ஷேர் மார்க்கெட் சீக்ரெட்!
ஷேர் மார்க்கெட் காளைகள்; கரடிகள்!
சோம. வள்ளியப்பன்
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சில நாட்கள் முன்பு, நூறு புள்ளிகளுக்கு மேல் விழுந்தது. ஏன் இறங்கியது என்பதற்குக் காரணம் சொன்னார்கள். நாடாளுமன்றத்தில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு தேவையா என்பது பற்றி வோட்டெடுப்பு எடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கேட்டதும், அதனால் ஆளும் அரசுக்கு சிக்கல் வரலாம் என்று பங்குச் சந்தை கருதியதும்தான் இறக்கத்துக்குக் காரணம் என்றார்கள்.
அதே சென்செக்ஸ், கடந்த செவ்வாய்க் கிழமை அன்று, ஒரே நாளில் 300 புள்ளிகள் உயர்ந்தது. திடீரென ஏன் அவ்வளவு உயர்ந்தது என்பதற்கும் காரணம் சொன்னார்கள். ‘கிரீஸ் நாட்டின் பொருளாதாரச் சிக்கலுக்குத் தீர்வு கிடைக்கும் எனத்தெரிந்தது மற்றும் மூடீஸ் என்ற ரேட்டிங் நிறுவனம் இந்தியாவுக்குச் சாதகமான ரேட்டிங் கொடுத்ததும்தான் சென்செக்ஸின் திடீர் உயர்வுக்கான காரணங்கள்.’
இப்படியாக அவ்வப்போது வருகிற செய்திகளை வைத்து சில நாட்கள் உயர்ந்தும் வேறு சில நாட்கள் இறங்கியும் இருப்பது பங்குச் சந்தையின் பழக்கம். இது இரவும் பகலும் மாறிமாறி வருவது போல. எல்லா காலகட்டங்களிலும் இப்படிப்பட்ட, ஒருநாள் ஏற்றம் அடுத்த சில நாட்களிலேயே இறக்கம் என்பது சாதாரணம்.
இந்த ஏற்ற இறக்கங்கள் வாங்கி விற்று, விற்று வாங்கி டிரேட் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாய்ப்பு. அவர்கள் கவனம் இந்த மிகக் குறுகிய கால ஏற்ற இறக்கங்களின் மீதுதான்.
இதற்கும் அடுத்த (கால)கட்டம் உண்டு. அதை ஷார்ட்டர்ம் என்று சொல்லலாம். மூன்று மாதம் முதல் ஓர் ஆண்டு வரை. முன்னது இரவு பகலுக்கு ஒப்பு என்றால், இதை, ஆண்டில் வரும் வெவ்வேறு பருவக் காலங்களுடன் ஒப்பிடலாம். கோடைக்காலம், இளவேனிற் காலம் (இப்போது இருக்கிறதா என்ன?) மாரி காலம் (மழை), பனிக் காலம் என்பது போல, பங்குச் சந்தையிலும் ஓர் பட்ஜெட் தொடங்கி அடுத்த பட்ஜெட் வரை, ஒரு ரிசல்ட் சீசன் தொடங்கி அடுத்த ரிசல்ட் வரை என்பது போல ஏற்றங்களோ இறக்கங்களோ தொடர்ந்து நடக்கும்.
இதற்கும் அடுத்த நீண்ட காலகட்டமும் உண்டு. அதுதான் புல் ரன் மற்றும் பேர் ரன்கள். இவை குறைந்த பட்சம் சில ஆண்டுகள் நீடிக்கும்.
புல் ரன் என்றால், பங்குச்சந்தை தொடர்ந்து உயரும் காலகட்டம். பங்கு விலைகளின் எழுச்சி காலம். ஆமாம், இதை ஏன் புல் ரன் என்கிறார்கள் என்று சிலர் கேட்கலாம். காளைமாடு, சண்டைகளில் (புல் பைட்கள்), முன்வந்து தாக்கும் குணமுடையது. அதனால் தொடர்ந்து பங்கு விலைகள் உயரும் பங்குச் சந்தை காலகட்டத்தை புல் ரன் என்று சொல்லும் பழக்கம் இருக்கிறது.
இந்தக் காலகட்டத்தில் பங்கு விலைகள் விழவே விழாதா என்றால், விழும்தான். அதெப்படி விழாமலே மேலே போக முடியும்? விழும் ஆனால் விழாது என்று கூடச் சொல்லலாம். நூறு ரூபாய் விலை விற்கிற பங்கு 120 ரூபாய்க்கு விலை உயரும் (பகல்). அதன்பின் விழும் (இரவு). எவ்வளவு விழும்? பத்து ரூபாய்தான் விழும். இருபது ரூபாய் ஏறி, பத்து ரூபாய் விழுந்தால், அது வீழ்ச்சியா? இதுதான், விழும் ஆனால் விழாது (தத்துவம்!) என்பது.
பங்குச்சந்தை அனலிஸ்ட்டுகளின் மொழியில், இதை Forming Higher என்பார்கள். இறங்கும் ஆனால் முந்தைய இறக்கத்தைவிடக் குறைவாக. அதேபோல விலைகள் உயரும், முந்தைய உயர்வை விடக் கூடுதலாக. இதை Forming higher highs என்பார்கள்.
மிகக் குறுகிய கால பார்வையும் அணுகுமுறையும் கொண்டவர்கள், அன்றாடம் நடக்கும் ஏற்றங்களையோ இறக்கங்களையோ பார்த்துவிட்டு, முடிவுக்கு வந்துவிடுவார்கள். அதனால், வைத்திருக்கும் பங்குகளை விற்பார்கள். அல்லது கூடுதலாக வாங்குவார்கள்.
தொலைநோக்குப் பார்வையும் நீண்ட கால அணுகுமுறையும் கொண்டவர்கள், நடக்கும் விலை மாற்றங்களைத் தனித்துப் (in isolation) பார்க்காமல், மொத்தத்தில் விலைகளின் பயணம் (ஓவரால் டிரெண்ட்) எப்படி இருக்கிறது என்று பார்ப்பார்கள். அவர்கள் கவனிப்பது, டிரெண்ட் புல்லிஷா? அல்லது பேரிஷா?
ஆமாம், பகலுக்கு இரவு போல, கோடைக்குக் குளிர் காலம் போல, புல் ரன்க்கு எதிர்மறையும் எதிர்மாறான காலமும் உண்டு. அதன் பெயர் பேர் ஃபேஸ் (ரன் என்று சொல்வதில்லை).
Bear
Phase என்றால், விலைகள் தொடர்ந்து இறங்குகிற காலகட்டம். கரடிகள் சண்டைகளில் பின்வாங்கித் தாக்குமாம் (யார் பார்த்தது!). பங்குச் சந்தையில் சிலர், பங்குகளை விற்று விற்றே பணம் பார்ப்பார்கள். அவர்கள் பெயர்தான் பேர்ஸ், கரடிகள்.
முன்பே பார்த்திருக்கிறோம். கையில் இல்லாமலே பியூட்சர்ஸ் மார்க்கெட்டில் விற்கலாம். பின்னர் விலை இறங்கும்போது வாங்கிக்கொடுத்து, நேர் செய்து கொண்டு விடலாம். இதுவும் நடக்கும். இப்படி பலரும் ஷார்ட் போவதால் பங்குவிலைகள் இறங்கும். கையில் பங்குகள் வைத்திருப்பவர்கள்,
‘என்ன இது விலைகள் இப்படித் தொடர்ந்து இறங்குகிறதே! கையில் இருப்பதை விற்று, கிடைக்கிற பணத்தைப் பிடிப்போம்’ என்று அவர்களும் விற்பார்கள். இப்படியாக விற்போர் எண்ணிக்கை அதிகமாகிவிடும். வாங்குவோர் குறைந்து குறைந்து ஒரு நேரம் சீந்த ஆள் இல்லாமல் போகும். தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு!
முன்பு பார்த்த இரவு பகல் என்ற குறுகிய காலச் சின்ன மாற்றங்கள் இந்தக் காலகட்டத்திலும் நடக்கும். தொடர் இறக்கம் நேர்கோடாக இறங்காது. இடையிடையே உயர்வுகள் வரும். ஆனால் அவை இறங்கியதை விடக் குறைவாக இருக்கும். ஆமாம், Forming lower Tops & Lower lows உயரும்; ஆனால் முந்தைய உயர்வை விடக் குறைவாக இறங்கும்; முந்தைய இறக்கத்தை விட அதிகமாக.
நீண்டகால முதலீட்டாளர்கள் பார்க்க வேண்டியது, ஓவரால் டிரெண்ட் எப்படி இருக்கிறது என்பதைத்தான். இடையிடையே ஏற்படும் இரவு பகல் மாற்றங்களைப் பார்த்துத் திகைக்க வேண்டாம். எடுத்த முடிவுகளை அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டாம்.
2003
முதல் நம் பங்குச் சந்தைகளில் புல் ரன். தொடர்ந்து நாலே முக்கால் ஆண்டுகள் காளைகள் ஆண்டார்கள். 2008 ஜனவரியில்தான் அது முடிவுக்கு வந்தது. சென்செக்ஸ் 21 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது அப்போதுதான். அந்தச் சமயங்களில்தான் பரஸ்பர நிதிகளால் கூட பெரும் லாபம் காட்ட முடிந்தது. இடைஇடையே இறக்கங்கள் வந்தன. ஆனாலும் டிரெண்ட், அப் தான்.
அதன்பிறகு வந்த பேர் ஃபேஸ்சில் அதே சென்செக்ஸ் 9000 புள்ளிகளுக்கும் கீழே வந்தது. அது சமயம், பங்கு விலைகள் சரிந்தன. உதாரணத்துக்கு, தற்போது 205 ரூபாய்க்கு விற்கும் அம்புஜா சிமெண்ட் 43 ரூபாய்க்குக் கிடைத்தது. தற்போது 1100 ரூபாய் விற்கும் ICICI வங்கிப் பங்குகள் 283 ரூபாய்க்கு வர்த்தகம் ஆயின.
2010
க்குப் பிறகு பங்குச் சந்தை இறக்க மனநிலையை விட்டுவிட்டு, உயரவும் பறக்கவும் தயாராகி வருவது போலத் தெரிகிறது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, மீண்டும் ஒரு புல் ரன் தொடங்கலாம்.
(தொடரும்)
நன்றி - கல்கி , புலவர் தருமி