Showing posts with label வேலைவாய்ப்பு உருவாக்கம். Show all posts
Showing posts with label வேலைவாய்ப்பு உருவாக்கம். Show all posts

Wednesday, March 04, 2015

சென்னை பொன்னேரி ஸ்மார்ட் சிட்டி ஆகிடுமா?

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தியா முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டி எனப்படும் உலக தரத்திலான நகரங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும் என்பது அரசின் எதிர்பார்ப்பு.
அதற்கேற்ப ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தின் முதற்கட்ட பணிகளும் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை ஸ்மார்ட் சிட்டி அமைய உள்ள பகுதியாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.
இந்த ஸ்மார்ட் சிட்டி உருவாக்கம் குறித்து இந்திய தொழிலகக் கூட்டமைப்பு சார்பில் (சிஐஐ) சென்னையில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய நகர்ப்புற மேம்பாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு, பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.
அப்போது பொன்னேரி ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் ஜப்பான் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும், முதற்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
பிற மாநிலங்களை விடவும் தமிழ்நாட்டில் நகர்ப்புற வளர்ச்சி மிகச் சிறப்பாக உள்ளது. மக்களின் வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது என்று கூறிய அமைச்சர், ஸ்மார்ட் சிட்டி திட்டமும் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் வெற்றி பெறும் என்று நம்புகிறேன் என்றார். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முழு பொறுப்பும் மத்திய அரசிடம் வைத்துக் கொள்ளாமல், மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பும் பெறப்படும் என்றார்.
நாடு முழுவதும் 500 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்படும் நகரத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, தண்ணீர், மின்சாரம், கழிவுநீர் மேலாண்மை, ஆரோக்கியமான கல்வி, இயற்கை வளங்களை பொறுப்பாக பயன்படுத்துவது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது, நிதிசேவை மையங்கள், வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதிபடுத்துவது, முதலீடுகளை ஈர்ப்பது போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படும். தற்போது இந்த பகுதிகளை ஆய்வு செய்யும் முதற்கட்ட வேலைகள் என்கின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியின் வருவாய், சுகாதார நிலை, இயற்கை வளம், மின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வசதி, தொழில் அமைப்பதற்கான சாத்திய கூறுகள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மனித ஆற்றல் போன்றவை, கடன் வழங்கினால் திருப்பி செலுத்தும் தகுதி போன்றவை குறித்து முதலில் ஆய்வு செய்யப்பட உள்ளது.
ஜப்பான் நிதி உதவி
இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் அமைய உள்ள ஸ்மார்ட் சிட்டியை அமைக்க, உலகின் பல நாடுகளும் தயாராக உள்ளன. பொன்னேரியில் அமைய உள்ள ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் ஜப்பான் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கான முதற்கட்ட ஆய்வு வேலைகளை வேகமாக நடந்து ஜப்பான் அரசுடன் (Japan International Cooperation Agency, சுருக்கமாக ஜெய்கா (JICA) இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த இறுதி விவரங்கள் எதுவும் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. ஸ்மார்ட் சிட்டி வந்தால் பொருளாதாரத்தில் மாற்றங்களும், வேலைவாய்ப்பு மற்றும் உள்நாட்டு தேவைகள், ஏற்றுமதி பெருகும் என எதிர்பார்க்கிறது தொழில்துறை.
சர்வதேச ஆய்வு நிறுவனங்கள்
தற்போது முதல்கட்டமாக இதை அமைப்பதற்கான அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கான நிலம், நிலத்தடி நீர், மின்சாரத் தேவைகள், போக்குவத்து இணைப்பு, துறைமுக, விமான இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த விவரங்களை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும் பணியில் ஜப்பானைச் சேர்ந்த ஆய்வு கமிட்டி ஒன்று செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்த நிறுவனத்தின் சார்பாக நிப்பான் கொய் (Nippon Koei) மற்றும் பிரைஸ்வாட்டர் ஹவுஸ்கூப்பர்ஸ் என்கிற இரண்டு சர்வதேச ஆய்வு நிறுவனங்களும் இந்த ஆய்வு வேலைகளில் ஈடுபட்டுள்ளன. இவர்கள் கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளிவரலாம்.
எண்ணூர் துறைமுகம்
எண்ணூர் துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்டு பொன்னேரி அதன் சுற்றுவட்டார பகுதிகள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் வட பொன்னேரி, மீஞ்சூர், பகுதிகளில் பல மின் உற்பத்தில் நிலையங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் எண்ணூர் துறைமுகம் நிலக்கரிகளை அதிக அளவில் கையாளுவதால், மின் தேவைகளை அதிகரித்துக்கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம்.
சென்னை ஏற்கனவே ஆட்டொமொபைல் துறையின் முக்கிய உற்பத்தி மையமாக இருப்பதால் இதனடிப்படையில் முதலீடுகள் வருவதும் எளிது. மேலும் எண்ணூர் துறைமுக விரிவாக்கத்தில் அதானி குழுமம் சரக்கு பெட்டக முனையம் அமைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தமும் உள்ளது.
எனவே எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்கள், தொழிலகங்களுக்குத் தேவையான மின் உற்பத்தி இவற்றைக் கணக்கில் கொண்டு இப்பகுதியை ஸ்மார்ட் சிட்டி அமைக்க தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
உற்பத்தி சார்ந்த தொழிற் சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தற்போதைக்குச் சுமார் 25 தொழில்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
பொன்னேரியில் எங்கே?
சர்வதேச வசதிகளுடன் அமையவிருக்கும் இந்த ஸ்மார்ட் சிட்டி பொன்னேரியில் எந்தப் பகுதியில் அமையலாம் என்பதில் தெளிவு இல்லை. இந்த ஊர்காரர்களுக்கு குழப்பம்தான். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தாண்டி வேறெந்த விவரங்களும் தெரியாது என்கின்றனர் இந் தப் பகுதியில் வசிப்பவர்கள்.
பொன்னேரி நகரத்துக்கு வெளியே ஏலியம்பேடு, கனியம்பாக்கம், செங்கனிமேடு போன்ற பகுதிகளில் ஏதாவது ஒன்றை மையமாக வைத்து இந்தத் திட்டம் அமையலாம் என்பதுதான் தற்போதைய ஊகம்.
டிட்கோ உதவி
தற்போது ஆய்வில் ஈடுபட்டுள்ள ஜப்பான் நிறுவனம் மற்றும் இரண்டு ஆய்வு நிறுவனங்களுக்கும் தேவையான உதவிகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனமான டிட்கோ செய்து வருகிறது. மேற்கொள்ளப்படும் ஆய்வுகளைத் தமிழக அரசு அதிகாரிகளுடன் பேசி அதன் சாதக, பாதகங்களை உடனுக்குடன் அந்த நிறுவனத்துக்கு தெரியப்படுத்தும் வேலையை டிட்கோ செய்து கொடுப்பதாக சொல்கின்றனர் அதிகாரிகள்.
சாதகமா? பாதகமா?
இதன் மூலம் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முடியும், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் அரசாங்கம் அதிக அக்கறை காட்டிவருகிறது. இதை ஒட்டி தொழில் பாதையும் அமைய வாய்ப்புள்ளதால் புதிய வேலைவாய்ப்புகள் பெருகும் என்கின்றனர் தொழில்துறையில்.
முக்கியமாக எண்ணூர் துறைமுகத்தை பயன்படுத்துபது போல தொழில்கள் வளரும். மேலும் உற்பத்தியல்லாத 40% தொழில்கள் ஊக்குவிக்கப்படும் என்பதால் ஐடி மற்றும் சேவைத் துறை சார்ந்த தொழில்கள் வளரவும் வாய்ப்புகள் உருவாகும் என்கின்றனர்’
எதற்கு முன்னுரிமை?
உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை தருவதாக அமையலாம். சுமார் 60% வரை உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கும், சேவை மற்றும் பிற தொழில் நிறுவனங்களுக்கு 40% இடம் ஒதுக்கப்படலாம். சுற்றுச்சூழல் சார்ந்த அனுமதிகள் உடனடியாகக் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது.
திட்ட உத்தேச முதலீடு, எவ்வளவு முதலீடுகள் இந்த ஸ்மார்ட் சிட்டியால் ஈர்க்கப்படும், என்ன தொழிற்சாலைகள் வரும், வேலைவாய்ப்பு உருவாக்கம் எப்படி இருக்கும் என்பதெல்லாம் ஆய்வு அறிக்கைகளுக்கு பிறகான அடுத்த கட்ட அறிவிப்புகளுக்குப் பிறகுதான் தெரிய வரும். அதுவரையில் ஸ்மார்ட் சிட்டி கனவு நகரமாகவே இருக்கும்.


நன்றி - த  இந்து