Showing posts with label வைகோ. ஜெயலலிதா. Show all posts
Showing posts with label வைகோ. ஜெயலலிதா. Show all posts

Thursday, February 28, 2013

ஜெ - வை கோ சந்திப்பு - பின்னணி என்ன? இன்னொரு இன்னொவா கார் பார்சல்? வை கோ பர பரப்புப்பேட்டி

நாடகமாடுகிறார் கருணாநிதி... உண்மையாகப் போராடுகிறார் ஜெயலலிதா!''


டி.எல்.சஞ்சீவிகுமார், படங்கள்: கே.ராஜசேகரன்
 
 
புறநகருக்கே என்று இருக்கும் அனலும் கனலுமாக வெயில் தகிக்க, தென்னந்தோப்பில் துண்டை விரித்து மல்லாந்து படுத்திருந்தார் வைகோ. அவருக்கு ரத்த அழுத்தம் பரிசோதித்த டாக்டர், 'ஓ.கே’ சொல்லிப் புன்னகைக்க... ''இந்த வண்டி ஓட வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கே!'' என்று தெம்பாகச் சிரிக்கிறார் வைகோ. 

 
 ''நடை பயண அனுபவம் எப்படி இருக்கிறது... மக்களின் மனவோட்டத்தை உணர முடிகிறதா?'' 



''அரிசி தொடங்கி எல்லாமே இலவசம். அதனால், கிராம மக்கள் சொற்ப வருமானத்தையும் குடித்து அழித்துவிட்டு, சோம்பிக்கிடக்கிறார்கள். இலவசத்துக்கும் போதைக்கும் பழகிய மக்கள் வேலைக்குப் போகாததால், வட மாநிலத் தொழிலாளர்கள் இங்கு குவிந்துவிட்டார்கள். இது தமிழகத்தில் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். 



உலகிலேயே உழைப்புக்குப் பெயர்போன தமிழர்களை மதுவும் இலவசமும் முடக்கிப்போட்டுவிட்டது. அதனால்தான் இந்த நடை பயணம். நான் நடை பயணத்தில் எங்கேயும் அரசியல் பேசவில்லை; என் கட்சிக்கு ஆதரவும் கேட்கவில்லை. வேதனையிலும் சோதனையிலும் வெந்து நொந்துகிடக்கும் தமிழர்களின் நிலையை அவர்களுக்கு உணர்த்தவே இந்தப் பயணம்!''



''நடை பயணத்தில் திடீரென்று முதல்வர் ஜெயலலிதாவுடனான உங்கள் சந்திப்பின் பின்னணி என்ன?'' 



''முதல்வர் ஜெயலலிதா என்னைத் திட்டமிட்டுச் சந்திக்கவில்லை. சாலையின் எதிர்ப்புறம் திடீரென முதல்வரின் கார் வருகிறது. நான் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே முதல்வரின் கார் நிற்கிறது. உடனடியாக அவர் இறங்கிவிட்டார். அவர் மனதில் முன்னரே என்னைச் சந்திக்கும் திட்டம் இருந்தால், காரில் இருந்து இறங்குவதற்கான படிக்கட்டைக் கொண்டுவரச் சொல்லி இருப்பார். ஆனால், அவர் அப்படியே காரைவிட்டு இறங்கி, கொளுத்தும் வெயிலில் குடை கூட இல்லாமல் என்னுடன் உரையாடிக்கொண்டு இருந்தார்.



நடை பயணத்தின் நோக்கம் என்னவென்று முதல்வருக்கும் தெரியும். ஆனால், அரசியல் நாகரிகம் கருதி, நான் சொல்லத் தயங்குவேனோ என்று அவரே எனது கோரிக்கையைக் கேட்டார். முழு மதுவிலக்கு வேண்டும் என்றேன். அதை அவரும் கேட்டுக்கொண்டார். என்னைப் பொறுத்த வரை இது ஓர் அரசியல் நாகரிகம். அவ்வளவு தான். இதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது!''



''ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கை முதல்வர் நடைமுறைப்படுத்துவார் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?'' 



''நிறையவே! மதுவால் பெண்கள் படும் துன்பங்களை அவர் அறிவார். பல கோடிப் பெண்கள் மதுவிலக்கு வராதா என்று ஏங்குகிறார்கள். அந்த ஏக்கம் ஒரு பெண்ணான அவரது மனதிலும் வெகு விரைவில் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!''



'' 'எனது பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம். என்னைச் சந்திக்க யாரும் வர வேண்டாம்’ என்றெல்லாம் சொல்லி இருக்கிறார் முதல்வர். காரை விட்டு இறங்கி வந்து உங்களைச் சந்திக்கிறார். ஜெயலலிதாவின் அணுகுமுறையில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா?'' 



''அவர் ஈழப் பிரச்னைக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியது முதலே அவரது மனநிலை மாறித்தான் இருக்கிறது. இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்கிற சட்டமன்றத் தீர்மானம், மூவர் தூக்குத் தண்டனைக்கு எதிரான நிலைப்பாடு, காவிரி நதி நீர், முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம், ஆசிய விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னது என உண்மையாகப் போராடுகிறார் முதல்வர். 



கருணாநிதியின் நாடகங்களை ஒப்பிடுகையில், முதல்வர் ஜெயலலிதாவை நான் பாராட்டுகிறேன். ஆனால், அதே சமயம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அகற்ற முற்பட்டபோதும், பஸ் கட்டணம், பால் கட்டணம் உயர்வின்போதும் அவரைக் கண்டிக் கத் தவறவில்லை!''  



''தி.மு.க-வில் தொடர்ந்து நடந்துவரும் அரசியல் கொலைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''



''தனது தந்தை இறந்தபோது அவரது ஈமச் சடங்குக்குக்கூடப் போகாமல் தலைவருடன் சுற்றுப்பயணத்தில் இருந்தவர் தா.கிருட்டிணன். அப்படிப்பட்ட தியாகி நடுரோட்டில் கண்டந்துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டபோதே, அந்தக் கட்சியில் பேரறிஞர் அண்ணா ஊட்டி வளர்த்த பாசமும் கொள்கைகளும் சவக் குழியில் புதைக்கப்பட்டுவிட்டன. நியாயவான்கள் என்றால், அப்பீலுக்குப் போயிருக்க வேண்டியதுதானே... இப்போது என்ன சொல்ல...'' 



''பாலச்சந்திரன்...'' 


(கேள்வியை முடிக்கும் முன்பே...) ''ஐயோ... பச்சைப் பாலகன் அவன். எதையோ வாயில் மென்றுகொண்டு வெறித்துப் பார்க்கும் அவன் கண்களைக் கண்டீர்களா? அதைக் கண்டால், எமனுக்குக்கூடப் பாசக்கயிற்றை வீச மனம் வராதே. அந்தப் பாலகனின் மார்பில் துப்பாக்கிக் குண்டுகள் தந்த துன்பத்தைவிட, அவன் கண் முன்பாக ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டது அந்தப் பிஞ்சு உள்ளத்தில் எவ்வளவு பெரிய ரணத்தை அளித்திருக்கும். இனப்படுகொலையை நிரூபிக்க இதைவிட வேறு சாட்சி என்ன வேண்டும். இப்போதைய உடனடித் தேவை, சுதந்திரமான, பன்னாட்டு விசாரணை!''



''19 ஆண்டுகளாகக் கட்சியை நடத்தி வருவதற்குரிய பலன் இல்லை என்று நினைக்கும்போது விரக்தி மனநிலை உண்டாகிறதா?'' 



''ராட்சத பலம்கொண்ட கட்சிகளுக்கு இடையிலும் எத்தனையோ துன்ப துயரங்களுக்கு இடையிலும் லட்சக் கணக்கான தொண்டர்கள் என்னுடன் இருப் பதே ஒரு சாதனைதான். மக்களின் அவப் பெயருக்கு ஆளாகாமல் நன்மதிப்பை பெற்று வருகிறேன். 'வெற்றியை ருசிக்கவில்லை’ என்று எங்களைப் பார்த்துச் சொல்லலாமே தவிர, தவறானவர்கள் என்று சுண்டு விரலையேனும் நீட்ட முடியுமா? நாங்கள் குடும்பத்துக்காகக் கட்சி நடத்தவில்லை. நாங்கள் போராளிகள். போராளிகளுக்கு விரக்தியும் கிடையாது; தோல்வியும் கிடையாது.


முல்லைப் பெரியாறுக்காக 10 லட்சம் மக்களைத் திரட்டினோம். மிரண்டது கேரளா. சுற்றுச்சூழலை நாசம் செய்த ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி வருகிறேன். பெல்ஜியத்தில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில் முதல்முறையாக ஈழப் பிரச்னைக்குப் பொது வாக்கெடுப்புகுறித்துப் பேசினேன். இவைதான் எங்கள் சாதனைகள். பதவியில் அமர்வதும்... பகட்டு வேஷங்கள் போடுவதும்தான் சாதனைகள் என்றால், அது இந்த வைகோவுக்கு ஒருபோதும் தேவை இல்லை!''



''ஆனால், உங்கள் நிர்வாகிகள் கட்சியைவிட்டு வரிசையாக வெளியேறுகிறார்களே? நீங்கள் மட்டும் உற்சாகமாக இருந்தால் போதுமா... தொண்டர்கள் சோர்ந்துபோக மாட்டார்களா?'' 



''இல்லை... இல்லை... இல்லை. எங்களைக் கண்டால், சோர்வுக்கே சோர்வு வந்துவிடும். நாங்கள் சாஞ்சிக்கே சென்று ராஜபக்ஷேவையும் மன்மோகன் சிங்கையும் அசைத்துப் பார்த்தவர் கள். சொந்தக் காசைச் செலவு செய்து எங்கள் கட்சியின் போர் வீரர்கள் டெல்லியை மூன்று முறை முற்றுகையிட்டார்களே... தமிழகத்தில் எந்தக் கட்சிக்கு இருக்கிறது இந்தத் துணிச்சலும் அர்ப்பணிப்பும். இதில் இருந்து தெரியவில்லையா... ம.தி.மு.க. முன்பைவிட வலுவாக இருக்கிறது என்று. கட்சி நிர்வாகிகள் ஓரிருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறி இருக்கலாம். அப்படிச் சென்றவர்களையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை.''



''ஆனால், ஓட்டு அரசியலே பிரதானமாக இருக்கும் தமிழக அரசியல் களத்தில் உங்கள் வியூகம் எடுபடுமா?'' 



''எகிப்தில் வெடிக்கவில்லையா மல்லிகைப் புரட்சி? அதை யாராலும் கணிக்க முடியவில்லையே! தானாகத்தானே மக்கள் அங்கு வெகுண்டு எழுந்தார்கள். அப்படி ஓர் எழுச்சி தமிழகத்திலும் வராமலா போகும். அப்போது அவர்களுக்காக ஒரு மாற்று அரசியல் இயக்கமாக ம.தி.மு.க. இருக்கும்.''



''மாற்று அரசியல் இயக்கமாக இருப்போம் என்கிறீர்கள்... ஆனால், கடந்த காலங்களில் தி.மு.க.,அ.தி.மு.க. என்று மாறி மாறித்தானே கூட்டணி வைத்திருக்கிறீர்கள்?'' 



''1996 மற்றும் 2001-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. அதன் பின்பு நடந்த தேர்தலில் தொண்டர்களின் அன்புக்கு அடிபணிந்து அ.தி.மு.க-வுடன் உடன்பாடுகொண்டோம். அதன்பிறகும் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் மாறுபடவில்லை. ஆனால், சுயமரியாதை, தன்மானம் இவை எல்லாம் எங்கள் உயிருக்கு நிகர். அதனால் நாங்களாக விலகினோம்!''  



''சரி... வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான உங்கள் வியூகம் என்ன?'' 


''ஏன் சுற்றி வளைத்து? யாருடன் கூட்டணி என்று வெளிப்படையாகக் கேளுங்களேன். அதைப் பற்றி இப்போது சொல்ல மாட்டேன். ஆனால், ஒன்று மட்டும் உறுதி... எங்கள் தன்மானத்தை, சுயமரியாதையை, மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை யாரிடமும் அடகுவைக்க மாட்டோம். அதே நேரத்தில், இந்த இயக்கத்துக்காக 19 ஆண்டுகாலம் சுகங்களை இழந்து துன்பங் களுடன் உழன்றுவரும் கட்சியின் தொண்டர்கள், அவர்கள் குடும்பத்தினரின் மன ஓட்டம், மகிழ்ச்சி இவற்றை எல்லாம் கணக்கில்கொண்டுதான் முடிவுகள் எடுப்பேன்!''



''சட்டென்று கோபப்படுபவர்; பொசுக்கென்று அழுதுவிடுபவர்; எளிதில் உணர்ச்சிவசப்படுபவரால் அரசியல் தளத்தில் வெற்றிகரமாக இயங்க முடியாது என்கிற இமேஜ் உங்கள் மீது இருப்பது தெரியுமா?'' 



''என் மீது கசப்பு கொண்டவர்கள் 15 ஆண்டுகளாகச் சொல்லும் விமர்சனம் அது. அவர்களுக்கு என் மீது குற்றம் சொல்ல வேறு காரணம் கிடைக்கவில்லை. மனிதநேயம் உள்ளவன், பிறர் துன்பம் கண்டு விழி நீர் சிந்துவான். என் கண்களில் வழியும் கண்ணீரும் அப்படியே. என் கண்கள் யாரைக் கண்டு பயந்தும் கண்ணீர் சிந்தாது. அக்கிரமத்துக்கும் அநீதிக்கும் எதிராக மட்டுமே என் கண்கள் சிவக்கும். அநாவசியத்துக்கு அல்ல. நான் நடிகன் அல்ல... உண்மையானவன். உண்மையானவனால் எந்தத் தளத்திலும் வெற்றிகரமாக இயங்க முடியும்!''


நன்றி - விகடன் 



 வாசகர் கருத்து 

1. பாலச்சந்திரன் மேல உண்மைலேயே பாசம் இருந்துதுனா போர் ஆரம்பிச்சபவே உனக்கு உள்ள வெளிநாட்டு செல்வாக்கில் ஏதாவது நாட்டுக்கு கொண்டு சென்று இருக்கலாமே ......... இப்ப என்ன முதலை கண்ணிர் ?



2. வைகோ நல்ல மனிதர், அற்புதமான தலைவர், சிறந்த போராளி. இவரை எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனாலும் இவருக்கோ அல்லாது இவருடைய கட்சிக்கோ நான் வாக்களிப்பதில்லை, காரணம் இவருடைய விடுதலை புலிகளின் ஆதரவு நிலைதான்.

ஈழ தமிழர்களை, விடுதலை புலிகளை தமிழக மக்கள் அனைவரும் ஆதரித்தார்கள், ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் கொல்வதற்கு முன்பு வரை. எப்போது விடுதலை புலிகள் ராஜிவை கொன்றார்களோ, எப்போது மற்ற குழுக்களின் தலைவர்களை கொன்றார்களோ அப்போதே விடுதலை புலிகள் மீதான பாசமும் பற்றும் போய், அவர்கள் துரோகிகளாக, இந்தியாவை நிர்மூலமாக்க வந்தவர்களாக தான், தமிழக மக்கள் மற்றும் இந்திய மக்களுக்கு தெரிகிறார்கள்.

அத்தகைய விடுதலை புலிகளை வைகோ போன்ற தலைவர் ஆதரிப்பது, வைகோ வுக்கும் நல்லதல்ல, தமிழகத்துக்கும் நல்லதல்ல மற்றும் இந்தியாவுக்கும் நல்லதல்ல.

ஒரு தலைவன் தான் நாட்டு மக்களுக்காக போராடும் போதுதான் புகழ் பெறுகிறான், வெற்றி அடைகிறான், மக்கள் பிரதிநிதியாகிறான், ஆட்சியை பிடிக்கிறான்.

ஆனால் வைகோ வோ, நம் நாட்டு பிரதமரை கொன்றவரை, அந்நிய நாட்டு சக்தியை தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக ஆதரிக்கிறார், தான் சக்தியை வீணடிக்கிறார் (வேலூர் சிறையில் அடைக்கப்படிருந்த விடுதலை புலிகள் தப்பியதற்கு உதவுவதுவரை).

வைகோ செய்தால் தமிழ் பற்று, கஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் செய்தால் தீவிரவாதமா? 


3. ஜெயலலிதாவின் அணுகுமுறையில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா?''
14 வருசமா ஒரே கேள்வி .....



4. அருமையான பதில்கள். அகம்பாவம் இல்லாத, பொறுப்பான, உண்மையான பதில்கள். சுயநலம் இல்லாத பண்பான நடத்தை உள்ள, தெளிவான பார்வை உள்ள ஒரே தலைவர் இவராகவே இருக்க முடியும். தமிழகத்துக்கு நல்ல நேரம் வரும்போது இவருக்கும் நல்ல நேரம் வரும். 



5. இனப்போராளி திரு வைகோ அவர்கள் அப்பழுக்கற்றவர். அவரை விமர்சனம் செய்பவர்கள் தமிழனுக்காக உண்மையாக உழைக்கக்கூடிய ஒரு நல்ல தலைவரை புரிந்து கொள்ளும் மன பக்குவத்தில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை



6. நடைபயணம் போன்ற அறப்போராட்டங்களை காந்திவழி வந்த காங்கிரஸாரே மறந்துவிட்ட நிலையில் வைகோ இதுபோன்ற நடை பயணங்களை பொது நலன் கருதி 15 ஆண்டுகளுக்கு மேலாக செய்துவருவது அவரை தமிழக காந்தி என்று அழைக்கத்தோன்றுகிறது.



7. பூரண மதுவிலக்கு என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. அப்படி நடந்தால் கள்ளசாராயம் பெருகும் மற்றும் அது சார்ந்த குற்றங்கள் பெருகும். சாரயம் விற்ற பெண்கள் கற்பழிப்பு என்பது அன்றாட நிகழ்வாகிவிடும். அத்துடன் அண்டை மாநிலங்களில் இருந்து மது கடத்தலை தடுப்பது என்பது பெரிய நிகழ்வாகிவிடும்.

அரசு செய்ய வேண்டியது 1) மதுவை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு அரசு ஏற்படுத்த வேண்டும் (AIDS விழிப்புணர்விற்கு அரசு எடுத்த முயற்சிகள் போல இதற்கும் எடுக்க வேண்டும்). 2)மது விற்பனையில் தயவு தாட்சண்யம் இல்லாத விதி முறைகள் அமல் படுத்தப்பட வேண்டும் (விற்பனை நேர குறைப்பு, 21 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே மது, பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே உள்ள கடைகளை மூடுதல்). 3) குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஜாமீன் இல்லாமல் 3 மாதம் உள்ளே போட வேண்டும். 4) குடித்து விட்டு குற்றம் புரிந்தால் மிக கடுமையான தண்டனைகள் தரப்படவேண்டும் ( அதற்கு முதலில் குற்றம் புரிந்தால் நம் நாட்டில் தண்டனை கிடைக்கும் என்ற ஒரு நிலை வரவேண்டும்). இது மட்டுமில்லாமல் இன்னும் பல கடுமையான் விதி முறைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.

சரியான சிந்தனை இல்லாமல் வெறும் உணர்ச்சி வேகத்தில் செயல்படுதல் பாதாளத்தில் தள்ளிவிடும்.



8/ ஏனையோரோடு ஒப்பிடுகையில் இவர் உயர்வாக இருந்தாலும், எனக்கென்னவோ விழல் நீராக போவதாகவே தோன்றுகிறது. இப்பொழுது கூட இவர் ஒரு சில தொகுதிகளை தேர்ந்தெடுத்து அத்தொகுதிகளில் மக்கள் நிம்மதியாக வாழ இடையூறாக இருக்கும் ஊழல்களை எதிர்த்து மக்கள் நம்பிக்கை பெற்றால் எதிர்காலம் உண்டு என நினைக்கிறேன். 



9/ கருணாநிதி நாடகமாடுகிறார் ஒகே ...!!! சரி கரெக்ட் ............ ஜெயலலிதா உண்மையாகவே போராடுகிறார் ........... இது எப்ப இருந்து ? சொல்லவேயில்ல ....!!!!!!!! இதை கேட்டா அந்த அம்மாவே விழுந்து விழுந்து சிரிக்குமே ..........

சரி விடு இன்னும் சில பேர் உன்ன நம்பறாங்க !!!......... அப்புறம் மருமகனோட சிகாகோ ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் நல்ல டெவெலப் ஆகிடுச்சுன்னு கேள்வி பட்டோம் அப்படியா ?