குத்தனமான திரைக் கதையை எழுதிவிட்டு, கிளைமாக்ஸில் மட்டும் கதாநாயகியை வீராவேசமாக வசனம் பேசவைத்தால் போதும். அது முற்போக்குப் படமாக மாறிவிடும் என்று நினைத்திருக்கிறார்கள் ‘ஹமாரி அதூரி கஹானி’ படக்குழுவினர்.
முன்னெச்சரிக்கை: இந்தப் படத் தின் நாயகி வித்யா பாலனின் நடிப் பில் வெளியான ‘கஹானி’ படம் குறித்த ஞாபகங்களுடன் இந்தப் படத்துக்குப் போனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
thanx - the hindu