Showing posts with label ஸ்டூடியோ க்ரீன் VS ரேடியோ ஜாக்கி பாலாஜி - மிரட்டல்கள் - ஒரு பார்வை. Show all posts
Showing posts with label ஸ்டூடியோ க்ரீன் VS ரேடியோ ஜாக்கி பாலாஜி - மிரட்டல்கள் - ஒரு பார்வை. Show all posts

Wednesday, November 13, 2013

ஸ்டூடியோ க்ரீன் VS ரேடியோ ஜாக்கி பாலாஜி - மிரட்டல்கள் - ஒரு பார்வை

சினிமாவும் இணைய விமர்சனமும்

எது நமக்குத் தேவையோ, ஆனால் இல்லையோ, அதைப் பற்றிதான் நமக்கு நிறையவே பேச / புலம்பத் தோன்றும். 1947க்கு முன் கண்டிப்பாக வெள்ளையனே வெளியேறு என பேசாத, புலம்பாத, முணுமுணுக்காத ஆட்கள் இருந்திருக்க மாட்டார்கள். அதே போல, அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு, பெண் விடுதலை, மத நல்லிணக்கம், விலைவாசி, கரெண்ட் என புலம்பல்கள் / விவாதங்கள் இருக்கத்தான் செய்திருக்கும். 



கடந்த 5-6 ஆண்டுகளில், அதாவது, இணையத்தின் தாக்கமும், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரும் பெருக ஆரம்பித்த நேரத்தில், கருத்து /பேச்சு சுதந்திரத்தைப் பற்றி நிறைய பேர் பேசியிருப்பார்கள். இன்றளவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ட்விட்டர், ஃபேஸ்புக் வந்த பிறகு, நமது பேச்சு சுதந்திரத்திற்கு புத்துணர்ச்சி கிடைத்தது போலவும், இன்னொரு பரிமாணம் வந்ததைப் போலவும், ஆரோக்கியமான கருத்துகள் பரிமாறப்படும் எனவும் பலர் ஆரம்பித்தனர். அது நடந்தேவிட்டது என கொண்டாடுபவர்களும் உண்டு. ஏன், அதற்கு முன் நமக்கு பேச்சு சுதந்திரமோ, கருத்துச் சுதந்திரமோ இல்லையா? நமது அடிப்படை மனித உரிமைகளிலேயே இந்த சுதந்திரங்களைப் பற்றி சொல்லியிருக்கும்போது, ஏன் புதிதாக அதைப் பற்றிப் பேச வேண்டும்? விவாதிக்க வேண்டும்? 



வேண்டுமென்றால் முதல் பத்தியில் பேசியதை சற்றே மாற்றி யோசிக்கலாம். எதெல்லாம் நமக்குத் தேவையோ, இருக்கிறதோ ஆனால் அடக்குமுறைக்கு ஆளாகிறதோ, அப்போது அதைப் பற்றிய விவாதங்கள் அதிகமாக இருக்கும் என எடுத்துக் கொள்ளலாமா? அப்படியானால், அடிக்கடி கருத்து, பேச்சு சுதந்திரங்களைப் பற்றி உருவாகும் விவாதங்கள், அதன் மீது நடக்கும் அடக்குமுறைகளின் எதிர்வினையே எனக் எடுத்துக்கொள்ளலாம் தானே? 


அப்படி, கடந்த சில வாரங்களுக்கு முன் இணையத்தில் பலரும் பேசிக்கொண்டிருந்தது (ஆம்.. பேசிக்கொண்டிருந்தது, இணையத்தில் எந்த சர்ச்சைக்கும் 3 நாட்களுக்கு மேல் இடம் இல்லை), கருத்து சுதந்திரத்தைப் பற்றி. இந்த முறை அடக்குமுறைக்கு ஆளாகியிருப்பது, தன் இடைவிடாத, வித்தியாசமான நகைச்சுவைப் பேச்சால், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருக்கும் ஆர்.ஜே பாலாஜி. 


சமீபத்தில் வெளியான ஒரு படத்திற்கு இவர் செய்த விமர்சனத்தால், அந்த படத் தயாரிப்பு நிறுவனம் இவரை எச்சரித்ததாகவும், இதன் விளைவாக, அவர் வேலை செய்யும் எப்.எம் நிலையத்திலும் அவருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் பாலாஜி, தன்னால் செய்யும் தொழிலுக்கு துரோகம் செய்ய முடியாது எனக்கூறி, தனது ட்விட்டர் பேஜில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தான் இனி சினிமா விமர்சனங்கள் செய்யப்போவதில்லை என தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக பலர் பேசியிருந்தாலும், அவருடைய நிலைப்பாடு மாறியதாகத் தெரியவில்லை. இவர், ஏற்கனவே இத்தகைய சர்ச்சையில் மாட்டியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


பாலாஜி பேசியது இப்போது இணையத்தில் இல்லையென்றாலும், அவருக்கான ஆதரவும் எதிர்ப்பும் இணையத்திலேயே காணப்படுகிறது. அவரது முந்தைய விமர்சன தொகுப்புகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு, லட்சக்கணக்கில் ஹிட்ஸ்களை வாரிக் குவித்திருக்கிறன. இவரது இந்த புகழே இப்போது இவரது நிலைக்கும் காரணமாகியுள்ளது. ஏனென்றால், விமர்சிக்கப்படுபவர்கள் பயப்படுவது பெரும்பாலானவர்கள் படிக்கும், பார்க்கும், கேட்கும் விமர்சனங்களைப் பற்றிதான். 


பாலாஜியின் விமர்சன சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும், இணைய விமர்சனங்கள் எப்படி இருக்கின்றன என்பதை பார்ப்போம். யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற நிலையில், பெரும்பாலான பயனர்களின் விமர்சனங்கள், சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கின்றன. பலருக்கு, ஒரு பத்தியை சரியாக கட்டமைக்கத் கூடத் தெரிவதில்லை. இலக்கணப் பிழைகளும் மிகையாக இருக்கின்றன. 



படத்தை சுக்கல் சுக்கலாக பிரித்து போஸ்ட்மார்ட்டம் செய்வதில் குரூரமாக ஆனந்தம் அடைகின்றனர். ஆனால் இத்தகைய விமர்சனங்களை படிப்பவர்கள் குறைவே. இதில், படிப்பவர்கள் தெளிவாகவே தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படி தேர்ந்தெடுத்து படிக்கும் விமர்சனங்களும் எத்தகைய பாதிப்பை உண்டாக்குகின்றன? 


"விமர்சனங்கள் எந்த விதத்திலும் ஒரு படைப்பை பாதிப்பதில்லை. 'அன்பே சிவம்', 'தூள்' இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி, 'தூள்' தான் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்தனைக்கும் 'அன்பே சிவம்' படத்தை அன்று கொண்டாடியவர்கள் பலர். இருந்தாலும், அன்று வியாபார ரீதியாக வெற்றி பெற்றது 'தூள்' மட்டுமே. இதற்கு எந்த விமர்சகரும், விமர்சனமும் காரணம் அல்ல. இதுவே இன்றுவரை நிதர்சனம். 


வெகுஜன மக்களின் ரசனைக்கேற்றவாறே ஒரு படத்தின் வெற்றி இருக்கும். அதே போல், இதுவரை என் எந்த விமர்சனத்திற்கும், திரையுலகில் இருப்பவர்கள் எவரிடமிருந்தும் எதிர்ப்பு வந்ததில்லை. என் விமர்சனத்திற்கு எதிர் விமர்சனங்கள் பல வந்துள்ளன. அவற்றை எந்த விதத்திலும் ஒதுக்காமல் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்" என்கிறார், பிரபலமான ஒரு இணையதளத்திற்காக விமர்சனங்கள் செய்து வரும் நடிகர், பத்திரிக்கையாளர் மற்றும் நகைச்சுவையாளர் பாஸ்கி. 


இணையத்தில் பிரபலமான எழுத்தாளரும், விமர்சகருமான, (இன்று ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்) கேபிள் சங்கர், "நான் எழுதிய விமர்சனத்தினால் சிலரது மாற்றுக்கருத்துக்களை சம்பாதித்தது உண்டு. ஆனால் பிறகு, அவர்களுடைய படங்களிலேயே பணியாற்றியதும் உண்டு. என் விமர்சனம் எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையும் நோக்கி இருக்காது. அது அந்த படத்திற்கான விமர்சனமே. ஒரு விமர்சனத்தினால் படத்தினுடைய வியாபரம் பாதிப்படையும் என்பது தவறான கருத்து. அப்படிப் பார்த்தால், சமீபத்தில் வெளியாகிய ஓரு காமெடி படம், இணையத்தில் பலரிடம் குட்டுகளை மட்டுமே வாங்கியது. அந்தப் படம் ஓடவில்லையா?" என்கிறார். 



ஒரு விமர்சனத்தால் திரைப்படத்தை ஓட வைக்கவோ, ஒட்டத்தை நிறுத்தவோ முடியாது என்பதே பரவலான கருத்து. இன்று பல கலைஞர்களுக்கு விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளவோ, ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் புறக்கணிக்கவோ பக்குவம் இருப்பதில்லை. 



ஒரு ஹோட்டலில் சாப்பிடப் போனவர், 'என்ன முட்டை நன்றாகவே இல்லையே?' எனக் கேட்டதற்கு, 'நீயும் அடைகாத்து போட்டிருந்தா தெரிஞ்சிருக்கும் கோழியோட வலி' என்றாராம் சர்வர். இப்படி எந்த ஒரு திரைவிமர்சனத்திற்கும் எதிர்வினையாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் முதலில் சொல்லும் வாதம், "விமர்சனம் செய்பவர்கள் எங்கே படம் எடுத்து காட்டுங்கள், தெரியும் அதன் உழைப்பு" என்பதே. அல்லது, "கோடி கோடியாக செலவழித்திருக்கும் ஒரு படைப்பை எந்தவித இரக்கமும் இல்லாமல் விமர்சனம் செய்தால் நியாயமா" எனச் சொல்வது. சமீபத்திய சர்ச்சையில், கலையுலக வாரிசு ஒருவரும், புது சினிமா வெளியீடு என்பது குழந்தை பெற்றுக்கொள்வதைப் போல என்று கூறியிருந்தார். 



ஒரு சில படைப்பாளிகளோ தங்கள் படைப்பில் மறைத்துவைத்த நூற்றுக்கணக்கான குறியீடுகளைச் சுட்டிக்காட்டி, சினிமா விமர்சனங்களைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். 



இவர்கள் எல்லோருமே கூற வருவது என்ன? இப்படி ஓர் உன்னத கலைப் படைப்பை ரசிக்க தெரியாதாவர்கள் ஜடங்களே என்று கூறுகிறார்களா, அதற்கு பயந்தே பாராட்ட வேண்டுமா? அல்லது இவ்வளவு பணம் செலவழித்து, சினிமா என்ற பெயரில் நாங்கள் எதை கொடுத்தாலும் பாருங்கள் என்பதா?. இது ஃபைவ்ஸ்டார் ஹோட்டல், இங்கு தண்ணீர் கிடைப்பதே அரிது, உங்களுக்கு விஷமே கிடைத்திருக்கிறது. யோசிக்காமல் சாப்பிடுங்கள் என்று சொன்னால் அபத்தமாக இருக்காது? அப்படிதான் இந்த வாதங்களும் இருக்கின்றன. 



நூற்றாண்டு கால இந்திய சினிமாவால் எந்த ஒரு பெரிய சமூக மாற்றமும் நிகழவில்லை (அரசியலில் தமிழக, ஆந்திர முதல்வர்கள் விதிவிலக்கு). குறிப்பாக இன்றைய காலகட்டதில், சினிமாவை ஒரு உன்னதக் கலை வடிவமாக யாரும் பார்ப்பதில்லை. அது ஒரு பொழுதுபோக்கு ஊடகமே. 


தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு, ஒரு சினிமாவை பாராட்டவோ, தூக்கிப்போடவோ எல்லா உரிமையும் இருக்கிறது. ஏனென்றால் இது இலவச சேவை அல்லவே. ஒவ்வொரு ரசிகனும் தன் காசை செலவழித்தே டிக்கெட் வாங்குகிறான். அதே போல், தயாரிப்பாளர்கள் 100 ரூபாய் செலவழிப்பதும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றியா? அல்ல. முதலீடு செய்த பணத்திற்கு மேல் பத்து மடங்காக சம்பாதிக்கவே. வியாபார நோக்கின்றி திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் படங்களுக்கும் விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எவ்வளவோ பாடுபட்டு வெளியான விஸ்வரூபத்திற்கும் விமர்சனங்கள் வந்தன. எந்த ஒரு விமர்சனத்திற்கும் எதிர்வினைகள் உண்டு. அந்த விமர்சனத்தை 50 பேர் ஏற்றுக்கொண்டால், 50 பேர் ஒத்துக்கொள்ளாமல் விவாதம் செய்யவே ஆரம்பிப்பார்கள். இது ஆரோக்கியமானதாக இருக்கும்வரை பிரச்சினை இல்லை. 



எல்லாவற்றையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு, விமர்சனம் செய்தவரை மிரட்டுவது / ஆபாசமாகப் பேசுவதை எல்லாம் தெலுங்கு சினிமா வில்லன்கள் 80களிலேயே செய்துவிட்டார்கள். விமர்சனங்கள் ஒரு சினிமாவைப் பற்றி இல்லாமல், அதிலிருக்கும் தனி மனிதனைப் பற்றி மாறும்போது, எதிர்வினைகள் இருப்பதில் தவறில்லை. அதே போல், ஒரு படைப்பைப் பற்றிய தவறான விஷயங்கள் மட்டுமே சுட்டிக்காட்டப்படும்போது, கிண்டலடிக்கப்படும்போது, அந்த விமர்சனம் அதன் பாதையிலிருந்து மாறுகிறது. அத்தகைய விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது. 


பவர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சீனிவாசனுக்கு, இணையத்தில் எக்கச்சக்க ரசிகர்கள். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த எந்தப் படமும் சூப்பர் ஹிட் ஆகவில்லை. ஏனென்றால், எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், எவ்வளவு தூற்றினாலும் போற்றினாலும், ரசிகர்களுக்குத் தெரியும் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று. 


படைப்பாளியானாலும் சரி, விமர்சகரானாலும் சரி.. விமர்சனங்களை ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பயன்படுத்த ஆரம்பிக்கும்போது தான், நாம் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும். இல்லாவிட்டால், விமர்சனமும், எதிர்வினையும் முடிவில்லாத வெறும் சுழல் வாதம் தான். இதற்கு சினிமா பாடலில் இருந்தே உதாரணம் சொல்லலாம்.. "செக்கு மாடு சுற்றி வரலாம்.. ஊர் போய் சேராது!" 


நன்றி - த தமிழ் ஹிந்து 


 மக்கள் கருத்து 


 1. உண்மையான படைப்பாளிகள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வார்கள்.. வியாபாரிகளுக்கு பாராட்டு மட்டுமே தேவை..


2 தமிழக சட்ட மன்றத்தை போல இங்கு பாராட்டுபவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.. குறைகளை சொல்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள்" என்பது வியாபாரத்தின் நோக்கம்!!!


3 பாலாஜி தன்னுடைய விமர்சனத்தை நிறுத்தக்கூடாது. தொடர்ந்து திரைபடங்களை விமர்சிக்க வேண்டும். தரமான படங்கள் வெளி வருவதற்கு விமர்சனம் அவசியம். இரசிகனின் விருப்பத்தை அறியாமல் படத்தை எடுப்பவர்கள் தங்கள் கருத்தை மற்றவர்கள் மீது திணிப்பது போலாகும்.


4 அந்தக் காலத்தில் MGR நடித்து அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய தாய் மகளுக்கு கட்டிய தாலி என்ற படத்திற்கு குமுதம் பத்திரிகை வெட்கக்கேடு என்று ஒரே வரியில் விமர்சனம் எழுதியது.அப்போது அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.இப்போது எல்லா விசயத்திலும் சகிப்புத் தன்மை குறைந்து விட்டது.


5 நாங்க என்ன குப்பையா வேணும்னா படம் எடுபோம் ஆதே எல்லாம் நீ எதுவும் சொல்ல கூடாது ...இது தான் உங்க நிலைப்பாடு என்றால்... நான் திருட்டு vcd ல தான் படம் பார்பேன் நீ யும் எதுவும் சொல்ல கூடாது ...


6 சினிமாவுக்கு விமர்சனம் தேவை, இல்லாவிட்டால் கண்டமேனிக்கு சினிமா எடுப்பாங்க, அந்த கன்றாவிய பாக்கணும்.


7 விமர்சனம் என்பது என்ன நன்றாக இருந்தால் பாராட்டப்படுவதும் குறைகள் இருந்தால் கொட்டுவதும்தானே. ஆனால் இந்த விமர்சனம் யார் செய்கிறார்கள் என்பதில்தான் பிரச்சனை இருக்கிறது. ஒருவரது விமர்சனம் அவரது தனிப்பட்ட விறுப்பை வெறுப்பை ஒட்டியே அமையும் என்பதில் யாருக்கும் மாறபட்ட கருத்து இருக்க முடியாது.


 ஆனால் விமர்சனம் செய்பவர் சற்று புகழ் பெற்றவராக இருந்தால்தான் அந்த விமர்சனத்தின் தாக்கம் மற்றவர்களை பாதிக்கும். மற்றபடி முகப்புத்தகத்திலோ அல்லது ட்விட்டரிலோ உள்ள ஒரு நபர் சொல்லும் விமர்சனம் என்பது அதிகபட்சம் அவரது இணைய நண்பர்களை மட்டுமே சென்றடைவதால் பாதிப்பு என்பது வருவதற்கு வாய்ப்பு அதிகம் இல்லை. திரு ஆர் ஜே பாலாஜியின் தனிப்பட்ட புகழ் விமர்சனத்திற்கு விமர்சனம் வர வைத்துவிட்டது