'எப்படா இந்த நகை விலை குறையும் என பலரும் கவலைப்பட்ட நாட்கள் மாறி, கடந்த சில நாட்களாக 'ஜாக்பாட்' போல நகைகளை எடுக்கும் வாய்ப்பாக தங்கம் மார்க்கெட் விலை ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வருகிறது வாங்கிட்டா மட்டும்போதுமா, அதை எப்படி பராமரிக்கிறது? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
அப்படி கேட்பவர்களுக்கான பதிலையும் கூடவே, காஸ்ட்லி புடவையான பட்டுப்புடவையை பராமரிக்கும் முறைப்பற்றியும் இங்கே சொல்லியிருக்கிறோம்.
படிச்சுக்கோங்க.. தெளிஞ்சுக்கோங்க..!
கற்கள் பதித்த நகைகள்:
* பலருக்கும் மிகப்பெரிய கவலை அடிக்கடி வெள்ளிக் கொலுசுகளின் பளபளப்பு மங்கி, கறுத்துவிடுவதுதான். நல்ல பளிச் லுக்கிற்கு, கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து, கொஞ்ச நேரம் ஊறியபின், பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் பளபளவென்று ஆகி விடும்.
* பொதுவாகவே எல்லோருக்கும் தெரிந்ததுதான். பலரும் நகை வாங்கும்போது பெரும்பாலும் கற்கள் பதித்த நகைகளை வாங்குவதில்லை. அதை தொடர்ந்து தினமும் அணிந்தால், ஒளி மங்கிவிடும். இதற்கான தீர்வு, நீலக்கலர் பற்பசையை கற்கள் மீது பூசி, மென் தன்மையுடைய பிரஷ் அல்லது பனியன் துணியால் மெதுவாக தேய்க்க வேண்டும். அதன் பிறகு, சுத்தமான தண்ணீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால், அவற்றிலுள்ள எண்ணெய், பிசுக்கு போன்றவை நீங்கி புத்தம் புது நகையாக ஜொளிக்கும்.
வெள்ளி பொருட்கள் மற்றும் நகைகளை பராமரித்தல்:
* வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல், மரப் பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால், எப்பொழுதும் பளபளப்பாக இருக்கும்.
* மிதமாக சுட வைத்த தண்ணீரில், சிறிதளவு டிடர்ஜென்ட் தூள் கலந்து அதில், வெள்ளி நகைகளை ஊற வைத்து சுத்தம் செய்தால், நகைகள் பளபளக்கும்.
* அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, சுத்தமான தண்ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்.
* வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தவிர்க்கலாம்.
* புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் காட்சியளிக்கும்.
முத்து நகைகள்
* முத்து பதித்த நகைகளை தனியாக ஒரு பெட்டியில், வெள்ளை நிற காட்டன் துணியில், முடிந்து வைப்பது நல்லது.
* முத்து பதித்த நகைகளை நீரில் அமிழ்த்தி கழுவக் கூடாது. அப்படி கழுவினால் முத்துக்கள் ஒளி இழந்துவிடும். மேலும், இந்நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடைவில் மங்கி விடும். எனவே, ஒப்பனைகள் முடிந்த பின், முத்து நகைகளை அணிவதே சிறந்தது.
தங்க நகைகள்
* தங்க நகைகளை அதற்கென இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். அப்போதுதான், அதில் பதிக்கப்பட்டிருக்கும் கல், முத்து விழாமல் இருக்கும். தங்க நகைகளுடன், கவரிங் நகைகளை சேர்த்து அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால், தங்க நகை சீக்கிரம் தேய்ந்து விடும்.
* பூந்திக் கொட்டையை ஊற வைத்த தண்ணீரில், தங்க நகைகளை கழுவினால், அழுக்கு நீங்கி, பளபளப்பாக இருக்கும்.
பட்டுப்புடவைக்கான பராமரிப்பு:
புடவைதான் எந்த ஒரு பெண்ணுக்கும் அழகைத் தரக்கூடியது. அந்த விஷயத்தில் பட்டுப்புடவை இன்னும் அழகுக்கு அழகூட்டும்.. அதை பராமரித்தலில்தான் அத்தனை சிரமம் இருக்கும். அதைப்பற்றித்தான் தற்போது பார்க்கப்போகிறோம்.
* விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேஷங்களுக்குச் சென்று வந்தவுடன், பட்டுச் சேலையை களைந்து உடனே மடித்து வைக்கக் கூடாது. நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.
* எக்காரணம் கொண்டும் பட்டுச் சேலையை சூரிய ஒளியில் வைக்கக் கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. டிரைவாஷ் தான் சிறந்தது.
* ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியைத் தடவி 5 அல்லது 10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலசினால் எண்ணெய் கறை போயே போச்சு.
* பட்டுப்புடவைகளை வருடக் கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது கட்டி முடித்துவிட்டு, டிரைவாஷ் செய்து பிறகு வைக்கவும்.
* அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்யக் கூடாது. இல்லையெனில் ஜரிகை பாழாகிவிடும்
* பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டைப் பையில் அப்படியே வைத்திருப்பதை தவிர்த்து, துணிப் பையில் வைக்கலாம்.
- வே. கிருஷ்ணவேணி
நன்றி - விகடன்