கணவருக்கு வேலை இல்லாத விரக்தியில் இருந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். அதே வேளையில் அவரது கணவர் குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலைக்கு தேர்வாகியிருந்த துயரச் சம்பவம் திருப்பூர் அருகே நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (23). என்ஜீனியரான இவரும் வெள்ளியங்காட்டை சேர்ந்த கீர்த்திகா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 9 மாதங்களுக்கு முன் இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்தது.
நிரந்தர வேலை கிடைக்காத நிலையில், காதலித்து தன்னை நம்பி வந்த மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த சரவணக்குமார், கிடைத்த வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தார்.
சரவணக்குமார் என்ஜீனியரிங் படிக்க கடன் வாங்கியிருந்தார். அந்த கடனும் இருந்த நிலையில், திருமணத்திற்காகவும் கடன் வாங்கியிருந்தாராம். கிடைத்த வருமானமும் கடன் கட்டவே சரியாக இருந்துள்ளது. இதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட, கீர்த்திகா கோபித்துக் கொண்டு திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.பின்னர் பெற்றோரின் சமாதானத்திற்கு பிறகு மீண்டும் கீர்த்திகா தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையே சரவணக்குமார் அரசு வேலையில் சேர முயற்சி எடுத்து வந்தார். இதற்காக தமிழக அரசின் போட்டித்தேர்வுகளை எழுதி வந்தார். சமீபத்தில் அவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை எழுதியிருந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி சரவணக்குமார் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கீர்த்திகா மட்டும் இருந்துள்ளார். அப்போது சரவணக்குமாருக்கு அவருடைய நண்பர்கள் போன் செய்து டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் அவர் வெற்றி பெற்ற சந்தோஷமான செய்தியை கூறி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வேலை கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்த சரவணக்குமார், தான் தேர்வில் வெற்றி பெற்ற தகவலை வீட்டுக்கு சென்று தனது மனைவியிடம் கூறவேண்டும் என்ற ஆவலுடன் இருந்தார். அதே வேளையில், சரவணக்குமாருக்கு வேலை கிடைத்த தகவல் தெரியாமலேயே வீட்டில் இருந்த கீர்த்திகா கணவருக்கு நல்ல வேலை இல்லையே என்ற ஏக்கத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலை கிடைத்த இனிப்பான செய்தியை தொடர்ந்து மனைவி இறந்த துக்க செய்தியும் சரவணக்குமாருக்கு அடுத்தடுத்த கிடைக்க அதிர்ச்சியிலும் வேதனையிலும் அவர் உறைந்து போய்விட்டார். மனைவியின் உயிரற்ற சடலத்தை பார்த்து, வேலை இல்லாமல் இருந்த போது உடன் இருந்தாய்... இப்போ வேலை கிடைச்சுருக்கு... அதை காண நீ உயிரோடு இல்லையே என்று கதறி அழுதது காண்போரை கண் கலங்க வைத்தது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தாராபுரம் போலீஸார் சென்று கீர்த்திகாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் கீர்த்திகா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினார்கள்.
அந்த கடிதத்தில் அன்புள்ள மாமாவுக்கு, நீங்கள் இன்னும் அதிகம் படிக்க வேண்டும். நல்ல வேலையில் சேர்ந்து நிறைய சம்பாதிக்க வேண்டும். என்னால் உங்களுக்கு எந்த விதத்திலும் பயன் இல்லை. இனியும் நான் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என்று தனது கணவருக்கு மிகவும் மன வருத்தத்துடன் உருக்கமாக எழுதியிருந்தார்.
நன்றி - விகடன்