Showing posts with label ஸ்வார்டு ஃபிஷ் ரீமேக்கா? - விஷ்ணுவர்தன் பேட்டி த ஹிந்து. Show all posts
Showing posts with label ஸ்வார்டு ஃபிஷ் ரீமேக்கா? - விஷ்ணுவர்தன் பேட்டி த ஹிந்து. Show all posts

Sunday, October 27, 2013

ஆரம்பம் - டை ஹார்டு , ஸ்வார்டு ஃபிஷ் ரீமேக்கா? - இயக்குநர் விஷ்ணுவர்தன் பேட்டி @ த ஹிந்து

இயக்குனர் விஷ்ணுவர்தன் 

31ம் தேதி பட வெளியீடு, மாயாஜாலில் மட்டும் 91 ஷோ, எங்கு பார்த்தாலும் 'ஆரம்பம்' படத்தைப் பற்றி தான் பேச்சாக இருக்கிறது. சரி, 'ஆரம்பம்' பற்றி இயக்குநர் விஷ்ணுவர்தனிடமே பேசலாம் என்று தொடர்பு கொண்டேன். 



ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் பைனல் மிக்ஸ் போய்க் கொண்டிருக்கிறது. அங்கு வாங்க என்றவுடன் அவசர அவசரமாக சென்று காத்திருந்து எடுத்த மினி பேட்டி... 


'ஆரம்பம்' படத்தை அஜித் பாத்துட்டு என்ன சொன்னார்?

 
ரொம்ப நல்லாயிருக்குனு சொன்னார். இது என்னோட சிறந்த படங்கள்ல ஒண்ணு. ரொம்ப நன்றி விஷ்ணு அப்படினு சொன்னார். சார்.. நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்னு சொன்னேன். குடும்பத்தோட படம் பாத்துட்டு, என்கிட்ட ஜாமி (ஆர்யா) பத்தி தான் ரொம்ப பேசினாரு. ரொம்ப நல்லா பண்ணியிருக்கான்னு பாராட்டினாரு. 



இந்தப் படத்தோட சிறப்பம்சமே படத்தோட கதை தான் விஷ்ணு. நான் ஒரு நல்ல கேரக்டர் பண்ணிருக்கேன். மொத்த படமா பார்த்தா, எல்லாருமே அவங்கங்க கேரக்டர்ல ரொம்ப நல்லா, பிரமாதமா நடிச்சுருக்காங்க. எப்போதுமே என்னோட படங்கள்ல என்னோட கேரக்டருக்குத் தான் முக்கியத்துவம் இருக்கும். மத்தவங்களும் நடிச்சிருப்பாங்க. ஆனா இந்த படம் அப்படியில்லைனு ரொம்ப பாராட்டினார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. 


ஆக்‌ஷனுக்கு அஜித், ரொமான்ஸுக்கு ஆர்யாவா..?


 
அப்படியெல்லாம் கிடையாது. படம் பாத்தீங்கன்னா தெரியும். இது ஒரு ஆக்‌ஷன் டிராமா. காமெடிக்காக சந்தானத்தையும், ரொமான்ஸ்க்காக ஆர்யாவையும், ஆக்‌ஷனுக்கு அஜித்தையும் யூஸ் பண்ணா அது தப்பான படம். படத்துல ஆர்யா முக்கியமான கேரக்டர் பண்ணிருக்காரு. அஜித்துக்கு இணையா ஆர்யாவுக்கு நிறைய காட்சிகள் இருக்கு. 


ஸ்டில்ஸ் எல்லாம் பார்க்கும் போது அஜித் போலீஸ் வேடத்துல நடிச்சுருக்காரா..?


 
இப்படிக் கேட்டா நான் என்ன பதில் சொல்ல முடியும். படம் பாத்து தெரிஞ்சுக்கிட்டுமே. இப்பவே அஜித்துக்கு இந்த ரோல் அப்படின்னா, படம் பாக்குற அப்போ அந்த எதிர்பார்ப்பு இருக்காது. அதனால இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பல. 



பெரிய பட்ஜெட், நிறைய நடிகர்கள் கொண்ட படத்தை முடிச்சாச்சு.. அடுத்த ப்ளான் என்ன?


 
எனக்கே தெரியல. என்னோட எல்லா படங்களையும் அப்படித்தான் பண்ணிருக்கேன். மற்ற இயக்குநர்கள் மாதிரி படம் முடியும் முன்பே, அடுத்த படத்துக்காக அட்வான்ஸை வாங்கி வச்சுக்குற ஆள் நான் இல்ல. படம் ரிலீஸான உடனே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு, அப்புறமா தான் ப்ளான் பண்ணுவேன். என்ன கதை பண்ணலாம்னு யோசிப்பேன். அடுத்த படத்தை பத்தி எனக்கு யோசிக்க கூட இப்ப டைமில்லை. அந்தளவிற்கு 'ஆரம்பம்' பணிகளுக்காக ஓடிட்டு இருக்கேன்.



'ஆரம்பம்' படத்தின் இந்தி ரீமேக் பண்ணச் சொன்னா பண்ணுவீங்களா?


 
கண்டிப்பா பண்ணுவேன். இதுல என்ன தப்பிருக்கு. இப்பவே நிறைய பேர் பட வெளியீட்டிற்காக காத்துட்டு இருக்காங்க. பாக்கலாம்.. படம் வெளியாகி எல்லாம் நல்லபடியா அமைஞ்ச இயக்க தயாரா இருக்கேன். 



இந்தில பண்ணா அஜித், ஆர்யா ரோல்ல எல்லாம் யார் நடிச்சா நல்லாயிருக்கும்..?


 
தெரியல. எல்லாக் கேள்விக்கும் படம் ரிலீஸான உடனே தான் பதில் கிடைக்கும். இப்பவே படத்தை இந்தி நடிகர் யாருக்காவது போட்டுக் காட்டி, அப்படியே அவரை வெச்சு ஒரு இந்தி படம் பண்ணிரனும் அப்படினு எல்லாம் நான் ப்ளான் பண்ணல. இந்தி படம் பேசிக்கிட்டிருக்கேன். ஆனால் அது 'ஆரம்பம்' ரீமேக் கிடையாது. இப்பவே அஜித், ஆர்யா வேஷத்துல யார் நடிச்சா நல்லாயிருக்கும் கேட்டா எனக்கிட்ட பதில் இல்லை. ஏன்னா யார் நடிச்சா நல்லாயிருக்கு, அஜித் சார் இமேஜ் யாருக்கு செட்டாகும், அப்படினு நிறைய விஷயங்கள் உட்காந்து பேசி முடிவு பண்ணனும். இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு. 



'ஆரம்பம்' படத்தப் பத்தி இணையத்துல இருக்க, முக்கியமா டிவிட்டர்ல இருக்க பரபரப்பை எல்லாம் கவனிக்குறீங்களா?


 
இல்லைங்க.. காரணம், எனக்கு நேரமில்லை. ட்விட்டர் பக்கம் கூட இப்போ நான் போறதில்லை. 2 நாளைக்கு ஒரு தடவை #Arrambam டிரெண்டாவது பத்தி எல்லாம் சொல்லுவாங்க.. பார்ப்பேன். ஆனா அதுக்காக அதுல ரொம்ப கவனம் செலுத்த மாட்டேன். ஏன்னா எனக்கு பயம். 



என்னை ட்விட்டருக்கு கொண்டு வந்ததே யுவன் தான். ஆரம்பிச்சு விட்டுட்டான். அதனால எப்போதாவது எனக்கு தோணுறதா ட்வீட் பண்ணிட்டு வந்துருவேன். என்னையே ரொம்ப கேவலமா திட்டி எல்லாம் அனுப்புவாங்க. ஆனா, என்னோட அசிஸ்டன்ஸ் இருப்பாங்க.. படம் இன்றைக்கு சென்சார் அப்படினு நிறைய ட்வீட் பண்ணுவாங்க. வித்தியாசமான ஏதாவதுன்னா சொல்லுவாங்க.. நானும் பார்ப்பேன். 



எவ்வளவு HYPE இருக்கோ.. அதே மாதிரி SWORD FISH ரீமேக், தீவிரவாதிகளை மையப்படுத்திய படம் தான் 'ஆரம்பம்'னு எதிர்மறையான விமர்சனங்களும் வருதே?

 
இது எந்த படத்தோட ரீமேக்கும் கிடையாது. ஒருத்தன் துப்பாக்கி தூக்கி சண்டை போடுறான்னு எடுத்தா அதே மாதிரி நிறைய படங்கள் வந்திருக்கும். அதுக்காக இது அந்தப்படத்தோட காப்பினு சொல்லக்கூடாது. ஊழலை எதிர்த்து போராடுறான், லவ் பண்றான்னு இப்படி எதைப் பத்தி எடுத்தாலும் உடனே காப்பினு சொல்ல முடியாது. அது ஒரு முட்டாள்த்தனம். அப்படி சொல்றவங்க தான் ஒரு புத்திசாலினு காட்டிக்கறதுக்காக இப்படி சொல்லிட்டு இருக்காங்க. 



அப்படினு பாத்தா இந்த படத்துலயும் ஹேக்கிங் (HACKING) இருக்கு. உடனே இது DIE HARD படத்தோட காப்பினு சொல்லடுவீங்களா.. எந்திரன் படத்தை i-Robot படத்தோட காப்பினு எப்படி சொல்ல முடியும்? இந்த படமே ஒரு உண்மை சம்பவம் தான். அதை சுத்தி கதை பண்ணிருக்கேன் அவ்வளவுதான். 



உண்மை சம்பவம்ன்னா மும்பை தீவிரவாதிகள் தாக்குதலா?


 
அப்படிச் சொல்ல முடியாது. தீவிரவாத தாக்குதல், ஊழல், இப்படி நிறைய இருக்கு. டெல்லி, இந்தியா, அமெரிக்கா இப்படி எல்லா இடத்துலயும் ஊழல் இருக்கு. உடனே நான் ஊழலைப் பத்தி படம் எடுக்கிறேன்னு சொன்னா. நான் காலி. கதையே பாம்பேல நடக்குற மாதிரி எடுத்துருக்கேன். குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அங்கே நடக்கற மாதிரி எடுத்தா தான் நல்லாயிருக்கும். நான் சென்னைல நடக்கற மாதிரி எடுத்தேன்னா, அதை மாதிரி முட்டாள் தனம் எதுவுமே கிடையாது. ஏன்னா அதே மாதிரி சம்பவங்கள் இங்க அவ்வளவா நடக்குறதில்லை. இதே நான் பாம்பே நடக்குதுனு சொன்னா நம்புவீங்க. அது தான் முக்கியம். 



பத்து பெண்கள் கற்பழிப்பு பத்தி கதைன்னா அதை எங்கு வேணுமானாலும் நடக்கறதா கதை பண்ணலாம். அது எங்கனாலும் நடக்கும். பாம்பே மாதிரியான நகரங்கள்ல நீங்க எந்த மாதிரியான கதைகளையும் எடுக்கலாம். அங்கே தமிழர்களே இல்லையே அப்படினு நீங்க சொல்ல முடியாது. நான் சொல்லிருக்குற விஷயங்கள் எல்லாமே நம்பற மாதிரி இருக்குற இடம் பாம்பே. அதனால அங்கு வெச்சு எடுத்தேன். 



அஜித் - நயன்தாரா பாடல் காட்சியே இல்லையாமே... நயன் இதுல என்ன ரோல் பண்ணிருக்காங்க?

 
யாரு சொன்னாங்க இதுல அஜித் - நயன் பாட்டு இல்லனு. ஒரு சின்ன பாட்டு இருக்கு. கிளாமர் என்பதெல்லாம் தாண்டி இதுல நயன் ஒரு சூப்பரான கேரக்டர் பண்ணிருக்காங்க. கதை போயிட்டு இருக்குற வேகத்துல கமர்ஷியலுக்காக ரெண்டு பேர வைச்சு பாட்டு பண்ண முடியாது. 



'ஆரம்பம்' முடிஞ்சிருச்சு.. அஜித் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க..

 
படம் பாத்த வரைக்கும் எல்லாருக்குமே படம் பிடிச்சிருக்கு. என்னைப் பொருத்தவரைக்கும் இது ஒரு அஜித் படம். எந்தொரு படமெடுத்தாலும் அதுல நாயகன்னு ஒருத்தர் இருப்பாரு. அஜித்தை சுத்தித்தான் கதை நடக்கும். மொத்தத்துல அஜித்தை வச்சு ஒரு சூப்பரான கதை ஒண்ணு பண்ணிருக்கேன். இது ஒரு கேங்க்ஸ்டர் படம் கிடையாது. எனக்கும் சரி, அஜித்திற்கு சரி இது ஒரு புதுமையான களம். 



ஸ்கிரீன்ல பாக்குற அப்போ ரசிகர்களுக்கு புதுசாயிருக்கும். அதை மட்டும் நீங்க உறுதியா நம்பலாம். கண்டிப்பா எல்லாரும் தியேட்டர்ல போய் படம் பாருங்க. திருட்டு டி.வி.டில, இணையத்துல எல்லாம் பாக்காதீங்க. ரொம்ப கஷ்டப்பட்டு பண்ணியிருக்கோம்.படம் பாத்துட்டு நீங்க சொல்ற பதிலுக்காக, ஒரு இயக்குநரா காத்துட்டு இருக்கேன். அனைவருக்கும் 'ஆரம்பம்' படக்குழுவினரின் 'தல' தீபாவளி வாழ்த்துகள்.


thanx - the hindu

ஆரம்பம் படத்தில் நடிகர் அஜித்