Showing posts with label லப்பர் பந்து (2024) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label லப்பர் பந்து (2024) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Sunday, September 22, 2024

லப்பர் பந்து (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( கமர்ஷியல் கலக்கல் )

               


  தமிழ் சினிமாக்களில் ஸ்போர்ட்ஸ் டிராமா மூவிஸ்  என ஒரு பட்டியல் எடுத்தால்  சென்னை  28 ( 2007) , வெண்ணிலா கபாடிக்குழு (2009),சென்னை  28 -2  ( 2016)  ப்ளூ ஸ்டார் (2024) இவை  நான்கும்  மனதில் நிற்பவை . .கபடி  .விளையாட்டை  மையமாக  வைத்து , .கிரிக்கெட் விளையாட்டை  மையமாக  வைத்து  வந்த படங்கள் இவை . விமர்சன ரீதியான பாராட்டுக்கள் , வசூல் ரீதியான  வெற்றி ஆகியவற்றை ஒருங்கே  பெற்றவை 


இவை  போக ஸ்போர்ட்ஸ் டிராமா மூவிஸ் அஸ்வினி (1991) தெலுங்கு டப்பிங்க்  தமிழ் , லீலாதரன் என்கிற லீ (2007) .,தோனி (2012)  ஹரிதாஸ் (2013)   ஜீவா (2014) , ஈட்டி (2015) , இறுதி சுற்று (2016) கனா(2018)  ஜடா (2019) ,   ஹரிதாஸ் (2013) , சார்பேட்டா பரம்பரை (2021)   

ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லன்  கிரிக்கெட் பிளேயர் ..பிரமாதமான பேட்ஸ்மேன் .லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாலும்  மனைவிக்குப்பயந்துதான்  மேட்ச் விளையாடுவார் . மனைவிக்குத்தெரியாமல்   மேட்ச்  விளையாடி  பின்  மாட்டிக்கொண்ட ;பின் திட்டு வாங்குபவர் 



நாயகன் அட்டகாசமான  பவுலர் .ஆனால் குறிப்பிட்ட  ஒரு டீமில் விளையாடாமல்  அவ்வப்போது  எதோ ஒரு டீமில்  சேர்ந்து விளையாடுபவர் . வில்லனின்   ஆட்ட  நுணுக்கங்கள் இவருக்கு அத்துபடி , அவரை அவுட் ஆக்க எப்படி பவுலிங்க் போடவேண்டும் என்பது அவருக்குத்தெரியும் 



ஒரு நாள் ஒரு மேட்சில்  நாயகன்  வில்லனுக்கு எதிரான டீமில்  விளையாடி  முதல் ஓவரிலேயே  வில்லனை எளிதாக வீழ்த்தி விடுகிறார் . அதுவரை  வில்லன் கட்டிக்காத்த  ஹீரோ பிம்பம் உடைபடுகிறது . அவமானத்தால்  துடிக்கும்  வில்லன்  நாயகனை குரோத மனதுடன்  முறைக்கிறார் 


நாயகன்  ஒரு பெண்ணைக்காதலிக்கிறார் . அவள்  வில்லனின் மகள் என்பது அவருக்கு முதலில் தெரியாது . தெரிய வந்த பிறகும்  இருவரும்  அக்னி நட்சத்திரம்  பிரபு - கார்த்திக் போல  மோதிக்கொண்டு தான் இருக்கிறார்கள் . ஒரு கட்டத்தில்  இன்னொரு மேட்சில்  நாயகன் - வில்லன்  எதிர்  எதிர் அணியில்  மோதி விளையாட  அப்பொது  நாயகன் -வில்லன்  இருவருக்கும்  கை  கலப்பு  உருவாகிறது .அப்போது  அங்கே வந்த  வில்லனின் மனைவி  இனி உனக்கும் எனக்கும் ஒத்து வராது  என பிரிகிறாள் . வில்லனின்  மகள்  நாயகனிடம்  ஈகோவை  விட்டு விட்டு என் அப்பாவுடன்  இணக்கமாக ஆனால் தான் நம் திருமணம்  என்று சொல்லி விட்டுப்பிரிகிறாள்  . இதற்குப்பின் 

 நிகழு ம் சம்பவங்கள் தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ஹரீஸ் கல்யாண்  அடக்கி வாசித்திருக்கிறார் . வில்லேஜ்  ரோல் இவருக்குப்புதுசு , ஆனாலும் சமாளிக்கிறார் .மிக பாந்தமான நடிப்பு . வில்லன் ஆக அட்டக்கத்தி தினேஷ் . பேட்டிங்கில்  கெத்து காட்டும் போதும் , மனைவியிடம்  பம்மும்போதும்  மாறுபட்ட குணச்சித்திர  நடிப்பு . நாயகன்  உடனான ஈகோ மோ தலில்  தெனாவெட்டான நடிப்பு 


நாயகி ஆக அறிமுக நாயகி  சஞ்சனா  கிருஷ்ணமூர்த்தி  துள்ளல் , இளமை , கண்ணியம் , குறும்பு  என எல்லா ஏரியாக்களில் சிக்ஸர் அடிக்கிறார் தமிழ் சினிமாவுக்கு அறிமுக நாயகி என்றாலும் ஆல்ரெடி வதந்தி என்ற  வெப் சீரிஸில் நடித்தவர் தான் . இவரது  நடிப்பில் ஐஸ்வர்யா ராஜேசின்  நடிப்பு சாயல் உண்டு 


நாயகியின்  அம்மாவாக சுவாசிகா ஆச்சரியப்படுத்தும்  நடிப்பு மலையாளப்படங்கள்  பலவற்றில் நடித்திருந்தாலும் கோரிப்பாளையம் , சாட்டை உட்பட  பல தமிழ்ப்படங்களிலும்  நடித்தவர் தான் .சுகன்யாவின் 

நடிப் பு சாயல் உண்டு 


நாயகனின்  நண்பன் ஆக பாலா சரவணன் , வில்லனின் நண்பன் ஆக ஜென்சர்  திவாகர்  இருவர் நடிப்பும் பிரமாதம் . டீம் கேப்டன் ஆக வரும் காளி  வெங்கட்டின்  குணச்சித்திர  நடிப்பு  அருமை . நாயகனின் அம்மாவாக வரும் தேவதர்ஷினி  பாந்தமான நடிப்பு 


ஷான்  ரோல்டன்  இசையில்  இரு பாடல்கள் செம ஹிட் . பின்னணி  இசையில் பல இடங்களில் கை  தட்டலை அள்ளுகிறார் . ஒளிப்பதிவு  திணேஷ்  புருஷோத்தமன் .கிராமங்களில்  நடக்கும் மேட்சை  கண் முன் கொண்டு வருகிறார் ,மதன் கணேஷின்  எடிட்டிங்கில் படம் 140 நிமிடங்கள் ஓடுகிறது . ஒரு  இடம் கூட போர் அடிக்கவில்லை 


விஜய் பிரபாகரன் , செல்ல மம்தா ஆகிய  இருவருடன் இணைந்து  திரைக்கதை  எழுதி  தனியாக  இயக்கி  இருப்பவர் தமிழரசன் பச்சமுத்து 

சபாஷ்  டைரக்டர்

1  ஒரு ஸ்போர்ட்ஸ்  டிராமா மூவியில்  சென்ட்டிமென்ட் , காதல் , சோகம்  என அனைத்து கமர்ஷியல் அம்சங்களையும் சரி விகிதத்தில் கலந்து ரசிக்கும்படி கொடுத்த விதம் 


2  பொதுவாக ஒரு படத்தில்  வில்லன் கேரக்ட்டர்  டிசைன் சரி இல்லை , அந்த கேரக்ட்டர் சரியாக வடிவமைக்கப்படவில்லை என விமர்சகர்கள் குறை கூறுவார்கள் , ஆனால் படத்தில் வரும் அனைத்துக்கேரக்ட்டர்களும்  பிரமாதமாக வடிவமைக்கப்பட்டு  அனைத்து நடிகர்களிடமும்  நடிப்பை வாங்கிய விதம் 


3 வில்லன் ,வில்லனின் மனைவி  இருவருக்குமான  புரிதல் , காதல் ஆழமாக சொல்லப்பட்ட விதம் , குறிப்பாக  இருவரும் பிரிந்திருக்கையில்  மனைவியின் சேலையை  விரித்துபோட்டு அதில் படுக்கும் வில்லன் , வில்லனின் சட்டையை முகர்ந்து பார்க்கும் மனைவி  என காட்சிகள்  கவிதை 


4  நாயகன் - நாயகி  இருவருக்குமிடையே  ஆன காதல்  பார்வைப்பரிமாறல்களிலேயே சொல்லப்பட்ட விதம் 


5  நாயகனின்  நண்பன் , வில்லனின்  நண்பன்  என இருவருமே  கதையுடன் ஒட்டிய காமெடியில்  சைன் செய்த விதம் 


6  இயக்குனர் கேப்டனின்   தீவிர  ரசிகர் போல .படம் முழுக்க  கேப்டனின் பட பாடல்களை  பொருத்தமான இடங்களில்  உலவ விட்டு  கைதட்டல்களை அள்ளிக்கொள்கிறார் 

7   இது போன்ற ஸ்போர்ட்ஸ்  டிராமா  மூவிகளில் டெம்ப்ளேட்டாக வரும் க்ளைமாக்ஸை வைக்காமல்  மாற்றி யோசித்து  ஒரு ட்விஸ்ட்டை  வைத்த  விதம் 


8 தமிழ் சினிமா வரலாற்றிலேயே  முதல் முறையாக நாயகனின் முதல் காதலி , இரண்டாம் காதலி  இருவரையும்  உறவினர்களாகக்காட்டியதும்  அவர்கள் மூவருக்குமிடையேயான  நட்பைசொன்ன விதமும் புதுசு 


9 உயர்ந்த ஜாதி , ஒடுக்கப்பட்ட  ஜாதி ஏற்றத்தாழ்வுகளை  சில இயக்குநர்களைப்போல  ஜாதி வெறியைத்தூண்டுவது போல சொல்லாமல் நாசூக்காக நுட்பமாக சொன்ன விதம் 


10   டி வி சீரியல்களில்  மாமியார் - மருமகள்   உறவையே  வில்லிகள்  போல  காட்டி வரும் வேளையில்  பாசிட்டிவாக சென்ட்டிமென்ட்  சீனாக  வடிவமைத்த விதம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்

1  சில்லாஞ்சிறுக்கியே , சொல்லாம  என் மனசைப்புழிஞ்சியே? 


2 என்னை விட்டுப்போவே-என நானும் நினைக்கலை 


  ரசித்த  வசனங்கள் 

1    இவரு பேரு க்கு கெத்து இல்லை , இவரு பேரே  கெத்து தான் 


2   அட அட  என்னா  பாட்டு , என்னதான்  இருந்தாலும் இளையராஜா  மாதிரி  வருமா? 


 ராஜா மாதிரி வராது தான்  , ஆனா இந்தப்பாட்டுக்கு இசை தேவா 


3 பொண்டாட்டி  வராதவரை தான் ஆண்கள் கெத்து 


4  நாம எது பண்ணாலும் கூட்டத்தில்  ஒரு ஆளா  இருக்கக்கூடாது , தனி  ஒருவனா நிற்கணும் 


5  நாயகி  =அழகா  இருக்கான்ல ?அதான் சீன்  போடறான் , நாமும் போடுவோம் 


6  எவ்ளோ  ஆச்சு ? 


 அன்போட ஆள் கிட்டே  காசு வாங்குவோமா? போம்மா பார்த்துக்கலாம் 


 அப்படிப்பார்த்தா நான் தான் அவனோடமுதல் காதலி '


 ஓய் , ஒழுக்கமாக்காசைக்குடு 


7   எனக்காக அதைபண்ணு   இதைபண்ணு   என எப்பவும்  நான் சொல்ல மாட்டேன் 


8  எப்பவும்  அவளை எல்லாம்  ஒரு பதட்டத்துலயே வெச்சிருக்கணும் 


காலம் பூரா அவ பதட்டத்துல தான்  இருக்கப்போறா 



9   எதனால  உனக்கு கிரிக்கெட்  பிடித்திருக்கு ? 


  ரீசன்  எல்லாம்  தெரியாது , பிடிச்சிருக்கு  அவ்ளோ தான் 


10   நம்ம மக ஒருத்தனை லவ் பன்றாளா?  எனக்குத்தெரியாதே?  நீ மட்டும் எப்படி கண்டு பிடிச்சே ? 


 நீ  என்னை லவ் பன்றே-னு  நீ சொல்லியா  நான்  தெரிஞ்சுக்கிட்டேன் ?



11   வாய்ப்பிருந்தும்  அவனை ஏன்  அவுட் ஆக்கலை ?


இந்த விக்கெட்டை எல்லாம் வெத்தா  எடுக்கக்கூடாது  ,  கெத்தா  எடுக்கனும் 


12    தம்பின்னு சொல்லு அல்லது இல்லைனு சொல்லு அதென்ன  தம்பி மாதிரி ?


13  அவர் கிட்டே  பேச  தயக்கமா இருக்கு , நீயம் கூடவாடா 


 நான் எதுக்குப்பா?  உன் குடும்பத்துல 2  பேரும்  மாறி மாறி அசிங்கமா  திட்டிக்குவீங்க 


14    ஒரு பொண்டாட்டி  புருஷன் கிட்டே  கோவிச்சுக்கிட்டு   வீட்டை வீட்டுப்போலாம் , ஆனா  ஒரு அம்மா  மகன் கிட்டே கோவிச்சுக்கிட்டு   வீட்டை விட்டுப்போலாமா? 



15   இந்த  ஷாட் ஆப் சைடுல  அடிச்சமாதிரி  தெரியல , செருப்பைக்கழட்டி அடிச்ச  மாதிரி   தெரியுது 


16   ஊருக்கு  நல்லவனா  இருப்பவன் எல்லாம்  வீட்டுக்கு  நல்லவனா  இருக்கமாட்டான் 


17  தன்னை சுத்தி   எது  நடந்தாலும் அவன் ஆட்டத்துல ஜெயிப்பதை மட்டுமே பார்க்கிறான், ஆனா நீ? 


18   என்ன ? முதல் பந்துலயே  டொக்  வைக்கறான் ? 


என் மாப்பிளை  எப்பவும் முதல் பந்தை சாமிக்கு விட்டுடுவான் , மீதி பந்தை எல்லாம் அவன் எடுத்துக்குவான் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகியின் அப்பா தான்  வில்லன் என்பதை நாயகன் நீண்டநாட்களாக அறியாமல் இருப்பது  நம்பமுடியலை . பொதுவாக லவ்வர்ஸ்  பரஸ்பரம் பெற்றோரை  தெரிஞ்சு  வெச்சுக்குவாங்க , அப்போதான்  ஜாக்கிரதையா லவ் பண்ணமுடியும் 


2   வில்லன் தான்  தன வருங்கால மாமனார் என்று   தெரிந்த  பின்னும்   நாயகன்   ஈகோ  பார்பபதும் ஏற்புடையதாக இல்லை  




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - clean u 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கிரிக்கெட்  விளையாட்டே  தெரியாதவர்கள் , அதை விரும்பாதவர்கள்  கூட ரசித்துப்பார்க்கும் வண்ணம்  அமைந்த  நல்ல திரைக்கதை . இந்த ஆண்டின்   சிறந்த  அறிமுக இயக்குனருக்கான விருதைப்பெற்றுத்தரப்போகிறபடம் . கமர்ஷியல்  சக்ஸஸ்  ஆகவும்  கலக்கப்போகும் படம் , ஆனந்த  விகடன் மார்க்  ( யூகம் ) - 50  , குமுதம்  ரேங்க்கிங்க் ( யூகம் )  - நன்று  ,  மை  ரேட்டிங்க்  3.75 / 5 


Lubber Pandhu
Theatrical release poster
Directed byTamizharasan Pachamuthu
Written byTamizharasan Pachamuthu
Vijay Prabhakaran
Chella Mamtha
Produced byS Lakshman Kumar
A. Venkatesh
Starring
CinematographyDinesh Purushothaman
Edited byMadan Ganesh
Music bySean Roldan
Production
company
Prince Pictures
Release date
  • 20 September 2024
CountryIndia
LanguageTamil