Showing posts with label ராஜீவ் காந்தி. Show all posts
Showing posts with label ராஜீவ் காந்தி. Show all posts

Tuesday, May 14, 2013

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் பேட்டி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் அரசின் கருணையை எதிர்பார்த்துக் காத்திருப்பதைப்போல, அதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களும் பெரும் எதிர்​பார்ப்போடு இருக்கிறார்கள். 


ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் சிறையிலும், வேலூர் பெண்கள் சிறையில் நளினியும், மதுரை மத்தியச் சிறையில் ரவிச்சந்திரனும் அடைக்கப்​பட்டிருக்கிறார்கள்.  


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் உத்தரவுபெற்று 15 நாள் பரோலில் வெளியே வந்தார் ரவிச்சந்திரன். இப்போது மீண்டும் பரோல் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை​யில் வழக்குத் தொடர்ந்துள்ளார் அவரது தாயார் ராஜேஸ்வரி. இந்தச் சூழலில் வழக்கறிஞர் மூலம் ரவிச்சந்திரனுடன் பேசினோம்.


''பரோல் என்பது சாதாரண நடைமுறைதானே? எதற்காக வழக்குத் தொடுக்கிறீர்கள்?'' 


''உண்மைதான். எல்லா தண்டனைக் கைதி​களுக்கும் சர்வ சாதாரணமாகப் பரோல் வழங்கப்படுகிறது. ஏழெட்டு ஆண்டுகள் தண்ட​னையைக் கழித்த சிறைவாசிகள்கூட மொத்தம் 600 முதல் 1,000 நாட்கள் வரையில் பரோலில் சென்றிருக்கிறார்கள். ஆனால், 22 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நான், மொத்தமே 29 நாட்கள்தான் பரோலில் வந்திருக்கிறேன். சட்டம் அனைவருக்கும் சமம் என்பதெல்லாம் சுத்தப் பித்தலாட்டம்.



குடும்பப் பிரச்னைக்காக கடந்த 2010-ம் ஆண்டு பரோல் கேட்டு வழக்குத் தொடர்ந்தேன். மூன்று ஆண்டுகள் சட்டப் போராட்​டத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு 15 நாள் பரோலில் வெளியே வந்தேன். கூடவே, பாதுகாப்பு என்ற பெயரில் 100 போலீஸாரும் வந்தனர். என்ன காரணத்துக்காக நீதிமன்றம் எனக்கு பரோல் வழங்கியதோ, அதை நிறைவேற்றக்கூட போலீஸார் அனுமதிக்கவில்லை. வீட்டையே சிறைச்சாலையாக மாற்றிவிட்டனர். 


கடந்த 10 ஆண்டுகளாகத் தீர்க்க முடியாத சில குடும்ப விவகாரங்கள், வீட்டில் அனைவரும் உட்கார்ந்து பேசியபோது சுமுகமாகத் தீர்ந்தது. ஆனால், அதை சட்டரீதியில் இறுதிசெய்ய முயன்றபோது பரோல் முடிந்துவிட்டது. சிறைத் துறை, காவல் துறை அதிகாரிகளிடம் முறையிட்டபோது அவர்களின் இதயம் திறக்க​வில்லை. எனவே, மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்​கிறேன்.''


'' உங்கள் விடுதலைக்கான சாத்தியங்கள் எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?'' 


''கடந்த 13 ஆண்டுகளாக நிறைய மனுக்களை தமிழக முதல்வர்களுக்கு அனுப்பிவிட்டோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி தன் கட்சியைச் சேர்ந்த ஆயுள் தண்டனைக் கைதிகள் இருவரை விடுதலைசெய்ய வேண்டும் என்பதற்காக, கடந்த 2008-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் ஏழு ஆண்டுகள் மட்டுமே தண்டனையை முடித்த 1,405 கைதிகளை விடுதலைசெய்தார். அப்போது நாங்கள் 17 ஆண்டுகள் தண்டனையை நிறைவுசெய்திருந்தோம். ஆனால், சி.பி.ஐ. வழக்கு என்ற நொண்டிச் சாக்கு சொல்லி எங்கள் நால்வரை மட்டும் விடுதலை செய்யவில்லை.


இப்போதைய முதல்வரைப் பொறுத்தவரையில், அதிகாரிகள் அந்த மனுக்களை முதல்வரின் பார்​வைக்கே கொண்டுசெல்வது இல்லை. எங்கள் நால்வரின் விடுதலை இப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கையில்தான் இருக்கிறது. கருணாநிதியை நாங்கள் நம்புவதாக இல்லை.''


''சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்துசெய்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்று இப்போது கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளாரே?'' 


''முதல்வர் ஜெயலலிதா தன் அமைச்சரவையைக் கூட்டி அப்படியரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கடந்த 2011-ம் ஆண்டு ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது மூன்று தமிழர்களைத் தூக்கிலிடுவது என டெல்லி முடிவு​செய்தது. அவர்கள் அளித்த கருணை மனுக்கள் மீது கருத்துக் கேட்டு, கருணாநிதி தலைமையிலான அரசுக்கு ஆவணங்களை அனுப்பிவைத்தது மத்திய அரசு. ஆனால், அப்போது அமைச்சரவையைக் கூட்டி இதே​போன்ற தீர்மானத்தை ஏன் அவர் நிறை​வேற்றவில்லை?


இதே மூன்று தமிழர்களும் நளினியும் கடந்த 2000, 2001-ம் ஆண்டு​களில் அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதியிடம் கருணை மனு அளித்தனர். சட்டப்படி அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுக்காமல், நேரடியாக கவர்னருக்கு அனுப்பினார் கருணாநிதி. கவர்னரோ நால்வரின் கருணை மனுக்​களையும் நிராகரித்து தூக்குத் தண்டனையை உறுதிசெய்தார். 



இதை எதிர்த்து நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 'அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் கவர்னர் முடிவெடுக்க வேண்டும்’ என்று தீர்ப்பு கூறிய நீதிமன்றம், கருணை மனுக்களை மீண்டும் பரிசீலனை செய்யும்படி கவர்னருக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்குப் பின், வேறு வழியின்றி கருணாநிதி தன் அமைச்சரவையைக் கூட்டி, நளினியின் தூக்குத் தண்ட​னையை மட்டும் ரத்துசெய்தார். கருணாநிதி அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று கவர்​னரும் அப்படியே ஆணை பிறப்பித்தார்.


அதிகாரத்தில் இருக்கும்போது, மூன்று தமிழர்களுக்கு ஆதரவாக முடிவெடுக்காத கருணாநிதி, இப்போது இப்படி கோரிக்கை வைப்பதன் நோக்கம், அவர்கள் மீதான அக்கறையில் அல்ல. தான் வாய் திறந்தால் ஜெயலலிதா எதிர்மறையாகத்தான் செய்வார் என்ற கெடு எண்ணத்தில்தான். அதனால், அவர் வாய் திறக்காமல் இருந்தாலே போதும். அந்த மூன்று தமிழர்களுக்கு மட்டுமின்றி, எங்கள் நால்வருக்கும் நல்லது நடக்க வாய்ப்பு இருக்கிறது.''

 நன்றி - விக்டன்

Wednesday, November 07, 2012

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு -கலைஞர், வை கோவுக்கும் பங்கா?

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு!

‘‘மாயமான சி.டி. எங்கே? மறைத்தது ஏன்?’’

எஸ். சந்திரமௌலி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மறுபடியும் ஒரு பரபரப்பு. வழக்கின் சிறப்புப் புலனாய்வுக் குழு தலைமை புலனாவு அதிகாரி கே.ரகோத்தமன் எழுதிய ராஜீவ் காந்தி படுகொலை சதி: சி.பி.சி. கோப்புக்களில் இருந்து (Conspiracy to kill Rajiv Gandhi - From CBI files) என்ற ஆங்கிலப் புத்தகம் தான் பரபரப்புக்குக் காரணம். இவர் ஏற்கெனவே ராஜீவ் காந்தி படுகொலை பற்றி ஒரு டி.வி.டி. வெளியிட்டவர்.


 ஸ்ரீபெரும்புதூரில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ மாயமானது ஏன்? சதித் திட்டத்தில் கருணாநிதி, வைகோ போன்ற தமிழக அரசியல் வாதிகளுக்கு உள்ள தொடர்பு? என ஆங்கிலப் புத்தகத்தில் இவர் எழுப்பியுள்ள கேள்விகள்தான் சர்ச்சையின் மையம். அவரிடம் பேசியதில் இருந்து...


இப்போது எதற்காக இந்தப் புத்தகம்?


ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தவர். அவர் சாதாரண விபத்தில் இறக்கவில்லை. விடுதலைப் புலிகளின் திட்டமிட்ட சதித்திட்டத்தில் பலி ஆனார். சவாலான அந்தப் புலனாய்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டு விட்டது. ஆனாலும், விசாரணையின்போது, சில விஷயங்கள் மறைக்கப்பட்டன.


 சிலரை விசாரணை செய்ய அனுமதி இல்லை. சில அரசியல்வாதிகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர முடியவில்லை. அதற்கு அனுமதி கிடைத்திருந்தால், விடுதலைப்புலிகளுக்கு இந்த சதித்திட்டத்தில் உதவியவர்கள் யார், யார் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கும். சி.பி.., அரசியல் நிர்பந்தத்துக்கு எப்படி வளைந்து கொடுக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் புத்தகம்."


சதி நடந்த அன்று ஸ்ரீபெரும்புதூரில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ, புலனாய்வுக் குழுவின் கைக்கு வராமல், மாயமானதாகச் சொல்லி இருக்கிறீர்களே?

ஆமாம். ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ச்சியை வீடியோ எடுத்தவரிடமிருந்து, மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் வாங்கிச் சென்றிருக்கிறார். அதை தில்லியில் .பி. அதிகாரிகள் பார்த்திருக்கிறார்கள். அதில் சந்தேகத்துக்குரிய பெண்ணைப் பற்றி அன்றைய .பி.யின் தலைவர், இன்றைய மே.வங்காள ஆளுனர் எம்.கே. நாராயணன் மத்திய உள் துறைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.


 அந்த வீடியோ மறுபடியும் சென்னை வீடியோகிராபரிடம் திரும்பக் கொடுக்கப்பட்டு அது தமிழ்நாடு வழியாக எங்கள் கைக்கு வந்து சேர்ந்தது. ஆனால், அதில் ராஜீவ் படுகொலை பற்றிய தூர்தர்ஷன் செய்தி கிளிப்பிங்கும் சேர்க்கப்பட்டு இருந்தது. விழா நிகழ்ச்சி எடுக்கப்பட்ட வீடியோவில் தூர்தர்ஷன் செய்தி எப்படி இருக்க முடியும்?


தவிர, படுகொலையை நடத்துவதற்காக சென்னை வந்த விடுதலைப்புலி குழுவினர், உள்ளூர் காங்கிரஸ் முக்கியஸ்தர்களோடு நெருக்கமாகி, அவர்கள் மூலமாகவே ஸ்ரீபெரும்புதூரில் கூட்ட மைதானத்தில் ராஜீவ் காந்திக்கு அருகில் செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், அந்தத் தகவல் வெளியானால், அது காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதோடு, தேர்தல் வெற்றிகளைப் பாதிக்கும் என்று அந்த விஷயத்தை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர விடாமல் தடுத்து விட்டார்கள்."


புத்தகத்தில் தமிழக அரசியல் தலைவர்களின் தொடர்பு பற்றி விவரித்திருக்கிறீர்களே?

தமிழகத்தின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்தினர் புலிகளின் அனுதாபிகள். 20 சதவிகிதத்தினர் ஆதரவாளர்கள். மீதி 20 சதவிகிதத்தினர் தீவிர ஆதரவாளர்கள். எனவே, ராஜீவ் கொலையோடு சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்படும்படி ஆதாரங்கள் இருந்தால் மட்டும், அவர்களை விசாரிக்கலாம் என்று நாங்கள் லட்சுமண ரேகை அமைத்து விசாரணையைத் தொடங்கினோம்.



 சம்பவம் அன்று அதே ஸ்ரீபெரும்புதூரில் மணிக்கூண்டு அருகில் கருணாநிதி கலந்து கொள்ளும் தி.மு.. பிரசாரக் கூட்டத்துக்கும் போலீஸ் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ராஜீவ் காந்தியின் கூட்டம் பற்றிய விவரங்கள் வெளியாவதற்கு முன்னதாகவே, தி.மு..வால் முடிவு செய்யப்பட்டு, கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி கோரும் கடிதமும் கொடுக்கப்பட்டது. போலீஸ் அனுமதி வழங்கப்பட்ட பின்னரும், கடைசி நேரத்தில் அந்தக் கூட்டத்தை ஏன் கருணாநிதி ரத்து செய்தார்?  


அன்று நடக்க இருந்த சம்பவம் பற்றி கருணாநிதிக்குத் தெரியாது என்றால், அவருக்குக் கூட்டத்தை ரத்து செய்ய ஆலோசனை சொன்னது யார்? என்று விசாரிக்க விரும்பினேன். ஆனால், கருணாநிதியை விசாரிக்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழக டி.ஜி.பி. கேட்டுக் கொண்டதன் பேரில் கருணாநிதி கூட்டத்தை ரத்து செய்து விட்டதாகவும், எனவே விசாரணை தேவையில்லை என்றும் சொல்லி விட்டார் புலனாய்வுக் குழுத் தலைவரான கார்த்திகேயன்."


இந்த வழக்கில் வைகோவை அரசு தரப்பு சாட்சியாகச் சேர்த்திருந்தீர்களே?


வைகோ, அரசு தரப்பு சாட்சியாக கூண்டில் நின்று, ‘நான் பிரபாகரனை நன்றாக அறிவேன்; ஆனால் இந்த சதித்திட்டம் பற்றி எனக்குத் தெரியாதுஎன்று சொன்னார். ராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு பிரபாகரனுக்குக் காரணம் இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக வைகோ பேசிய வீடியோ கேசட் ஒன்றைப் போட்டுக் காட்டியபோது, ‘வீடியோவில் இருப்பது நான்தான்; ஆனால் குரல் என்னுடையது இல்லைஎன்றார். ஆனால், அது அவரது குரல்தான் என்று அறிவியல் பூர்வமாக நிரூபணமானது. ஹாஸ்டைல் விட்னஸ் ஆகிவிட்ட வைகோவின் மீது வழக்குத் தொடர்ந்திருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்யாதது ஏன்? என்பதற்கு எனக்கு விடை தெரியவில்லை."


நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி?


திறமையான அதிகாரிகள் உயிரைப் பணயம் வைத்து, தங்கள் கடமையை ஆற்றினாலும், அரசியல் நிர்பந்தம் காரணமாக அவர்கள் கண்டுபிடிக்கும் அத்தனை உண்மைகளும் வெளிச்சத்துக்கு வருவதில்லை."


நன்றி - கல்கி  





ராஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள்
**********************************

இன்று மின்னஞ்சலில் பரபரப்பாக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி ரஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள் என்ற செய்தியாகும். இந்த மின்னஞ்சல் அப்படியே இங்கே தரப்படுகிறது.



முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.



உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.



உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உண்மைகளை அம்பலப்படுத்திய திருச்சி வேலுசாமியை சந்தித்தோம்..




என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்?



1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன். தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது. அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே சொல்ல வரே… தெரியுமே.. என்றார்.



எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன். ‘அப்படி ஏதும் தெரியவில்லையே’ என்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம் ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த முடியவில்லை




 இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம். கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான் தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார். கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை உறுதிப்படுத்த முடிந்தது.





அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி முன்பாகவே தெரியும்? யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான் மீடியாவிற்கு ‘விடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்’ என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது. திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம் என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின் நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி. இதுவெல்லாமும்தான் என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’





சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..




நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம் சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்.. பார்க்கலாம்’ என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள் என்று எனக்கு சந்தேகம்.




பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி, சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன். அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம் சொன்னார்.



நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன். ‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்’ என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு சென்றேன். ‘மேடம் இல்லை’ என்று என் பெயரைச் சொன்னதும் பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில் வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’



அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா?



இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம் கூறுகிறேன். அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன். அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும் மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல் செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள்.




 படுகொலைக்கான சந்தேகம் யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்? என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான் நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப் ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது.



மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார். ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன்.




வாசல் வரை வந்துவிட்டு, மிகவும் தயங்கியபடியே அவரைப் பார்த்தேன். ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றார்கள். ‘என் முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது. நேற்று மனு கொடுத்த போதே கமிஷனின் செகரட்டரி ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார். அந்த மனு ஏற்கப்பட்டால்தான் நான் என் தரப்பு கேள்விகளை எழுப்ப முடியும். பல உண்மைகளை வெளிகொண்டுவர முடியும். அதற்கு ஏதாவது நீங்கள் உதவ முடியுமா?’ என்றேன்.



என்றைக்கு உங்கள் மனு ஏற்பு விசாரணை வருகிறது?’ என்று கேட்டார். நான் தேதியைச் சொன்னேன். குறித்துக்கொண்டு ‘சரி போய் வாருங்கள்’ என்றார். சட்டென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கே இருந்த டைரியில் ஒரு தாளை கிழித்து பென்சிலால் அந்த வீட்டில் இருந்த ஐந்து தொலைபேசி நம்பரை எழுதி, ‘எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் சரி. எந்தவிமான அவசரம் என்றாலும், உதவி என்றாலும் கேளுங்கள்’ என்று கூறியபடியே அந்த தாளை நீட்டினார். வாங்கி வைத்துகொண்டேன்.




அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான் அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’



சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே? அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது?

அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன். அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது. அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது.

நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார். எனக்கு செய்த ஒரே உதவி அதுதான்.

பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார். அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார். புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’



சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை எப்படி அமைந்தது?



ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக அறிக்கை கொடுத்த கிட்டு ‘கொலைக்கு காரணம் புலிகள் இயக்கம் இல்லை’ என்ற போது நீங்கள் விடு தலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன். சுப்பிரமணியன்சாமியோ ‘எனக்கு இலங்கையில் இருந்து தகவல் வந்தது.’ என்றார்.



சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும் உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது இலங் கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன். திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான மே- 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்தார்கள்.




மதுரை பொதுக்கூட்டத் துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு வியர்த்து கொட்ட தொடங்கியது. அது தேர்தல் காலம். விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை. காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்? என நினைத்திருக்கிறார்.




அது மட்டுமல்ல. மே-21 -க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான் இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர். அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள் 20 -ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம் இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள். அதற்கு சுவாமி ‘தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும் பதில் இல்லை.




அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில் கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னாள் எம்.எல்.ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல், காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார்.



இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன். காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும். அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி.. அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார்.



எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன். அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம் எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.

தினசரி ‘மூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்’ என்பது அமைச்சர்களுக்கு கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார். அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள்.

ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின் நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே. பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.




ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?



அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை.



சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.

சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.ஐ. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி.ஐ தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது.

என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வது ‘இந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அந்தளவிற்கு அது முட்டாள்தனமான இயக்கமும் அல்ல. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து!
 

Sunday, September 30, 2012

ராஜீவ் கொலைக் குற்றவாளி பேரறிவாளன் தன்னிலை விளக்க கடிதம்

http://www.newsreporter.in/wp-content/uploads/2011/08/perarivalan.jpg 
பேரறிவாளன், ராஜிவ் கொலைக் குற்றவாளி
"அனைவருமே எதிர்த்து நின்றாலும்

சரியானவை சரியானவையே!

அனைவருமே ஆதரித்து நின்றாலும்

பிழையானவை பிழையானவையே'' 

உண்மை வெல்ல வேண்டுமென போராடி நான் தோல்வியுற்று விழும் ஒவ்வொரு முறையும் வில்லியம் பென்னின் இந்த சொற்களை நினைத்தே மீண்டு எழுவதுண்டு. அதேநேரம் நான் எப்போதுமே உண்மையின் பக்கம் இருக்கிறேன் என்ற பெருமிதம் உண்டு.




அன்புமிக்க மனிதநேய மாந்தரே! முதலில் உங்களிடம் என்னை நான் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும். எவ்வாறு அறிமுகம் செய்ய? பலநூறு பண்புமிக்க மாணவர்களை உருவாக்கிய ஓய்வுபெற்ற ஏழை பள்ளி தமிழாசிரியரின் ஒரே புதல்வன் என அறிமுகம் செய்துகொள்வதா அல்லது ஒழுக்கமும் மனிதநேயமும் வாழ்வின் இரு கண்கள் என கருத்தூட்டி வளர்த்த தாயின் தவப்புதல்வன் என அறிமுகம் செய்துகொள்வதா எனத் தெரியவில்லை. இவ்வாறெல்லாம் அறிமுகம் செய்துகொள்ள எனக்கு விருப்பம் இருந்தாலும் எனது விருப்பத்திற்கு மாறான அறிமுகம் ஒன்று என்மீது திணிக்கப்பட்டுள்ளது. அதுவே, ராஜிவ்காந்தி கொலை வழக்கின் தூக்குத்தண்டனைக் கைதி அ.ஞா. பேரறிவாளன். ஆம். இதுவே எனது இன்றைய தவிர்க்கமுடியாத அடையாளம்.



20 ஆண்டுகளுக்கு முன்பு வரை உங்களைப்போல் சாதாரண மனிதனாக வீதிகளில் அலைந்துகொண்டிருந்த மனிதனை திடீரென பயங்கரவாதியாக, கொடூர கொலைகாரனாக சித்தரித்தது பேரவலமாகும். ஒரு தமிழனாகக்கூட அல்ல, ஒரு மனிதனாக சக மனிதர்கள் துன்பத்தில் உழல்வது கண்டு துடித்தெழுவதும் கொலைக்குற்றமாகிவிடும் என ஒரு நாளும் நான் எண்ணியதில்லை.



உங்களுக்கு ஒன்றை வெளிப்படையாக நான் சொல்ல விரும்புகின்றேன். எனது வாழ்வின் எந்த நிலையிலும் ராஜிவ்காந்தியை மட்டுமல்ல எந்த மனிதரையுமே கொல்ல கடமையாற்றியதும் இல்லை. அதுகுறித்து மனதளவில் கருதி பார்த்ததும் இல்லை. நான் நேசித்து ஏற்றுக்கொண்ட தந்தை பெரியார் தந்த சுயமரியாதை கொள்கையும் பார்ப்பன எதிர்ப்பும் என்னை கொலைகாரனாக சித்திரிக்க ஆதிக்க சக்திகளுக்குக் கிடைத்த முதல் ஆயுதம் எனில் தொப்புள்கொடி உறவாம் ஈழத்தழினம் மேற்கொண்ட தற்காப்புப் போர்மீது கொண்ட என் தீராப்பற்று அடுத்த காரணமாயிற்று.



மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டயக்கல்வி முடித்திருந்தேன் என்ற ஒரே காரணத்தால் புலனாய்வுத் துறையினரின் நெருக்கடிக்கு ஆட்பட்டு 19 வயதில் நான் ஒரு வெடிகுண்டு நிபுணராக செய்தி ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டேன். ஆனால் அந்த வெடிகுண்டு குறித்து இன்றுவரை புலனாய்வு செய்யவே முடியவில்லை என்கிறார் வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்து 2005ம் ஆண்டு ஓய்வுபெற்ற நடுவண் புலனாய்வுத்துறையின் துணைக்காவல் கண்காணிப்பாளர் (ஞிஷிறி/சிஙிமி) கே. ரகோத்தமன்.



ராஜிவ்கொலையில் கைது செய்யப்பட்ட 26 நபர்களில் 17 பேருக்கு 'தடா' சட்டத்தின்கீழ் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அந்த 17 ஒப்புதல் வாக்குமூலங்களையும் பதிவு செய்தவர் அப்போது நடுவண் புலனாய்வுத் துறையின் கொச்சி பிரிவு காவல் கண்காணிப்பாளர் தியாகராஜன். இவரது நம்பகத்தன்மையை விளக்க கேரளாவைச் சேர்ந்த அருட்சகோதரி அபயா கொலையுண்ட வழக்கு போதுமானது. 1993ம் ஆண்டு நடந்த அபயா கொலையினை 'தற்கொலை'  என முடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் அவருக்குக் கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் தாமஸ்வர்கிஸ் தனது பதவியையே துறந்தார். 16 ஆண்டுகள் கழித்து 2009ம் ஆண்டு அக்கொலை வழக்கு துப்பறியப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு அருட்சகோதரியின் வழக்கிலே சிலரைக் காப்பாற்ற பொய்யான ஆவணங்களை தயார் செய்துள்ளார் எனில், ராஜிவ் கொலை போன்ற பெரிய வழக்கில் எவ்வாறெல்லாம் ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தை இவர் தயார் செய்திருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.




20 ஆண்டுகளுக்கு முன்னர் என்மீது பூசப்பட்ட கொலைகார சாயம் இன்று மெல்ல மெல்ல வெளுத்துவருகிறது. ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக்குழு மேற்கொள்ளும் விசாரணையின் முடிவில் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரக்கூடும். விடுதலை பெற்ற இந்தியாவிலும் சரி, அதற்கு முன்னர் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவிலும் சரி இதைவிட மனிதநேயத்திற்கு ஒவ்வாத சட்டமே இல்லை எனக் கூறும் அளவிற்கு கொண்டுவரப்பட்ட தடா எனும் கொடூர சட்டத்தை துணைகொண்டு ஒரு பெருங்கதை என்போன்ற அப்பாவிகளுக்கு எதிராக புனையப்பட்டது. இறுதியில் ராஜிவ்காந்தி கொலை வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என உச்சநீதிமன்றம் முடிவிற்கு வந்த பின்னர், அச்சட்டத்தின் கொடிய பிரிவுகளை மட்டும் பயன்படுத்தி என்னை தண்டித்துவிட்டது. தனக்கு 'மாமூல்' தரவில்லை என்ற ஒரே காரணத்தால் நடைபாதை கடை வியாபாரி ஒருவனை பயங்கரவாதியென அறிவித்து 'தடா' சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த கொடுமை வடமாநிலம் ஒன்றில் நடந்தேறியதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.




சாதாரண பெட்டிக்கடையில் கிடைக்கும் 13 ரூபாய் மதிப்பிலான 'ஐ' வோல்ட் பேட்டரி செல் இரண்டு வாங்கி தந்ததற்காக ஒரு மனிதனுக்கு தூக்கு வழங்கப்படுமெனின், அவனது 20 ஆண்டுகால இளமை வாழ்வைப் பறிக்க முடியுமெனின் இவ்வுலகில் நீதியின் ஆட்சி குடிகொண்டிருக்கிறதா என்ற ஐயப்பாடு எழுகிறது. ஆம். அரசியல் சதுரங்கத்தில் அரண்மனைக் கோமான்களைக் காக்க வெட்டுப்பட்ட சிப்பாயாக வீழ்ந்துகிடக்கிறேன்.



எனது வழக்கில் மூடிமறைக்கப்பட்ட உண்மைகளை விளக்கி நான் எழுதிய கடிதங்கள் "தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்" என்ற பெயரில் நூல் வடிவில் வெளியிடப்பட்டு இதுவரை தமிழில் மட்டும் 6 பதிப்புகளாக 11,700 பிரதிகள் விற்று தீர்ந்துள்ளது. தற்போது மே 18 அன்று வேலூரில் ஏழாம் பதிப்பு வெளிவரவுள்ளது. ஆங்கில மொழியில் 3500 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் அதன் இந்திப் பதிப்பு மிக அண்மையில் வெளிவர உள்ளது. இவையெல்லாம் மிகத் தாமதமாகவேனும் உண்மைக்குக் கிடைத்த அங்கீகாரமாக நான் கருதுகிறேன்.




உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசரும் மனித உரிமைப் போராளியுமான நீதியரசர் வி.ஆர். கிருட்டிண அய்யர் எனது குற்றமற்ற தன்மையை புரிந்துகொண்டு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கும் மாண்புமிகு தலைமை அமைச்சருக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், திருமதி சோனியா அவர்களுக்கும் எழுதிய கடிதங்கள் எனது நீண்ட வலிமிகுந்த போராட்டத்திற்கான வெற்றிகளாகும். மும்பை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் எச். சுரேஷ் அவர்களின் கடிதமும் எனது ஊர் சட்டமன்ற உறுப்பினரின் கடிதமும் எனது பள்ளி ஆசிரியர், எனது ஊர் பொதுமக்களின் ஆதரவான செயல்பாடுகளும் உடைந்துபோன என் உள்ளத்திற்குக் கிடைத்த அருமருந்தாகும்.



எனது வேண்டுகோளெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ராஜிவ்காந்தியை அரசியல்வாதியாக விமர்சனம் செய்கிறவர்களை மட்டுமல்ல, அவரை மிக ஆழமாக நேசிக்கும் மனிதர்களையும் நான் கேட்க விரும்புவதெல்லாம் ராஜிவ்காந்தியின் உயிர்ப்பலிக்கு ஈடாக அக்குற்றத்தில் எப்பங்கும் வகிக்காத குற்றமற்ற ஒரு மனிதனின் உயிர் பலியிடப்பட வேண்டுமா? அவ்வாறான அநீதிக்கு மனிதநேயமிக்க நீதிமான்களான நீங்கள் உடன்படமாட்டீர்கள் என நம்புகிறேன்.




அன்பிற்குரியோரே! அரசியல் செல்வாக்கும், பணபலமுமற்ற இந்த சாமானிய மனிதனின் உண்மைக் குரலின் பக்கம் சற்று உங்கள் செவிகளை திருப்புங்கள். "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்" என்ற முன்னோர் வாக்கு உண்மையெனில் என் தரப்பு உண்மைகள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் உள்ளத்தின் ஆழத்தைத் தொடுமெனில் அப்போது எனது விடுதலைக்காக உங்கள் வலிமையான குரல்கள் எழட்டும். குற்றமற்ற கடைக்கோடி மனிதனின் உள்ளக்குமுறலை உலகம் புரிந்துகொண்டது என வரலாறு குறிக்கட்டும். நீதி வெல்லட்டும். 


நன்றி - த சண்டே இந்தியன்


http://www.news24online.com/images/NewsImage/Rajiv-Gandhi-291x21817456.jpg