Showing posts with label ஸ்டெர்லைட் வரமா... சாபமா- ஒரு மினி தொடர் - பாகம் 9. Show all posts
Showing posts with label ஸ்டெர்லைட் வரமா... சாபமா- ஒரு மினி தொடர் - பாகம் 9. Show all posts

Saturday, May 04, 2013

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 9


ஸ்டெர்லைட் எதிர்ப்பில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருந்த போதிலும், ம.தி.மு.க-வும் சமூக அமைப்புகளும் தீவிரம் காட்ட தொடங்கின. இந்த எதிர்ப்பை சமாளிக்கும் வழி தெரியாமல் ஆலை நிர்வாகம் அஞ்சவே செய்தது.


இந்த நிலையில், 1997 செப்டம்பர் 30-ம் தேதி ஆலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. அங்குள்ள அங்குள்ள ஒரு உலை வெடித்து சிதறியதால் அமிலங்கள் தீப்பற்றி எரிந்தன. சுற்றுப்புற கிராங்களில் இருந்தவர்கள் கூட பார்க்கும் அளவுக்கு விண்ணை முட்டும் அளவுக்கு நெருப்பு எரிந்து கொண்டு இருந்தது. உலை வெடித்த சப்தம் அதிகமாக இருந்ததால் மக்கள் அச்சம் அடைந்தார்கள். நல்லவேளையாக இதில் பெரும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும், சங்கர், பெருமாள் என்ற இரு தொழிலாளர்கள் உடல் முழுவதும் எரிந்து சில எலும்புகளை மட்டுமே அள்ளி வர முடிந்தது. பலர் காயம் அடைந்தனர்.




இந்த சம்பவம் நடந்த போது ம.தி.மு.க-வினர் ஆயிரக்கணக்கில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கொண்டிருந்தனர். ஆலையில் நடந்த விபத்தால் அதிர்ந்து போயிருந்த நிர்வாகம், மக்களின் எதிர்ப்பை சமாளிக்க வழி தெரியாமல், 'ஆலையின் உள்ளே நடந்த விபத்துக்கு விடுதலைப்புலிகளின் சதியே காரணம்' என தெரிவித்தது. இது மக்களிடம் கோபத்தையும் ஆத்திரத்தையும் அதிகரித்ததே தவிர அவர்களை திசை திருப்ப முடியவில்லை. இதனால் பின்வாங்கிய ஆலை நிர்வாகம், ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டு விட்டது என்பதை ஒப்புக் கொண்டார்கள்.


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி லிபரான தலைமையிலான அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 1998 டிசம்பர் 9, 10, 11 ஆகிய நாட்களில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வைகோ ஆஜராகி வாதாடினார். பின்னர் இந்த வ்ழக்கு வேறு அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்த போதும் வைகோ உள்ளிட்டோர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.



ஜீரோ கழிவு திட்டம்



ஆலை நிர்வாகத்தின் தரப்பில் வாதாடியவர்கள், 'இந்த ஆலையானது தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்து இருக்கும் நிபந்தனைக்களுக்கு உட்பட்டே செயல்படுகிறது. ஆலையை சுற்றிலும் காற்றின் தன்மையை பரிசோதிக்க கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதனால் காற்று மாசுபடாமல் கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம். எங்களது ஆலையில் அமைக்கப்பட்டு இருக்கும் கருவிகள் உலகத் தரம் வாய்ந்தவை. அவை சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத வகையில் ஆலையை செயல்பட வைப்பதாக இருக்கிறது.




இது தவிர, ஆலையில் இருந்து வெளியேறும் புகையை நவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் மூலம் அதன் தனமையை குறைத்து அதன் பிறகே வெளியேற்றுகிறோம். சஃயூரிக் அமில ஆலை உள்ளிட்ட எல்லா ஆலைகளிலுமே இதே நடைமுறையையே கடைப்பிடிப்பதால் புகையால் காற்று மாசுபடுவதற்கு வாய்ப்பே இல்லை. குறிப்பாக சல்ஃயூரிக் அமில ஆலையில் இந்த கருவியை 2006-ல் பயன்படுத்திய பின்னர் ஒரு டன் அமிலம் உருவாகும்போது வெறும் ஒரு கிலோ சல்பர் டை ஆக்ஸைடு மட்டுமே உருவாகிறது. மொத்தத்தில் எங்களது ஆலை ஜீரோ கழிவுகளை வெளியேற்றும் நிறுவனம். அதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பே கிடையாது' என ஆணித்தரமாக வாதாடினார்கள்.


மேலும், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக ஆலையின் சார்பாக ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இது ஏற்கெனவே ஆலையின் சார்பில் செலவிடப்படும் 500 கோடி ரூபாயுடன் சேர்த்து செலவிடப்படுவதாக சுட்டிக் காட்டினார்கள். உலகில் எந்த இடல்த்தில் உள்ள ஆலையும் இது போன்று சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் அதிகமான தொகையை செலவிடுவதும் இல்லை என்று கூட ஆலையின் சார்பாக வாதாடினார்கள்.

ஏற்க மறுத்த நீதிமன்றம்



ஆலையின் சார்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்து பொய்யானவை என்றும்,  ஆலைக்கு அனுமதி பெறுவதிலேயே முறைகேடு செய்தவர்கள் மக்கள் நலனுக்காக நிறைய செலவு செய்வதாக தெரிவிப்பதை ஏற்கக் கூடாது என்றும் ஆலைக்கு எதிராக வாதாடப்பட்டது. மேலும், " இந்த ஆலையால் சுற்றுப்புற மக்கள் கடுமையாக


பதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பல்வேறு நோய்கள் மக்களை பாதிப்பதற்கு ஆலையின் காற்றே காரணமாக இருக்கிறது. ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் சுற்றுப்புற பகுதியில் உள்ள நீர் நிலைகள் மட்டும் அல்லாமல் நிலத்தடி நீரும் வெகுவாக பாதிப்பு அடைந்து இருக்கிறது.



நச்சை வெளியேற்றும் இந்த ஆலை அடர்த்தியாக மக்கள் வாழும் பகுதியில் தொடங்கப்பட்டதே தவறானது. அதனால் ஆலையை மூட வேண்டும்" என ஆலைக்கு எதிராக களம் இறங்கியவர்களின் சார்பில் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறப்பட்டது. இந்த வாதங்களை நீதிமன்றம் கவனமாக பரிசீலித்தது. இதற்கு முன்பு பல முறை ஆய்வு செய்து அளிக்கப்பட்ட குழுக்களைன் அறிக்கையையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. அதனால் ஆலையின் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. இதன் காரணமாகவே தீர்ப்பு ஆலைக்கு எதிராக வந்தது.

தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட கண்டனங்கள்



சென்னை உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதி எலிப்பி தர்மாராவ் அளித்த தீர்ப்பை தூத்துக்குடி மக்கள் மட்டும் 
அல்லாமல் நாடு முழுவதும் இருக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த தீர்ப்பில், ஆலையின் சார்பாக விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்பு அடைந்து இருப்பது தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்களின் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காற்று, நீர் ஆகியவற்றை மாசுபடுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது.



தேசிய சூழலியல் பூங்காவாக மன்னார் வளைகுடா பகுதியில் அறிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து 25 தொலைவுக்குள் இந்த ஆலை அமைந்து இருக்கிறது. ஆனால் விதிமுறைக்கு உட்பட்டு 250 மீட்டர் சுற்றளவுக்கு பசுமை பரப்பு ஏற்படுத்தப்படவில்லை. மாறாக அதற்கான விதியை தளர்த்தி 25 மீட்டர் சுற்றவுக்கு பசுமை பரப்பை குறைத்துக் கொள்ள தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்து உள்ளது. அது போன்ற அனுமதி கொடுத்து இருப்பது தவறானது. அதனால் ஆலைக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முதலில் வழங்கிய அனுமதியும், அதனை தொடர்ந்து விரிவாக்கத்தின் போது வழ்ங்கிய அனுமதியும் செல்லாது.



1995-ல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுப்பதற்கு முன்பாக மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் எதுவும் நடத்தப்படவிலை. அதே போல சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறித்தும் ஆய்வு செய்யாமலே அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆலையின் விதிமுறை மீற்ல்களை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும்,  தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் கண்டு கொள்ளவே இல்லை. இந்த ஆலையில் இருந்து வெளியேறிய கழிவுகள் சுற்றுப்புற பகுதியை மாசுபடுத்திவிட்டன. இதை எல்லாம் கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. ஆலையை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.



சென்னை உயர்நீதிமன்றம் 2010 செப்டம்பர் 28-ம் தேதி அளித்த இந்த தீர்ப்பின்படி ஆலை மூடப்பட்டதா..? அல்லது உச்ச நீதிமன்றத்தின் படிக்கட்டுக்களை ஸ்டெர்லைட் நிர்வாகம் தட்டியதா? என்பதை நாளை பார்க்கலாம்...





diski - தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1 , 2 ,3-http://www.adrasaka.com/2013/04/1-2-3.html



 2  -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4, 5 -http://www.adrasaka.com/2013/04/4-5.html

3.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 6 , 7-http://www.adrasaka.com/2013/04/6-7.html



தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 8-http://www.adrasaka.com/2013/04/8.html