ருத்ரமாதேவி
'பாகுபலி'க்குப் பிறகு அனுஷ்கா, ராணா நடிப்பில் வெளியாகும் படம், இளையராஜாவின் இசை, படத்தின் பிரம்மாண்ட வடிவமைப்புக் காட்சிகள், மெகா பட்ஜெட் படம் ஆகியவை 'ருத்ரமாதேவி'யின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின.
'ருத்ரமாதேவி' எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா?
கதை: அரசன் மகள் அனுஷ்கா ஆண் வாரிசு இல்லாத குறையைப் போக்கும் விதமாக, தன் தந்தையுடன் ஆட்சி செய்கிறார். பகைவர்களால் ஆட்சிக்கு ஆபத்து வருகிறது. அந்த ஆட்சி என்ன ஆகிறது? அனுஷ்கா என்ன செய்கிறார்? ஆபத்துகளை முறியடித்தாரா? துரோகிகள், எதிரிகள் என்ன ஆனார்கள் என்பதே எல்லாம்.
நாயகியை மையப்படுத்திய அரச காலப் படைப்புக்கு நியாயம் செய்ய முயற்சித்திருக்கும் இயக்குநர் குணசேகரனைப் பாராட்டியே ஆக வேண்டும்.
இறுக்கமான உடல்மொழியிலும், கம்பீரமான குரலிலும், பாடல்களில் அழகு இளவரசியாகவும் கவனம் ஈர்க்கிறார் அனுஷ்கா. மற்ற பெண்களைப் போல இருக்க முடியவில்லையே என்ற ஏக்கத்திலும், எல்லாமே என் மக்களுக்காகத்தான் என்று எண்ணி மகிழ்வதிலும் அனுஷ்காவின் நடிப்பில் மெருகு கூடியிருக்கிறது. மதயானையை அடக்கும் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது. வாள் சண்டை, வேல்சண்டை, குதிரையேற்றம், யானை சவாரி என எல்லாவற்றிலும் பிச்சு உதறுகிறார்.
சண்டி வீரன் கோன கண்ணா ரெட்டியாக, அல்லு அர்ஜூன் மக்களுக்கு நல்லது செய்கிறார். அவரின் இலகுவான வசனங்களுக்கு சிரிப்பு வருகிறது.
படத்தில் மன்னருக்கு எந்த வேலையும் இல்லை. நித்யாமேனனும், கேத்ரின் தெரசாவும் வந்து போயிருக்கிறார்கள். சுமன், ஆதித்யா மேனன் ஆகிய இருவரும் வாரிசைக் கொல்ல வேண்டும் என்று பேசிக் கொண்டேதான் இருக்கின்றனர்.
அரண்மனைகளிலும், போர்க்காட்சிகளிலும் 3டி துல்லியம் தெரிகிறது. முக்கியமாக சர்ப்ப வியூகத்தை கருட வியூகம் சூழும் காட்சி அருமை.
அஜயன் வின்சென்டின் ஒளிப்பதிவு, அரச காலத்தை கண்முன் நிறுத்தியது. ஆனால், நல்ல படத்துக்கு அது மட்டும் போதாதே?
இசையும் பாடல்களும் மனதில் ஒட்டவே இல்லை. க்ளோஸ்-அப் காட்சிகளில் உச்சரிப்புகள் உறுத்துகின்றன.
ராணா, அனுஷ்காவுக்கு இடையிலான காதலை இன்னும் விரிவாகக் காட்டியிருக்கலாம். முக்கிய வில்லனான தேவகிரி இளவரசன் மகாதேவன் (விக்ரம்ஜித் விர்க்) கதாபாத்திரத்தில் அழுத்தம் இல்லை. படத்தில் தெரியும் லாஜிக் ஓட்டைகள், ஆதாரக்கதையை நம்ப வைக்க மறுக்கின்றன. இரண்டாவது பாதியின் திரைக்கதையில் ஏற்படும் தொய்வு படத்தின் வேகத்தை முழுமையாகக் குறைக்கிறது.
'பாகுபலி' மீதான ரசிகர்களின் ஈர்ப்பை சாதகமாக்கிக் கொள்ளும் சூழல் இருந்தது. ஆனால், அந்த ஒப்பீடே ருத்ரமாதேவியை கவிழ்ப்பதற்கான ஆயுதமாகவும் மாறி பாதகத்தை ஏற்படுத்திவிட்டது.
மொத்தத்தில், விஜய் - அஜித் படங்களுக்கு விமர்சனம் எழுதும்போது முடிவில் விமர்சகர்கள் பலரும் சொல்வார்களே... இது அவர்களது ரசிகர்களுக்கான படம் என்று. அதைப் போலவே, 'ருத்ரமாதேவி' அனுஷ்கா ரசிகர்களுக்காக!
நன்றி-தஹிந்து
க.சே. ரமணி பிரபா தேவி