V
நான் ஏன் சம்மந்தமே இல்லாமல் பலியாக்கப்பட்டேன் என்பது குறித்த விளக்கம் வேண்டும் என்று 'தர்மதுரை' படக்குழுவுக்கு 'வசந்தகுமாரன்' இயக்குநர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'தர்மதுரை' படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. சுகுமார் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தை ஸ்டூடியோ 9 சுரேஷ் தயாரித்திருக்கிறார்.
ஸ்டூடியோ 9 சுரேஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவர் கூட்டணியில் புதுமுக இயக்குநர் ஆனந்த் குமரேசன் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட படம் 'வசந்தகுமாரன்'. விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் படம் நிறுத்தப்பட்டது. தற்போது இருவரும் இணைந்து மீண்டும் 'தர்மதுரை' படத்தை துவங்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில், 'வசந்தகுமாரன்' படத்தின் இயக்குநரான ஆனந்த் குமரேசன், 'தர்மதுரை' படக்குழுவுக்கு கேள்விகள் எழுப்பி இருக்கிறார்.
இது குறித்து அவரது பேஸ்புக் பக்கத்தில், "”வசந்தகுமாரன்” திரைப்படத்தை எழுதி இயக்குவதற்காக கடந்த டிசம்பர் 2012-ல் நான் ஒப்பந்தமாகினேன். பணிகளும் நடந்தன. பிரச்சினைகள் பேச்சுவார்த்தைகள் என்று வருடங்கள் நகர்ந்தன. தற்போது அத்திரைப்படம் கைவிடப்பட்டதாக ஊடகங்களின் மூலம் அறிகிறேன்.
”வசந்தகுமாரன்” திரைப்படத்திற்குப் பதிலாக ”தர்மதுரை” என்கிற திரைப்படம் இன்று (டிசம்பர் 14 – 2015) படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக மீண்டும் ஊடகங்களின் மூலமே அறிகிறேன்.
பல்வேறு குழப்பங்களுக்கு ஆட்பட்டு, இதை நான் பதிவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளேன்…
1. வசந்தகுமாரன் திரைப்படம் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் கதாநாயகருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சினை என்றே அறியப்படுகிறது. அது என்ன பிரச்சினை?
2. அந்த பிரச்சினை எப்படி முடிவுக்கு வந்தது?
3. பிரச்சினை முடிவுக்கு வந்திருந்தால், சம்மந்தப்பட்ட படம்தானே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக ஏன் ”வசந்தகுமாரன்” கைவிடப்பட்டது?
4. அதற்குப் பதிலாக தர்மதுரை என்கிற திரைப்படம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது?
5. இவை எதுவுமே தொழில் அடிப்படையிலோ அல்லது குறைந்தபட்சம் மனிதாபிமான அடிப்படையிலோ கூட தயாரிப்பாளரோ அல்லது கதாநாயகரோ, தகவலாகவோ அல்லது என்னை அழைத்து நேரிலோ ஏன் என்னிடம் இதுவரை தெரிவிக்கவில்லை.?
நான் பலமுறைத் தொடர்புகொள்ள முயற்சித்தபொழுதும் அவர்களிடம் சரியான பதில்கள் கிடைக்கவில்லை. பதில்களே இல்லை என்பதுதான் உண்மை.
இப்பொழுது என்னுடைய எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான்.
மூன்று வருடங்களாகக் காத்திருந்த எனக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. சுமார் பன்னிரெண்டு வருட சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
ஒரு திரைப்படம் கைவிடப்பட்டு அதற்குப்பதிலாக இன்னொரு திரைப்படம் நடக்கும்பொழுது அது ஏன் என்று விளக்கமளித்து துறை சார்ந்தவர்களுக்கும், ஊடகங்களுக்கும் ”அறிவிக்க” வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் எனக்காவது விளக்கமளிக்கவேண்டியது தார்மீக அடிப்படையில் உங்களது கடமை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நான் உங்களிடம் படமோ, பணமோ அல்லது பரிதாபமோ வேண்டி நிற்கவில்லை. தயாரிப்பாளருக்கும் கதாநாயகருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையில், ஒரு முதல் பட இயக்குனராகிய நான் ஏன் சம்மந்தமே இல்லாமல் பலியாக்கப்பட்டேன் என்பது குறித்த ஒரு முறையான விளக்கம் மட்டுமே" என்று தெரிவித்திருக்கிறார்.
தஹிந்து