விவேகம் இழக்கலாமா விஜயகாந்த்..?
அன்பிற்கினிய விஜயகாந்த் அவர்களுக்கு...
வணக்கம் வளர்க நலம்.
நீங்கள் அமைதியாக ஓர் இடத்தில் தனித்திருந்து ஆத்மசோதனை நடத்த வேண்டிய நேரம் இது. சிலர் எவ்வளவு முயன்று தேடினாலும் எதுவும் எளிதில் கிடைப்பது இல்லை. சிலருக்கு எளிதாகக் கிடைத்து விட் டாலும், கிடைத்ததை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தெரிவது இல்லை.
சிகரத்தை அடைவது சாதனை இல்லை. அங்கேயே நீடித்து நிற்பதுதான் உண்மையில் உயர்ந்த சாதனை. ஒவ்வொரு சிகரத்தின் பக்கத்திலும் பயங்கரமான ஒரு செங்குத்துச் சரிவு இருக்கும். சிறிது நிலை தடுமாறினாலும் பள்ளமே படுக்கையாகிவிடும். நீங்கள் நிலை தடுமாறுவதைக் கண்டு ஏற்பட்ட கவலையில் பிறந்ததுதான் இந்தக் கடிதம்.
உங்கள் கட்சியில் இருக்கும் அனைவரும் அடக்கத்துடன் கைகட்டி நிற்க வேண்டும் என்று நீங்கள் வெளிப்படையாகவே ஆசைப்படுகிறீர்கள். கட்சிக்கு வெளியே இருப்பவர்களும் உங்கள் விருப்பு வெறுப்புக்கேற்பவே நடந்துகொள்ள வேண்டும் என்று உள்ளுக்குள் எதிர்பார்க்கிறீர்கள். இந்த எதிர்பார்ப்புத்தான் உங்களுடைய அனைத்துப் பிரச்னைகளுக்கும் அடித்தளம்.
இராமானுஜருக்கு வடுகநம்பி என்று ஒரு சீடர் இருந்தார். ஒருநாள் இருவரும் காவிரியைக் கடக்கும்போது, இராமானுஜர் வழிபட்ட சிலையையும், இராமானுஜரின் பாத அணிகளையும் ஒரே மூட்டையாகக் கட்டினார் வடுகநம்பி. பதறிப்போன இராமானுஜரிடம் சீடர் சொன்னார்: 'உங்கள் பெருமாள் உங்களுக்கு உயர்ந்தவர். என்னுடைய பெருமான் எனக்கு உயர்ந்தவர்’ என்று. இன்றைய அரசியலில் தலைவர்களாக வலம் வரும் நீங்கள் அனைவரும் வடுக நம்பியின் வாரிசுகளைத்தான் வர வேற்கிறீர்கள்!
மதுரையில் செப்டம்பர் 14, 2005 அன்று தே.மு.தி.க-வைத் தொடங்கியபோது, உங்களை யாரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. கூடிய கூட்டம்கூட உங்களைத் திரையில் பார்த்துக் கைதட்டிய ரசிகர் பட்டாளம் என்றுதான் பலர் கணக்குப் போட்டனர். ஆனால், 2006-சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட் பாளர்களை நிறுத்தி, ஓர் இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றாலும், உங்கள் கட்சிக்குக் கிடைத்த 10 சதவிகிதம் வாக்குகள் பல அரசியல்வாதிகளின் விழிகளை வியப்பால் விரிய வைத்தன. அடுத்து வந்த நாடா ளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி பெற்ற 10.1 சதவிகிதம் வாக்குகள் தமிழகத்தில் நீங்கள் தவிர்க்க முடியாத ஓர் அரசியல் சக்தி என்பதை அனைவருக்கும் உணர்த்தியது.
'மக்களோடும் கடவுளோடும் மட்டுமே கூட்டணி’ என்று சலிப்பில்லாமல் சொல்லிக் கொண்டிருந்த நீங்கள் 2011-சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் சேர்ந்து நின்றபோது, அதை ஒரு சந்தர்ப்பவாதம் என்று வாக்காளர்கள் சந்தேகிக்காமல் வரவேற்கவே செய்தனர். அதற்கு ஒரே காரணம், கருணாநிதி பரிவாரத்திடம் இருந்து தமிழகத்தை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்று வாக்காளர்களின் தவிப்பும் தாகமும்தான்.
கருணாநிதியின் குடும்ப அரசியல் மீது மக்களுக்கு விளைந்த வெறுப்பும் விரக்தியும்தான் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கி, யாரும் எதிர்பாராத நிலையில் உங்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக்கிய முக்கியக் காரணி என்பதை நீங்கள் இருவருமே உணராமற்போனதுதான் அரசியல் சோகம். 'என்னால்தான் நீங்கள் முதல்வரானீர்கள்’ என்று ஜெயலலிதாவைப் பார்த்து நீங்கள் முழங்குவதும், 'என்னால்தான் உங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற ஏற்றம்’ கிடைத்தது என்று ஜெயலலிதா ஏளனம் செய்வதும் முற்றிலும் அர்த்தமற்ற ஆணவத்தின் வெளிப்பாடு.
கூட்டணி அமைப்பதே ஒரு கட்சி இன்னொரு கட்சியால் பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தானே? ஜெயலலிதாவுடன் நீங்கள் சேர்ந்திருக்கா விட்டால், நிச்சயம் 29 தொகுதிகளில் உங்கள் கட்சி வென்றிருக்காது. உங்கள் கூட்டணி அமையாமற் போயிருந்தால், வாக்குகள் சிதறியிருக்கும். அ.இ.அ.தி.மு.க. 150 இடங்களை அடைந்திருக்காது. ஆனால், தட்டுத் தடுமாறியாவது அது ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும். அந்த நிலையில் நீங்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றிருக்க முடியாது. இந்த உண்மை உங்களுக்கு ஏன் புரியவில்லை?
ஜெயலலிதாவை முதல்வர் என்ற முறையில் நீங்கள் மதிக்கப் பழகவில்லை. உங்களை எதிர்க் கட்சித் தலைவர் என்ற மரியாதையுடன் நடத்த ஜெய லலிதாவுக்கு மனம் வரவில்லை. விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் முதல்வருக்கு இல்லை. பக்குவமாய் விமர்சிக்கும் பாங்கு உங்களுக்கு வாய்க்கவில்லை. இந்தக் கொடுமைக்கு, உங்கள் இருவருக்கும் வாக் களித்தவர்கள் எங்கேபோய் முட்டிக்கொள்வது? 'நான் எப்படி ஒருவருக்கு அடிமையாக இருக்க முடியாதோ, அதே போன்றுதான் யாருக்கும் எஜ மானராகவும் இருக்கவியலாது’ என்றார் ஆபிரகாம் லிங்கன். ஆனால், நீங்கள் இருவருமே எல்லாருக்கும் எஜமானர்களாகவே இருக்க ஆசைப்படுகிறீர்கள்.
திரைப்பட உலகில் தனக்கென்று ஓர் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள நீங்கள் தொடக்க நிலையில் படத்தயாரிப்பாளர்களிடம் எவ்வளவு பணிவாக நடந்திருப்பீர்கள். 'தூரத்து இடிமுழக்கம்’ நடிக்கும்போது காட்டிய பணிவு 'கேப்டன் பிரபாகரன்’ வெற்றிக்குப் பிறகும் இருந்திருந்தால் அதுதான் சிறப்பு. அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்தபோது பத்திரிகையாளரிடம் காட்டிய பாசம், எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றம் பெற்ற பிறகும் நீடித்து இருந்தால் அதற்குப் பெயர்தான் தலைமைப்பண்பு.
சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அப்படி என்ன கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டு விட் டனர்? ஏன் அந்தப் பதற்றம்? எதற்கு அந்த அனாவசிய ஆவேசம்? அறிவுக்கும் உணர்ச்சிக்கும் இடையில் நடக்கும் போட்டியில் அறிவைத் துறந்து, உணர்ச்சிக்கு ஆட்படுவது அரசியல் தலைமைக்கு அழகல்லவே! ஏகவசனத்தில் உரத்த குரலில் ஓங்கிப் பேசுவது பொதுஇடத்தில் கடைப்பிடிக்கக்கூடிய நயத்தகு நாகரிகமா கேப்டன்?
'கறுப்பு எம்.ஜி.ஆர்.’ என்று அடைமொழி போட்டுக்கொள்ள ஆசைப்படும் நீங்கள், எம்.ஜி.ஆரிடம் எதையும் கற்கவில்லையே. கூடப்பழகியவர்களுக்கு எம்.ஜி.ஆரின் கோபம் எப்படிப்பட்டது என்று நன்றாகத் தெரியும். இராமாவரம் தோட்டத்தில் காட்டிய கோபத்தை எம்.ஜி.ஆர். பொதுவிடங்களில் உங்களைப்போல் ஒரு நாளாவது மக்களிடையே காட்டியது உண்டா? உள்ளத்தில் பொங்கும் உணர்வுகளுக்கு ஆடை கட்டாமல் அப்படியே நிர்வாணமாக வெளிப்படுத்துவதை இனியாவது நீங்கள் விட்டுவிட வேண்டும். நீங்கள் கவிஞர் இல்லை; மக்களின் விதி எழுத விரும்பும் ஒரு கட்சியின் தலைவர்.
உங்களுடன் இருந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியின் அரவணைப்பில் ஆதாயம் அடைவதற்கு ஆசைப்பட்டு இடம் மாற முடிவெடுத்து விட்டனர். இதில் அதிர்ச்சி அடைவதற்கோ, ஆச்சர்யப்படுவதற்கோ என்ன இருக்கிறது? மதுரை சுந்தரராஜனும், மைக்கேல் ராயப்பனும், நடிகர் அருண்பாண்டியனும் காந்தியம் வளர்க்கவா உங்கள் கட்சிக்கு வந்தனர்?
ஏழைக்கும் பாழைக்கும், அனாதைக்கும் அகதிக்கும் வாழ்வில் ஏற்றம் தருவதற்காகவா அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தார்கள்? உங்களோடு இன்று எஞ்சி இருப்பவர்களில் எத்தனை பேர் நாளை பழுத்த மரம் நோக்கிப் பறக்கப் போகின்றவர்களோ? சித்தாந்த அடிப்படையில் கம்யூனிஸ்ட் ஆனவர்களே கட்சி மாறும் காலமல்லவா இது! பதவி, அதன்மூலம் வந்து சேரும் அதிகாரம், அந்த அதிகாரத்தைக்கொண்டு கொள்ளையடிக்கும் கள்ளப்பணம் - இதுதானே இன்று நம் அரசியல்வாதிகளின் ஒரே நோக்கம்! சுயநலம்தானே இவர்களின் மூல மந்திரம்!
அது சரி... நீங்கள் ஏன் கட்சி அரசியலில் கால் பதித்தீர்கள்? கருணாநிதியிடம் இருந்தும் ஜெயலலிதாவிடம் இருந்தும் தமிழக மக்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கவா? ஊழலற்ற அரசியல் சமூகத்தை உருவாக்கவா? நேர்மை சார்ந்த நல்லாட்சியை நடைமுறைப்படுத்தவா? இவைதான் உங்கள் உண்மையான நோக்கமெனில், வேட்பாளர் தேர்வில் எந்த வகையில் நீங்கள் மாறுபட்டீர்கள்?
சுந்தரராஜன், உங்கள் நெடுநாள் நண்பர். அருண்பாண்டியன், உங்களிடம் நட்புப் பாராட்டிய நடிகர். மைக்கேல் ராயப்பன், பணபலம் படைத்த படத் தயாரிப்பாளர். மற்றவர்கள் உங்கள் ரசிகர் மன்றத் தளபதிகள். காமராஜரைப் போல் தன்னலமற்றவர், கக்கனைப் போல் ஊழலற்றவர், ஜீவாவைப் போல் ஏழைகளின் தொண்டர், பெரியாரைப் போல் சமூகப் போராளி என்ற ஒவ்வொருவரையும் தேர்ந்து தெளித்தா தேர்தல் களத்தில் நிறுத்தினீர்கள்? இல்லையே! கருணாநிதியும் ஜெயலலிதாவும் எதைச் செய்கிறார்களோ, அதையேதான் நீங்களும் செய்வீர்கள் என்றால் எங்களுக்கு எதற்கு இன்னொரு தே.மு.தி.க.? யோசியுங்கள் கேப்டன்!
குறைந்தபட்சம் கோபப்படாத மனிதராகவாவது உங்களால் இருக்க முடிகிறதா? சட்டப் பேரவையில் அமைச்சர்களும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் உங்களிடம் நடந்துகொண்ட விதம் மெச்சத் தகுந்ததாய் அமையவில்லை என்பது உண்மை. அதற்காக நீங்கள் நாக்கைத் துருத்தியது நியாயமா? பத்திரிகையாளரிடம் பகைமையைக் காட்டியது பண்பாடா? தேர்தல் பிரசாரத்தில் சொந்த வேட்பாளர் தலையில் அடிப்பது அரசியல் நாகரிகமா? 'ஜெயலலிதாவை உங்கள் எம்.எல்.ஏ-க்கள் பார்த்தது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டதற்குப் பதற்றமின்றி அரசியல் ரீதியாக நீங்கள் பதில் சொல்லியிருக்கலாமே.
கருணாநிதி ஆட்சியில் அனிதா ராதாகிருஷ்ணன் கட்சி மாறியதால், அ.இ.அ.தி.மு.க. அழிந்து விட்டதா? அதற்குப் பிறகுதானே அது ஆட்சிக்கு வந்தது. ஈரோடு முத்துசாமியும், சேலம் செல்வகணபதியும் இடம் மாறியதால், அ.தி.மு.க-வின் தடம் நகர்ந்து விட்டதா? சந்தர்ப்பவாதிகள் செல்வதால், எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்க ஆளும் கட்சி நடத்தும் அரசியல் சூழ்ச்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ என்று சொல்லிவிட்டு விமானம் ஏறியிருந்தால், எந்தப் பிரச்னையும் இல்லையே!
'சென்ற முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் குமாரதாஸ், ஈஸ்வரன், ஹக்கீம் ஆகிய மூவரும் அ.தி.மு.க-வில் இணைந்தனர். அவர்கள் 2006- தேர்தலில் மீண்டும் நிற்பதற்குக் கூட ஜெயலலிதா வாய்ப்பு வழங்கவில்லை. இன்று அவர்களுடைய முகவரியை யார் அறிவார்?
இன்று இங்கிருந்து செல்ல நினைப்பவர்கள் நாளை என்ன ஆவார்கள் என்பதற்கு அந்த மூவரை விடவும் சரியான சான்று தேவையா?’ என்று உங்கள் கட்சியில் சபலத்துக்கு உட்பட்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் சொல்லுங்கள். அதைவிட்டுவிட்டு 'டெங்கு’ காய்ச்சல் பற்றிப் பேசுவதால் என்ன பயன்?
தலைமைக்கு வேண்டிய முதல் பண்பு புலனடக்கம். ஆண்டவனை 'ஐந்தவித்தான்’ என்கிறார் வள்ளுவர். இன்று ஆள்பவர்களும், நாளை ஆள்வதற்கு ஆசைப்படுபவர்களும் ஐந்து புலன்களையும் அடக்கியாள முதலில் முயல வேண்டும். மண்ணை வென்ற மாவீரன் அலெக்சாண்டரைவிட, தன்னை வென்ற ஞானி டயோஜனீசிடம் தான் மக்கள் மரியாதை செலுத்தினர். 'உங்களில் பெரியவனாய் இருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாய் இருக்கக் கடவன். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்துகிறவனே உயர்த்தப்படுவான்’ என்று கர்த்தர் சொன்னதை நீங்கள் உட்பட எந்த அரசியல் தலைவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லையே.
இராமானுஜர் திருப்பதி மலையை அடைந்தபோது, அவரை வரவேற்க அவருடைய ஞானகுரு திருமலை பெரியநம்பி நேரில் வந்து வரவேற்றார். 'நீங்கள் ஏன் வந்தீர்கள்? யாராவது ஒரு சிறியவரை அனுப்பி வைத்திருக்கலாமே’ என்று இராமானுஜர் சொன்னபோது, 'என்னைவிட சிறியவன் இந்த மலையில் வேறு யாரும் இல்லையே’ என்றார் பெரியநம்பி. நீங்கள் எப்போது பெரிய நம்பியாக மாறப்போகிறீர்கள்?
சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் 'ருத்ரதாண்டவம்’ நடத்தி விட்டு மதுரைக்குச் சென்ற நீங்கள், இஸ்லாமியரின் தியாகத் திருநாள் விழாவில் தலையில் குல்லாய் தரித்தபடி உரையாற்றிய கோலம் கண்டு சிரிப்புத்தான் வந்தது. வாக்குகளைப் பெறுவதற்கு எந்த வேடமிட்டும் நடிப்பதில் நம் தலைவர்களில் யாரும் யாருக்கும் சளைத்தவர் இல்லை. நபிகளார் அரேபிய மக்களின் அதிபராக இருந்த போதும், அறுந்துபோன தம் காலணியைத் தாமே சீர்செய்து கொண்டவர்; கந்தலாகி விட்ட கம்பளி ஆடையைத் தாமே தைத்துக் கொண்டவர்;
தமது மண் குடிசையைத் தம் கைகளால் சுத்தம் செய்தவர்; அவரது குடும்பம் பல இரவுகள் பசித்த வயிற்றுடன் படுக்கைக்குப் போகும்படி அவருடைய வாழ்க்கையில் வறுமை குடிகொண்டிருந்தது. அவர் கடைசி மூச்சை விட்டபோது, அவர் அணிந்திருந்த ஆடையில் பல ஒட்டுகள் போடப்பட்டிருந்தன. தலைமை ஏற்பவர் எளிமையாகவும், ஏழைகளின் பிரதி நிதியாகவும், அகத்திலும் புறத்திலும் உண்மையாகவும் நேர்மையாகவும் நபிகளாரைப் போன்று நடக்கவேண்டும் என்று உணராமல், தலையில் தொப்பி வைப்பதும், நோன்புக் கஞ்சி குடிப்பதும் போலி நாடகம் இல்லையா?
போகட்டும். தூய அன்போடும், நல்ல நட்போடும் உங்களுக்கு ஒன்று சொல்ல விழைகிறேன். நீங்கள் மார்க்ஸைப் போன்று மாபெரும் சிந்தனையாளர் என்றோ, காந்தியைப் போன்று சத்திய சோதனையில் ஈடுபட்டிருப்பவர் என்றோ, பெரியாரைப் போன்று புரட்சியாளர் என்றோ, அம்பேத்கரைப் போன்று அறிவாயுதம் ஏந்தி தாழ்த்தப்பட்ட மக்களின் விடியலுக்காக அல்லும் பகலும் அயராது உழைப்பவர் என்றோ, தமிழக வாக்காளர்களில் 10 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை.
இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தே.மு.தி.க. உங்கள் தலைமையில் மலரும் என்பதுதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு. ஆனால் நீங்களோ, உங்கள் தளபதிகளோ, எந்தவகையிலும் மாற்றாக வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் உங்கள் நடைமுறைகள் நிரூபித்து வருகின்றன. தனித்திருந்து யோசியுங்கள். தவறுகள் புலப்படும். இனியாவது புதிய பாதையில் பயணம் புறப்படுங்கள். அதற்கு முன்பு கர்த்தர் சொன்னதைக் கவனத்தில் நிறுத்துங்கள். ''வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது. வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.’
- என்றும் அன்புடன்
தமிழருவி மணியன்
நன்றி 0 ஜூ வி