Showing posts with label ஸ்டெர்லைட் வரமா... சாபமா- ஒரு மினி தொடர் - பாகம் 10. Show all posts
Showing posts with label ஸ்டெர்லைட் வரமா... சாபமா- ஒரு மினி தொடர் - பாகம் 10. Show all posts

Sunday, May 05, 2013

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 10




சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி உத்தரவிட்டதோடு, அங்கு வேலை செய்த ஊழியர்களின் நலனையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அதற்கென சில நிபந்தனைகளையும் விதித்தது.



ஊழியர்கள் அனைவரும் தொழிலாளர் நலச் சட்டத்தின் படி ஆலை நிர்வாகத்திடம் இருந்து நிவாரணம் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் என குறிப்பிட்ட நீதிமன்றம், அவர்கள் பணியாற்றிய காலத்தை கணக்கிட்டு ஒவ்வொரு வருடத்துக்கு 16 வேலை நாட்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க வேண்டும். ஆலை மூடப்பட்டதால பணியாளர்களின் குடும்பம் தவித்து போகாமல் இருக்கும் வகையில் அவர்களுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். தூத்துக்குடியை சுற்றிலும் உள்ள பகுதியில் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் அந்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.



இந்த தீர்ப்பு ஆலை நிர்வாகத்தை அதிர்ச்சி அடைய வைத்தது. கோடிக்கணக்கில் முதலீட்டில் செயல்பட்டு வரும் இந்த ஆலையை திடீரென மூடினால் அலுமினிய உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். அதனால் ஆலையை உடனடியாகமூட வேண்டும் என்பதை மட்டுமாவது மூன்று வாரத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்ற ஆலை நிர்வாகத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையையும் நீதிபதி ஏற்கவில்லை. இதனால் ஆலை மூடப்பட்டது.



இந்த தகவல் கிடைத்ததும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தங்களின் நீண்ட கால போராட்டத்துக்கு கிடைத்த இந்த வெற்றியை நினைத்து மகிச்சி அடைந்தார்கள். தூத்துக்குடி நகரமே மிகுந்த உற்சாகம் அடைந்தது. தொடக்கத்தில், ஆலை செயல்பட தொடங்கினால் தங்களுக்கு வர்த்தகம் அதிகரிக்கும் என நம்பி ஏமாந்து போயிருந்த வணிகர்கள், இந்த உத்தரவை கேட்டதும் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்காக அவர்கள் தங்களின் வாழ்த்துக்களை இந்த போராட்டத்தில் ஈடுபட்டாவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். 

வீழ்ச்சியடைந்த பங்குகள்



ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட தகவல் அறிந்ததும் அந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்கள் அதிர்ந்தார்கள். அதற்கு ஏற்ப தேசிய பங்குச் சந்தையில் ஸ்டெர்லை நிறுவனத்தின் பங்குகள் தேக்கம் அடைந்து 8 சதவிகிதம் சரிவை சந்தித்தது. இருப்பினும் வழக்கு விசாரணையை முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனித்து வந்ததால் விரைவிலேயே அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிவில் இருந்து மீண்டது.



இந்தியாவில் அலுமினிய உற்பத்தியில் கொடிகட்டிப் பறந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டத்தால் சர்வதேச அளவில் அலுமினியத்தின் விலை உயரும் என்று வர்த்தகர்கள் பதறினார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்த சமயத்தில் கருத்து தெர்வித்த வர்த்தக வல்லுனர்கள், 'இந்த ஆலையின் உற்பத்தி என்பது சர்வதேச அளவில் மிகவும் சொற்பம். அதனால் இங்கு உற்பத்தி முடங்கியதால் சர்வதேச சந்தையில் அலுமினியத்தின் விலை விண்ணை முட்டி விடும் என்று சொல்வது அபத்தமானது' என இந்த விசயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.


உச்ச நீதிமன்றத்திற்கு போன ஆலை நிர்வாகம்



ஆலையை சென்னை உயர் நீதி மன்றம் மூட உத்தரவிட்டதும் உடனடியாக டெல்லிக்கு சென்று உச்ச 
நீதிமன்றத்தின் கதவை தட்டியது, ஸ்டெர்லைட் நிர்வாகம். 'மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை ஆகியவற்றின் அனுமதியை பெற்று ஆலை இயக்கப்பட்டது. இந்த ஆலையினால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தேசிய மற்றும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் சான்று கொடுத்து இருக்கின்றன.

இந்த அமைப்புகள் கொடுத்த பரிந்துரைகளை எல்லாம் தவறாமல் நிறைவேற்றி வருகிறோம். ஆனால் இது எதையுமே சென்னை உயர் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் ஆலையை மூட உத்தரவிட்டு விட்டது, அதனால் ஆலையை மீண்டும் இயக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை வழங்கியது. இதனால் ஆலை நிர்வாகம் நிம்மதி அடைந்தது. தொடர்ந்து வழக்கு விசாரணை 20 வாய்தாவாக நடைபெற்றது. அதன்பின்னர், 2012 அக்டோபர் 1 ஆம் தேதியும், 9 ஆம் தேதியும் உச்ச நீதிமன்றத்தில் இருதரப்பின் நிறைவு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன.



உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ ஆலையின் வாதங்களுக்கு எதிராக தனது கருத்துக்களை பதிவு செய்தார். ஸ்டெர்லைட் ஆலை சுற்றுவட்டாரத்தில் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர் மட்டும் அல்லாமல் ஸ்டெர்லைட் கழிவுகளின் மாதிரிகளையும் வைகோ சேகரித்தார். அதனை அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் மார்க் செர்னைக் என்பவருக்கு அனுப்பி அதனை ஆய்வு செய்து பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா என கேட்டு இருந்தார்.



 
ஆலைக்கழிவு
சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் மார்க் செர்னைக் அந்த மாதிரிகளை பரிசோதனை செய்து ஒரு அறிக்கையை வைகோவுக்கு அனுப்பினார். அதில், 'ஆலையை சுற்றிலும் எடுக்கப்பட்ட நீரை பயன்படுத்தினால் விளைநிலங்கள் அடியோடு நாசம் அடையும். நச்சு கலந்த தண்ணீரை குடித்தால் கால்நடைகள் இறந்துபோகும். மனிதர்களுக்கு நுரையீரல் புற்றுநோய், சரும நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு, ஆயுள் காலம் குறையும்" என்று அதில் தெளிவாக குறிப்பிட்டு இருந்தார். அவர் தந்திருந்த அந்த பரபரப்பான அறிக்கையை வைகோ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார்.


இதற்கிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்த குழுவின் அறிக்கை ஆலை நிர்வாகத்துக்கு சாதகமானதாக இருந்தது. அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அளவுக்கு உள்ளேயே இருக்கிறது. தாமிரக்கழிவுகள், சல்ஃபர், ஆர்சனிக் கழிவுகளால் மக்களுக்கும் விளை நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இல்லை. குடிநீரும் மாசு அடைந்து இருக்கவில்லை என குறிப்பிட்டனர்.



இந்த வழக்கைன் இறுதி தீர்ப்பை எதிர்பார்த்து தூத்துக்குடி நகர மக்கள் பரபரப்பாக காத்திருந்தார்கள். ஆனால், தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே அதிரடியில் இறங்கி ஆலையை மூடியது தமிழக அரசு..

அந்த விவரம் நாளை பார்க்கலாம்...


diski - தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1 , 2 ,3-http://www.adrasaka.com/2013/04/1-2-3.html


 2  -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4, 5 -http://www.adrasaka.com/2013/04/4-5.html

3. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 6 , 7-http://www.adrasaka.com/2013/04/6-7.html



தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 8-http://www.adrasaka.com/2013/04/8.html