Showing posts with label வாழை (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( உலக சினிமா ). Show all posts
Showing posts with label வாழை (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( உலக சினிமா ). Show all posts

Monday, August 26, 2024

வாழை (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( உலக சினிமா ) @டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் + விஜய் டி வி

                   

 

 
திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் மாதிரி  ஜனரஞ்சகப்படங்களை இயக்கி மக்கள் மனதில் நின்றவர்கள் பலர் ,பாலுமகேந்திரா ,மகேந்திரன்  மாதிரி  கலை  அம்சம் பொருந்திய விருதுக்குரிய படங்களை இயக்கி கவித்துவமான படங்களை தருகின்ற இயக்குனர்கள் சிலர் . வெகுஜன ரசனை + கலை அம்சம்  என இரு வெற்றிக்குதிரைகளில் ஒரே சமயத்தில் பவனி வருபவர்கள் அரிதிலும் அரிதாக வெகு சிலரே! அப்படி ஒரு அபூர்வமான இயக்குனர்தான் மாரி  செல்வராஜ் 


 பரியேறும் பெருமாள் (2018) ஒரு மிகப்பெரும் அதிர்வை  தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது . கர்ணன் (2021) , மாமன்னன் (2023) ஆகிய அடுத்தடுத்த அவரது படங்கள் அவரை வெற்றிப்பட இயக்குனராக தக்கவைத்தன. இப்போது வெளியாகி இருக்கும் வாழை  அவரது முந்தைய  மூன்று படங்களை விட தரத்தில் , கவித்துவத்தில் ஒரு படி மேலே உயர்ந்து நிற்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  எட்டாம் வகுப்புப்படிக்கும் ஒரு பள்ளி மாணவன் .அம்மா,அக்கா என அவனது குடும்பம் மிக சிறியது . வாழை தோப்பில்  அறுவடை நடக்கும்போது அவற்றை சுமந்து லாரியில் ஏற்றும் கூலித்தொழிலாளிகள் அவர்கள் பள்ளி  விடுமுறை நாட்களான சனி , ஞாயிறு , மற்றும் பரீட்சை முடிந்த  விடுமுறை நாட்களில் நாயகனும் அதே கூலித்தொழிலை செய்து வருவதுண்டு . அம்மாவின் வற்புறுத்தலுக்கு இணங்க வேண்டா வெறுப்பாகத்தான் அந்த வேலையை செய்கிறான் . அவனுக்கு பள்ளி செல்வதில் தான் இஷ்டம் .காரணம் அவன் வகுப்பில் படிப்பில் முதல் ,மாணவன் . அதை விட முக்கியக்காரணம்  நாயகனுக்கு பள்ளி டீச்சர் ஒருவர் மேல் இனம் புரியாத கிரஷ் 


வாழைத்தார் சுமந்து வர ஒரு தாருக்கு  ரூ 1 தான் கூலி .அது மிகக்குறைவு எனவும் இரு மடங்காக அதாவது ஒருதாருக்கு  ரூ 2 சுமை கூலி  வேண்டும் என போராட்டம்   நடத்துகிறார்கள்  அதில்  வெற்றியும் பெறுகிறார்கள் . இந்தப்போராட்டத்துக்கு  தலைமை தாங்கிய  கம்யூனிச சித்தாந்த இளைஞனுக்கும் , நாயகனின் அக்காவுக்கும் ஒரு காதல் . நாயகனுக்கும் , டீச்சர் மேல் இனம் புரியாத அன்பு 

படத்தின் முதல் பாதி முழுக்க கமர்ஷியலாக , ஜனரஞ்சகமாக  பயணிக்கிறது . கடைசி 20 நிமிடங்கள் மட்டும்  உருக்கம் . உண்மையில் நடந்த சம்பவம் அது 

நாயகன் ஆக  13 வயது சிறுவனாக  பொன்வேல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் . அல்லது  அவரை  இயக்குனர் பிரமாதமாக வேலை வாங்கி இருக்கிறார் 

நாயகனின் அக்காவாக திவ்யா துரைசாமி  கச்சிதமாக நடித்திருக்கிறார் . காதலனுடன் ஒரு வார்த்தை கூட பேசாத , விழிகளால் மட்டுமே சந்தித்துக்கொள்ளும் கண்ணியக்காதல்  வெளிப்படுத்திய விதம் அழகு . அவரது காதலன் ஆக கலையரசன் கச்சிதம் . பாந்தமாந நடிப்பு 


 நாயகன் மையல் கொள்ளும் பூங்கொடி டீச்சர் ஆக நிகிலா விமல்  அட்டகாசமான நடிப்பு , அடக்கமான அழகு . நாயகனின்  அம்மாவாக ஜானகி உணர்ச்சிப்பிழம்பாக நடித்திருக்கிறார் . புரோக்கர் ஆக வரும் பத்மன் , வியாபாரியாக வரும்  சதிஷ் குமார் ஆகிய இருவரும் வில்லன் ரோலை சரியாகக்கையாண்டிருக்கிறார்கள் 


ஒளிப்பதிவு தேனீ ஈஸ்வர் . அழகான கிராமத்தை 2 மணி  நேரம் உலா வந்ததைப்போன்ற ஒரு  திருப்தி அவரது படப்பிடிபில் .சந்தோஷ் நாராயணன் இசையில்  நான்கு  பாடல்கள் .அனைத்தும் அருமை . பின்னணி இசையிலும்  முத்திரை பதித்திருக்கிறார் . சூர்யா பரந்தாமன் எடிட்டிங்கில்  2 மணி நேரம் படம் ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்

1   நாயகன் டீச்சரின் கர்ச்சீப்பை எடுத்து வைத்துக்கொண்டு அதை தன அக்காவின் கர்ச்சீப்  என சொல்வதும்  அதை நிருபிக்க  சாட்சியாய் நண்பனை துணைக்கு அழைப்பதும்  அந்த க்ளாஸ் ரூம் காட்சி கவிதை

2  நாயகன் தான் செய்த தப்புக்கு அம்மாவிடம் மன்னிப்புக்கேட்கும் உருக்கமான  காட்சியை  இண்டர்வல் பிளாக் சீன்  ஆக  வடிவமைத்த விதம்  

3  நாயகன் , நண்பன்  இருவரையும்  ரஜினி ரசிகன் , கமல் ரசிகன் என  காட்டி  தொடுக்கப்படும் வசனங்கள் 

4   டீச்சர் ஒரு டெய்லர் என்பது தெரிந்ததும் நாயகனின் நண்பன்  நாயகனின் சட்டையை பிளேடால் கிழித்து  டீச்சர் வீ ட்டுக்குப்போக ஐடியா கொடுக்கும் இடம் கலக்கல் ரகம் 

5  நாயகன்  டீச்சருக்கு மருதாணி இலைகள் தருவது , மயிலிறகு தருவது எல்லாம் கவிதை காட்சிகள் . நாஸ்டாலஜி மொமெண்ட் 

6 உண்மை சம்பவம் என சொல்லப்படும் கடைசி 20 நிமிட காட்சிகள்  உருக்கம் 


  ரசித்த  வசனங்கள் 

1    நம்ம உரிமையை  கேட்கும்போது அதை பிச்சைனு பேச எங்கே  கத்துக்கிட்டே?

2  ஏழைப்பட்டவங்ககிட்டே  மீசையை முறுக்கறதும் , கீழ்மைப்பட்டவங்க கிட்டே வரலாறு பேசுறதும்  வீரம் இல்லை .எவன் ஒருத்தன் நான் தான் ராஜா  நான் தான் மந்திரினு பேசறானோ அவனை அடிச்சு வீழ்த்துவதுதான் வீரம் 

3 ஒரு நல்ல முதலாளி நல்ல வேலைக்காரனை இழந்துடக்கூடாதில்லை? வரச்சொல்லு , பேசிக்கலாம் 

4  நான்     எல்லாம் கமல் ரசிகன் நடிப்பு சொல்லிக்கொடுக்கணுமா? எத்தனை     அவார்டு நடிப்பை அள்ளி வீசி இருக்கோம் ?

5   நம்ம ஊர்ல ரஜினி படம் தான் ஓடுது , எங்கே கமல் படம் ஓடுது ? 

6    யாரை நம்பினாலும் இந்த சாமியை மட்டும் நம்பக்கூடாது , எத்தனை முறை வேண்டி இருப்பேன் ? கண்டுக்கவே இல்லையே? 

7 நான் இல்லாத ஊருல என் மகன் வாழணும்னா அவனுக்கு உழைக்கத்தெரியனும், இல்லைன்னா  இந்த ஊரு அவனை அடிச்சு சாப்பிட்டுடும் 

8 டீச்சர் , இன்னைக்கு நீங்க ரொம்பா அழகா இருக்கீங்க 

அப்போ இதுக்கு முன்னால நான் அழகா இல்லையா? என்னடா சொல்றே? 

அதில்லை .அப்போ என் அம்மா மாதிரி இருந்தீங்க , இப்போ அக்கா மாதிரி இருக்கீங்க 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பூங்கொடி  என்ற முதல் வரியில் தொடங்கும் பாடல் கேட்கிறான் நாயகன் . அதற்கு நண்பன் கூறும் பாடலில் முதல் வார்த்தையாய் பூங்கொடி வரவில்லை . இயக்குனர் மிஸ் செய்த பாடல்   பூ மழை பொழியுது  படத்தில் வரும்  ஏய் பூங்கொடி ..பாட்டை  உபயோகித்திருக்கலாம், . ஆனால் கதை நடக்கும் கால கட்டம் பழையது என்பதால் விட்டிருக்கலாம் 

2   நம்ம   ஸ்கூலில் ரொம்ப நாட்களுக்குப்பின் ஆண்டு விழா வருதுன்னு ஒரு டயலாக் வருது , ஆண்டு விழா என்பது வருடம் ஒரு முறை தானே வரும் ?  அல்லது நீண்ட இடைவெளிக்குப்பின்  அல்லது பல ஆண்டுகளுக்குப்பின்   என்பதுதானே சரி ? 

3  நாயகனின் அம்மா  கடனை அடைக்க மாட்டை விற்கும்போது நாயகன் கதறுவதாக ஒரு சீன் . அந்த சீன்  ஆடியன்ஸின் மனதைத்தைக்க  இதற்கு முன்பே  ஒரு காட்சியில் நாயகனுக்கும், மாட்டுக்கும் ஆன பாண்டிங்  பற்றிக்காட்டி இருக்க வேண்டும் 

4  புரோக்கரிடம் வாங்கிய கடனுக்காக நாயகனின் அம்மா மாட்டை விற்பது போல் ஒரு காட்சி., அடுத்த காட்சியிலேயே  உடல் நிலை சரி இல்லாத அம்மா  தனக்குப்பதிலாக  வேலைக்குப்போக  மகனை அனுப்புகிறாள் . போக மறுக்கும் மகனிடம் அக்கா சொல்கிறாள் . அம்மா புரோக்கரிடம் வாங்கிய  கடனுக்கு ஒண்ணா  கடனை அடைக்கணும் . அல்லது அவளுக்கு மாற்றாக மகன் வேலைக்குப் போகணும் . அப்போ மாட்டை விற்ற  காசு என்ன ஆச்சு ? 


5  ஒவ்வொரு முறை வேலைக்குப்போகும்போதும்  பழைய சோறு  டிபன்  பாக்சில போடுவது போல  பல காட்சிகள்  வருது . சுடு சோறு  ஒரு டைம் கூட இல்லை , அது எதனால் . ? அவ்ளோ சோறு மிச்சம் ஆகும் அளவு முன் தினமே  வடிக்கணுமா? அடுத்த  நாள் சுடு சோறாக  வடிக்கலாமே? 

6   நாயகன் காலையில் சாப்பிடவில்லை .அம்மா காலை , மதியம்  இருவேளைகளுக்கும்  இரண்டு  தூக்கு போசி களில் அவனுக்கு சோறு கொடுத்து விடுகிறாள்  லாரியில்  ஏறிய  அவன் பிறகு போகாமல் ஸ்கூலுக்குப்போகிறான் . அப்போது அக்கா அவனிடம் அவனது இரு தூக்குப்போசிகளையும் கொடுக்க வேண்டாமா? வெறும் கையுடன் போகிறான் 

7  நாயகன்  படிப்பது மாணவர்களுக்கான பள்ளி . அதன் ஆண்டு விழாவில் ஆட சோலோ ஹீரோ சாங்க் தானே செலக்ட் பண்ணனும் ? பஞசு மி ட்டாய்  சேலை கட்டி  பாட்டு டூயட் சாங் .மேட்ச் ஆகாதே?  டீச்சர் ஆடிக்காட்டும்   டான்ஸ் ஸ்டெப்ஸ்  கூட பெண் ஆடுவது  போல தான் இருக்கு 


8 மிக வறுமையில்  வாடும்  நாயகனின் வீட்டில்  மண் பானைகள் தானே இருக்கணும் ? ஆர்ட் டைரக்டர் அல்லது புரொடக்சன் டிசைன்  கவனக்குறைவால்   புத்தம் புதிய எவர் சில்வர்  அண்டாக்கள் 3 , ஒரு எவர்சில்வர் குடம் ,  அடுக்கி வைக்கப்பட்டிருக்கு .ஒரு சீனில் நாயகனை அடிக்க அம்மா புத்தம்புதிய பிளாஸ்டிக்  குடத்தை எடுக்கிறாள் 


9 ஒரு பணக்காரன் அல்லது மிடில் கிளாஸ் ஆள் சாப்பாட்டை கோபத்தில் / துக்கத்தில் வீசலாம் , ஆனால் ஏழைக்குடும்பத்தில்   உணவு அன்ன லட்சுமி . எறிய மாட்டார்கள் .க்ளைமாக்சில் அம்மா சாப்பாட்டு தட்டத்தை  எறிவது,சோற்றை இறைப்பது  செயற்கை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -கிளீன் யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அழகி , ஆட்டோ கிராப் மாதிரி மனதில் நீண்ட நாட்களுக்கு தங்கி இருக்கும் கவிதையான படம் . க்ளைமாக்ஸ் மட்டும் பருத்தி வீரன் போல தாக்கத்தை உண்டு பண்ணும் . கனத்த மனதுடன் வெளி வர வேண்டி இருக்கும் . எதிர்பார்க்கப்படும்   ஆனந்த விகடன் மார்க் = 50 . குமுதம் = நன்று . அட்ரா சக்க ரேட்டிங்க்  4 / 5 


வாழை
Vaazhai
சுவரொட்டி
இயக்கம்மாரி செல்வராஜ்
தயாரிப்புசாஜித் சிவானந்தன்
திவ்யாமாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்
திலீப் சுப்பராயன்
கதைமாரி செல்வராஜ்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புபொன்வேல் எம்
இராகுல். ஆர்
கலையரசன்
நிகிலா விமல்
ஒளிப்பதிவுதேனி ஈஸ்வர்
படத்தொகுப்புசூரியா பிராத்தமன்
கலையகம்ஹாட் ஸ்டார்
நவ்வி புகைப்பட நிறுவனம்
திலீப் சுப்பராயன்
விநியோகம்ரெட் ஜெயன்ட் மூவீசு
வெளியீடு23 ஆகத்து 2024
நாடுஇந்தியா
மொழிதமிழ்