Showing posts with label ஷேர். Show all posts
Showing posts with label ஷேர். Show all posts

Tuesday, January 01, 2013

ரிஸ்குகளைத் தவிர்ப்பது எப்படி? - சோம. வள்ளியப்பன் - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்!

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்!

ரிஸ்குகளைத் தவிர்ப்பது எப்படி?

சோம. வள்ளியப்பன்

கிரிக்கெட் விளையாடுபவர்கள் எடுப்பது மிகப்பெரிய ரிஸ்க். அதிலும் குறிப்பாக பேட்டிங் செய்யும்போது, மட்டை அடிப்பவர் எடுக்கும் ரிஸ்க் அபரிமிதமானது. அவர் நிற்கும் இடத்தில் இருந்து வெறும் 20 அடி தூரத்தில் (பக்கத்தில்) இருந்து ஒருவர் 163 கிராம் எடை இருக்கிற நல்ல கெட்டியான பந்தை, அவரால் இயன்ற வேகத்தில் பேட்ஸ்மேனை நோக்கி வீசுகிறார். அது வரும் வேகம், மணிக்கு சுமார் 130 கி.மீ. சீறிப்பாய்ந்து வரும் அந்தப் பந்து, பேட்ஸ்மேனின் உடலின் எந்தப் பகுதியையும் தாக்கலாம் என்பதுதான் நிலை.
சில வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசினால், சில பேட்ஸ்மேன்களால் எதிரில் இருந்தும் கூட, தன்னைக் கடந்து போகும் பந்தை பார்க்க முடியாதாம். ஒரு விஷ்ஷ்க்க் ஒலி கேட்குமாம். அவ்வளவுதான். பந்து பறந்து போய் விட்டிருக்கும்.
ஆனாலும் எவ்வளவோ பேர் அடிபட்டுக் கொள்ளாமல் விளையாடுகிறார்கள். காரணம், அவர்கள் போட்டுக் கொள்ளும் உபகரணங்கள். தலைக்கு ஹெல்மெட். காலுக்கு பேடுகள், கைக்கு கிளவுஸ். இன்னும் சில காப்பான்கள்.
ஆக, பங்குச் சந்தை முதலீடு உட்பட, ரிஸ்க் இருக்கும் எதையும் அடிபடாமல் ஆடலாம். ஏற்ற பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தினால் போதும்.
பங்கு முதலீடுகளில் பெரிய அடிகள் படாமல் இருக்க, டெக்னிக்கல் அனாலிசிஸ் என்ற ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.
டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது கொஞ்சம் பெரிய சப்ஜெக்ட். அதில் நிபுணர்கள் இருக்கிறார்கள். (ஆனால், யார் நிபுணர் என்று கண்டுபிடிப்பதுதான் சிரமம். சரிதானே!).
நன்றாகவே நடக்கும் ஒரு நிறுவனம் திடீரென சிரமத்துக்கு உள்ளாகும். நட்டமடையும். அதனால் அந்த நிறுவனப்பங்கு விலைகள் விழும். விழுவது என்றால், நிற்காமல் பல நாட்களுக்குப் பெய்யும் மழை போல, தொடர்ந்து விழுந்து கொண்டேயிருக்கும்.
உதாரணத்துக்கு, சுஸ்லான் எனெர்ஜி நிறுவனப்பங்கு. அதன் 2008ம் ஆண்டு விலை ரூ. 2300. அப்போது அது, 10 ரூபாய் முகமதிப்புள்ள பங்கு (Rs 10 paid up). பின்பு அது 2 ரூபாய் பங்காக மாற்றப்பட்டது. (இதை ஸ்டாக் ஸ்பிலிட் என்பார்கள். 10 ரூபாய் நோட்டை சில்லறை மாற்றியது போல, பத்து ரூபாய் முகமதிப்புள்ள பங்கை, ஐந்து 2 ரூபாய் பங்குகளாக மாற்றிக் கொடுப்பார்கள்).
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு 2 ரூபாய் முகமதிப்புள்ள பங்கின் தற்போதைய, சந்தைவிலை வெறும் 20 ரூபாய். ஐந்து பங்குகளின் விலை 20x5 = ரூ.100.
2300 ரூபாய்க்கு வாங்கிய பங்கு வெறும் நூறு ரூபாய்தானா? என்று அதிர்ச்சியாக இருக்கலாம். இதெல்லாம் பங்குச் சந்தையில் சகஜமப்பா தான். சுஸ்லான் மட்டுமல்ல. இப்படி ஒரேயடியாக விலை விழுந்த பங்குகள் ஏகப்பட்டவை உண்டு. இந்த வகைக்கு மற்றொரு நல்ல (!) உதாரணம், யூனிடெக் பங்கு.

2008 ம் ஆண்டு ரூ.546 விற்ற யூனிடெக் பங்கு, 2012ல் வெறும் 34 ரூபாய். எல்லாம் ஸ்டாக் ஸ்பிலிட்டுக்குப் பிறகு தான். இப்படி இன்னும் எத்தனையோரத்தினங்கள்.’
அப்படி இருந்த விலை, இப்படி ஆகிவிடும். கண் முன்பாகவே தொடர்ந்து இளைக்கும். ஏனடா இந்தப் பங்கை வாங்கினோம் என்று சலித்துக் கொள்வது தவிர, பங்கை வாங்கியவர் வேறு என்ன செய்வார்? ‘இறக்கம் தற்காலிகம்தான். விலை சமாளித்து மீண்டு வந்துவிடும்என்று நம்புவார்.
சில சமயங்களில் அவர் நம்பிக்கை சரிவரலாம். முன்பு பார்த்த Higher Lows ஆக இருந்தால் பரவாயில்லை. கொஞ்சம் இறங்கிப் பின் மேலேறிவிடும். ஆனால், சில சமயங்களில் முந்தைய இறக்கத்தை விடவும் கூடுதலாக இறங்கும். ஆமாம், Lower lows நிலைதான்.
டெக்னிக்கல் அனலிஸ்டுகள், டாக்டர்கள் ECG ரிப்போர்ட் பார்ப்பது போல, குறிப்பிட்ட பங்கின் விலை மாற்ற சார்ட்டுகளைப் பார்த்து, இப்போது இறங்குவது (சகுனம்) சரியில்லையே! முன்பு இறங்கியதைவிட, விலைகள் குறைகின்றனவே! ஏதோ கெட்ட செய்தி அல்லது பிரச்னை தான். என்ன என்று தெரியவில்லை" (சுரம் அதிகமாகிக் கொண்டே போகிறது) அதனால், கையில் இருக்கும் பங்குகளை விற்றுவிடுங்கள்" (பெரிய ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கொண்டு போய்விடுங்கள்) என்று சொல்லுவார்கள்.
டெக்னிக்கல் அனலிஸ்டுகளுக்கு குறிப்பிட்ட நிறுவனம் பற்றி, அதன் செயல்பாடுகள், லாப நட்டங்கள் பற்றித் தெரியாது. நிறுவனத்துக்குக் கிடைக்க இருக்கும் அல்லது கிடைக்க இருந்து தவறிப்போன ஆர்டர்கள் பற்றியெல்லாமும் தெரியாது. ஆனாலும் தெளிவாக, விலை சார்ர்டுகளை மட்டுமே பார்த்துவிட்டு, வேண்டாம் ஏதோ கோளாறு இருக்கும் போலிருக்கிறது. பங்குகளை விற்றுவிடுங்கள்," என்பார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை, பங்கு விலைகள்தான் எல்லாம். இன்ன விலை வந்தால் வாங்கவேண்டும். இன்ன விலைக்குக் கீழே போய்விட்டால் விற்றுவிட வேண்டும். அதெப்படி நடக்கிற விலைகளை வைத்து நடக்கப்போகிற விலைகளைக் கணிக்க முடியும் என்று கேட்கத் தோன்றலாம்.
கத்திரிக்காய் விளைந்தால் சந்தைக்கு வந்துதான் ஆகவேண்டும் என்பதுதான் அவர்கள் அணுகுமுறையின் அடிநாதம். நிறுவனத்துக்கு வரும் நல்லதோ கெட்டதோ அதன் பங்கு விலையில் தெரிந்துவிடும். காரணம், அந்த நல்லது கெட்டதைத் தெரிந்தவர்கள், கண்டுபிடித்தவர்கள், பங்குகளை அதன் அடிப்படையில் பெரிய அளவுகளில் வாங்கவோ விற்கவோ செய்வார்கள்.
அனலிஸ்டுகள், பங்கு விலைகளைக் கவனமாகப் பார்ப்பார்கள். பின் தொடர்வார்கள். விலைகள் தொடும் மற்றும் தாண்டும் அளவுகளைப் பார்ப்பார்கள். அதன் அடிப்படையில் முடிவுகள் எடுப்பார்கள். முதலீட்டாளர்களுக்கு அறிவிப்பார்கள்.

குறிப்பிட்ட விலைக்கு மேலும் பங்கு விலை போகிறது, அதையும் பெருத்த எண்ணிக்கையில் மக்கள் (எவரோ) வாங்குகிறார்கள் என்றால், அது ஒரு செய்தியை வலுவாகச் சொல்லுகிறது. அந்தச் செய்தி, ‘நிறுவனத்துக்கு நன்மை வர இருக்கிறதுஎன்பதுதான்.
அதேபோல, விலை இறங்குகிறது. அதேசமயம் அதிக எண்ணிக்கையிலான பங்குகள் வர்த்தகம் ஆகிறது. அனலிஸ்டுகள் புரிந்து கொள்ளும் செய்தி, ஏதோ பிரச்னை! விவரம் தெரிந்தவர்கள் விற்கிறார்கள்.
செய்திச் சுருக்கம் இதுதான். அதிக எண்ணிக்கையில் நடைபெறும் வர்த்தகங்கள் (வால்யூம்) தான் செய்தி. அதுசமயம் விலைகள், முன் உயர்ந்ததைவிட கூடுதலாக உயர்ந்தால் வாங்க வேண்டும். முன் இறங்கியதைவிட அதிகமாக இறங்கினால் விற்கவேண்டும். அதிக எண்ணிக்கையில் இல்லாமல் அல்லது வழக்கமாக நடைபெறும் அளவுக்கும் குறைவான எண்ணிக்கையில் வர்த்தகம் நடக்கும் போது நிகழும் விலை மாற்றங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. (யாரோ செயற்கையாக எதற்கோ முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம்).
எல்லாம் சரி, சுஸ்லான் மற்றும் யூனிடெக் நிறுவனங்களில் முதலீடுகள் செய்தவர்களுக்கு டெக்னிக்கல் அனாலிசிஸ் எப்படி உதவியிருக்கும் என்று கேட்கிறீர்களா?
விலை விழ ஆரம்பித்ததுமே, எவ்வளவு தூரம் விழுகிறது என்பதை அனலிஸ்டு மூலம் தெரிந்து கொண்டு, குறிப்பிட்ட விலையில் ஸ்டாப்லாஸ் போட்டு வைத்து, அதற்கும் கீழ், விலை போக முயற்சிக்கும் போதே விற்றுவிட்டு வெளியில் வந்திருக்கலாம். எப்போதோ வெளியேறியிருக்கலாம். பெரிய நட்டங்களைத் தவிர்த்திருக்கலாம்.
அப்படிச் செய்திருந்தாலும் நட்டம்தான். அது கார்டு (காப்பான்) போட்டுக் கொண்டு ஆடியபோது அடிபட்டது போல. பெரிய அடி தவிர்க்கப்படும். கொஞ்சம் வலியோடு பிரச்னை முடிந்துவிடும்.
எப்போது வாங்கலாம், எப்போது விற்றுவிட வேண்டும் என்பதையெல்லாம் சுட்டிக் காட்டுவதுதான் டெக்னிக்கல் அனலிஸ்டுகளின் முக்கிய வேலை.
(தொடரும்)
ஷேர் மார்க்கெட் சீக்ரெட்!



thanx - kalki