Showing posts with label வேதாளம் -பட்டுக்கோட்டை பிரபாகர். Show all posts
Showing posts with label வேதாளம் -பட்டுக்கோட்டை பிரபாகர். Show all posts

Friday, October 23, 2015

வேதாளம் -பட்டுக்கோட்டை பிரபாகர்

உலகிலேயே மிகவும் புத்திசாலித் தனமானதும் அதே சமயம் புதிரானதுமான ஒரே விஷயம் மனித மனம்தான். அடுக்குக்குள் அடுக் காக மரக் கிளைகள் போல விரிந்து கொண்டே செல்லும் மனித மனம் பற்றி ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
மனித மனம் பற்றி இங்கு குறிப்பிட வேண்டியதன் அவசியம், இந்த வழக் கைப் பற்றிப் புரிந்துகொள்ளும்போது விளங்கும்.
2008-ம் வருடம். அமெரிக்காவில் ஒகலஹோமா நகரத்துக்கு அருகில் ஒரு சின்ன ஊர். அங்கே ஸ்கைலா, டெய்லர் பிளாக்கர் என்று இரண்டு சிறுமிகள். வயது 11 மற்றும் 13. இருவரும் இணைப் பிரியாத தோழிகள். அன்று, ஊரில் ஓடும் ஆற்றின் கரையோரம் கூழாங்கற்கள் பொறுக்குவதற்காகச் சென்றார்கள். வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
பெற்றோர் கவலைப்பட்டு அவர் களைத் தேடினார்கள். காணவில்லை. காவல்துறைக்குச் சென்றார்கள். அவர்கள் கூழாங்கற்கள் பொறுக்கச் சென்ற ஆற்றிலும் ஆழம் அதிகமில்லை; வெள்ளம் எதுவும் வரவுமில்லை; இருவருக்குமே நீச்சல் தெரியும்; அதனால் ஆற்றோடு சென்றிருக்க வாய்ப்பு இல்லை.
இரண்டு குடும்பத்தினரும் அப்படி யொன்றும் பணக்காரர்களும் இல்லை. ஆகவே, கடத்தி வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதற்கான நோக்கத் தில் எதுவும் நடந்திருக்க வாய்ப்பும் இல்லை என்கிற முடிவுக்கு வந்தார்கள். நகரமெங்கும் பல வழிகளில் தேடிப் பார்த்து சோர்ந்து போனார்கள்.
இரண்டு தினங்கள் கழித்து ஒரு சாலையோரப் புதருக்குள் இரண்டு சிறுமி களின் பிணங்கள் கிடப்பதாக தகவல் வந்து, சென்று பார்த்தபோது… இவர்கள் தான். இரண்டு பேரும் பல முறை சுடப் பட்டிருந்தார்கள். அந்தப் பிரதேசத்தில் துப்பாக்கித் தோட்டாக்களின் உலோக உறைகள் கண்டெடுக்கப்பட்டன.
மருத்துவ சோதனை செய்யப்பட்ட தில், இரண்டு சிறுமிகளுக்கும் பாலியல் வன்முறை நிகழவில்லை என்பது தெரிந் தது. ஸ்கைலாவின் உடலில் எட்டு முறை சுடப்பட்டதன் காயங்களும், டெய்லரின் உடலில் ஐந்து முறை சுடப்பட்டதன் காயங்களும்இருந்தன. இரண்டு சிறுமிகளும் வேறு வேறு இரண்டு வகை துப்பாக்கிகளால் சுடப்பட்டிருந்தனர்.
காவல்துறை மண்டையைப் பிய்த்துக் கொண்டது. அவர்களைச் சுட்டது யார்? பெரிய குற்றம் ஏதாவது நடந்து, அதை அவர்கள் பார்த்துவிட்டார்களோ? சாட்சி களை விட்டுவைக்கக் கூடாதென்று இவர்களைச் சுட்டிருப்பார்களோ?
ஆனால், அந்தப் பகுதியில் ஒரு கொலையோ, கொள்ளையோ நடந்ததற் கான அறிகுறியே இல்லை. காவல்துறை போராடிப் பார்த்து கைவிட்டுவிட்டது. சிறுமிகளின் பெற்றோர் அழுது ஓய்ந்து, அவர்களுடைய உடல்கள் கண்டெடுக் கப்பட்ட இடத்தில் சிறுமிகளுக்கு சிலை கள் வைத்து, அவர்கள் உபயோகப் படுத்திய பொருட்களை வைத்து அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்கள்.
கொஞ்ச நேரம் அந்தச் சிறுமிகளை மறந்துவிட்டு, மூன்று ஆண்டுகள் கழித்து 2011-ல் நிகழ்ந்த ஒரு காதல் கதையைப் பார்ப்போம்.
கெவின், ஆஷ்லே இருவரும் காதலர் கள். விரைவில் திருமணம் நடக்கவிருந் தது. நிச்சயதார்த்தம் முடிந்து உல்லாச மாக சுற்றித் திரிந்தார்கள். கெவின் தன்னிடம் பாசமாக இருந்தாலும் அவ னிடம் ஏதோ ஒரு ரகசியம் இருப்பதாக ஆஷ்லே உணர்ந்தாள். எதையோ நீ என்னிடம் மறைக்கிறாய் என்று அவனிடம் கேட்டபோதெல்லாம் கெவின் மறுத்து வந்தான்.
‘‘கெவின், நாம் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்தானே?’’
‘‘அதிலென்ன சந்தேகம் ஆஷ்லே?’’
‘‘என்னைப் பற்றி உனக்கு முற்றிலும் தெரியுமல்லவா?’’
‘‘தெரியுமே. அதனால்தானே காதலித்தேன்...’’
‘‘அதேப்போல உன்னைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரிய வேண் டாமா?’’
‘‘உனக்குத்தான் தெரியுமே!’’
‘‘இல்லை… தெரியாது. உன் நடவடிக்கைகளில் ஏதோ மர்மம் இருக்கிறது. அவ்வப்போது ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்கிறாய். திடீரென்று படபடப்பாகிறாய். ஏதோ ஒரு பிரச்சினை உன்னை வாட்டுகிறது. எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்…’’
‘‘அப்படியெல்லாம் எதுவும் இல்லை…’’
‘‘பொய்! ஒரு குற்ற உணர்ச்சியில் நீ சிக்கியிருப்பதுபோல உணர்கிறேன். சொல்… ஏதாவது தப்பு செய்துவிட்டாயா? அல்லது உனக்கு ரகசியமாக வேறு காதலி இருக்கிறாளா? நான் எதையும் தாங்கிக்கொள்கிறேன்… சொல்!’’
‘‘நீயாக கற்பனை செய்துகொண்டு ஏதேதோ கேட்கிறாய். அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று சொன்னால் விட்டுவிடு!’’
- இருவரும் கெவின் காரில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த வாக்கு வாதம் இது. அன்று மாலை ஆஷ்லே வீடு திரும்பவில்லை. அவள் பெற்றொருக்கு அவளுடைய காதல் விஷயம் தெரியும் என்பதால் கெவினைக் கேட்டார்கள்.
‘‘நானும் அவளும் காரில் வந்து கொண்டிருந்தபோது எங்களுக்குள் வாக்கு வாதம் நடந்தது. அவள் கோபத் தின் உச்சத்துக்குச் சென்றாள். உடனே காரை நிறுத்தச் சொன்னாள். நிறுத்தி னேன். சட்டென்று இறங்கிக்கொண்டு நான் கூப்பிட்ட கூப்பிடத் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டாள்…’’ என் றான் கெவின்.
அனைவருமாக ஆஷ்லேயைத் தேடினார்கள். அவளிடமிருந்து எந்த செய்தியும் இல்லை. காவல்துறையிடம் சென்றார்கள். காவல்துறை கெவினை கேள்விகளால் குடைந்தது.
அவள் காரிலிருந்து இறங்கிச் சென்ற இடத்தைச் சுற்றிலும் தேடிப் பார்த்தார் கள். உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை செய்திருக்கலாமோ என்று அதற்கு சாத்தியமுள்ள கோணங்களிலும் விசாரித் தார்கள். ஒன்றும் தெரியவில்லை.
காவல் அதிகாரி ஆஷ்லேயின் முகப் புத்தகக் கணக்கில் அவள் போட்டிருந்த அத்தனைப் பதிவுகளையும் படித்த போது, ஒரு பதிவு அவரின் புருவங் களைச் சுருங்க வைத்தது.
அது: ‘கெவினிடம் ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது. அதை அவன் சொல்ல மறுக்கிறான். இவனை திருமணம் செய்ய ஏன்தான் முடிவெடுத்தேனோ என்று சமயங்களில் தோன்றுகிறது’.
அதிகாரியின் சந்தேகப் பார்வை கெவின் பக்கம் திரும்பியது. விசா ரணைக்கு அழைத்தார். கிடுக்கிப் பிடி போட்டு கேள்விகளை வீசினார். அவரின் கேள்விகளின் அழுத்தம் தாங்காமல் உடைந்து, ‘‘ஆமாம்… நான்தான் அவ ளைக் கொன்றேன்’’ என்று வெடித்து விட்டான் கெவின்.
அன்று வாக்குவாதம் எல்லை கடந்து சென்றபோது தனக்குள் திடீரென்று ஒரு சாத்தான் புகுந்து ‘அவளைக் கொல்’ என்று உத்தரவிட்டதாகவும், உடனே காரை நிறுத்தி டேஷ்போர்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவள் கழுத்தை அறுத்ததாகவும், பிறகு தன் வீட்டின் பின்புறம் அவள் உடலை எரிந்து, எலும்புகளை மண்ணுக்குள் புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டான்.
அவன் மறைத்து வரும் ரகசியம் என்ன என்ற கேள்விக்கும் பதில் சொன்னான், ‘‘மூன்று வருடங்களுக்கு முன்பு காரில் ஓர் ஊரைக் கடந்தபோது, கூழாங்கற்கள் பொறுக்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் என்னை நோக்கி ஓடி வந்தார் கள். காரை நிறுத்தினேன். அவர்கள் ஏதோ சொன்னார்கள். அது என் காதில் விழவில்லை. மாறாக அந்த நிமிடம் எனக்குள் புகுந்த ஒரு சாத்தான் ‘அவர் களைக் கொல்லச் சொன்னது’. எதையும் யோசிக்காமல் ஒரு சிறுமியை மட்டும் கண்மூடித்தனமாக சுட்டேன். அங்கிருந்து புறப்பட இருந்தேன். அதிர்ச்சியில் உறைந்து நின்ற இன்னொரு சிறுமியை யும் கொல்லச் சொல்லி சாத்தான் உத்தர விட, அந்தத் துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்ததால் என்னிடம் இருந்த இன்னொரு துப்பாக்கியால் அந்தச் சிறுமியையும் சுட்டேன். உடல்களைப் புதருக்குள் இழுத் துப்போட்டுவிட்டுச் சென்றுவிட்டேன்.’’ என்றான்.
நீதிமன்றத்திலும் மீண்டும் மீண்டும் இந்த சாத்தான் கதையை கெவின் சொன் னான். அவனுக்கு மூன்று ஆயுள் தண் டனை வழங்கப்பட்டது. தனக்காக வாதா டிய வக்கீலை நீதிமன்றத்திலேயே ஒரு முறை கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்ற அவன், அதுவும் ‘சாத்தானின் உத்தரவு’ என்றான். தீர்ப்பு நாளின்போது தன்னை யாராவது சுட்டுவிடுவார்கள் என்று புல்லட் புரூப்ஃ ஜாக்கெட் அணிந்து வந்தான்.
அவனை சோதனை செய்த மனநல மருத்துவர்கள், அவன் மனநலம் சரியாக இருப்பதாகச் சொன்னதால் அவனுடைய சாத்தான் கதையை யாரும் நம்பத் தயா ராக இல்லை. ஆனால், அன்றைய தினம் அந்தச் சிறுமிகள் காரை நிறுத்தி அவனிடம் என்ன சொல்லியிருப்பார்கள்? எதற்காக அவர்களை அவன் வெறித்தன மாக சுட்டான்… போன்ற கேள்விகளுக்கு இன்று வரை பதிலே இல்லை. மனித மனம் புதிரானதுதானே?
- வழக்குகள் தொடரும்…

தஹிந்து