சுசீந்திரன் தயாரிப்பில் உருவான படம், ஸ்ரீ - ஹரீஷ் கல்யாண் என இரு கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் முதல் படம் என்ற இந்த காரணங்களே 'வில் அம்பு' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
'வில் அம்பு' படம் குறித்து நல்ல விமர்சனங்களும் வரத் தொடங்கிய நிலையில், படம் பார்க்கும் ஆவலுடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.
'வில் அம்பு' படம் நிர்ணயித்த இலக்கை நிறைவேற்றியதா?
கதை: ஸ்ரீ - ஹரீஷ் இருவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால், ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாவிட்டாலும், ஒருவர் செய்த தவறு இன்னொருவரை பாதிக்கிறது. தவறு செய்யாவிட்டாலும் ஒருவர் இன்னொருவர் பிரச்சினைக்கு காரணமாக அமைகிறார். ஏன் அப்படி நிகழ்கிறது? அதனால் ஏற்படும் இழப்புகள் என்ன? இரண்டு கதாநாயகர்களின் சந்திப்பு எப்படி ஏற்படுகிறது? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்பது மீதிக் கதை.
இரண்டு ஹீரோக்கள் கொண்ட கதையை மிக நேர்த்தியாகக் கையாண்ட இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியத்துக்கு வாழ்த்துகள்.
இரண்டு ஹீரோக்கள் என்றாலே நட்பு, மோதல், அடிதடி, பிரிவு, இணைவு என்று வழக்கமான ஃபார்முலா சினிமா பிடிக்காமல் வித்தியாசமாக கான்செப்ட் சினிமா பிடித்த விதத்தில் இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியம் கவனிக்க வைக்கிறார்.
கனவுகளோடு பயணிக்கும் சராசரி இளைஞன் கதாபாத்திரத்தில் ஹரீஷ் கல்யாண் நச்செனப் பொருந்துகிறார். இயலாமை,விரக்தி, சோகம், ஆவேசம், ஆதங்கம் என அனைத்தையும் முகபாவனைகளில் பிரதிபலிக்கும் ஹரீஷின் நடிப்பு அழுத்தமானது.
முரட்டு கோபம், வறட்டு துணிச்சல், தப்பே செய்தாலும் தயங்காத குணம் என்று கதாபாத்திரத்துக்குள் வெகு இயல்பாக ஸ்ரீ தன்னை பொருத்திக் கொள்கிறார். படம் முழுக்க ஸ்ரீயின் நடிப்பு சிலாகிக்கத்தக்கது.
காதல் மொழி பேசுவதும், கண் ஜாடை காட்டுவதும், வெட்கத்தில் சிரிப்பதுமாக கதாநாயகிக்குரிய பங்களிப்பை சம்ஸ்கிருதி சரியாக செய்திருக்கிறார்.
அவ்வப்போது தலைகாட்டுவிட்டுப் போகும் சாந்தினி இரண்டாம் பாதியில் தன் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார்.
யோகி பாபுவின் காவல் நிலைய காமெடியில் தியேட்டர் அதிர்கிறது. என்னை அவமானம் செஞ்சிட்ட, முதல்முறையா கௌரவம் செஞ்சிட்ட என்ற யோகி பாபு பேசும் வசனங்களுக்கும் கரவொலி தொடர்ந்தது. இன்னும் நிறைய படங்களில் யோகி பாபுவை தனி காமெடியனாக பார்க்கலாம்.
நந்தகுமார், சிருஷ்டி டாங்கே, ஹரிஷ் உத்தமன், நிஷா கிருஷ்ணன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
மார்டின் ஜோவின் கேமரா கோவையை கண் முன் நிறுத்துகிறது. கதாபாத்திரங்கள், காட்சிகள் என்று எல்லாவற்றையும் தன் கேமராவுக்குள் கடத்தி இருக்கிறார். நவீன் இசை படத்துக்குப் பெரும் பலம். ஆளை சாய்ச்சுப்புட்ட கண்ணாலே பாடலும், குறும்படமே பாடலும் ரசிக்க வைக்கின்றன.
இரண்டு ஹீரோக்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை குழப்பமில்லாமல் காட்டிய விதத்தில் எடிட்டர் ரூபனுக்கு சபாஷ் போடலாம்.
ஆனால், முதல் பாதியில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். இரண்டு ஹீரோக்கள் என்றால் அதற்கான கதாபாத்திர வடிவமைப்பு, காட்சிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டிய இயக்குநர் இரண்டாம் பாதியில் ஹரீஷ் கதாபாத்திரத்தை சரியாக செதுக்காதது ஏன்? ஹரீஷ் காட்சிக்கு அடுத்து சம்பந்தமே இல்லாத சமயத்திலும் ஸ்ரீயின் காட்சிகளை அடுக்கியது ஏன்? போன்ற கேள்விகளால் திரைக்கதை சரிகிறது.
இப்படி சில விஷயங்களில் சரிவை சந்தித்தாலும், பிரச்சினைகளை அடுக்கிய விதத்திலும் அதற்குரிய வழிமுறைகளை தீர்வுகளாக முன்வைத்த விதத்திலும் 'வில் அம்பு' குறி தப்பவில்லை!
நன்றி - த இந்து