Showing posts with label வளர்ப்பு முறை. Show all posts
Showing posts with label வளர்ப்பு முறை. Show all posts

Monday, October 12, 2015

பதின் பருவம் புதிர் பருவமா? 3 - பெற்றோர் சிறந்த முன்மாதிரியா?

‘போதும்டி... ரொம்ப சீவி சிங்காரிக்காதே’ என்று கரித்துக்கொட்டும் அம்மாவைவிட, ‘ஆஹா... இன்னிக்கு எத்தனை பசங்க உங்கிட்ட புரபோஸ் பண்ணப் போறாங்களோ, தெரியலையே!’ என்று ஜாலியாக கமெண்ட் அடிக்கும் அம்மாக்களைத்தான், இன்றைய இளம்பெண்கள் பலருக்குப் பிடிக்கிறது.
‘சோம்பேறி... 8 மணிக்குத்தான் படுக்கையைவிட்டு எந்திரிக்கிறான்’ என்று திட்டும் அப்பாவைவிட, ‘என்னடா... ‘ஹேங் ஓவரா, எல்லாமே அளவா இருந்தாத்தான்டா நல்லது...’ என்று கேட்டுக்கொண்டே குளிப்பதற்கு டவல் எடுத்துத் தரும் அப்பாக்களை மகன்கள், அப்படிக் கொண்டாடுவார்கள்.
தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால் தோழன் என்று சொல்வார்கள், அதுதான் இந்தக் காலத்தின் தேவை.
வெளிப்படைத்தன்மை
எதிர்பாலினத்தவரின் ஏதோ ஒரு அம்சம் நம்மைப் பிடித்து இழுக்கிறது என்ற ஆர்வம் நம் வாரிசுகளிடம் இருப்பது இயற்கை. ஆனால், அந்த ஆர்வம் எல்லை மீறும்போது, பல விபரீதங்கள் நடந்தேறுகின்றன. வாரிசுகளின் ஆண், பெண் நட்பு வட்டங்கள், பெற்றோருக்குத் தெரிந்து வெளிப்படையாக இருப்பதே எப்போதும் நல்லது.
பெற்றோரும் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதில் தவறில்லை. அதேநேரம், வயதுக்கு ஒவ்வாத விஷயங்களில் வாரிசுகள் ஈடுபடும்போது கண்டிப்பு காட்ட யோசிக்கக் கூடாது.
ரோல் மாடல் யார்?
இயல்பாக, குழந்தைப் பருவத்தில் உள்வாங்கிக்கொள்ளப்படும் விஷயங்களையே விடலைப்பருவத்தில் பரீட்சித்துப் பார்க்கும் எண்ணம் தோன்றும். பெற்றோர் சொல்லிக்கொடுக்கும் விஷயங்களைவிட, அவர்கள் நடந்துகொள்ளும் முறைதான் குழந்தைகளின் கவனத்தை அதிகம் ஈர்க்கும். இதைத்தான் ஆல்பர்ட் பண்டூரா என்ற உளவியல் நிபுணர் ‘சமூகத்திடம் இருந்து கற்றல்’ என்ற பிரபலமான கொள்கையின் மூலம் நிரூபித்தார்.
வளரும் பருவத்தில் குழந்தைகள் அதிகமாகக் கடந்துவரும் நபர்களைத்தான், பெரும்பாலும் முன்மாதிரிகளாக பின்பற்றுவார்கள். அந்த ரோல் மாடல்கள் பெற்றோர், ஆசிரியர், தலைவர்கள், ஏன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோவாகக்கூட இருக்கலாம். தெரிந்தவர்களின் ஒவ்வொரு அசைவும் வளரிளம் பருவத்தினரின் குணநல வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும்.
ஆசிரியர்களின் பங்கு
பெற்றோருக்கு அடுத்தபடியாக இளம்வயதினர் அதிக நேரம் செலவழிப்பது பள்ளியில்தான். அங்கு ஆசிரியர்களும் நண்பர்களும்தான் அவர்கள் அதிகம் பழகும் நபர்கள். பல நேரங்களில் தங்கள் மனதுக்குப் பிடித்த ஆசிரியர்களுடன், தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள மாணவர்கள் விரும்புவார்கள் அல்லது ஒரு முன்மாதிரியாகவும் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். இது ஆசிரியர் - மாணவர் உறவைப் பலப்படுத்துவதுடன், மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்கும், கல்வியிலும் நல்ல மேம்பாட்டைக் கொண்டுவரும். முரட்டு குணம் கொண்ட ஒரு மாணவனைக்கூட, தன் ஆரோக்கியமான அணுகுமுறையால் ஓர் ஆசிரியர் நல்வழிப்படுத்த முடியும்.
ஏன் பள்ளி பிடிக்கவில்லை?
ஆனால், இன்றைக்குப் பல பள்ளிகளில் ‘தட்டிக் கொடுக்கும்’ ஆசிரியர்களைவிட, முட்டி போடச் சொல்கிற ஆசிரியர்கள்தான் துரதிர்ஷ்டவசமாக இருக்கின்றனர். இதுபோன்ற ஆசிரியர்களின் அணுகுமுறையால், சில வேளைகளில் விடலைப்பருவத்தினர் ஆசிரியர்களை எதிரி மனப்பான்மையோடு பார்க்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் மாணவரின் தனிப்பட்ட நடத்தை மற்றும் கல்வி ஆகிய இரண்டும் கடுமையாக பாதிக்கப்படலாம். ஒரு சிலர் ஆசிரியரை எதிர்ப்பது, அவரைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவது போன்ற எதிர்மறையான வழிகளில், தங்கள் எதிர்ப்பைக் காண்பிப்பது உண்டு. செல்போன் பயன்பாட்டுக்கு முந்தைய காலகட்டங்களில் கழிப்பறை சுவர்களிலும், வகுப்பு பெஞ்சுகளிலும் ஆசிரியரைத் தரக்குறைவாக எழுதுவது வாடிக்கை. ஆனால், இப்போது ஒருபடி மேல் சென்று சமூக வலைதளங்களில் மறைமுகத் தாக்குதல் தொடுக்கும் சம்பவங்களும் பெருகிவருகின்றன!
மறைமுக எதிர்ப்பு
குறிப்பிட்ட ஆசிரியரின் வகுப்பைப் புறக்கணிப்பது, அந்த பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுப்பது என்பது போன்ற மறைமுகமான வழிகளில் சில மாணவர்கள் தங்கள் மனதில் உள்ள எதிர்ப்பை காண்பிப்பதும் உண்டு.
சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நெருங்கிய நேரத்தில், ‘பள்ளிக்குப் போக மாட்டேன்' என்று அடம்பிடித்த ஒரு மாணவனை, சிகிச்சைக்காக என்னிடம் அழைத்து வந்தார்கள். அவனிடம் பேசிப் பார்த்தபோது, எதைப் பற்றியும் அவன் அலட்டிக்கொண்டதாகவே தெரியவில்லை.
அவனிடம் விசாரித்தபோது “டாக்டர், என் பார்வை, பாடி லாங்குவேஜ் எப்பவுமே இப்படித்தான் இருக்கும். அதனால் வகுப்பில் நடக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் நான்தான் காரணம் என்று ஆசிரியர்கள் எப்போதும் என்னையே குறிவைக்கிறார்கள்” என்றான்.
உச்சகட்டமாக, விசாரணைக்காக தலைமை ஆசிரியரிடம் அவன் அழைத்துச் செல்லப்பட்டபோது ‘சார், கவனமாக இருந்துகொள்ளுங்கள். கத்தியை எடுத்துக் குத்தினாலும் குத்திவிடுவான்’ என்று ஆசிரியர் ஒருவர், தலைமை ஆசிரியரை எச்சரித்திருக்கிறார். அந்த ஒரு வார்த்தை ஏற்படுத்திய பாதிப்புதான், பொதுத்தேர்வு எழுத வேண்டாம் என்று நினைக்கும் அளவுக்கு அவன் பள்ளியை புறக்கணிக்கக் காரணமானது.
புளிக்கும் பாடங்கள்
இது போன்ற ஆரோக்கியமற்ற பள்ளிச் சூழல், படிப்பையே நிறுத்தும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், அது மட்டுமே பள்ளியை புறக்கணிப்பதற்கு காரணம் அல்ல. வீட்டில் பெற்றோரிடையே ஏற்படும் சண்டைகள், அப்பாவின் குடிப்பழக்கம், அளவுக்கு மீறிய கண்டிப்பு அல்லது செல்லம் என்பது போன்று குடும்பம் சம்பந்தப்பட்ட மற்ற காரணங்களும் இருக்கலாம். இந்த இரண்டுமே இல்லாவிட்டால் பாடங்களைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல்கள், தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்பைத் திணிப்பது, கற்றல்திறன் குறைபாடு போன்றவையும் பள்ளியைப் புறக்கணிப்பதற்கான காரணங்களாக இருக்கலாம்.
(அடுத்த வாரம்: கற்றல்திறன் குறைபாடா? பாலியல் தொந்தரவா?)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் 

உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர், 
தொடர்புக்கு: [email protected]


ன் றி-தஹிந்து