புதிய தலைமுறை பத்திரிக்கையின் முக்கிய நிருபரும் லக்கி லுக் என அழைக்கப்படும் பிரபல வலைப்பதிவாளருமான யுவகிருஷ்ணா ஆனந்த விகடனில் பிப் 14 காதலர் சிறப்பிதழில் நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார், அவருக்கு வாழ்த்துகள் .
நாதாவுக்கும் டைவாவுக்கும் லவ்வோ லவ்வு!
லக்கி லுக்
ஓவியங்கள்: ஹரன்
சில காலமாக
இதுதான்
என் இதயத்தின் ஒலி!
சண்டாளி
தயவுசெய்து என்னை
சாகடிச்சிட்டுப் போடி!
இப்போதெல்லாம் இதுபோல ஏதாவது காமாசோமாவென்று கவிதை என்கிற பெயரில்
எதையாவது கிறுக்கிவிட்டு, இமெயிலோ, எஸ்.எம்.எஸ்.ஸிலோ நம் டைவாவுக்கு
(டாவடிக்கும் ஃபிகர்) அனுப்பிவிட்டால் போதும். காதலை இதயம் கிழித்து
வெளிப்படுத்திவிட்ட திருப்தி கிடைத்துவிடும்.
நெஞ்சில் மாஞ்சா சோறு இல்லாத,
கொஞ்சம் 'தில்’ குறைந்த காதலன்கள் இந்த மாதிரி எழுதப்படும் கவிதை
கந்தாயத்தை ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸாகப் போட்டுவிட்டு, 'அவளுக்கு’ மட்டும்
டேக் செய்வார்கள். 'லைக்’ விழுந்தால் லக்கு. இல்லையேல் வேற ஃபிகருக்கு
ரூட்டு. ஒரு குறிப்பிட்ட ஃபிகருக்கு டேக் செய்து, அது செட் ஆகாமல்,
பட்டர்ஃப்ளை எஃபெக்ட் போல உலகின் ஏதோ ஒரு மூலையில் வாழும் ஃபிகர் அந்தக்
கவிதையை வாசித்து, கவரப்பட்டு கரெக்ட் ஆவதும் உண்டு. அவ்வப்போது
'ஜப்பானியப் பெண் மதுரை வாலிபரை இந்து முறைப்படி தாலி கட்டி மணந்தார்’
என்று வரும் செய்திகளின் பின்னணி என்னவாக இருக்கும்?
அதே சமயம் ஃபிகர்களும் காதலைக் கொஞ்சம் ஜாலியாகவே, பார்ட் டைம்
டைம்பாஸாகவே எடுத்துக்கொள்கிறார்கள். உலகத்தில் இருக்கும் எல்லா ஆண்களுமே
அவர்களுக்கு 'சப்பை’தான்! (நன்றி: ஆரண்ய காண்டம்). அநேகமாக டாஸ் போட்டுப்
பார்த்து இவனைக் காதலிக்கலாமா, வேண்டாமா என்று முடிவுசெய்கிறார்கள்.
இதனால்தான் எங்கு பார்த்தாலும் காதலர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
பா.ம.க. மருத்துவருக்கு பி.பி. எகிறுகிறது.
லவ் செட் ஆகிவிட்டால், காதலனின் கிரெடிட் கார்டு பேலன்ஸ் இஷ்டத்
துக்கும் எகிறிவிடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா என்ன? நமக்குத் தெரிந்த
நண்பர் ஒருவர் பெர்சனல் லோன் போட்டுக் காதலிக்கிறார். 'பெட்ரோல்
விலையேற்றம் நள்ளிரவு முதல் அமல்’னு ஸ்க்ரோலிங் ஓடத் துவங்கியதும், பறந்து
சென்று பெட்ரோல் பங்க்கில் லைன் பிடிப்பவர்களில் முக்கால்வாசிப் பேர்
காதலர்கள் அல்லாமல் வேறு யாராம்?
பைக்குக்கு பெட்ரோல் போட்டே திவாலான
காதலர்களை நீங்களும் பார்த்துஇருக்கலாம். ஏதாவது டிராஃபிக் சிக்னலில்
'ங்ங்ஙே...’ என்று சீத்தலைச் சாத்தனார் மாதிரி தலையில் கையால்
குத்திக்கொண்டு திரிபவர்கள் அந்த கேட்டகிரி ஆட்கள்தான். இந்த அமரக்
காதலன்களுக்குக் காதலிகள் தரக்கூடிய நஷ்டஈடு என்னவென்றால், அதிகபட்சம் ஒரு
லிப் டு லிப்.
உலகமயமாக்கலால் நமக்கு எது நடந்ததோ இல்லையோ, காதல் இத்தனை
சுலபமாகிவிட்டது. பெட்டிக் கடையில் கமர்கட் வாங்குவது எத்தனை சுலபமோ, இன்று
காதலிப்பதும் அத்தனை சுலபம். என்ன... கமர்கட் 50 பைசா; காதல் கொஞ்சம்
காஸ்ட்லி.
ஆனால், இதே முந்தைய தலைமுறை யைச் சேர்ந்த நம் சித்தப்பன்களும்
மாமாக்களும் காதலிக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் தெரியுமா? கொஞ்சம்
யோசித்துப் பாருங்கள். செல்போன் இல்லை. இமெயில் இல்லை. வீட்டுக்குக்
கடிதமும் போட முடியாது. வெள்ளைத் தாளில், நீட்டாக மார்ஜின் விட்டு,
பால்பாயின்ட் பேனா வால் குண்டு குண்டான கையெழுத்தில் ஒரு கவிதையை
எழுதிவைத்துக்கொண்டு 'தேவதை’ வரும் வரை பேருந்து நிறுத்தத்திலோ,
தெருமுக்கிலோ வியர்க்க விறுவிறுக்கத் தேவுடு காத்துவந்தார்கள். கொஞ்சம்
பெர்சனாலிட்டி குறைந்தவர்கள் செருப்படிகூட வாங்கியிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட சூழல் காரணமாகவோ என்னவோ, 'காதல் பூ மாதிரி... காதலி கனி
மாதிரி’ என்று மொக்கை வசனம் இடம்பெற்ற திரைப்படங்கள் வெள்ளி விழா
கொண்டாடின. 'பூவே உனக்காக’, 'லவ் டுடே’ மாதிரியான படங்களில் ஹீரோ இது
மாதிரி முழம் முழமாக சரம் கட்டிப் பேசியதாலேயே க்ளைமாக்ஸில் அவருக்கு லவ்
ஃபெய்லியர் ஏற்பட்டது என்பதை நாம் எக்காலத்திலும் மறந்துவிடக் கூடாது.
அதற்கு முந்தைய தலைமுறைக் காதலன்கள் பெரும்பாலும் ஏதேனும் அலுவலகத்தில்
குமாஸ்தா வேலை பார்த்தார்கள். அல்லது மார்க்கெட்டிங்
எக்ஸிக்யூட்டிவ்களாகவோ, மெடிக் கல் ரெப்களாகவோ நாய் படாதபாடுபட்டார்கள்.
கிடைக் கும் சொற்ப வருமானத்தையும் காதலுக்கு மடை திறந்து விட்டுவிடுவதால்,
மாசக் கடைசியில் பெரும்பாலான காதல் உடைந்துவிடும். 'ஹீரோ’ என்பதால் தேவையே
இல்லாமல் உடன் நாலு நண்பர்களையும் எப்போதும் வைத்திருக்க வேண்டும். அந்தத்
தடிமாடுகளுக்கு தம், டீ செலவையும் ஹீரோவான காதலனே அழுதாக வேண்டும்.
அந்தக் கூடுதல் செலவினங்களைத் தவிர்க்கவே லாட்டரி டிக்கெட், மங்காத்தா,
வீட்டில் திருட்டு என்று சட்டத்துக்குப் புறம்பான முயற்சிகளில் இறங்கி
செலவை பேலன்ஸ் செய்து வந்தார்கள். இத்தனைக்கும் அந்தக் காலத்தில் காதலிகள்
வைக்கும் செலவு மிஞ்சிப்போனால்... ஒரு மேட்னி ஷோ சினிமா. தலையில் வைக்க
ஒன்றரை முழம் மல்லிகைப் பூ. ஹோட்டலில் ஒரு செட் போண்டாவும் காபியும்.
அவ்வளவு தான்!
அதற்கு முந்தைய ஜெனரேஷன் ஒரு அழுமூஞ்சி ஜெனரேஷன். 'ஒருதலை ராகம்’,
'மைதிலி என்னைக் காதலி’ மாதிரி படங்கள் வந்த தலைமுறை. காதல் ஓ.கே. ஆகாதவர்
கள் தாடிவைத்து கோமாளிகளாக அலைந்தார்கள். வைரமுத்துவின் பாடல்கள் சூப்பர்
ஹிட் ஆன காலம் என்பதால், ஒருதலைக் காதலர்கள் சந்தநயத்தோடு கவிதை எழுத
வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி னர். பெருவாரியான தமிழ்ப் பெண் கள்
முதன்முதலாக பத்தாவதுக்கு மேல் படிக்க வீட்டு வாசல்படியைத் தாண்டிய தலைமுறை
இது. பழமையும் நவீனமும், ஃபிப்டி ஃபிப்டியாக வாய்த்த பெண்கள் என்பதால்,
அவ்வளவு சுலபமாகக் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஜன்னலைத்
திறந்துவைத்துப் படபடவென்று கண் இமைப்பார்கள். மொழுமொழுவென்று தேங்காய்
எண்ணெய் தடவி, கவனமாக பின்னல் இட்ட இரட்டைச் சடையை ஸ்டைலாக ஆட்டுவார்கள்.
இதெல்லாம் காதலை ஏற்றுக்கொண்டதற்கான சிக்னல் என்று நினைத்து, நம் காதலர்கள்
குஷியாக கனவில் டூயட் பாடுவார்கள். தங்களைக் காதலித்ததாக நினைத்த
பெண்ணுக்கு அவள் தாய்மாமனோடு கல்யாணம் எனும்போது, 'நான் ஒரு ராசியில்லா
ராஜா’ என்று தனியே முக்கு ரோட்டிலும், பீச்சிலும் பாட்டுப் பாடி
நடந்தார்கள். அடுத்த, 'கண்டதும் காதல்’ தோன்றும் வரை ஷேவிங் செய்யாமல் காசை
மிச்சப்படுத்துவார்கள். அவ்வாறு சேர்ந்த காசுதான் புது காதலுக்கு முதலீடு.
அதற்கு முந்தைய தலைமுறைக் காதல் ஜெமினி கணேசன் காலத்துக் காதல்.
புதுக்கவிதை அறிமுகம் ஆகாத காலகட்டத்துக் காதல் என்பதால், காதலர்கள் மரபுக்
கவிதைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெண்கள் வெளியே தலைகாட்டுவதே
அதிசய நிகழ்வாக இருந்த காலம். கவிதை எழுதுவதும் கஷ்டம். பெண்ணைப்
பார்ப்பதும் கஷ்டம்.
எனவே, கண்ணில் படும் முதல் பெண்ணையே காதலித்துவிடுவது
என்று அந்தக் காலத்துக் காளையர்கள் சபதம் செய்துஇருந்தார்கள். காதலியோடு
பேசும்போதும்கூட எதுகைமோனையில் பத்து, இருபது நிமிடங்களுக்கு நான்ஸ்டாப்பாக
வசனம் பேசியாக வேண்டும். 'அப்பப்பா... என் மீது உங்களுக்கு இவ்வளவு
காதலா?’ என்று காதலி பதிலுக்கு ஒரே வாக்கியத்தில் கொஞ்சிவிட்டுப்
போய்விடுவாள். நாம் கேள்விப்பட்டவரை, அந்தக் காலத்தில் ஒரு காதலர் பக்காவாக
வசனம் ரெடி செய்துகொண்டு, மெரினா பீச்சில் தன் காதலியிடம் நீண்ட காதல்மொழி
பேசிக்கொண்டு இருந்தாராம்.
அவரது டயலாக் முடிவதற்குள்ளாகவே காதலிக்கு வேறு
ஒருவரோடு திருமணம் முடிந்து, குழந்தையும் பிறந்துவிட்டதாம். காதலன்
என்பவன் எம்.ஜி.ஆர். மாதிரி வீரமாகச் சண்டை போட வேண்டும் என்று காதலிகள்
எதிர்பார்த்தனர். இந்த ஒரு நிபந்தனையாலேயே இல்லற வாழ்வைத் துறந்து
துறவிகளாகப் போனவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
தியாகராஜ பாகவதர் காலத்து காதலைத்தான் நினைத்தே பார்க்க முடியவில்லை.
ஏனெனில், அப்போது பெண்களுக்கு ஐந்தில் இருந்து பத்துப் பதினைந்து வயதுக்கு
உள்ளேயே திருமணம் நடந்துவிடுமாம். எனவே, காதலிக்கும் வாய்ப்பு சதவிகிதம்
மிகக் குறைவானதாக, அதிகபட்சம் இரண்டு, மூன்று சதவிகிதத்துக்குள்தான்
இருந்திருக்கும். மீறி ஏதோ ஒரு பெண்ணைக் காதலித்தாலும், அவளுக்கு
எழுதப்படும் காதல் கவிதை என்பது சங்கத் தமிழ் செய்யுள் வடிவத் தில் இருக்க
வேண்டும். இதையெல்லாம் விட முக்கியம், அவளுக்குப் படிக்கத் தெரியுமா என்ப
தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அந்தக் காலக்கட்டத்துக் காதல் படங்களின் காட்சிகளைப் பார்த்தோமானால், நமக்குக் காதலே வெறுத்துப்போகிறது.
'தேவி’
'நாதா’
'தேவி’
இப்படியெல்லாம் ஒருவேளை யாராவது நிஜ வாழ்க்கையில் காதலித்து இருந்தால், அப்போதே சுனாமி வந்திருக்கும்.
இதையெல்லாம் பார்க்கும்போது நம்முடைய சமகாலத்தை நாம் போற்றியாக
வேண்டும். முந்தைய தலைமுறையினர் காதலிக்கப்பட்ட சிரமங்கள் மாதிரி இல்லாமல்
ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்பதைப் போல, அவரவர் லெவலுக்கு ஏதோ ஒரு காதல் செட்
ஆகிவிடு கிறது.
காதலியைத் தேர்ந்தெடுக்க, காதலிக்க ஏராள மான வாய்ப்புகளும், சூழல்களும்
அமைந்துஇருக்கின்றன. குறிப்பாக, காதல் கடிதம் நீட்டுபவனை யாரும் செருப்பால்
அடிப்பது இல்லை. நாகரிகமாக மறுத்துவிடுகிறார்கள். அட.... காதலிக் கப்
பெண்ணே கிடைக்கவில்லை என்றால்கூட, மற்றொரு ஆணைக் காதலிக்கும் கலாசாரம்
பிரபலமாகிக்கொண்டு இருக்கிறது. அடுத்த தலைமுறையில் ஜோடி ஜோடியாக ஆண்கள்
பீச்சி லும், பார்க்கிலும் கைகோத்து நடப்ப தாகக் கற்பனை
செய்துபார்த்தாலே... கல்லீரல், கணையம் எல்லாம் கலங்குகிறது!
நன்றி - விகடன்