ஆசை ஆசையாய் அணிந்து கொள்ளும் பொன் நகை, ஒரு அன்பான குடும்பத் தம்பதியின் புன்னகையைச் சீர்குலையச் செய்கிற கதை ‘வெண்ணிலா வீடு’.
அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கார்த்தியும் (செந்தில்), தேன்மொழியும்
(விஜயலட்சுமி) குழந்தையோடு நடுத்தரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். கார்த்தி
ஒரு தனியார் நிறுவனத்தில் நம்பிக்கைக்குரிய மேனேஜராக வேலை பார்க்கிறான்.
குழந்தை, வீடு ஆகியவற்றுக்கு இடையே இலவச டியூஷன் நடத்தும் இல்லத்தரசி
தேன்மொழி. இவர்களின் பக்கத்து வீட்டுக்கு செல்வச் சீமாட்டியாகக்
குடிவருகிறாள், இளவரசி (சிருந்தா ஆசாப்). பணக்காரத் திமிர் பிடித்த பெண்ணான
இளவரசியைத் தன் அன்பால் வெல்கிறாள் தேன்மொழி. இருவரும் நெருக்கமான
தோழிகளாகிறார்கள்.
கார்த்தி வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளர் மகளுக்கு திருமணம். அந்த
நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கழுத்து நிறைய நகை இருந்தால்தான் வருவேன்
என்று பிடிவாதமாக இருக்கிறாள் தேன்மொழி. அதை அறிந்த தோழி இளவரசி தன்னுடைய
நகைகளைக் கொடுக்கிறாள். அதை அணிந்துகொண்டு திருமணத்துக்குச் சென்று
திரும்பும் வழியில் ஒரு திருட்டுக் கும்பலிடம் நகைகளைப் பறிகொடுக்கிறாள்,
தேன்மொழி. இந்தச் சம்பவத்துக்கு பிறகு இரண்டு தோழிகளின் நட்பில் எப்படி
விரிசல் விழுகிறது. அதனால் ஏற்படும் மனக் கசப்பை சரி செய்ய தேன்மொழியின்
கணவன் கார்த்திக் எடுக்கும் முயற்சிகள் என்ன? களவு போன 25 லட்சம்
மதிப்பிலான நகை அழகான தம்பதியின் வாழ்க்கையை எப்படிச் சீர்குலைக்கிறது
என்கிற கோணங்களில் மீதிக் கதை நகர்கிறது.
அட்சய திருதியை அன்று நகை வாங்கக் குவியும் மக்களோடும், அவர்களின் மனநிலை
குறித்த விவாதத்தோடும் படத்தின் கதை தொடங்கும்போதே, இது தங்கத்தை பற்றிச்
சொல்லப்போகிற திரைக்கதை என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
திருட்டுத்தனமாக ஒரு கேமரா நம் வீட்டு ஹால் வழியே நுழைந்து பெட்ரூம்
வரைக்கும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை சூசகமாகச் சொல்லி
எச்சரிக்கை மணி அடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமகாலிங்கத்தின்
விழிப்புணர்வு பாராட்டுக்குரியது.
அவ்வளவு விசுவாசமான உழைப்பாளி என்று மெச்சிக்கொள்ளும் கார்த்திக்கின்
முதலாளி, தனது குடும்ப நிகழ்ச்சிக்கு வந்தபோதுதான் நகை காணாமல் போனது
என்பதை அறிந்து வேதனைப்படுவதோடு நிறுத்திக்கொள்கிறார்.அழுத்தமாக ஒரு
விஷயத்தை திரைக்கதையில் நகர்த்திக்கொண்டு போகும்போது பாடல்கள்
இடைச்செருகல்களாக வேண்டாத இடத்தில் நுழையும். அந்த மாதிரியான செயலுக்காகப்
படக் குழுவினர் போராடவில்லை.
நகைச்சுவைக் காட்சிகளுக்குப் பேர்போன செந்திலுக்கு வித்தியாசமான வேடம்.
நிறைவாகச் செய்திருக்கிறார். விளை நிலத்தை விற்று கிடைக்கும் பணத்தில்
வாழ்க்கையைக் கடத்துவோம் என்று முடிவெடுக்கும் சொந்த ஊர்க்காரர்களுக்குப்
புரியும்படியாக எடுத்துச்சொல்லும் போதும், திருட்டுப்போன நகைக்காகப் பணத்தை
திருப்பிக்கொடுப்பதற்காக அந்த நிலத்தை விற்கிற அளவுக்குப் போகும்போதும்
செந்தில் அடக்கமாக, அளவாகவே நடித்திருக்கிறார்.
‘மாமா மாமா’ என்று கணவன் மேல் அன்பைப் பொழியும் கிராமத்துப் பெண்ணாக
விஜயலட்சுமி கவர்கிறார். கிராமத்திலிருந்து நகரத்தில் குடியேறும் ஒரு
பெண்ணின் வாழ்க்கையை வெளிப்படுத்தியுள்ள விதத்தை நிச்சயம் பாராட்டலாம்.
கார்த்திக்கைத்தான் தேன்மொழி காதலிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு
முன் கார்த்திக்கின் நண்பர்கள் அவளுக்குக் காதல் வலை வீசும் சம்பவங்கள்
பலவீனமான காமெடி சீன்களாகவே இருக்கின்றன. இவர்களைக் கடந்து மனதில் நிற்கும்
கேரக்டரில் அசத்துகிறார் கார்த்திக்கின் குடிகார மாமா.
சிருந்தா ஆசாப் அப்பாவாக வரும் ‘வழக்கு எண்’ முத்துராமன் வில்லனாக
நடித்திருக்கிறார். துடுக்கான வில்லன் என்பதைவிட மகள் மீது பாசத்தைப்
பொழியும் சராசரி அப்பாவாக நடித்திருக்கும் விதம் சிறப்பு. ‘ஜானி ஜானி’
பாடல் இளைஞர்களை கவரும். பின்னணி இசைப் பணியையும் கதைக்கும், காட்சிக்கும்
சிக்கலில்லாமல் கையாண்டிருக்கிறார், இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம்.
தேசிய விருது பெற்ற எடிட்டர் சாபு ஜோசப்பின் வேலைகளும் கச்சிதமாகப்
பொருந்தியிருக்கின்றன.
வலுவான அம்சங்கள் பல இருந்தும் படத்தை உருவாக்கிய விஷயத்தில் கோட்டை
விட்டிருக்கிறார்கள். படத்தின் முதல் பாதி சுவாரஸ்யமற்ற சம்பவங்களால்
நிரப்பப்பட்டிருக்கிறது. இரண்டாம் பாதியில்தான் வேகம் எடுக்கிறது. அதன்
பிறகு நடக்கும் சம்பவங்கள் பதைக்கவைக்கின்றன. ஆனால் சினிமா என்னும் அளவில்
நல்ல அனுபவத்தைத் தராத வகையில் காட்சியமைப்பும் எடுக்கப்பட்ட விதமும்
கச்சாத்தன்மை கொண்டிருக்கின்றன. காட்சிகளில் சோகம் அளவுக்கதிகமாக இருப்பது
பார்வையாளர்களை அவஸ்தைக்குள்ளாக்குகிறது.
நம்பிக்கை தரும் காட்சிகள் மிகக் குறைவாக உள்ளன. படம் ஒரே தொனியில்
நகருகிறது. இத்தகைய குறைகளை மீறிக் கவனிக்க வைக்கிறது அழுத்தமான கதை.
thanx - the hindu
தினமலர் விமர்சனம்
நகை
மோகத்தால்., அதுவும் இரவல் நகை மோகத்தால் ஒரு குடும்பம் நடுத்தெருவிற்கு
வரும் கதை தான் வெண்நிலா வீடு மொத்த படத்தின் கதையும்.அதில் ஆங்காங்கே
குத்த வெச்ச மாதிரி ரியல் எஸ்டேட் கதிடுதித்தங்களையும் கிராமத்து நட்பையும்
நகரத்து நட்பு, நடப்புகளையும், வீடியோ வில்லங்கங்களையும் கலந்து கட்டி
வெண்நிலா வீட்டை புதியதொரு பாணியில் பொன்நிலாவாக ஜொலிக்க
வைத்திருக்கின்றனர்.
கதைப்படி., கதையின் நாயகன்
கார்த்திக் எனும் செந்தில்குமாரும், நாயகி தேன்மொழி எனும் விஜயலட்சுமியும்
உறவுக்காரர்கள் என்றாலும் உயிர் காதலால் இணைந்தவர்கள். பணிநிமித்தம்
கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் இந்த ஜோடி., கை நிறைய சம்பளம்,
அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை, செல்லமகள் வெண்நிலா என நகரத்தில்
சொர்கத்தை பார்க்கின்றனர். இச்சமயத்தில் முதலாளி வீட்டு திருமணத்திற்காக
அடுத்த வீட்டு தோழி இளவரசி எனும் சிருந்தா ஆசாப்பிடம் காதல் கணவனின்
கண்டிப்பையும் மீறி இரவல் நகை வாங்கி போட்டு போகும் விஜயலட்சுமி.,
புருஷனின் கண் எதிரிலேயே அந்த விலைஉயர்ந்த நகையை களவு கொடுக்கிறார்.
போலீஸில் புகார் கொடுத்தும் நகை கிடைத்தபாடில்லை. அதனால்,
கார்த்திக்-தேன்மொழி தம்பதிகளின் மானம் போய், மரியாதை போய், அந்தரங்கமும்
பறிபோய் உறவும், உயிரும் போகிறதா? இல்லையா...? என்பது தான் வெண்நிலா வீடு
படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை !
கதையின்
நாயகனாக கார்த்திக்காக சரவணன்-மீனாட்சி புகழ் செந்தில்குமார்., பப்பாளி்கு
அப்புறம் பப்பாளியை விட மேலாக ஹீரோ செந்திலுக்கு பேசப்படவிருக்கும் படம் !
ஆனால் செந்தில்குமார், சோகம், சந்தோஷம், துக்கம், தூக்கம், காதல், காமெடி
எல்லாவற்றிலும்...ஒரே மாதிரி முகபாவம் காட்டுவது தோஷம் ! அடுத்தடுத்த
படங்களில் கூத்துப்பட்டறைக்கு போய்விட்டு வந்து கூத்து கட்டுங்கள் ப்ளீஸ் !
கதாயின்
நாயகி தேன்மொழியாக விஜயலட்சுமி, அகத்தியன் சார் பொண்ணுகிட்ட அப்படி ஒரு
நடிப்பும், துடிப்பும் கொட்டிகிடக்குது. ஆனாலும் தமிழ் சினிமா அம்மணியை
தட்டி கழிப்பது இந்த படத்திற்கு அப்புறம் குறையும்..., என நம்புவோமாக !
அதிலும் இரவல் நகைக்காக ஏங்கி ஒரு வழியாக கணவரை சம்மதிக்க வைத்து
சாதிப்பதும் அதனாலேயே இறுதியில் தூக்கில் தொங்கி சாவதுமாக அம்மணி நம்
கண்களின் ஓரம் கண்ணீர் வர வைத்து விடுகிறார். கீப் இட் அப் விஜயலட்சுமி !
இரண்டாம்
நாயகி இளவரசியாக வரும் சிருந்தா ஆசாப், இவரது அப்பாவாகவும், வில்லனாகவும்
வரும் மோகன்வேலு முத்துராமன், நாயகனின் கிராமத்து நண்பர்கள் ப்ளாக்பாண்டி,
சரவணன், செந்தில், தமிழ்செல்வி, குடிகார அக்கா புருஷன் ஐந்து கோவிலான்,
சித்தப்பா அவன்இவன் ராம்ராஜ் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து
பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் ஐந்துகோவிலான் கிராமத்து குடிகார அக்கா
புருஷனாகவே அசத்தியிருக்கிறார். பேஷ், பேஷ் !
டி.கண்ணனின்
ஒளிப்பதிவில் வெண்நிலா வீடு ஜொலிக்கிறது. கிராமப்புறங்களிலும் சரி,
நகர்புறங்களிலும் சரி ! தன்ராஜ் மாணிக்கத்தின் இசையில் திரையுலக பிரபலங்கள்
சிவகார்த்திகேயனில் தொடங்கி வெங்கட்பிரபு, பிரேம்ஜி வரை வரும் அந்த
அதிரடி பாடல் அசத்தல் ! ஐந்துகோவிலானின் வசனத்தில் ஆங்காங்கே புதிய
வார்த்தைகள் வார்ப்புகள், சிந்திக்க வைக்கின்றன.
வெற்றி
மகாலிங்கத்தின் இயக்கத்தில் பெண்ணின் இரவல் நகை மோகத்தால் வரும்
பிரச்னைகள், ரியல் எஸ்டேட் திருட்டுதனங்கள், வீட்டுக்குள்ளேயே வந்து விட்ட
வீடியோ காமிரா விபரீதங்கள்...உள்ளிட்ட விஷயங்கள் விலாவாரியாக அதே நேரம்
சுவாரஸ்யமாக அலசப்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது!
" மொத்தத்தில் வெண்நிலா வீடு - வெற்றி உலா பாடும் பாரு !