Showing posts with label வைரமுத்து. Show all posts
Showing posts with label வைரமுத்து. Show all posts

Sunday, April 12, 2015

ஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா?- வைரமுத்து பேச்சால் சர்ச்சை

'ஓ காதல் கண்மணி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், பாடலாசிரியர் வைரமுத்து, துல்ஹர் சல்மான், ரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாயகி நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் படப்பிடிப்பு இருந்ததால் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
இச்சந்திப்பில் பாடலாசிரியர் வைரமுத்து பேசியது:
நான் ஊரில் இல்லாத போது, இரண்டு கவிஞர்கள் உருவாகிவிட்டார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் இனிமேல் ஊருக்கு செல்லக் கூடாது என்று நினைக்கிறேன் என்றேன். இப்படத்தின் கதையைப் பொறுத்தவரை இந்திய சமூகத்தில் ஒரு கலாச்சார அதிர்ச்சியை உண்டாக்குகிற கதை. இந்த கலாச்சார அதிர்ச்சியை கலைஞர்கள் உண்டாக்குகிறார்களா, சமூகம் உருவாக்குகிறதா என்பது மிகப்பெரிய கேள்வி.
ஒரு திரைக்கலைஞன் கலாச்சார அதிர்ச்சியை உண்டாக்க முடியும். ஆனால், ஒரு வணிக எல்லைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறான். என்னைப் போல ஒரு படைப்பாளி, கலாச்சார அதிர்ச்சியை எழுத்தில் உண்டாக்கி விடமுடியும். ஆனால், ஒரு திரைக்கலைஞன் கலாச்சார அதிர்ச்சியை திரையில் கொண்டு வருவதற்கு பல கோடிகளை முதலீடு செய்ய வேண்டும். அந்த கலாச்சார அதிர்ச்சி வணிக ரீதியிலும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்.
ஒரு பரிசோதனை முயற்சியாக இப்படத்தை மணிரத்னம் செய்திருக்கிறார். இன்னும் 50 ஆண்டுகளில் திருமணம் என்கிற நிறுவனம் இருக்குமா என்ற ஒரு பெரிய கேள்வி இந்திய சமூகத்தில் நிலவுகிறது. உலகமயமாக்குதல் என்கிற ஒரு பெரிய ராட்சத அலையில் வட்டார கலாச்சாரங்களும், மொழிகளும், பண்பாடுகளும் மெல்ல மெல்ல அதிர்வுகள் காணக்கூடிய நிலையில் இந்த படம் வெளிவருகிறது. இந்த அடித்தளத்தை நினைத்துக் கொண்டு இந்தப்படத்தை நீங்கள் துய்த்தால் உண்மை நம் கண்களுக்கு பிரகாசம் ஆகுமென்றே நினைக்கிறேன்.
ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது:
எவ்வளவு தான் இசையமைத்தாலும், அடுத்த படம் பண்ணும் போது ஒரு தடுமாற்றம் வரும். பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் சொன்னார்கள், ஏன் நல்லாத்தானே போய்க் கொண்டிருக்கிறது என்று. நீங்கள் பண்ணுவது எல்லாருக்கும் தான் பிடிக்கிறதே என்றார்கள். நமக்கு எப்போது அப்படித் தோன்றுகிறதோ, அப்போது ஒரு அழுத்தம் வரும். அது மிகவும் மோசமானது. இருக்கிறவரைக்கும் முதலில் என்ன உற்சாகத்தோடு செய்தேனோ அதே போல் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல் மணி சார் எனக்கு ஒரு அடித்தளம் கொடுப்பார். 23 வருடங்களாக கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நான் நன்றி சொல்கிறேன்.
துல்ஹர் சல்மான் பேசியது:
சில கனவுகள் காணும் போது, நமக்கு அதிலேயே இருக்கலாம், வாழ்ந்து விடலாம் என்று தோன்றும். எனக்கு கடந்த ஒரு வருடமாக அப்படித் தான் இருந்தது. எனக்கு இந்தப் படக்குழுவோடு இருக்க வேண்டும் போல் இருக்கிறது. படம் வெளியாகும்போது நான் மிகவும் கவலை அடைவேன் என்று நினைக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இந்திய திரையுலக திறமையாளர்கள் இப்படத்தில் இருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் போது நான் ஒரு சாதாரண மாணவன் தான். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்த போது எனக்கு என்னவோ ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்-ல் படிக்க வாய்ப்பு கிடைத்த மாதிரி இருந்தது. இந்த படத்தின் அனுபவமே எனக்கு ஒரு பல்கலைக்கழகம் போன மாதிரி தான் இருந்தது. இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு மணி சாருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 17ம் தேதி என்னுடைய அக்காவுக்கு பிறந்த நாள். அந்த தேதியில் படம் வெளியாகிறது எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.
இயக்குநர் மணிரத்னம் பேசியது:
(படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளார் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த பதில்கள் வருமாறு) திருமணம் ஆகாமல் இணைந்து வாழ்வது தான் கதையா என்று கேட்டால் அதற்கு சில நாட்கள் பொறுத்திருந்தால் பதில் கிடைக்கும். வைரமுத்து சார் எல்லாருக்குமே படத்தைப் பற்றி புரியுற மாதிரி ஒன்று சொல்லிவிட்டார். அவரிடம் நான் 'சொல்ல வேண்டாம்’ என்று சொல்லாமல் போய்விட்டேன். சமூகத்தில் நடப்பது சரியா, தவறா என்று சொல்வதற்கு இரண்டரை மணி நேரம் படம் எடுக்க மாட்டோம். நீங்கள் அனுபவித்து பார்த்து, இந்த பாத்திரம் செய்தது சரியா என முடிவெடுங்கள். இது எப்படி இந்த சமூகத்தை பார்க்கிறது என்பது தான் படம்.
நீங்கள் பேனா, பேப்பரை விட்டுவிட்டு வந்தால் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். ஏதாவது விஷயம் இருந்தால் அதைப் பற்றி பேசலாம். இந்தியாவில் நடக்கும் விஷயத்துக்கு எல்லாம் நான் கருத்து சொல்ல முடியாது இல்லையா. ஒரு இயக்குநர் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் கருத்து சொல்ல முடியாது. என்னுடைய களம் படம் இயக்குவது, அதில் எனது கருத்துக்கள் வெளிப்படும்.


நன்றி  -த இந்து


Thursday, December 20, 2012

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://timesofindia.indiatimes.com/photo/14210217.cms 

விகடன் மேடை - வைரமுத்து

மீரா முகம்மது, தோப்புத்துறை.


''தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?''


''உங்கள் கேள்வி என் மனதுக்குள் சின்னதொரு தீக்குச்சி கிழித்தது; சிந்திக்கவைத்தது. நல்ல பதிலுக்குக் கொஞ்சம் உழைக்க வேண்டி இருந்தது.
நானறிந்த புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டு மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சம் மற்றும் சொச்சம். இந்த 7 கோடிக்குச் சற்றொப்ப மக்கள்தொகை கொண்ட வளர்ந்த நாடுகளில் வரவு விகடன் மேடை - வைரமுத்து

செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு இந்திய மதிப்பில் எவ்வளவு என்று ஆராய்ந்தேன்.
6.8 கோடி மக்கள்தொகை கொண்ட இத்தாலி அரசு ஆண்டுக்கு 60 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறது.


6.53 கோடி மக்கள்தொகை கொண்ட பிரான்ஸ் 83 லட்சத்து 64 ஆயிரம் கோடி செலவிடுகிறது.

6.2 கோடி மக்கள்தொகை கொண்ட பிரிட்டன் 64 லட்சத்து 73 ஆயிரம் கோடி செலவிடுகிறது.


6.18 கோடி மக்கள்தொகை கொண்ட ஜெர்மனி 86 லட்சத்து 53 ஆயிரம் கோடி செலவிடுகிறது.

ஆனால், 7.2 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டுக்கு அதிகபட்சமாக 98 ஆயிரத்து 213.85 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்படுகிறது.


அவையெல்லாம் நாடுகள், நம்முடையது மாநிலம் என்றபோதிலும் மக்கள்தொகையில் சற்றொப்ப நிகர் என்பதனால், இந்த ஒப்பீடு தவிர்க்க முடியாததாகிறது.


எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதை விடவும் எவ்வளவு சென்று சேர்கிறது என்பதும் கருதத்தக்கது. இன்னும் நாம் பாதைகளை முழுக்கக் கட்டமைக்க வேண்டும்; பயணம் நெடுந்தூரம்!''


சி.வந்தனா, குமுளி.


''அண்மையில் நீங்கள் படித்ததில் அதிரச் செய்தது?''


''அது ஒரு துணுக்கு.

ஒரு குடும்பமே தற்கொலைக்குத் தயாரா கிறது. வாழ்வில்தான் தோற்றுப்போனோம். தற்கொலையிலும் தோற்றுவிடக் கூடாது என்று முடிவெடுக்கும் தந்தை, சாவுக்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்.


தூக்கில் தொங்கலாம்; ஒருவேளை கயிறு அறுந்துவிட்டால்..? விஷம் அருந்தலாம்; ஒருவேளை அது கலப்படமாயிருந்தால்..? கிணற்றில் குதிக் கலாம்; ஒருவேளை நீர்மட்டம் குறைவாயிருந் தால்..? தீயிட்டுக்கொள்ளலாம்; பாதியில் அணைந்துபோனால்..?


தகப்பன் குழம்பிக்கொண்டிருக்கும்போது, கடைசிக் குழந்தை ஒரு கேள்வி கேட்கிறது:

''அப்பா! சாவதற்கே இத்தனை வழிகள் இருக்கும்போது, பிழைப்பதற்கு ஒரு வழி இல்லையா?''


உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி அது!''


எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.


''சென்னை வாழ்க்கையில் உங்களால் மறக்க முடியாத சம்பவங்கள்?''


''நான் காதலித்த மனிதர்களின் கடைசித் தருணங்கள்.


ஒரு குழந்தை நிலாவைப் பார்த்துக் கை நீட்டுவதுபோல, என் பள்ளி நாட்களில் இருந்து யாரையெல்லாம் பார்க்கத் துடித்துப் பரவசப் பட்டேனோ, அந்த மகா கலைஞர்களின் இறுதி அஞ்சலியை இறுதி வரை இருந்து செலுத்திய நிகழ்வுகள்தாம் மறக்க முடியாத சம்பவங்கள்.


கண்ணம்மாப் பேட்டை.


எரிமேடையில் கிடத்தப்பட்ட உடல் எருக் களால் மூடப்படுகிறது. கொள்ளியிட்ட பிறகு, எல்லோரும் போய்விட்டார்கள். தங்க உடல் தின்னத் தாவுகிறது தீ. நானும் நண்பன் அறிவுமதியும் மட்டும் இடுகாட்டில் எஞ்சி நிற்கிறோம். நான் ஓடிப்போய் சிதையில் விழுந்து எருவைத் தள்ளி மீண்டும் முகம் பார்க்க முனைகிறேன். கை பிடித்து இழுத்த நண்பனோடு எரியும் வரை இருந்து கண்ணீரோடு விடைபெறுகிறேன். அது என் காதல் கவிஞன் கண்ணதாசனுக்கு நான் செலுத்திய அஞ்சலி.


மெரினா கடற்கரை.


தங்கத்தைப் பூட்டிக்கொண்டு குழிக்குள் இறங்கு கிறது சந்தனப் பேழை. அரசியல், கலை உலக மனிதர் கள் சுற்றி நிற்கிறார்கள். ஓரத்தில் கவலை கட்டிய கண்களோடு நின்ற என்னை, 'வைரமுத்து வா; நீயும் மண்ணுத் தள்ளு’ என்று கை நீட்டி அழைக்கிறார் அந்நாள் அமைச்சர் க.ராசாராம். குனிந்து புறங்கையில் மணல் தள்ளுகிறேன். சந்தனப் பேழை மேல் சரசரவென்று சரிகிறது மணல். நினைத்துக்கூடப் பார்க்கவில்லை எம்.ஜி.ஆருக்கு நான் மண் தள்ளுவேனென்று.


பெசன்ட் நகர் மயானம்.


மின் மயான மேடையருகே பிரபு - சத்யராஜ் - நான் மூவர் மட்டும். பட்டு வேட்டியில் சுற்றப்பட்டிருக்கிறது புவியாண்ட கலைஞனின் பூத உடல். விசைப்பலகையில் தூக்கிவைக்கிறோம். கடைசியாக முகம் பார்த்துக் கண் மூடிக்கொள்கிறோம். செத்தும் சாகாத ஒரு ஜீவசரித்திரத்தை அடுப்புக்குள் விசிறியடிக்கிறது விசைப்பலகை. நடிகர் திலகம் சிவாஜியின் கடைசிக் கணங்களில் கனத்த மனத்தோடு நான்.


அந்த மூன்று மகா கலைஞர்களுக்கும் பிள்ளைக்கடன் செய்தது எனக்கு வரமா? வலியா?


நினைக்கும்போது எல்லாம் வலித்து வலித்து அடங்குகிறது இற்றுப்போன இருதயம்!''


ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.


''இலக்கியத்தில் நகைச்சுவை உண்டா?''


''உண்டு. ஒன்று சொல்கிறேன்.


சங்க இலக்கியத்துக்கு எழுத்தெண்ணி உரையெழுதியவர் அவ்வை துரைசாமிப் பிள்ளை. 'உரைவேந்தர்’ என்று ஓங்கு புகழ் பெற்றவர். ஒரே இடத்தில் உட் கார்ந்து எழுதி எழுதி அவருக்கு மூல நோய் கண்டுவிட்டது. அந்தத் துயரத்தை அவர் மைந்தர் அவ்வை நடராசன் எனக்கு நயமாகச் சொன்னார்:


'என்ன பண்றது கவிஞர்? 'உரை’ எழுதியே எங்க அப்பாவுக்கு 'மூலம்’ வந்துட்டது’.


நினைக்கும்போது எல்லாம் என்னைக் குலுக்கும் நகைச்சுவை இது!''


கி.ராமகிருஷ்ணன், சென்னை-24 


''உண்மையில் யார் உயர்ந்த மனிதன்?''


''ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள்.

சமூக மனிதன்; குடும்ப மனிதன்; தனி மனிதன்.

இதில் சமூக மனிதன் என்பவன் மகா நடிகன்; நடித்து வெல்பவன்.

குடும்ப மனிதன் என்பவன் பாதி நடிகன்; நடித்துத் தோற்கிறவன்.

தனி மனிதன் என்பவன்தான் மெய்ம் மனிதன். ஒப்பனை இல்லாமல் அவன் அவனாகவே இருப்பவன்.

மூன்று பேருக்கும் மதிப்பெண் இட்டுப் பார்க்க வேண்டும். சமூக மனிதனையும் குடும்ப மனிதனையும்விட ஒரு மதிப்பெண் அதிகம் பெறுகிற தனி மனிதன் எவனோ அவனே உயர்ந்த மனிதன்!''


ரஜினி முருகன், வேலூர்.



''உங்களை மன்றாடிக் கேட்கிறேன்... 'கோச்சடையான்’ பாடல்களில் சில வரிகளாவது சொல்லுங்களேன்?''


''உங்கள் கேள்வியை ரஜினியின் செவி களுக்குக் கொண்டுசென்று அவர் சம்மதத்தோடு வெளியிடுகிறேன்.


ஊடகத்தில் வெளியிடப்படும் 'கோச்சடை யானின்’ முதல் பாடல் இதுதான்.
சிறை பிடிக்கப்பட்டிருக்கிறார் தளபதி இளைய ரஜினி. அழுது பாடுகிறாள் அவர் காதலியான இளவரசி தீபிகா படுகோனே. சரித்திரக் கதை ஆதலால், சங்கத் தமிழில் நடக்கிறது பாட்டு:



தீபிகா:  செந்தீ விழுந்த
செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின்
முட்டையாய்...
இதயம்                                                       
உடலில் இருந்து விழுந்து
உருண்டு புரண்டு போகுதே
 நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து 
வெள்ளச் சுழியில் விழுந்து மலராய்...
 இதயம் 
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து அலைந்து போகுதே
 சிறுகோட்டுப் பெரும்பழம்   
தூங்கி யாங்கு 
என் உயிரோ சிறிதே 
காதலோ பெரிதே



 ரஜினி: பூப்பது மறந்தன கொடிகள் 
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்
செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று 
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்
 வாய் மொட்டுடைந்தால் பூவாசம்
வாசத்துக்கேது சிறைவாசம்?
அப்பப்பா!



இசையோடு கேட்கையில் உயிர் உருகி ஓடுகிறது தரையில்!''



ச.அ.அலெக்சாண்டர், வரதராஜன்பேட்டை.


''திரையுலகில் நீங்கள் சந்திக்க விரும்பும் நபர் யார்?''



''தேடிக்கொண்டேயிருக்கிறேன் - 'சின்ன சின்ன’ ஆசை பாடிய மின்மினியை!
சூரியனைப் பனிக்கட்டியாக்கிய பாட்டுக்காரி; இந்தியாவைச் சுழற்றியடித்த பாட்டுக்குச் சொந்தக்காரி.


என்ன ஆனார்? எங்கிருக்கிறார்? இதுவரைக் கும் தகவல் இல்லை.


'அன்புள்ள மின்மினி!


உன் தங்கக் குரலால்தான் என் தமிழ் கேட்டது உலகம். உனக்கு நான் ஒன்றுமே செய்யவில்லை. என் இனிய அன்பளிப்பாக என் சேமிப்பில் இருந்து ஒரு லட்ச ரூபாய் உனக்கு ஒதுக்கிவைத்திருக்கிறேன். குடும்பத்தோடு வந்து பெற்றுக்கொண்டு என்னைப் பெருமைப்படுத்து சகோதரி!''


நிறைவு செய்கிறேன்;

நன்றி.






டிஸ்கி -1.இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டிhttp://www.adrasaka.com/2012/12/blog-post_4667.html


2. நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்

part 2  http://www.adrasaka.com/2012/11/blog-post_2188.html3. 

3. என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி http://www.adrasaka.com/2012/12/blog-post_13.html

 

4 பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி  


http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html

 


Thursday, December 13, 2012

என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி

விகடன் மேடை

வாசகர் கேள்விகள்... கவிப்பேரரசு வைரமுத்து பதில்கள்!
படம்: ரவிவர்மன்
ஜி.தியாகு, திருத்துறைப்பூண்டி.


''எம்.ஜி.ஆரோடு உங்களுக்கு நெருக்கம் இருந்ததா?'' 



''1984 ஒரு 'முகூர்த்த’ மாதத்தின் அதிகாலை 4.30 மணி.


பாரதிராஜாவின் புதுமனை புகுவிழா.


கட்டிய பட்டு வேட்டியோடு கட்டிய பசுமாட்டை அவர் வீட்டுக்குள் இழுத்துச்செல்லும் போது, பாதுகாப்பு வாகனங்களால் பரபரப்பானது தெரு.
யாரும் எதிர்பார்க்கவில்லை.


தன் துணைவியார் வி.என்.ஜானகியோடு வெள்ளைத் தங்கமாய் வீட்டுக்குள் நுழைகிறார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.


பதற்றத்தில் புது வீடு படபடக்கிறது. குடும்ப உறுப்பினர்கள், வேலைக்காரர்கள் தவிர யாரும் இல்லை வீட்டில்.


கூடத்தில் முதலமைச்சரை அமர்த்திவிட்டு, பசுமாட்டை இழுத்துக்கொண்டு பால் கொண்டுவர ஓடுகிறார்கள் பாரதிராஜா தம்பதி. என் காதுக்குள் சொல்லிவிட்டுப் போகிறார் பாரதிராஜா:


'எம்.ஜி.ஆருக்குக் கம்பெனி கொடுங்கள்.’

அப்போது எம்.ஜி.ஆருக்கு என்னை யாரென்றே தெரியாது. என் பெயர் வைரமுத்து என்று சொல்லிக்கொள்ளவும் தயக்கமெனக்கு. சோபாவில் அவர் பக்கத்தில் உட்கார்ந்தேன்; ஜானகி அம்மையார் தனி நாற்காலியில்.


என் காதலுக்குரிய கதாநாயகனை அன்றுதான் அணுக்கத்தில் பார்க்கிறேன்.
இந்த ரோஜா விரல்களா வாள் சுழற்றியவை? மந்திரி குமாரியின் வீரமோகனை - குலேபகாவலியின் தாசனை - மகாதேவியின் வல்லபனை - மதுரை வீரனின் வீரனை - சக்கரவர்த்தித் திருமகளின் உதய சூரியனை - நாடோடி மன்னனின் வீராங்கனை, மார்த்தாண்டனை - ஆயிரத்தில் ஒருவனின் மணிமாறனை அவருக்குள் தேடித் தேடி ரசித்ததில் ஏழு நிமிடங்கள் கழிந்துபோயின.


என்னோடு அவரும் பேசவில்லை;


அவரோடு நானும் பேசவில்லை. அதற்குள் பால் வந்துவிட்டது; எழுந்துகொண்டேன்.

பிறகு, சில விருது மேடைகளிலும், ஒரு படத் தொடக்க விழாவிலும், ஒரு படக் காட்சியிலும் அவரைச் சந்தித்தேன்.

இவ்வளவுதான் எம்.ஜி.ஆருக்கும் எனக்குமான அணுக்கம்!''


பா.செல்வி, கள்ளக்குறிச்சி.


 ''அடிப்படைத் தமிழறிவைக் குழந்தைகளுக்கு எப்படி ஊட்டுவது?'' 


''எண்களோடு எண்ணங்களை இணைத்துக் கற்றுக்கொடுங்கள்; அப்படியே நெஞ்சில் ஒட்டும்.


ஒன்று: வானம் - ஒன்று.
இரண்டு: ஆண், பெண் - சாதி இரண்டு.


மூன்று: இயல், இசை, நாடகம்- தமிழ் மூன்று.


நான்கு: வடக்கிலிருந்து வருவது வாடை, தெற்கிலிருந்து வீசுவது தென்றல், கிழக்கிலிருந்து தீண்டுவது கொண்டல், மேற்கிலிருந்து வாட்டுவது கோடை-தமிழன் காற்றுக்கு வைத்த பெயர் நான்கு.


ஐந்து: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி-இலக்கணங்கள் ஐந்து.


ஆறு: இனிப்பு, கைப்பு, புளிப்பு, உறைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு-சுவைகள் ஆறு.


ஏழு: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்-தமிழ்ப் பண்கள் ஏழு.


எட்டு: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி-மெய்ப்பாடுகள் எட்டு.


ஒன்பது: கண்ணிரண்டு, காதிரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று, முன்னொன்று, பின்னொன்று-உடலின் வாசல்கள் ஒன்பது.


இப்படி எண்களுக்குப் பக்கத்தில் எண்ணங்களைப் பொருத்தித் தமிழியம் கற்றுக்கொடுக்க முடியுமா என்று கருதிப்பாருங்கள் தமிழாசிரியப் பெருமக்களே!''


பாரதி செழியன், சென்னை.


''கோபத்தைக் குறைக்க என்ன வழி?'' 


''சக மனிதன் செய்யும் தவறுதான் நமக்குக் கோபத்தை மூட்டுகிறது. தவறுகளை நகைச்சுவையாக் கிக்கொள்வதைப் போல் கோபத்தைக் குறைக்க நல்ல வழி இல்லை.


வேலைக்காரரை அழைத்து, 'தபால் தலையை ஒட்டிக்கொண்டு வா’ என்றார் ராஜாஜி. பிரிட்டிஷ் மன்னர் தலையிட்ட தபால் தலையைத் தலைகீழாக ஒட்டிக்கொண்டு வந்தார் வேலைக்காரர்.


நீங்களும் நானுமென்றால் கோபத்தைக் கொட்டி இருப்போம்.


ராஜாஜி சொன்னார்:


'பரவாயில்லையே! நாங்களெல்லாம் செய்ய முடியாத காரியத்த நீ செஞ்சுட்டியே, பிரிட்டிஷ் ராஜாவையே கவுத்துட்டியே.’


ராஜாஜியால் அது முடிந்தது; கேள்வி கேட்ட உங்களால் கூட முடியும்; பதில் சொன்ன என்னால் அது முடியுமா தெரியவில்லை!''


தாமரைக்கண்ணன், திருப்பூர்.


 ''இந்தியாவின் பொருளாதாரம்பற்றிச் சொல்லுங்களேன்?'' 


''ஒரு துறையில் ஒருவன் சற்றே புகழோடிருந்தால் அவனுக்கு எல்லாம் தெரியும் என்ற மூடநம்பிக்கையின் முட்டைக்குள் நீங்கள் வசிக்கிறீர்கள். பொருளாதாரம்பற்றிப் பேசும் அறிவுடையவன் அல்லன் நான். என்ன தான் இந்தியாவின் நிதியமைச்சர் என் நண்பராக இருந்தாலும், அவரிடம் இதுபற்றி நான் அறிய முயன்றதில்லை. ஆனாலும், பொருளாதாரத்தில் இந்தியா வளர்கிறதா தேய்கிறதா என்று அறிந்துகொள்ளும் அளவுகோல் ஒன்றை அறிவேன்.



எந்த நாடு தன் வங்கியில் வைக்கும் வைப்புத்தொகைக்கு அதிக வட்டி தருகிறதோ... அந்த நாடு பொருளாதாரத்தில் சரிந்திருக்கிறது என்று பொருள்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தங்கள் வைப்பு நிதிக்கு இப்போது தந்து வரும் வட்டி விகிதம் 8.5 விழுக்காடு. மூத்த குடிமக்கள் வைப்புத்தொகைக்கு 9 விழுக்காடு.


ஆனால், ஜப்பானில் வைப்புத் தொகைக்கு வட்டி கிடையாது. மாறாக, உங்கள் பணத்தைப் பாதுகாத்துவைப்பதற்காக உங்க ளிடமே வைப்பு நிதிக்குக் காப்புத்தொகை வசூலிக்கும் ஜப்பானிய வங்கி.


இந்தியாவில் 8.5 விழுக்காடு வட்டி கொடுத்து வாங்கப்படும் வைப்பு நிதி, 10 முதல் 13 விழுக்காடு வட்டிக்குத் தொழிற் கடனாக வழங்கப்படுகிறது. அந்த வட்டிப் பணம் உற்பத்திப் பொருளின் தலையில் விழுகிறது. உற்பத்திப்பொருள் வாடிக்கையாளன் தலையில் விழுகிறது. எனவே, பழைய பொருளுக்குப் புதிய விலைகளைத் தந்துகொண்டேயிருக்கின்றான் - பாவம் இடுப்பொடிந்த ஏழை இந்தியன்.


இப்படித்தான் பணம் வீங்குகிறது; அதை ஒவ்வோர் இந்தியத் தலையும் தாங்குகிறது!''


ம.இராஜ்குமார், வில்லூர்.


 ''உங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சில பேர் தாக்குகிறார்களே... நீங்கள் திருப்பியடிக்க வேண்டாமா?'' 


''தேவையில்லை.

நீங்கள் ரசிக்க முடியாத ஓர் உண்மையைச் சொல்லுகிறேன்.


நீங்களும் நானும் சமூக மனிதர்கள் பலரும் நித்தம் நித்தம் கொஞ்ச நேரம் பைத்தியக்காரர்களாய் மாறியே தீருகிறோம்.


பெருங்கோபம் - பெருஞ்சிரிப்பு - காமம் - கர்வம் - போதை - புகழ் என்ற உணர்வுகளுக்கு ஆட்படும்போதெல்லாம் பைத்தியத்தின் உச்சத்தை ஒவ்வொருவரும் தொட்டே தீருகிறோம்.


தொட்டுவிட்ட உச்சத்தை விட்டுவிட்டு இருந்த இடத்திற்கே திரும்ப வந்தால், அது இயல்புநிலை. அங்கேயே நின்றுவிட்டால், அது திரிபுநிலை. இதை சைகோசிஸ் [Psychosis] என்கிறார்கள் மனவியல் நிபுணர்கள்.


கர்வத்தின் உச்சத்தைத் தொட்ட சில பேர் இறங்கி வராமல் அதே இடத்தில் நின்றே என்னை ஏசுகிறார்கள். அது குறைபாடுதானே தவிரக் குற்றமன்று. குற்றம் தண்டிக்கப்பட வேண்டியது; குறைபாடு நிவர்த்திக்கப்பட வேண்டியது. அவர்களுக்கு நான் பதில் தருவதை விட, சிகிச்சை தருவதே சிறந்தது!''




இரா.கரியப்பா, சூலூர்


''சிலையாவதுதான் ஒரு மனிதனின் உச்சகட்டப் புகழா?'' 



''அப்படிச் சொல்ல முடியாது. மனிதர்களைப் போலவே சிலைகளுக்கும் ஆயுள் உண்டு. அரசு - அரசியல் - சாதி - மதம் -  நிறுவனம் ஆகியவற்றால் பராமரிக்கப்படும் சிலைகள், அந்த ஐந்தும் விழுகிறபோது தாமும் விழுந்துவிடுகின்றன.



சாலைகளில் நிற்கின்ற சிலைகளின் ஆயுள், சாலையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அறிஞர் அண்ணாவால் திறந்துவைக்கப்பட்டுச் சாலைகளின் சந்திப்பில் நின்ற கலைவாணர் சிலை, மேம்பாலம் கட்டும்போது இடம் பெயர்க்கப்பட்டு ஓரச்சாலையில் ஒதுங்கிவிட்டது.


சென்னையின் தென் வாசலில் கம்பீரமாக நின்ற ஜவஹர்லால் நேருவின் சிலை கத்திப்பாரா மேம்பாலத்திற்குப் பிறகு, உயரம் குறைந்து ஒடுங்கிவிட்டது.


மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு பெயர்கள் மறக்கப்பட்ட பல சிலைகள் வெறும் பொம்மைகளாகிவிடுகின்றன.


உருவம்தான் புகழின் உச்சம் என்பது ஒரு கற்பனை. உருவ வழிபாட்டிற்கே இடம் தராத இஸ்லாத்தில், நபிகள் நாயகத்தின் பெருமை இன்னும் குறையவே இல்லையே.


எனவே, மனிதர்கள் நிலைபெறுவது உருவங்களால் அல்ல - செயல்களால் மற்றும் சித்தாந்தங்களால்!''


தரும.சரவணன். தஞ்சாவூர்.


''இங்கிதம் என்றால் என்ன?'' 


''நான் பெரிதும் மதிக்கும் பெரும் பாடகி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வருகை தந்தார். தெரிந்தோ தெரியாமலோ காலணிகளைக் கழற்றாமல் வீட்டுக்குள் நுழைய எத்தனித்தார். அதை எப்படி உணர்த்துவது? 'அம்மா! உங்கள் பாதங்கள் என் வீட்டில் பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!’ என்றேன். பதறிப்போய்க் காலணிகளைக் கழற்றிவிட்டு வந்தார்.


புண்படுத்தாமல் பண்படுத்துவது இங்கிதம்!''



- இன்னும் பேசுவோம்... 



பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி
diSki - part 1 - http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html



நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்
part 2  http://www.adrasaka.com/2012/11/blog-post_2188.html


இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டி

 http://www.adrasaka.com/2012/12/blog-post_4667.html

 

4

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html

 

Thursday, December 06, 2012

இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டி

என்.கோமதிசங்கர், வீரவநல்லூர்.


 ''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?''


''இறந்தவர்கள் வீர சொர்க்கத்தில் - இருப்பவர்கள் கோர நரகத்தில்.
பத்துத் தமிழர்கள் கூடி நின்று பேசினாலும் ராணுவத்திற்குச் செய்தி போகிறது; அடுத்த சில நிமிடங்களில் கூட்டம் அச்சுறுத்திக் கலைக்கப்படுகிறது.


கையில் வைத்து அழுத்தப்படும் பணமோ, கழுத்தில் வைத்து அழுத்தப்படும் கத்தியோ, சில தமிழர்களை உளவாளிகளாக மாற்றி வைத்திருக்கிறது.


ரகசியமாக விநியோகிக்கப்படும் போதைப் பொருள் பகிரங்கமாகப் பாதுகாக்கப்படுகிறது.


பதின்பருவத்துப் பிள்ளைகள் இன்னோர் ஆயுதம் ஏந்திவிடக் கூடாது என்பதற்காகச் சாராயத்திலும் போதைப் பொருளிலும் காயடிக்கப்படுகிறார்கள்.


எது நேரக் கூடாதோ - ஆனால், ஒரு போர்ச் சமூகத்தின் உடன் விளைவாக எது நேருமோ - அது நேர்ந்தேவிட்டது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சொல்கிறேன்; கொத்துக் கொத்தாய்ப் பாலியல் தொழில் நடக்கிறது.


அரசு ஊழியர்கள் தமிழர்களாயிருந்தால் சிங்களப் பகுதிக்கும், சிங்களவர்களாயிருந்தால் தமிழ்ப் பகுதிக்கும் திட்டமிட்டுப் பரிமாறப்படுகிறார்கள்.


இதனால், இனவாத அரசு எதை எதிர்பார்க்கிறதோ, அது நடந்துகொண்டே இருக்கிறது. அதாவது, சிங்கள - தமிழ் இல்லற இனக்கலப்பு தொடங்கித் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.



இது அதிகரிக்கும்பட்சத்தில் இன்னும் சில பத்தாண்டுகளில் நம்மவர்களின் இனமொழி அடையாளம் முதலில் கொஞ்சம் கொஞ்சமாகவும் முடிவில் முற்றிலுமாகவும் அழிக்கப்பட்டுவிடும். பிறகு, எவரை எதிர்த்து எவர் போராடுவது?


இந்தியாவும் ஐ.நா-வும் தமிழர்கள் கொல்லப்படுவதை ஏதோ உடல்தானம் செய்கிறார்கள் போலும் என்று ஒதுங்கிக்கொண்ட பிறகு எங்கே போய் முறையிடுவது?


இன உணர்வாளர்கள் கதறிக்கொண்டே இருக்கிறார்கள், கரையில் மாரடித்துக் கதறும் அலைகளைப் போல.


ஆனால் ஒன்று: விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று; மீண்டும் எழுவதும்தான்.''


சி.கார்த்திகேயன், சாத்தூர்.


 ''மறைந்த பேச்சாளர்களில் உங்களால் மறக்க முடியாதவர்?''


''கா.காளிமுத்து.
சொற்களின் சுந்தரன்; வாக்கியங்களின் வாத்தியக்காரன்; சங்கத் தமிழைத் தெருவெல்லாம் வீசிப்போன தென்பாண்டித் தென்றல்; 'அடாணா’வை உரைநடையில் வாசித்த கவிதைக் கச்சேரியாளன்.
இருதய அறுவைச் சிகிச்சை முடிந்து இரண்டாம் உயிர் பெற்று மதுரைக்குத் திரும்பிக்கொண்டுஇருந்தவரை பாண்டியன் ரயிலில் சந்தித்தேன்.
அவர் கையிலிருந்தது 'கள்ளிக்காட்டு இதிகாசம்’. கண்ணில் நீர் மிதக்கச் சொன்னார்:


'நான் உயிர் பிழைத்ததில் ஒரே ஒரு நன்மை கவிஞர். பிழைக்காதிருந்தால், 'கள்ளிக்காட்டு இதிகாசம்’ படிக்காமலே செத்துப் போயிருப்பேனே...’


ஒருவர் கரத்தை ஒருவர் பற்ற... இருவர் கரத்திலும் விழுந்தது கண்ணீர்.


எனக்கொரு கனவு இருந்தது.




கலைஞர் - வைகோ - காளிமுத்து என்ற முத்தமிழின் முக்கூட்டுச் சங்கமத்தை என் நூல் வெளியீட்டு விழா ஏதேனுமொன்றில் நிகழ்த்த வேண்டும் என்ற நெடுங்கனவு.


அரசியல் என் கனவின் ஒரு பக்கத்தைக் கிழித்துவிட்டது;


மரணம் மறு பக்கத்தை எரித்துவிட்டது.''


சி.கொ.தி.மு.விக்னேஷ்குமார், கோபி.


 ''அண்மையில் உங்களைக் கவர்ந்த பெண்கள்?''


''பெண்கள் அல்லர்; சிறுமிகள்.


பாகிஸ்தானின் புரட்சிப்பூ மலாலா, உலகத் தலைவரின் மகள் என்ற கர்வத்தைக் கண்ணில்கூடக் காட்டிக்கொள்ளாத கறுப்பு தேவதை மலியா ஒபாமா, இசையுலகின் பிஞ்சு நட்சத்திரம் பிரகதி.


இந்த மூன்று தேவதைகளை எந்த ஊடகத்தில் பார்த்தாலும் பாசமே மேலிடுகிறது.


உங்கள் மூவருக்கும் என் வளர்பிறை வாழ்த்துக்கள் மலர்களே.''


நா.வெங்கடேசன், மதுரை. 


 ''ரஜினிக்கும் உங்களுக்குமான மகிழ்வான தருணங்களைப் பகிர்ந்துகொள்ளலாமா?''



'' 'பாபா’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த பாடலுக் காக அவசரமாய் அழைக்கிறார் ரஜினி. பரபரப்பாகச் சென்றடைகிறேன்.
கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் உடையையும் காலணிகளையுமே மாறிமாறிக் கவனிக்கின்றன அவரது காந்தக் கருவிழிகள். புறப்பட எத்தனித்தபோது 'சற்றே பொறுங்கள்’ என்றார். 'உங்கள் உடைக்கும் காலணிக்கும் பொருத்தமில்லை’ என்றவர், என் பதிலுக்குக் காத்திராமல் 'வெள்ளைத்தாள் கொண்டுவா’ என்று தன் உதவியாளருக்கு ஓசையோடு கட்டளையிட்டார். அந்த வெள்ளைத்தாளை விரித்து என் பாதம் பதிக்கச் சொன்னார். 


பேனா எடுத்து அதில் என் பாதத்தை வரையச் சொன்னார். 'இதே அளவுக்குக் காலணிகளை அனுப்பிவைக்கிறேன்’ என்றார்.


ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்தித்துவிட்டுச் சில மணி நேரங்கள் கழித்து வீடு திரும்பினேன். 'ரஜினி சார் கொடுத்தனுப்பினாராம்’ என்று ஒரு பெட்டியை நீட்டினார்கள் என் உதவியாளர்கள். பிரித்துப் பார்த்தால்,


என் காலுக்குப் பொருத்தமான காலணிகள்!


நான் எழுதியது பொய்யில்லை:

'பாசமுள்ள மனிதனப்பா
மீச வச்ச குழந்தையப்பா.’ ''


அ.குணசேகரன், புவனகிரி.


 ''மூன்றாம் உலகப் போரில் தகப்பனாகிய கருத்தமாயி மகனாகிய முத்துமணியை வெட்டிக் கொன்றது நியாயமாகத் தெரியவில்லையே?''


''குற்றம் புரிந்த மகன் வீதிவிடங்கனைத் தேரேற்றிக் கொன்ற சோழனை 'மனுநீதி காத்தவன்’ என்று கொண்டாடத் தெரிந்த நமக்கு, சமூக விரோதியாகிய மகனை வெட்டிக் கொன்ற கருத்தமாயியை 'மண்நீதி காத்தவன்’ என்று கொண்டாடத் தெரியவில்லையே?''


செ.அ.நெய்னா, சென்னை.


 ''மனிதன் எப்போது மகான் ஆகிறான்?''


''புலன்கள் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் தனித்தனியாகவோ மொத்தமாகவோ மனிதனைக் கைவிடுகின்றன. துய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது; கடைசியில் அற்றுப்போகிறது.


துய்ப்புக்கான வாசல்கள் மூடப்படும்போது, ஞானத்திற்கான ஜன்னல்கள் திறக்கின்றன.


பணம் என்பது தன் மதிப்பிழந்து அரசாங்கம் அச்சடித்த மற்றுமொரு தாள் என்று தோன்றுகிறது. தங்கம் தன் பெருமையிழந்து மஞ்சள் உலோகமாக மாறிவிடுகிறது. பெண்ணின் மார்பகம் கவர்ச்சி கழிந்து பாற்சுரப்பிகளின் உபரிச் சதை என்றாகிவிடுகிறது.


புலன்கள் கைவிட்ட பிறகு இந்த முடிவுக்கு வந்தால் அவன் மனிதன். புலன்கள் துடிக்கும் பருவத்திலேயே இந்த ஞானம் அடைந்தால் அவன் மகான்.''


கே.ரூபிணி, தில்லைஸ்தானம்.


''பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்வீர்களா? தவிர்ப்பீர்களா?''


''உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் 'நீர்ப்பறவை’ பாடல்களில் இயக்குநர் சீனுராமசாமி உரிமையோடு பல திருத்தங்கள் கேட்டார். மெட்டுக்கும் கதைக்கும் நியாயமென்று பட்ட திருத்தங்களையெல்லாம் செய்துகொடுத்தேன்; பாடல் வெளிவந்தது.



'என்னுயிரை அர்ப்பணம் செய்தேன்
உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன்
சத்தியமும் ஜீவனுமாய்  நிலைக்கிறாய்’
 


என்ற வரிகளை சில கிறித்துவ நண்பர்கள் வருத்தப்பட்டுத் திருத்தச் சொன்னார்கள்.


எவர் மனதும் புண்படக் கூடாது என்பதற்காக


'என்னுலகம் கைவசம் இல்லை
என் பெயரும் ஞாபகம் இல்லை
சத்தியமாய் என்னருகே நீ இருக்கிறாய்’
என்று மாற்றிக் கொடுத்தேன்.
ஊதியம் தராத என் கிறித்துவ நண்பர்களுக்கே திருத்தம் செய்து தருகிற நான், ஊதியம் தருகிற தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் திருத்தம் செய்து தர மாட்டேனா?''



லதா சீனுவாசன், சென்னை-40.


 ''உடம்பு எதுவரைக்கும் நன்றாக இருக்கும்?'' 



''கண்ணுக்குத் தூக்க மாத்திரையும் - கட்டிலுக்கு ஊக்க மாத்திரையும் தேவைப்படாத வரைக்கும்.''



- இன்னும் பேசுவோம்...




readers view


 1. Kalpana3 Days ago
கவிஞர் வைரமுத்து சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். கையில் வைத்து அழுத்தப்படும் பணமும், கத்தியில் வைத்து அழுத்தப்படும் கத்தியும் சில தமிழரை..அம்மையாரின் விஷயத்தில் தமிழ் தெரிந்தவராக என்று கொள்ளவேண்டும். அழுத்தப்படும் விஷயம் முதலானதாக இருக்க வேண்டும் என்பது என் யூகம்.

கவிஞர் சொன்னதற்கு ஏன் அம்மாவுக்கு உடனே பொத்துக்கொண்டு வந்துவிட்டது என்பதுதான் ஆச்சரியம். இருக்கும் கொஞ்ச நஞ்ச குற்றவுணர்ச்சி உதைத்திருக்கும் போல.

தனி மனித வாழும் உரிமையாக அம்மையார் போதிப்பது (இல்லையில்லை கருத்துப்பதிவு என்கிற பெயரில் கதாகாலேட்சபம் பதிவது) என்ன என்று விளங்கவில்லை. இதே விகடனின் சாதி கலவரங்கள் குறித்து வெளியான ஒரு கட்டுரைக்கு "சாதிகளை ஒழித்துவிட முடியாது; ஆனால் சாதி உணர்வோடு வாழ்வதை தனி மனிதரது நம்பிக்கை விஷயமாக விட்டு விட வேண்டும்" என்கிறார் இந்த முனைவர். எங்கு சென்று முட்டிக்கொள்வது?
இருக்கும் நாட்டின் கேவலமான கலாச்சார விழுமியங்களே வெளிப்படுகின்றன.

ஐ,நா அமைப்பின் சார்ட்டர்களை கரைத்து குடித்த ரீதியில் இந்த கனமாணிக்கம் கட்டவிழ்த்து விட்ட இன்னொரு கதை "ராணுவ ரீதியாக இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க முனைவதை எதிர்தரப்பு தீவிரவாதம் கொண்டு மோதியதை காணச்சகியாமல் ஐ.நா இலங்கையை விட்டு வெளியேறியது" என்பது. ஐ.நாவின் பொது செயலாளர் முதல் ஐ.நாவின் நடவடிக்கைகளை பரிசீலித்து வெளியிட்ட உள்தணிக்கை குழுவின் சமீபத்திய அறிக்கைகளோ வேறுவிதமாய் வெளிவந்துள்ளது. அம்மையார் என்ன இறுதி ஈழப்போரின்போது களப்பணியில் ஈடுபட்டிருந்த காரிய வீராங்கனையா? இல்லையே? தன் வீட்டில் அதுவும் லிவுங் ரூமில் கணினியில் முன்னால் நாள் முழுதும் அமர்ந்து ஆங்கில கலப்புடன் (அதுகூட அம்மையாரின் தத்துவப்படி பெரிய அறிவுஜீவிதம் என்ற நினைப்பு) தப்பும் தவறுமாக தமிழை குதறியபடி தட்டெழுதுவதுதானே இவர் செய்யும் செயல்.

கோனார் தமிழ் துணைவன் சுருக்கமென்று சொல்லும் இந்த முனைவரது கல்வித்தகுதி சந்தி சிரிக்கின்றது. நானும் என மாணவப்பருவங்களில் கோனார் தமிழ் துணைவனை படித்திருக்கிறேன். செய்யுள் பகுதிக்கான விளக்கவுரைகள் கோனாரின் உண்டு. கோனார் பதிப்பக மற்றும் எழுத்தாசிரியரின் மகள் மணிமேகலை எனக்கு தமிழாசிரியராக தமிழ் போத்திருக்கிறார். இருக்கும் உயர்கல்வித்துறை சந்தி சிரிப்பதை போலவே இருக்கிறது இந்த முனைவரது கருத்துப்பதிவுகள்.
2. Dr.Mrs.MeenakshiPrabhakar7 Days ago
கவிஞர் கொடுத்திருக்கும் இலங்கை தமிழரின் நிலையை பார்க்கும் போது இன உணர்வாளர்களின் கதறல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதாக தெரியவில்லை.

வீணாவது மனித வளம்.ஒரு நாட்டின், உலகத்தின் உயர்வு.தனி மனித திறன் இன அடிப்படையில் தேக்கப்படுவது குற்றம்.சிறுவர்களும், இளைஞர்களும், பெண்களும் இன உணர்வு இல்லையெனில் அரசின் நேரடி சீரமைப்புக்கு வர முடியும்.தனி மனித வாழும் உரிமை கோரி, உரியதை பெற்று நல வாழ்வு வாழ முடியும்.

பத்து பேர் சாதாரண சூழலில் சேர்ந்து பேச போவதில்லையே.சாதாரண சூழல் நிறுவ முனையும் நிலையில் அரசு தரப்பில் குழு நிலைப்பாடு கண்காணிக்கப்படுவதில் தவறில்லை.

சந்தேகம் இடையூறு செய்யாத சூழல் வேண்டுமெனில் அரசுடன் ஒத்துழைத்து, தன் தனி மனித உரிமை நிறுவிக்கொள்ள வேண்டியது மக்கள்.

இரு தரப்பிலும் பணி நியமனம், சம உரிமை தரும் செயலை, பேரின வாத அரசு என சொல்வது எப்படி பொருந்தும்?.அப்படிப்பட்ட அரசு முன்பு எடுத்த நிலைப்பாடு போல், தமிழரை வெளியேற்ற அல்லவா பார்க்கும்?

இன உணர்வு தனி மனித நம்பிக்கையே.அந்த அடிப்படையில் தனி நாடு, பிரிவினை வாதம் எழுவது அரசு கொள்கைக்கு, மனித நேயம் அவசியமாகும் உலக அமைதிக்கு முரணானது.

இன உணர்வினடிப்படையில், ஏற்படும் ஒவ்வாமையை தனி மனித அளவில் அவரே நிகர் செய்ய முன் வர வேண்டும்.மனித நேயம் மலர வேண்டும்.தன் திறன் பயனாக்க வேண்டும்.அல்லது அச்சூழலிலிருந்து வெளியேற வேண்டும்.ஊறி விட்ட நிலைப்பாடு மாறுவது கடினமே.ஆனால், புலம் பெயர்ந்த நாடுகளில் தரும் தனி மனித திறனை தன் நாட்டுக்கு தந்தாலென்ன என்ற எண்ணம் மேலோங்க வேண்டும்.அலைகள் மாரடிப்பதில்லை.அலைகள் விடாமுயற்சியின் அடையாளம்.அலைகளின் நோக்கம் தனி மனித வாழும் உரிமையேயன்றி , தனி நாடு அல்ல.

மீண்டுமெழும் அலைகள் விடாமுயற்சியாய் கோருவதும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதும் தனி மனித உரிமை நிறுவுவதிலேயே நிலையாகும்.

கடல் வணிகத்தில் தனி முத்திரை பதித்திருக்கும் இலங்கை, இன்னும் உயர முடிவது தமிழர் ஒத்துழைப்பினால்.இலங்கையை உயர்த்துவதே இலங்கை மக்களின் கடமை.போர் , போராட்டம், கலவரம், ஒத்துழையாமை, பிணக்கு இவை இனி நிரந்தரமாக முடியாது.

கடல் வணிகம் , தமிழர் என்ற நிலையில் கடற்படையாகும் தனித்திறன், அரசுடன் ஒத்துழைக்கும் நிலையில், நாட்டை உயர்த்தும் பயனாகும்.

இலங்கையின் இயற்கை வளம் அபூர்வமானது.இன உணர்வு தேக்கம்.பிராந்திய ரீதியான பாதுகாப்பு அணுகுமுறை, உலக வளம் காப்பதாய், உயர்த்துவதாய் மாறும் நிலையில், இலங்கை இந்தியாவுடன் நில வழிப்பாதையில் இணைக்கப்படுவது ஒருங்கிணைந்த இந்தியா உருவாவது, சர்வ தேச நாடுகள், ஐ.னா.அமைப்பின் கீழ் அரசு முறையில் இனையும் சாத்தியம் தரும்.
thanx - vikatan



 பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி
diSki - part 1 - http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html



நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html

part 2  http://www.adrasaka.com/2012/11/blog-post_2188.html


என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி

 

http://www.adrasaka.com/2012/12/blog-post_13.html

 

 

4

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html

 

 

Tuesday, November 27, 2012

பரதேசி - ஆடியோ விழாவில் பாலா, பாலுமகேந்திரா ,வைரமுத்து பேசியது என்ன?


விக்ரம் - சூர்யாவை விட நான் தான் சிறந்த நடிகன்! - 'பரதேசி' பாலா 

 

'அவன் - இவன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் பாலா அடுத்து டைரக்ட் செய்து வரும் படம் 'பரதேசி'.


அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து வரும் இந்தப் படத்தின் பிரபல இரட்டை டைரக்டர்களில் ஒருவரான ஜெர்ரி இந்தப் படத்தில் கங்காணி என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.


நேற்று நடந்த இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸை ஒட்டி டைரக்டர் பாலா சிறப்பு பேட்டியளித்தார். அந்தப் பேட்டி இதோ உங்களுக்காக...


கேள்வி : 'பரதேசி' என்ன மாதிரியான கதை?


பரதேசின்னா வேற ஒண்ணுமில்லை. பஞ்சம் பொழைக்கப் போற ஒரு கூட்டம். அவங்களோட கதை, அதுதான்.



கேள்வி : உங்கள் படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் எல்லோருமே சினிமாவில் சீக்கிரம் பாப்புலராகி விடுகிறார்கள், ஆனால் ஹீரோயின்கள் அந்தளவுக்கு பிரபலமாவதில்லையே?



பதில் : ( சில நொடிகள் யோசிப்புக்குப் பின்...) பிதாமகன் படத்துல நடிச்ச சங்கீதா, அவ ஒரு நல்ல நடிகையாத்தானே இருக்கா... நெறைய படங்கள் நடிச்சிருக்கா? ஹிட் கொடுத்திருக்கா...? அப்புறமென்ன..? அந்த லைலா பொண்ணுக்கும் எனக்கு லவ்வுன்னு எழுதியே அந்தப் பொண்ணை வீட்டுக்கு அனுப்பிட்டீங்க, அப்புறம்.., ஆனால் இந்தப் படத்துல நடிச்சிருக்கிற ரெண்டு ஹீரோயின்களுக்கும் கண்டிப்பாக சினிமாவுல நல்ல சான்ஸஸ் இருக்கு.



கேள்வி : இந்தப் படத்துக்காக மலைகளையெல்லாம் சொந்தமா வாங்கி ஷூட்டிங் நடத்தினீங்களாமே..?


பதில் : என்னது மலையா..? அதெல்லாம் இல்லீங்க, ரெண்டாவது மலைகளையெல்லாம் விலைக்கு வாங்க முடியாது, விட்டா திருநீர் மலையையே நான் வாங்கிட்டேன்னு சொன்னாலும் சொல்வீங்க போலிருக்கு. படத்துக்காக சில காட்சிகளை காடுகள்ல எடுக்க வேண்டியிருந்தது, அதுக்கு வனத்துறையினர் ரொம்ப கெடுபிடி பண்றதுனால நானே சொந்தமா ரெண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி அதுல காடு மாதிரி செட்போட்டு ஷூட்டிங் பண்ணினேன். ஆனால் மரங்களையெல்லாம் வெட்டல. அத ஒரு நியூஸா போட்டு பிரச்சனை பண்ணிடாதீங்க.



கேள்வி : உங்க படங்கள்ல நடிச்ச சூர்யா, விக்ரம், ஆர்யா, அதர்வா இவங்கள்ல யார் சிறந்த நடிகர்ன்னு சொல்வீங்க?



பதில் : விஷாலை விட்டுட்டீங்க...என்றவுடன் ( நிருபர் ஆமாம்.. விஷாலும் என்று சொல்கிறார்) கேள்வியைக் கேட்டு சிரித்தவர் தாடையை தடவிக்கொண்டே.., இவங்கள்ல யாருமே சிறந்த நடிகன் கிடையாது. அவங்களை விட நான் தான் சிறந்த நடிகன்
என்றவுடன் ஒரே சிரிப்புச் சத்தம்.



கேள்வி : விளிம்பு நிலை மனிதர்களோட வாழ்க்கையைப் பத்தி மட்டுமே எப்போதுமே உங்க படங்கள்ல நல்ல கருத்துக்களை சொல்றீங்க? கமர்ஷியல் படம் பண்ணும் எண்ணம் இல்லையா..?



பதில் : கமர்சியல்ன்னா எதைச் சொல்றீங்க? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. அப்போதைக்கு என்ன தோணுதோ அதைத்தான் நான் படமா எடுப்பேன். இந்தப் படத்தை எடுத்து முடிக்கிறதுக்கே போதும் போதும்னு ஆயிடுச்சி, அடுத்தப் படத்தைப் பத்தி யோசிக்கவே இல்லை.


கேள்வி : இந்தப்படம் 'எரியும் பனிக்காடு'ங்கிற நாவலைத் தழுவி படமா எடுத்திருக்கீங்க, இப்படி நாவலையோ, சிறுகதையையோ படமா எடுக்கிறப்போ இருக்கிற சவுகரியம் எப்படி இருக்கு?



பதில் : ம்... நாமளே ஒரு கதையை சொந்தமான யோசிச்சி அதை படமா பண்றதை விட இது இன்னும் ஈசியா இருக்கு, ரெண்டாவது முழுக்க முழுக்க இது 'எரியும் பனிக்காடு' நாவல் கிடையாது, அதுல எனக்கு பிடிச்ச ஒருபகுதியை எடுத்துக்கிட்டு என்னோட கற்பனையையும் கலந்து படமாக்கியிருக்கேன்.



கேள்வி : நல்ல கலரா, அழகா இருக்கிற ஹீரோயின்களுக்கு கருப்பு சாயத்தை தடவி மேக்கப்பெல்லாம் போட்டு அவங்களை கருப்பா காட்டுறதை விட ஏற்கனவே கருப்பா இருக்கிற ஒரு ஹீரோயினை நடிக்க வெச்சா இன்னும் ஈசியா இருக்கும்ல?



பதில் : யாரு வேதிகாவா..? அந்தப் பொண்ணு கலர்னு சொல்லுங்க, ஆனா அழகுன்னு சொல்லாதீங்க..என்றவுடன் அங்கு சிரிப்பு சத்தம், (அப்போது, இதற்கு என்ன அர்த்தம் என்று வேதிகா பக்கத்தில் இருக்கும் ஒளிப்பதிவாளர் செழியனிடன் ஆங்கிலத்தில் விளக்கம் கேட்டுக் கொள்கிறார்.) இல்லை அப்படின்னு கிடையாது, இந்தப் படத்துல கூட ஒரு கலர் கம்மியான மாலதிங்கிற ஒரு பொண்ணை ஒரு முக்கியமான கேரக்டரில் நான் அறிமுகப்படுத்துகிறேன். கேரக்டருக்கு யார் பொருத்தமா இருப்பாங்களோ அவங்களை நடிக்க வைப்பேன். கலரெல்லாம் பாக்கிறது இல்லை.



கேள்வி : இளையராஜாவை போடாம எதுக்கு ஜி.வி.பிரகாஷை மியூசிக் டைரக்டரா போட்டுருக்கீங்க?



சூர்யா,அடுத்து விக்ரம்,அடுத்து ஆர்யா, அப்புறம் சூர்யா,விக்ரம்ன்னு ஒரே ஆட்களோட வேலை பார்த்துக்கிட்டிருக்கீங்க? புதுப்புது ஆட்களோட வேலை பார்க்க மாட்டீங்களான்னு நீங்க தான் விமர்சனத்துல எழுதுனீங்க...? அதனால தான் இந்தப் பையனை கமிட் பண்ணினேன். ஆனா இப்போ நீங்களே எதுக்கு ஜி.வியை போட்டீங்கன்னு கேட்குறீங்க..


இவ்வாறு டைரக்டர் பாலா கூறினார்.

http://www.thamizhthirai.com/wp-content/gallery/paradesi-first-look/paradesi_first_look_exclusive_stills_01_0.jpg


பாலா என் மூத்த மகன் : பரதேசி ஆடியோ விழாவில் நெகிழ்ந்த பாலுமகேந்திரா!


"பாலா என் வீட்டிலேயே வளர்ந்த என் மூத்த மகன், அவன் தேசிய விருது வாங்கிய போது நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை" என்று டைரக்டர் பாலுமகேந்திரா பேசினார்.

டைரக்டர் பாலா லேட்டஸ்ட்டாக தயாரித்து, டைரக்‌ஷன் செய்து வரும் 'பரதேசி' படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் இன்று சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு பேசிய ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான பாலுமகேந்திரா "பாலா என் மூத்த பிள்ளை" என்று நெகிழ்ந்தார்.

தொடர்ந்து பேசிய அவர்.., " என்னுடைய 'வீடு' படத்தின் போது பாலா என்னிடம் வந்து சேர்ந்தான். அவனையும், ராம் என்பவனையும் பாடலாசிரியர் அறிவுமதி என்னிடம் கொண்டு வந்து விட்டுப் போனார். நான் பாலாவை யூனிட்டில் சேர்த்துக் கொள்ளவே இல்லை.

ஆனால் அவன் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த நான் “ யாருப்பா..நீ நான் உன்னை பார்த்ததே இல்லையே..? என்று கேட்டேன். அதற்கு அவன் நான் உங்கள் படத்தில் தான் வேலை செய்கிறேன். மதுரையில் படித்து விட்டு உங்களிடம் சேர வேண்டும் என்று வந்து விட்டேன், நீங்கள் தான் என்னை கண்டுகொள்ளவே இல்லை என்றான், அன்றிலிருந்து அவனை நான் என்னிடம் சேர்த்துக் கோண்டேன். அவன் என் வீட்டில் ஒருவனாக வளர்ந்தான்.


பொதுவாக நான் எல்லா படங்களின் ஆடியோ ரிலீஸுக்கும் வருவேன். ஆனால் என் மனைவி வரமாட்டார். ஆனால் இந்த பரதேசி படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனுக்கு என் மனைவி அகிலாவை கூப்பிட்டபோது அவள் உடனே வந்து விட்டாள். அந்தளவுக்கு அவன் மீது ஒரு தாய் போல அவள் பாசம் வைத்திருக்கிறாள். அதனால் தான் இந்த விழா எனக்கு முக்கிமானது" என்று பேசிய பாலுமகேந்திரா.., தொடர்ந்து.., "பாலாவும் தேசிய விருது வாங்கி விட்டான், என்னுடைய இன்னொரு பிள்ளை வெற்றிமாறனும் தேசியவிருது வாங்கி விட்டான், எனது ரெண்டு பிள்ளைகளும் தேசிய விருது வாங்கியதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ஒரு அப்பாவுக்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம் வேண்டும்.


"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்"  என்ற குறளைப் போல நான் மகிழ்கிறேன்" என்றார்.

விழாவில் நடிகர்கள் சூர்யா,விக்ரம், ஒளிப்பதிவாளர் செழியன், கவிப்பேரரசு வைரமுத்து, ஹீரோ அதர்வா,ஹீரோயின்ஸ் வேதிகா, தன்ஷிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


டைரக்டர் பாலாவின் 'பரதேசி' படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறாராம் நடிகர் அதர்வா.


ஆர்யா-விஷால் இணைந்து நடித்த 'அவன் - இவன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு பாலா சைலண்ட்டாக டைரக்‌ஷன் செய்து வரும் படம் தான் 'பரதேசி'.

அதர்வா ஹீரோவாகவும், வேதிகா ஹீரோயினாகவும் நடித்து வரும் இந்தப் படத்துக்காக தனக்கு பழக்கப்பட்ட ஏரியாவான தேனி,கம்பம் உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார். மேற்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் ஆக்டிங் என்ற பெயரில் நடிகர் அதர்வாவை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கிறாராம் பாலா.

அதன் ஒரு பகுதியாக அதர்வாவை சுமார் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்கச் சொல்லியிருக்கிறார். கேரக்டருக்கு இந்த எடைக்குறைப்பு முக்கியம் என்று பாலா சொன்னதால் அதர்வாவும் வேறு வழியில்லாததால் ரொம்பவும் மெனக்கட்டு தனது உடல் எடையைக் குறைத்தாராம்.

இதுவரை இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா என இசைக் கூட்டணி போட்ட பாலா இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷை மியூசிக் டைரக்டராக கமிட் செய்திருக்கிறார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இந்த மாதம் 25-ஆம் தேதி படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் டைரக்டர் பாலா.


என்னமோ போங்க.. எடையைக்குறைக்க அந்த மெடிசின் இந்த மாத்திரைனு டிவில காட்டுறதெல்லாம் வொர்க்கவுட் ஆகுதோ இல்லையோ இந்த பாலா மெடிசின் மட்டும் கரெக்டா வொர்க்கவுட் ஆகுது; சேது விக்ரம், செய்யாத படத்துக்கு அஜீத், இப்பொ அதர்வா என.




http://www.tamil.haihoi.com/news/Dhansika%20Character%20In%20Paradesi_HaiHoi_214.jpeg
நான் பாடல்களை திருத்த அனுமதிப்பதில்லை என்று யாரோ தவறான வதந்தியை பரப்பி விட்டிருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறினார்.




டைரக்டர் பாலாவின் ’பரதேசி’ படத்தின் எல்லா பாடல்களை எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து ஆடியோ ரிலீஸ் பங்ஷனில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்...



இந்த 'பரதேசி' படம், தமிழ் திரையுலகில் முக்கியமான படமாக இருக்கும். படத்தில், ஒரு விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பாலா, ஒரு சராசரி கலைஞன் அல்ல. மனிதர்களின் மறுபக்கத்தைப் பார்க்க பாலா ஆசைப்படுகிறார். இங்கே மாறுபட்டு சிந்திக்கிறவன் தான் எப்போதுமே கவனிக்கப்படுகிறான். அந்த வகையில் இயக்குனர் பாலா மாறுபட்டு சிந்திக்கிறவர்.


வைரமுத்து தனது பாடல்களில் திருத்தங்களை செய்யவிடுவதில்லை என்று என்னைப் பற்றி யாரோ சிலர் வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை., நியாயமான திருத்தங்களை நான் எப்போதும் செய்து வருகிறேன். பொருந்தாத திருத்தங்களை நான் ஏற்றுக்கொள்வதில்லை.


இந்த படத்தில் கூட , ‘கண்ணீர்தானா கண்ணீர்தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர்தானா?’ என்று ஒரு பாடல் எழுதியிருந்தேன். இதை, ‘செந்நீர்தானா செந்நீர்தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர்தானா?’ என்று மாற்றிக் கொள்ளலாமா? என டைரக்டர் பாலா என்னிடம் கேட்டார். பாலாவின் திருத்தம் எனக்கு நியாயமாக இருந்தது. அவருடைய திருத்தத்தை ஏற்றுக் கொண்டேன்.


நான் எல்லா இயக்குனர்களும் சொல்லும் திருத்தங்களையும் நியாயமான காரணமாக இருந்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன். அப்படித்தான் பெரும்பாலான இயக்குனர்கள் என் பாடல்களை என் அனுமதியோடு திருத்தியிருக்கிறார்கள், ஆனால் பாரதிராஜா மட்டும் தான் என் பாடல்களை இதுவரை திருத்தியதேயில்லை.


அதேபோல எல்லோரும் பாரதிராஜா படங்களில் வரும் நல்ல இனிமையான பாடல்களைப் போல தாருங்கள் என்று கேட்கிறார்கள், அதுதான் சொன்னேன், பாரதிராஜா என் பாடல்களை திருத்துவதிலை அதனால் அந்தப் பாடல்கள் பிரபலமாகி விடுகிறது.


இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

 நன்றி - சவுண்ட் கேமரா ஆக்‌ஷன், நக்கீரன், தினமணி

http://chennaionline.com/images/articles/October2012/7ed70fca-9621-4f3b-bf1e-e4a3043d5445OtherImage.jpg



டிஸ்கி 1 - பரதேசி படத்தின் திரைக்கதை நெட்டில் வெளியானது
டிஸ்கி 2 - பரதேசி - கலக்கல் ட்ரெய்லர்,
டிஸ்கி 3 - பாலாவின் பேட்டி

http://www.adrasaka.com/2012/10/blog-post_7245.html


http://sim.in.com/f4f460a229d5c7e281072787ca350276_ls.jpg 

Thursday, November 22, 2012

நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்

விகடன் மேடை - வைரமுத்து

படம் : கே.ராஜசேகரன்
கே.எம்.குணா, உடையார்கோவில்.

 ''சினிமாவில் உங்களுக்கு நட்பு அதிகமா? பகை அதிகமா?''

''இரண்டும் இல்லை. திரையுலகில் 'தண்ணி’யடிக்காதவனுக்கு உயிர் கொடுக்கும் நட்பும் இருக்காது; உயிர் எடுக்கும் பகையும் இருக்காது.''



உமா சொக்கன், பெங்களூரூ-3.


''தலைமைப் பண்பின் முதல் பண்பு என்ன?''


''இழிவு தாங்குதல்.
நாடாளுமன்றம் கேள்விகளால் பற்றி எரியும் நேரம். நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி மீது 'முந்த்ரா’ ஊழலைச் சுமத்திப் பின்னியெடுக்கிறார் ஃபெரோஸ் காந்தி. தாக்குப்பிடிக்க முடியாத  கிருஷ்ணமாச்சாரி, 'நான் அரசாங்கத்தின் தூண்; நீ நேரு வீட்டு நாய்’ என்று பொறுமை இழக்கிறார். அதைத் தாங்க முடியாத ஃபெரோஸ் காந்தி, 'தூணைக் கண்டதும் நாய் என்ன செய்யுமோ, அதைத்தான் இப்போது செய்யப்போகிறேன்’ என்று எல்லை தாண்டுகிறார்.



தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு சம்பவம். 'இது மூன்றாந்தர அரசு’ என்கிறார் அன்றைய எதிர்க் கட்சி உறுப்பினர் எச்.வி.ஹண்டே. ஆளும் கட்சி உறுப்பினர்கள் பாயப்பார்க் கிறார்கள். கையமர்த்துகிறார் அந்நாள் முதலமைச்சர் கலைஞர்.


'இது மூன்றாந்தர அரசல்ல; பிராமண - சத்ரிய - வைசிய - சூத்ர என்ற வரிசையில், நாலாந்தர அரசு’ என்கிறார்.


பொங்கும் பாலில் தண்ணீர் தெளித்ததுபோல் அவை அடங்கிப்போகிறது.
ஃபெரோஸ் காந்தியால் இழிவு தாங்க முடியவில்லை; கலைஞரால் தாங்க முடிந்தது. அதனால்தான் அவர் இன்னும் தலைவராக இருக்கிறார்.''


வி.என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை - 4.


''ஊடகங்களில் தமிழின் தரம் எப்படிஇருக்கிறது?''



''நுட்பமான மொழி அறிவு குறைவாக இருக்கிறது. 'பணயக் கைதிகளை மீட்டிக்கொண்டு வந்தார்கள்’ என்று சொல்கிறார்கள்; எழுதுகிறார்கள். 'மீட்டுதல்’ என்பது வாத்தியத்துக்கான தொழில். 'மீட்டல்’ என்பது மீட்சிக்கான தொழில். 'ராவணன் வீணையை மீட்டினான்; ராமன் சீதையை மீட்டான்’ என்பவைதாம் சரியான வினைகள். மீட்டு - மீள் என்பன வேர்ச் சொற்கள். எனவே, 'பணயக் கைதிகளை மீட்டுக்கொண்டு வந்தார்கள்’ என்பதே சரியான சொல்லமைதி.



ஒவ்வோர் ஊடகத்திலும் மொழிக் குழு ஒன்று இயங்க வேண்டும்.''


இரா.பார்த்திபன், தாளந்திருவாசல்.


'''உங்களை ஓர் எழுத்து வியாபாரி’ என்கிறேன்..?''


 ''ஒரு வகையில் சரியென்றே ஒப்புக்கொள்கிறேன். ஒவ்வொரு மனிதனும் இந்த பூமிக்கு ஒரு சந்தை தேடியே வந்திருக்கிறான். சிலர் சந்தையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்; பல பேரைச் சந்தையே தேர்ந்தெடுக்கிறது.


அரசியல்வாதிக்குத் தலைச் சந்தை;
சாமியாருக்குச் சமயச் சந்தை;
கல்வியாளருக்கு அறிவுச் சந்தை;
விலைமகளுக்கு உடற்சந்தை;
மருத்துவனுக்கு நோய்ச் சந்தை;
வல்லரசுக்கு ஆயுதச் சந்தை;
நீதிமான்களுக்குச் சட்டச் சந்தை;
காவலர்க்குக் குற்றச் சந்தை;
இசையமைப்பாளனுக்கு ஒலிச் சந்தை;
எனக்கு மொழிச் சந்தை.


ஆக எல்லோரும் வியாபாரிகளே. ஆனால், கொடுப்பது மிகுதியாகவும் பெறுவது குறைவாகவும் இருந்தால், வியாபாரம் அங்கே தொண்டாகிறது. கொடுப்பது குறைவாகவும் பெறுவது அதிகமாகவும் இருந்தால், வியாபாரம் அங்கே தொழிலாகிறது. நான் தொண்டு செய்யும் வியாபாரி என்றே என்னைக் கருதுகிறேன்.


அது சரி... உங்களுக்கு என்ன சந்தை?''


சுஜாதா ரெத்தினம், நாகர்கோவில்.




''ஒரு பாடல் வெற்றி பெற என்ன வேண்டும்?''


''இன்பத்தின் சிறகு, துன்பத்தின் வலி இரண்டில் ஏதேனும் ஒன்று தூக்கலாக இருக்க வேண்டும். அறைய வேண்டும் கன்னத்தை அல்லது வருட வேண்டும் நெஞ்சை. பாலாவின் 'பரதேசி’யில் அப்படியரு பாட்டை நெஞ்சைப் பிடித்துக்கொண்டு எழுதியிருக்கிறேன்.


வாழ்வற்றுப்போன ஒரு பஞ்சத்தில் வறண்ட பூமியைவிட்டுப் பஞ்சம் பிழைக்கக் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள் இற்றுப்போன ஏழை மக்கள். செழியன் ஒளிப்பதிவில் பாலா எடுத்த படம் பார்த்துக் கண்ணீர் முட்டிவிட்டது எனக்கு. அடிவயிற்றில் இருந்து வலியின் குரலாக வருகிறது ஜி.வி.பிரகாஷின் இசை.


'ஓ செங்காடே சிறு கரடே
போய்வரவா...'

என்று தொடங்குகிறது பாட்டு
'பொத்தக் கள்ளியில் முள்ளுத் தச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துட்டோம்
கண்ணில் இல்லையே நீரு

வாட்டும் பஞ்சத்தில் கொக்குக் காலைப்போல்
வத்திப்போச்சய்யா வாழ்வு...
கூட்டம் கூட்டமா வாழப்போகிறோம்
கூட வருகுதே சாவு...’



எழுதிய வலி தீரவில்லை இதயத்தில் இன்னும்.
நகல் எடுக்க முடியாத கலைஞர்களுள் ஒருவர் பாலா. பாலாவோடு இணைய பெரிய நட்சத்திரங்கள் பயப்படுகிறார்கள்; பெரிய நட்சத்திரங்களோடு இணைய பாலாவும் பயப்படுகிறார். அந்தத் தேவைஅற்ற பயங்களைத் தீர்ப்பதற்குச் சில முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறேன். என் முயற்சி மட்டும் பலித்துவிட்டால், வாய்ப்பு இருக்கிறது தமிழில் ஓர் உலகப் படம் உருவாக.''


எம்.அருணாச்சலம், ராஜபாளையம்.


''ஆயகலைகள் அறுபத்து நான்கில் எத்தனை கலைகள் தெரியும் உங்களுக்கு?''



''முதலில் ஆயகலைகள் அறுபத்து நான்கு எவையென்று பார்ப்போம்.



1.ஆடல் 2.இசைக் கருவி மீட்டல் 3.ஒப்பனை செய்தல் 4.சிற்பம் வடித்தல் 5.பூத்தொடுத்தல்  6.சூதாடல் 7.சுரதம் அறிதல் 8.தேனும் கள்ளும் சேகரித்தல் 9.நரம்பு மருத்துவம் 10.சமைத்தல் 11.கனி உற்பத்தி செய்தல் 12.கல்லும் பொன்னும் பிளத்தல் 13.கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல் 14.உலோகங்களில் மூலிகை கலத்தல் 15.கலவை உலோகம் பிரித்தல் 16.உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல் 17.உப்பு உண்டாக்குதல் 18.வாள் எறிதல் 19.மற்போர் புரிதல் 20.அம்பு  தொடுத்தல் 21.படை அணிவகுத்தல் 22.முப்படைகளை முறைப்படுத்தல் 23.தெய்வங்களை மகிழ்வித்தல் 24.தேரோட்டல் 25.மட்கலம் செய்தல் 26.மரக்கலம் செய்தல் 27.பொற்கலம் செய்தல் 28. வெள்ளிக்கலம் செய்தல்  29. ஓவியம் வரைதல் 30. நிலச் சமன் செய்தல் 31.காலக் கருவி செய்தல்  32.ஆடைக்கு நிறமூட்டல் 33.எந்திரம் இயற்றல் 34.தோணி கட்டல் 35.நூல் நூற்றல் 36.ஆடை நெய்தல் 37. சாணை பிடித்தல் 38. பொன்னின் மாற்று அறிதல் 39.செயற்கைப் பொன் செய்தல் 40.பொன்னாபரணம் செய்தல் 41.பொன் முலாமிடுதல் 42.தோல் பதனிடுதல் 43.மிருகத் தோல் உரித்தல் 44.பால் கறந்து நெய்யுருக்கல் 45.தையல் 46.நீச்சல் 47. இல்லத் தூய்மையுறுத்தல் 48.துவைத்தல் 49.மயிர் களைதல் 50.எள்ளில்  இறைச்சியில் நெய்யெடுத்தல் 51.உழுதல் 52.மரம் ஏறுதல் 53.பணிவிடை செய்தல் 54. மூங்கில் முடைதல் 55.பாத்திரம் வார்த்தல் 56.நீர் கொணர்தல் நீர் தெளித்தல் 57.இரும்பாயுதம் செய்தல் 58.மிருக வாகனங்களுக்குத் தவிசு அமைத்தல் 59.குழந்தை வளர்ப்பு 60. தவறினைத் தண்டித் தல் 61.பிறமொழி எழுத்தறிவு பெறுதல் 62.வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல் 63.மேற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு 64.வெளிப்படுத்தும் நிதானம்.


சுக்கிர நீதி சொல்லும் ஆயகலைகள் அறுபத்து நான்கும் இவைதாம்.


இவற்றுள் 7-ஆம் கலை அறிவேன். 49-ஆம் கலையில் பாதிசெய்வேன். 51-ஆம் கலை செய்திருக்கிறேன்.


இதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் என்னைவிடச் சில கலைகள் அதிகம் தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்.''


வி.மருதவாணன், திருவாரூர்.


''இளைய தலைமுறை நடிகர்கள் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படங்கள்?''



''அஜித் - 'வாலி ’
விஜய் - 'கில்லி ’
சூர்யா -  'ஏழாம்  அறிவு’
விக்ரம் - 'அந்நியன்’
சிம்பு - 'விண்ணைத் தாண்டி வருவாயா’
தனுஷ் - 'ஆடுகளம்’
கார்த்தி - 'பருத்திவீரன்’
'ஜெயம்’ ரவி - 'பேராண்மை’
ஜீவா - 'கற்றது தமிழ்’
விஷால் -  'அவன் இவன்’.
ஆர்யா - 'நான் கடவுள்’
பரத் - 'காதல்’.''


எம்.சரவணன், சேலம்.


''தி.மு.க-வில் கலைஞரைத் தவிர்த்து உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?

 கலைஞரைத் தவிர்த்து தி.மு.க-வில் யாருக்கெல்லாம் என்னைப் பிடிக்குமோ, அவர்களை எல்லாம்


- இன்னும் பேசுவோம்...


நன்றி - விகடன் 



1. பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி  


http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html


2.

இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டி

 http://www.adrasaka.com/2012/12/blog-post_4667.html

 





3. என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி

 

http://www.adrasaka.com/2012/12/blog-post_13.html

  4.

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html