தொடர்ச்சியாக தான் தயாரிக்கும் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படாததைக் கண்டித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் 'ரெட் ஜெயன்ட்' நிறுவன தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.
'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'நீர்ப்பறவை' ஆகிய படங்களுக்கு வரிவிலக்கு வழங்காததால், நீதிமன்றத்திற்கு சென்று, பிறகு வரிவிலக்கு வாங்கினார்கள். அதைப் போலவே தற்போது 'வணக்கம் சென்னை' படத்திற்கும் வரிவிலக்கு அளிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள்.
வழக்குத் தொடர்ந்தது மட்டுமன்றி, தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்திருக்கிறார். அவர் அளித்துள்ள புகாரில் தெரிவித்திருப்பது :
“'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'நீர்ப்பறவை' போன்ற மக்களின் வரவேற்பைப் பெற்ற எங்களின் படங்களுக்கு வரிவிலக்கை நிராகரித்த இந்தக் குழுவினர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் 'வணக்கம் சென்னை' திரைப்படத்துக்கும் வரிவிலக்கு நிராகரிப்புச் செய்து பரிந்துரை செய்துள்ளனர்.
குறிப்பாக திரைப்படப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி இம்மூன்று படங்களையுமே பார்வையிட்ட குழுக்களில் இடம் பெற்றுள்ளார்.
எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகை ராஜஸ்ரீ, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், மக்கள் குரல் பத்திரிகை நிருபர் திரு.ராம்ஜி போன்றோர் வரிவிலக்கு நிராகரிப்படும் படங்களைப் பார்க்கும் குழுக்களில் தவறாமல் இடம் பெறுகின்றனர். இவர்கள் சுயேட்சையாக தங்கள் முடிவுகளை அறிவிக்காமல், அரசு அதிகாரிகளால் இடப்படும் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்தே தங்கள் முடிவுகளை எழுதி வருகின்றனர்.
திரைப்படத்தை பார்வையிட வரும் குழு உறுப்பினர்கள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலரைத் தங்களுடன் திரையரங்குகள் அழைத்துச்சென்று திரைப்படத்தைப் பார்வையிடுவது வாடிக்கையாக உள்ளது. இவர்கள் முன் கூட்டியே திட்டமிட்டபடி பரிந்துரைக் கடிதங்களை குழு உறுப்பினர்களிடமிருந்து எழுதி வாங்குவதற்கும், வணிக வரி இணை ஆணையருக்கு உதவுவதற்குமே வருவதாக தெரிகிறது.
'வணக்கம் சென்னை' வரி விலக்குக் குழுவிற்காகத் திரையிடப்பட்டபோது பழனி என்ற வணிக வரித்துறை இணை ஆணையாளர் அலுவல் சார்ந்த உறுப்பினராகக் குழுவில் இடம் பிடித்திருந்தார். குழுவின் இன்னொரு உறுப்பினரான பின்னணிப் பாடகர் டி.எல்.மகாராஜன் சந்தேகத்துக்குரிய ஒரு நபரை உடன் அழைத்து வந்த போது பழனி மறுப்பேதும் கூறாமல் அந்த நபரை தங்களுடன் திரைப்படத்தைப் பார்வையிட அனுமதித்தார்.
அதேபோல மற்றொரு உறுப்பினரான எம்.என் ராஜம் தனது கணவர் ஏ.எல்.ராகவனை உடன் அழைத்து வந்தபோதும் பழனி அவர்கள் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. நீதிபதியாக படம் பார்க்க வருபவர் தன்னுடன் உறவினர்களை அழைத்து வருவது சட்ட விரோதமான செயல். இதை பொறுப்பு அதிகாரியான வணிக வரித்துறை இணை ஆணையாளர் கண்டும் காணாமல் இருந்தது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிப்பதாக உள்ளது.
படம் பார்த்த ஆறு பேரில், ஐந்து பேர் நிராகரித்து எழுதிவிட்ட நிலையில், வரிவிலக்கு இந்தப் படத்துக்கு இல்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையிலும், பிடிவாதமாக படம் பார்த்த அனைவருமே நிராகரிக்க வேண்டும் என்ற கொள்கையில் அரசு அதிகாரிகள் பிடிவாதமாக இருப்பது, எந்த அளவிற்கு அவர்கள் எங்கள் நிறுவனத்தின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் உள்ளவர்கள் என்பதையே காட்டுகிறது.
இவ்வாறு தொடர்ந்து எங்களது படங்களுக்கு மட்டும் நியாயமற்ற முறையில் கேளிக்கை வரிவிலக்கு நிராகரிக்கப்படுவதால் எங்களை நம்பி திரைப்படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுவதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களுக்கு நியாயம் கிடைக்க உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்
. ஊழல் செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ள இந்த அரசாணையை ரத்து செய்ய விரைவில் நடவடிக்கை எடுத்து அனைத்து தயாரிப்பாளர்களின் நலனையும் காத்திட வேண்டும் எனவும் வேண்டிக்கொள்கிறோம்” என்று அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், அப்புகாரில் என்னென்ன முறைகெடுகள் வரிவிலக்கில் நடைபெற்றன என்பதையும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
thanx - the hindu