Showing posts with label ரெசிபிகள். Show all posts
Showing posts with label ரெசிபிகள். Show all posts

Tuesday, February 26, 2013

30 வகை விருந்து சமையல்’ ரெசிபிகள்

'30 வகை விருந்து சமையல்’ ரெசிபிகளை வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.



 ''ஸ்டார்டர், மெயின் கோர்ஸ், டெசர்ட் என்ற மூன்று வகையிலுமே, சுவையில் அட்டகாசமாக இருக்கும் பல்வேறு ரெசிபிகளை தந்திருக்கிறேன். விருந்துக்கு அழைப்பு விடுங்கள்... அசத்திவிடுங்கள்'' என்று ஆருயிர் தோழியாக, உற்சாக மிகுதியுடன் கூறும் ஆதிரையின் ரெசிபிகளை, கண்ணுக்கு விருந்தாகும் வகையில் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.
 
செஷ்வான் வெஜ் நூடுல்ஸ்
தேவையானவை: பிளெய்ன் நூடுல்ஸ் - 200 கிராம், வெங்காயம், கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 10, கோஸ் - 50 கிராம், வெங்காயத்தாள் - சிறு கட்டு, காய்ந்த மிளகாய் - 8, பூண்டு - 6 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸ் ஆகியவற்றை மிகவும் மெல்லியதாக, விரல் நீளத் துண்டுகளாக நறுக்கவும். காய்ந்த மிளகாய், பூண்டு இரண்டையும் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடி கனமான வாணலியில் நீரை சேர்த்து சூடாக்கி, அதில் நூடுல்ஸை உடைத்துப் போடவும். ஒரு நிமிடத்துக்குப் பிறகு நீரை வடித்துவிட்டு, நூடுல்ஸை குளிர்ந்த நீரில் அலசி தனியே வைக்கவும். பிறகு அடுப்பில் தவாவை வைத்து சூடாக்கி, நூடுல்ஸை அதன்மேல் பரப்பி, நூடுல்ஸின் மேல் ஒரு டீஸ்பூன் எண்ணெயைப் பரவலாக ஊற்றி 2 முறை திருப்பிவிட்டு எடுத்து வைக்கவும். அகலமான வாணலியில் எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள காய்ந்த மிளகாய் - பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு, வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸ் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைப்பது அவசியம்). காய்கள் வெந்ததும் கடைசியாக நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.
இந்த செஷ்வான் வெஜ் நூடுல்ஸ் இருந்தால், விருந்து களைகட்டும்

ஸ்வீட் கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
ஸ்டஃப் செய்ய: அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் - ஒரு கப் (ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும்), வெங்காயம் - 2 (துருவவும்), தக்காளி - 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்), இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவில் நெய், உப்பு சேர்த்து, தேவையான அளவு நீர் விட்டு சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, துருவிய வெங்காயத்தை பிழிந்து சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அரைத்த தக்காளி விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கி, ஒன்றிரண்டாக மசித்து வைத்துள்ள ஸ்வீட் கார்னையும் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, உப்பு சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கவும்.
சப்பாத்தி மாவைக் கிண்ணம் போல செய்து ஸ்வீட் கார்ன் கலவையை கொஞ்சம் எடுத்து அதனுள் வைத்து மூடி, சற்று கனமான சப்பாத்திகளாக தேய்த்து, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

காலிஃப்ளவர் கிரேவி
தேவையானவை: காலிஃப்ளவர் - ஒன்று, வெங்காயம் - 4, பூண்டு - 8 பல், முந்திரிப்பருப்பு - 10, காய்ந்த மிளகாய் - 8, உப்பு - தேவையான அளவு, லவங்கம் - 2, பட்டை - 2 சிறு துண்டுகள், சீரகம் - ஒன்றரை டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி - 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்), கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:  காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் சேர்த்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைக்கவும். முந்திரிப்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு, லவங்கம், பட்டை, சீரகம், தனியா, தேங்காய் துருவல், மஞ்சள்தூள், கசகசா ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
காலிஃப்ளவர் துண்டுகளுடன், வெங்காயம் - பூண்டு விழுது, அரைத்த மசாலா விழுது, தக்காளி விழுது சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசிறிய காலிஃப்ளவர் துண்டுகளை சேர்க்கவும் பிறகு அதில் ஒரு கப் நீர் விட்டு, சுமார் 20 நிமிடம் மூடி வைக்கவும் (மசாலா வாணலியில் ஓட்டமாலிருக்க அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும்)
காலிஃப்ளவர் வெந்து கிரேவி ஆனதும் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

சென்னா பேடா
தேவையானவை: வெள்ளை சென்னா - 200 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று, வெங்காயத்தாள் - 5, பூண்டு - 4 பல், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: சென்னாவை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள், ஊறிய சென்னாவுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும், அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, வெங்காயத்தாள், கொத்தமல்லித்தழை சேர்த்து... மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து, சுமார் ஒன்றரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு, மாவை சிறு உருண்டைகளாக எடுத்து, வடை போல தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

வெஜிடபிள்ஸ் க்ரிஸ்பி
தேவையானவை: கோஸ் - 100 கிராம், கேரட், குடமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, பூண்டு - 3 பல், மைதா - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 4 டீஸ்பூன், மிளகுத்தூள், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: கோஸ், கேரட், குடமிளகாய், வெங்காயம் ஆகியவற்¬றை நீள நீளமாக ஒரு இன்ச் அளவுக்கு மெல்லியதாக நறுக்கவும். இதனுடன் நறுக்கிய பூண்டு, மைதா, மிளகாய்த்தூள், கார்ன்ஃப்ளார், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசிறி, சூடான எண்ணெயில் பொரித்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

கேரட் சூப்
தேவையானவை: கேரட் துண்டுகள் - 2 கப், நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், ஏலக்காய்த்தூள், லவங்கத்தூள், தனியாத்தூள் - தலா ஒரு சிட்டிகை, காய்கறி வேக வைத்த நீர் - 2 கப், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடி கனமான வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருக்கி, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் ஏலக்காய்த்தூள், லவங்கத்தூள், தனியாத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். பிறகு கேரட் துண்டுகள், காய்கறி வேக வைத்த நீர் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). பின்னர் இதை ஆறவைத்து, மிக்ஸியில் போட்டு அடித்து, உப்பு சேர்த்து நன்கு வடிகட்டி,  மீண்டும் வாணலியில் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். இதை பௌலில் ஊற்றி, மேலே க்ரீம் சேர்த்து புதினா, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குஸ்கா
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கொத்தமல்லித் தழை, புதினா - தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பிரிஞ்சி இலை - ஒன்று, பட்டை, லவங்கம் - தலா ஒன்று, தேங்காய்ப் பால் - ஒரு கப், எண்ணெய், நெய் - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும், வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித் தழை, புதினா ஆகியவற்றை வதக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும், குக்கரில் நெய், எண்ணெய் விட்டு... பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து... இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம் - தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தேங்காய்ப் பால் மற்றும் ஒரு கப் நீர், உப்பு சேர்த்து, ஒரு கொதி வந்ததும் கழுவிய அரிசியை சேர்த்து, குக்கரை மூடி, நன்கு ஸ்டீம் வந்ததும் 'வெயிட்’ போட்டு (அடுப்பை 'சிம்’மில் வைத்து) 10 நிமிடத்துக்குப் பிறகு நிறுத்தவும். பிரஷர் போனதும் குக்கரைத் திறக்க... ஹாட் ஸ்பைஸி குஸ்கா 'கமகம’வென்று தயார் நிலையில் இருக்கும்.

பிரிஞ்சால் ஸ்டூ
தேவையானவை: கத்திரிக்காய் (விதையில்லாதது) - அரை கிலோ, சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), தேங்காய் - ஒன்று, புளி - எலுமிச்சை அளவு,  கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை, லவங்கம் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வெல்லம் - சின்ன கோலிகுண்டு அளவு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா  - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, கசகசா - 4 டீஸ்பூன், முந்திரி - 3, வெந்தயம் - ஒரு சிட்டிகை.
செய்முறை:  வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை, எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடி செய்யவும். கத்திரிக்காயை ஓரங்குல சதுரத்துண்டுகளாக அரிந்து கொள்ளவும். தேங்காயைத் துருவி, சிறிது நீர் விட்டு அரைத்து 3 முறை பால் எடுத்து, மூன்றையும் தனித்தனியே வைக்கவும். புளியை நன்கு கரைத்து வடிகட்டவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, பெருங்காயத்துள், லவங்கம் தாளித்து... கத்திரிக்காய், சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு, புளிக் கரைசல், வெல்லம் சேர்க்கவும். பிறகு வறுத்துப் பொடித்த மசாலாப்பொடி, மூன்றாம்  முறை எடுத்த தேங்காய்ப் பால் சேர்த்துக் கலக்கவும். நன்கு கொதிக்கும் இரண்டாம் முறை எடுத்த தேங்காய்ப் பால் சேர்க்கவும். கிரேவி சற்று கெட்டியானதும் முதல் முறை எடுத்த தேங்காய்ப் பாலை ஊற்றி நன்கு கிளறி, ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கி, பரிமாறவும்.

 ஸ்பைஸி வெஜ் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா 2, உருளைக்கிழங்கு, கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 6, பச்சைப் பட்டாணி -  ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 4, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி - 6, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 6 பல், தனியா, கசகசா - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம் - தலா ஒன்று, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெண்ணெய், நெய் - தலா அரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். அவற்றை தனித்தனியாக, மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், முந்திரி, இஞ்சி, பூண்டு, தனியா, கசகசா, சீரகம் ஆகியவற்றை கொஞ்சம் நீர் சேர்த்து மிக்ஸியில்  நன்கு அரைத்துக் கொள்ளவும். பட்டை, லவங்கத்தை நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
குக்கரில் நெய், வெண்ணெய் சேர்த்து உருக்கி... பட்டை - லவங்கப் பொடியை சேர்த்து, நறுக்கிய காய்கறிகளையும். உப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும்.  இதனுடன் அரைத்த வெங்காயம், அரைத்த தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு அரைத்த பச்சை மிளகாய் மசாலா விழுதையும் சேர்த்து வதக்கி, ஒன்றரை கப் நீர் சேர்த்து, கொதி வந்ததும், கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடவும். நன்கு ஸ்டீம் வந்ததும் 'வெயிட்’ போட்டு, அடுப்பை 'சிம்’மில் வைத்து 10 நிமிடத்துக்குப் பிறகு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். இந்த பிரியாணியின் வாசனை ஆளைத் தூக்கும்.

 கமகம காலிஃப்ளவர் சூப்
தேவையானவை: காலிஃப்ளவர் - மிகவும் சிறியது (நன்கு சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்), பெரிய வெங்காயம் - ஒன்று, லவங்கம் - 2, மிளகு - 4, வெண்ணெய் -  ஒரு டேபிள்ஸ்பூன், மைதா - அரை டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பொடியாக நறுக்கிய வெங்காயம், காலிஃப்ளவருடன் லவங்கம், மிளகு, 2 கப் நீர் சேர்த்து நன்கு வேகவிட்டு மிக்ஸியில் மசித்துக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெயை உருக்கி, மைதா சேர்த்து நன்கு வதக்கி, பால் விட்டு நன்கு கலக்கவும். இதனுடன் காலிஃப்ளவர் கலவையை சேர்த்து, கொஞ்சம் நீர் ஊற்றி, 2 கொதி விட்டு... உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.


டேஸ்ட்டி வெஜ் சூப்
தேவையானவை: கேரட் - ஒன்று, பீன்ஸ் - 6, கோஸ் - 50 கிராம், கொத்தமல்லி - சிறிய கட்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கார்ன்ஃப்ளார்          - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவை யான அளவு.
செய்முறை: கேரட், பீன்ஸ், கோஸ், கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து மிகவும்  பொடியாக நறுக்கவும். கார்ன் ஃப்ளாரை கால்  கப் நீரில் கரைத்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் 3 கப் நீரை கொதிக்கவிட்டு, கேரட், பீன்ஸ், கோஸ், கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வேகவிடவும். காய்கறி நன்கு வெந்ததும் கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளார் மாவை ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கி... மிளகுத்தூள், உப்பு சேர்த்துப் பரிமாறவும். 

பனீர் ஸ்டஃப்டு குல்ச்சா
தேவையானவை: மைதா, கோதுமை மாவு, பனீர் (துருவியது) - தலா ஒரு கப், முந்திரி - 10 (பொடியாக நறுக்கவும்), சாட் மசாலா - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 3 எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கவும். மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். ஒரு கப்பில் பனீர், முந்திரி, சாட் மசாலா, கரம் மசாலாத்தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். பிசைந்து வைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, அதனுள் பனீர் கலவையை வைத்து மூடி, சிறிய சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: மேலே சிறிதளவு வெண்ணெய் தடவி சூடாக பரிமாறலாம்.

 டிரை ஃப்ரூட்ஸ் ரைஸ்
தேவையானவை: முந்திரி, பாதாம், திராட்சை எல்லாம் சேர்த்து - அரை கப், டூட்டி ஃப்ரூட்டி - சிறிதளவு, பாசுமதி அரிசி - ஒரு கப், தேங்காய்ப் பால் - ஒரு கப், இஞ்சி - சிறு துண்டு, பூண்டு -  3 பல், பச்சை மிளகாய் - ஒன்று, பெரிய வெங்காயம் - ஒன்று, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, கொத்தமல்லித்தழை - சிறிதளவு நெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். குக்கரில் தேங்காய்ப் பாலுடன் அரை கப் நீர் சேர்த்து, கழுவிய அரிசியை சேர்த்து மூடி, ஒரு விசில் வந்ததும் எடுக்கவும். வாணலியில்  ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, பாதாமை நன்கு வறுக்கவும். அடுப்பை நிறுத்தி, திராட்சையையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும் (டூட்டிஃப்ரூட்டியை அப்படியே ஃபிரெஷ்ஷாக வைக்கவும்). வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காயை தாளித்து... பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து நன்கு வதக்கி, கடைசியாக டூட்டிஃப்ரூட்டி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இந்தக் கலவையை சாதத்தில் கொட்டி கிளறி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறினால்... விருந்தினர்களை 'ஒன்ஸ் மோர்’ கேட்கச் செய்யும்.

 ஷாஹி பனீர் வித் கேப்ஸிகம்
தேவையானவை: பனீர் - 200 கிராம் (வெந்நீரில் கழுவி சின்னச் சின்ன சதுரத் துண்டுகளாக நறுக்கவும்), குடமிளகாய் - ஒன்று, வெங்காயம் - 2, தக்காளி - 6, பூண்டு - 6 பல், இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாயை சிறு சதுரங்களாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டை சேர்த்து வதக்கவும். பிறகு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி... மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு தக்காளி வேகும்வரை கொதிக்கவிடவும். தக்காளி வெந்ததும் பனீர், குடமிளகாய் சேர்த்து மீண்டும் கொதிக்கவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

 பனீர் ஜால் ஃப்ரீஸ்
தேவையானவை: பனீர் - 200 கிராம், கேரட், வெங்காயம், குடமிளகாய் - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சாஸ்  - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு, வெண்ணெய் -  தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பனீரை சதுர சதுரமாக 'கட்’  செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கேரட், வெங்காயம், குடமிளகாயை நீள நீளமாக ஒரு இன்ச் அளவுக்கு நறுக்கவும், அடி கனமான வாணலியில் வெண்ணெயை உருக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கி... இஞ்சி - பூண்டு விழுது, கேரட், குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சாஸ், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். கடைசியாக பனீரை சேர்த்து நன்கு கிளறி, எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி இறக்கிப் பரிமாறவும் (விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை மேலே தூவி பரிமாறலாம்).

பிரெட் - ஆலு கபாப்
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, பச்சைப் பட்டாணி -  ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மைதா - கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, பிரெட் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணியை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும், மைதாவை அரை கப் நீரில் கரைக்கவும். வேக வைத்து மசித்த உருளை - பட்டாணி கலவையுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பிசைந்து விரும்பிய வடிவத்தில் 'கபாப்’ தயார் செய்து கொள்ளவும். கபாப்பை மைதா கரைசலில் தோய்த்தெடுத்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து, பரிமாறவும்.

 உருளை - காலிஃப்ளவர் சீஸ் கிராக்கெட்ஸ்
தேவையானவை: காலிஃப்ளவர் - மீடியம் சைஸ், உருளைக்கிழங்கு - 2, துருவிய சீஸ் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், மைதா - 4 டேபிள்ஸ்பூன், பிரெட் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவரை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் விழுதாக அரைக்கவும்.
காலிஃப்ளவரை 2 நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கவும். இதனுடன் மசித்த உருளை, துருவிய சீஸ், அரைத்த பச்சை மிளகாய் விழுது, உப்பு, 2 டேபிள்ஸ்பூன் மைதா சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவம் கொடுக்கவும். இதுதான் சீஸ் கிராக்கெட்ஸ். மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் மைதாவைச் சற்று நீர்க்கக் கரைத்து அதில் சீஸ் கிராக்கெட்ஸை தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித் தெடுத்து பரிமாறவும்.

 மீல்மேக்கர் பிரியாணி
தேவையானவை - மீல்மேக்கர் கோலா வுக்கு: மீல்மேக்கர் (சோயா உருண்டைகள்) - 25, பொட்டுக்கடலை - கால் கப் (மிக்ஸியில் பொடிக்கவும்), இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 5 பல், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 2, பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, லவங்கம் - ஒன்று, கொத்தமல்லித் தழை - கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
பிரியாணிக்கு: பாசுமதி அரிசி - 2 கப், தேங்காய்ப் பால் - 2 கப், வெங்காயம், தக்காளி - தலா 3, பச்சை மிளகாய் - 5, இஞ்சி -  பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்,  புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து எடுத்து பிழிந்து, தண்ணீரில் அலசி நன்கு நீரை ஒட்டப் பிழிந்து, ஒன்றிரண்டாக 'கட்’ செய்து கொள்ளவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருஞ்சீரகம், பட்டை, லவங்கம், கொத்தமல்லி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து நன்கு பிசைந்து,  மிக சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுத்தால்... மீல்மேக்கர் கோலா ரெடி.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும், பாசுமதி அரிசியை நன்கு கழுவி, தேங்காய்ப் பாலுடன் சேர்த்து, ஒரு கப் நீர் விட்டு 5 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நெய், எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். (வதக்கும்போது சிட்டிகை உப்பு சேர்க்கவும்). பிறகு, தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். அதில்  ஊற வைத்த அரிசி மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடத்துக்குப்  பிறகு இறக்கவும்.
பிரியாணியுடன் மீல்மேக்கர் கோலா உருண்டைகளை சேர்த்து, சாதம் உடையாமல் கிளறி, ஆனியன் - தயிர் ராய்த்தாவுடன் பரிமாறவும்.

 உருளை மசாலா கிரேவி
தேவையானவை: உருளைக்கிழங்கு - அரை கிலோ, பெரிய வெங்காயம் - 2, தயிர் ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, தனியா, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா 2, இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லித்தழை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், தோல் சீவிய இஞ்சி ஆகியவற்றை வெறும் வாணலியில் சூடுபட வறுத்து, பிறகு ஆறவைத்து மிக்ஸியில் பொடிக்கவும்.
தோலுரித்த உருளையை முள் கரண்டியால ஆங்காங்கே குத்தி உப்பு சேர்த்த தயிரில் அரை மணி நேரம் ஊறவிடவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தயிரில் ஊறிய உருளைக்கிழங்கை அதில் சேர்த்து, சிறிது நீர் சேர்த்து நன்கு கொதித்ததும், மிக்ஸியில் பொடித்த பொடியைத் தூவி மேலும் ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

 தக்காளி - வெண்ணெய் சூப்
தேவையானவை: தக்காளி - 5, நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை, மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மைதா - 2 டேபிள்ஸ்பூன், பால் - 2 கப், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடி கனமான வாணலியில் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், மிளகுத்தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து, 3 டம்ளர் நீர் ஊற்றி, 10 நிமிடம் வேகவிட்டு, ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து, அரைத்து வடிகட்டவும். வாணலியில் வெண்ணெயை உருக்கி, மைதாவை சேர்த்துக் கிளறி, பால் சேர்த்து நன்கு கலக் கவும். ஏற்கெனவே வடிகட்டி வைத்திருக் கும் தக்காளி சாறை அதில் ஊற்றி, நன்றாக கலக்கி, மிதமான தீயில் 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

 முருங்கைக்காய் சூப்
தேவையானவை: முருங்கைக்காய் - 4, பாசிப்பருப்பு -  ஒரு டேபிள்ஸ்பூன் (குழைய வேகவிடவும்), வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பூண்டு - 2 பல், வெண்ணெய், கார்ன்ஃப்ளார் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கார்ன்ஃப்ளாரை கால் கப் நீரில் கரைத்துக் கொள்ளவும். முருங்கைக் காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவிட்டு, ஆறியதும் சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் வெந்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் வெண்ணெயை  உருக்கி, பொடி யாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டை சேர்த்து நன்கு வதக்கி, மசித்து வைத் துள்ள பாசிப்பருப்பு - முருங்கை கலவை மற்றும் 2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்தவுடன் கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளார் மற்றும் உப்பு சேர்த்து இறக்கி... மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

 பட்டாணி - பட்டர் கிரேவி
தேவையானவை: பச்சைப் பட்டாணி - 200 கிராம், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பெரிய தக்காளி - 5, இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 4, கொத்தமல்லித்தழை - சிறிய கட்டு, வெண்ணெய், எண்ணெய் - தலா ஒன்றரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் வெண்ணெய், எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு கிளறவும். பிறகு, தேவையான நீர், பட்டாணி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து, மூடி வைக்கவும் (பட்டாணி வேகும் வரை). பட்டாணி வெந்து, கிரேவி கெட்டியானதும் இறக்கி, மல்லித்தழைத் தூவி பரிமாறவும்.

 குடமிளகாய் - வெள்ளரி சாலட்
தேவையானவை: குடமிளகாய், வெள்ளரிக்காய், கேரட், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சாட் மசாலா - அரை டீஸ்பூன், சர்க்கரை -  ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாய், வெள்ளரிக்காய், கேரட், பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நன்கு கழுவி, சின்னச் சின்ன சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றுடன் மிளகுத்தூள், சாட் மசாலா, சர்க்கரை உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

 பனீர் க்ரீன் கிரேவி
தேவையானவை: பனீர் - 100 கிராம் (மிதமான சூட்டில் இருக்கும் நீரில் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்), பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 3, புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கசகசா - அரை டீஸ்பூன், தயிர், உப்பு, வெண்ணெய், எண்ணெய் - சிறிதளவு
செய்முறை: வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு... வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, கசகசா சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தயிர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் வெண்ணெயை சேர்த்து சூடாக்கி... அதனுடன் அரைத்த விழுது, சிறிதளவு நீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்கும்போது பனீர் துண்டுகளைச் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

 ஆரஞ்சு - வாழைப்பழ சாலட்
தேவையானவை: ஆரஞ்சு சுளைகள் - 10, வாழைப்பழம் - ஒன்று, அன்னாசிப்பழம் - ஒன்று, ப்ரெஷ் க்ரீம் - தேவையான அளவு, மாதுளை முத்துக்கள் - சிறிதளவு.
செய்முறை: ஆரஞ்சு சுளைகளை நார், விதை எடுத்து சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கவும். வாழைப்பழம், அன்னாசிப்பழத்தை பொடியாக நறுக்கவும். பழங்களுடன் ப்ரெஷ் க்ரீம் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து, 'ஜில்’லென்று பரிமாறவும்.

 நவாபி வெஜ் கறி
தேவையானவை: வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட் - தலா ஒன்று,  பீன்ஸ் - 10, பச்சைப் பட்டாணி - ஒரு கப், பச்சை மிளகாய் - 4 , இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், முந்திரி - 8, தேங்காய்ப் பால் - அரை கப், ஃப்ரெஷ் தயிர் - 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - அரை கட்டு, ஃப்ரெஷ் க்ரீம், நெய் - தலா 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: தேங்காய் துருவல் - ஒரு கப், லவங்கம், ஏலக்காய் - தலா 3, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.
செய்முறை: வெங்காயம், பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை சின்னச் சின்ன சதுர  துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். முந்திரியை சுடுநீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்று சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, மற்ற காய்கறிகள், இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், அரைத்த தேங்காய் மசாலா, உப்பு என ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கி, கொஞ்சம் நீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு, தேங்காய்ப் பால், தயிர், முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். இறக்கும் முன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து இறக்கவும்.

 பனீர் கீர்
தேவையானவை: பால் - அரை லிட்டர், பனீர் துண்டுகள் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, பாதாம் - தலா 6, சர்க்கரை - கால் கப் அல்லது விருப்பத்துக்கேற்ப.
செய்முறை: பனீர் துண்டுகளை மிதமான சூட்டில் இருக்கும் நீரில் நன்கு கழுவி துருவிக் கொள்ளவும். பாதாம், முந்திரியை மெல்லியதாக சீவிக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் பால், சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் கெட்டியாகும் வரை சூடாக்கவும். பாலை சற்று ஆற வைத்து... பனீர், பாதாம், முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

 ஆப்பிள் கோவா
தேவையானவை: ஆப்பிள் - 2, இனிப்பு இல்லாத கோவா, சர்க்கரை - தலா அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரி, பாதாம் - தலா 6, நெய் - கால் கப்.
செய்முறை: ஆப்பிளை தோல் சீவி, துருவிக் கொள்ளவும். பாதாம், முந்திரியை மெல்லியதாக சீவிக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் சீவிய முந்திரி, பாதாமை லேசாக வறுத்து எடுக்கவும். வாணலியில் துருவிய ஆப்பிளை சேர்த்து (அடுப்பை 'சிம்’மில் வைத்து)  நன்கு கிளறவும். 10 நிமிடம் கழித்து பால்கோவா, சர்க்கரை சேர்த்து மேலும் கிளறவும் (சர்க்கரை சேர்த்தவுடன் சற்று இளகும்). எல்லாம் ஒன்று சேர்ந்து வரும்போது முந்திரி, பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறி, பரிமாறவும்.

 மாதுளை - உருளை ராய்த்தா
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து சதுர துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்), மாதுளை முத்துக்கள் - ஒரு கப், கறுப்பு திராட்சை - 10, கெட்டித்தயிர் - ஒரு கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு (பொடி யாக நறுக்கவும்).
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து சதுர துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கொத்த மல்லியை பொடியாக நறுக்க வும். தயிரில், எல்லாப் பொருட் களையும்  சேர்த்து, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும். 

 ஃப்ரூட் கஸ்டர்ட்
தேவையானவை: பால் - 2 கப், வெனிலா கஸ்டர்ட் பவுடர் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, பைனாப்பிள், வாழை போன்ற பழங்களை பொடியாக நறுக்கிய கலவை -  ஒரு கப், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: அரை கப் பாலில் கஸ்டர்ட் பவுடரை கரைக்கவும். மீதியுள்ள பாலை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கொதிக்கும்போது கஸ்டர்ட் கரைசலை ஊற்றி (அடுப்பை 'சிம்’மில் வைத்து) மேலும் கொதிக்கவிடவும். பிறகு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். ஆறியதும் பழக் கலவை, தேன் சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்து, ஜில்லென்று பரிமாறவும்.

நன்றி - அவள் விகடன்